
அச்சம் தவிர்

திருவிழாக்களின்போது ஒலிப்பெருக்கியிலிருந்து எழும் சத்தத்தைக் கேட்டு எரிச்சல் அடைந்திருப்போம். இதுவே ஒருவரின் அன்றாட வாழ்க்கையை பாதித்து, பயமாக மாற்றுமா? அப்படிப்பட்ட பயம்தான் `லைகைரோபோபியா (Ligyrophobia). சத்தமான குரல்கள், ஒலிகளைக் கேட்டால் ஏற்படும் பயம்.

பிறந்தநாள் விழாக்களில் பலூனை வெடித்தால்கூடச் சிலருக்கு பயம் வந்துவிடும். இன்னும் சிலருக்கு திடீரென ஹோம் தியேட்டரிலோ, தொலைக்காட்சியிலோ அதிகச் சத்தத்துடன் பாடல் காட்சி தோன்றினால் பயம் வந்துவிடும். இதிலிருந்து அவர்கள் மீண்டு வர நேரமாகலாம். ஆனால், பிரச்னை அதோடு முடிவதில்லை. அந்த இடத்துக்கு மீண்டும் அவர்கள் செல்லும்போது அவர்களையறியாமல் மனதளவில் ஒரு தடை வரக்கூடும். இதனால், அவர்களால் எல்லா இடங்களுக்கும் நிம்மதியாகச் சென்றுவர முடிவதில்லை. இது அவர்களின் தன்னம்பிக்கையை அவர்களுக்கே தெரியாமல் குறைக்கிறது.
காரணம்: அட்ரீனல் பற்றாக்குறை, தவறான மயக்க மருந்து எடுத்துக்கொள்ளுதல், குழந்தைப் பருவத்தில் சந்தித்த எதிர்மறைச் சம்பவங்கள் போன்றவை இந்த பயத்துக்கான காரணிகள்.

அறிகுறிகள்: சோர்வு, மயக்கம், வியர்வை போன்றவை பொதுவான அறிகுறிகள். சத்தம் அதிகமாக எழும் இடத்திலிருந்து தப்பி ஓட முயல்வது; உரத்த வாண வேடிக்கை, சந்தை, நெரிசலான நகரம், நெடுஞ்சாலைகளில் வாகனம் ஓட்டுதல் போன்றவற்றைத் தவிர்ப்பது; நெரிசலான உணவகங்களில் சாப்பிட மறுப்பது.
சிகிச்சை: பாதிக்கப்பட்டவரை முதலில் சிறிய அளவு சத்தத்தைக் கேட்கவைத்து, பிறகு அதிகளவு சத்தத்துக்கு பழக்கப்படுத்தும் புலனுணர்வு சார்ந்த நடத்தைச் சிகிச்சை பரிந்துரைக்கப்படும்.
- இ.நிவேதா