STAR FITNESS: “நாவை அடக்கினால் நலமுடன் வாழலாம்!” - சைதை துரைசாமியின் சூப்பர் ஃபிட்னெஸ்

ஃபிட்னெஸ்
‘‘ஆரோக்கிய வாழ்வுக்காக உடல் தசைகளை முறுக்கி, வளைத்துச் செய்யும் நவீன உடற்பயிற்சிகளில் எனக்கு நம்பிக்கை இல்லை. எளிமையான ஆசனப் பயிற்சிகள், மாமிசம் தவிர்த்த இயற்கை உணவுகள், உடற் கடிகார ஒழுங்கை மீறாத வாழ்க்கை முறை... இவற்றை சரிவரக் கடைப்பிடித்தாலே ஆரோக்கியப் பெருவாழ்வு வாழலாம்!’’ என அசத்தல் ஆரம்பம் கொடுக்கிறார் சென்னை மாநகர முன்னாள் மேயர் சைதை துரைசாமி.

தனது இளமையின் ரகசியம் பகிர்கிறார் இந்த 67 வயது இளைஞர், ‘`பசித்த பிறகே, சாப்பிட உட்கார்கிறேன். வாயில் இட்ட ஒரு கவளம் உணவை, கூழாகும் வகையில் நன்றாக மென்று இரைப்பைக்கு அனுப்புகிறேன். இதனால், உமிழ்நீர் நன்றாகச் சுரந்து உணவு எளிதில் ஜீரணமாகிறது. அதனால்தான், ‘மென்று தின்றவன் நின்று வாழ்வான்’ என்று அன்றே சொல்லிவைத்தார்கள்.
‘இன்னும் கொஞ்சம் சாப்பிடலாம்’ என்ற எண்ணம் வரும்போது, சாப்பாட்டைவிட்டு எழுந்துவிடுவேன். சாப்பிட்டு ஒரு மணி நேரம் கழித்தே, நீர் அருந்துவேன். அதையும் நிதானமாக அருந்தும்போது தண்ணீருடன் உமிழ்நீரும் கலந்து உடலுக்குள் செல்லும். இது அஜீரணத்தைத் தடுக்கும். நோயின் தொடங்குவாயே அஜீரணம்தான். மலச்சிக்கல் மனச்சிக்கலையும் ஏற்படுத்தும். ‘காலை இஞ்சி, கடும்பகல் சுக்கு, மாலை கடுக்காய்’ எனத் தொடர்ந்து 48 நாள்கள் சாப்பிட்டுவந்தால் போதும். ஆரோக்கியப் பெருவாழ்வுதான்!

அதிகாலையில் 4 மணிக்கே எழுந்து, மூலிகைப் பல்பொடியில் பல் துலக்கி முடித்த பிறகு, வெதுவெதுப்பான சூட்டில் இரண்டு டம்ளர் நீரை வெறும் வயிற்றில் குடிப்பேன். பின்னர் காலைக் கடன் முடித்த பிறகு நான்கு சிறிய வெங்காயத்துடன் நீராகாரம் (சிறுதானிய உணவில் புளிக்கவைத்த நீர்) சாப்பிடுவேன். காலை 11 மணிக்கு முருங்கை இலை சூப்; மதியம் 12 மணிக்குள் மதியச் சாப்பாடு. அதில், கொஞ்சமாகப் பாரம்பர்ய கைக்குத்தல் அரிசி மற்றும் சிறுதானிய உணவு. நிறைய காய்கறிகள் இருக்குமாறு பார்த்துக்கொள்வேன். மாலை 6:30 மணிக்கு ஏதாவதொரு சிறுதானியத்தில் செய்யப்பட்ட இட்லி - தேங்காய் சட்னியுடன் இரவு சாப்பாடு முடிந்துவிடும். அதன் பிறகு தேவைப்பட்டால், இரவு 9 மணிக்கு ஏதாவது ஒரு பழ ஜூஸ்!

சுக்கு, கொத்தமல்லி விதைகளைப் பொடிசெய்து கருப்பட்டியுடன் சேர்த்துக் கொதிக்கவைத்த தேநீரை அவ்வப்போது அருந்துவதுண்டு. உணவைப் பொறுத்தவரையில், நாவைக் கட்டுப்படுத்தினாலே நலமுடன் வாழ முடியும்!’’ என்று தனது ஆரோக்கிய ரகசியம் சொல்பவர் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை இந்த உணவு வகைகளில் மட்டும் சில மாற்றங்களைச் செய்துகொள்கிறார். உடலுக்குத் தேவையான சத்துகள் எதுவும் விடுபட்டுவிடக் கூடாது என்பதற்காக இந்த ஏற்பாடு.

‘‘காலையில் எழுந்தவுடன் 50 தோப்புக்கரணம் போட்டுவிட்டு 10 வகையான ஆசனங்களை 40 நிமிடங்கள் செய்வேன். யோகாசனத்தின் மூலம் உடற்கழிவுகள் முறையாக வெளியேற்றப் படுகின்றன. ஆக்சிஜன், கார்பன் டை ஆக்ஸைடு உள்ளிட்ட உடல் இயக்கங்கள் இயல்புக்கு வருகின்றன. ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கிறது.
மொழிக்கு இலக்கணம் உண்டு; போக்குவரத்துக்கு விதிகள் உண்டு; அந்த வரிசையில், இயற்கையை மீறாதிருப்பதே 100 ஆண்டுகள் வாழப்போகிற இந்த உடம்புக்கான ஆரோக்கிய விதி!’’ என்று பஞ்ச் வைத்து முடிக்கிறார் சைதை துரைசாமி!
- த.கதிரவன், படங்கள்: ப.சரவணகுமார்