ஹெல்த்
Published:Updated:

நிலம் முதல் ஆகாயம் வரை... - பிராணாயாமம்

நிலம் முதல் ஆகாயம் வரை... - பிராணாயாமம்
பிரீமியம் ஸ்டோரி
News
நிலம் முதல் ஆகாயம் வரை... - பிராணாயாமம்

யோ.தீபா, இயற்கை மருத்துவ துணைப் பேராசிரியர்ஹெல்த்

மூச்சுக்காற்றை இயல்பாகக் கட்டுப்படுத்தி மனதையும் உடலையும் வளப்படுத்தும் பயிற்சியான பிராணாயாமம் குறித்து கடந்த இதழில் பார்த்தோம். இந்த இதழில் பிராணாயாமத்தின் வகைகள், அவற்றின் பயன்கள் குறித்து பார்க்கலாம். 

நிலம் முதல் ஆகாயம் வரை... - பிராணாயாமம்

மூச்சுப்பயிற்சிகள் அனைத்தும் உடல் மற்றும் மனதை அமைதிப்படுத்தக்கூடியவை. இன்று எல்லோருமே வேக வேகமாக ஓடிக்கொண்டிருக்கிறோம். அந்த வேகமும் பதற்றமும் மன அழுத்தத்தில் தொடங்கி பல்வேறு நோய்களுக்கு நம்மை உள்ளாக்குகின்றன. பிராணாயாமம் இந்தப் பிரச்னைக்கு எளிய தீர்வாக இருக்கிறது.

முதலில் நாடிசுத்தி பிராணாயாமம் பற்றிப் பார்ப்போம். நாடிசுத்தி என்றால், ‘உடலில் உள்ள நாடிகளைச் சுத்தப்படுத்துதல்’ என்று பொருள். நம் உடலிலுள்ள மைய நரம்பு மண்டலத்தில் இட நாடி, பிங்கல நாடி, சூஷ்மன நாடி என மூன்று நாடிகள் இயங்குகின்றன. காலை நேரத்தில் பிங்கல நாடியும், இரவு நேரத்தில் இட நாடியும் தூண்டப்படும். இவை இரண்டும் சமநிலையில் தூண்டப்பட்டால் சூஷ்மன நாடி தானாகச் செயல்படும். இந்த நாடிகளைச் சீராகச் செயல்படச் செய்து நோய்கள் நம்மை நெருங்காமல் காப்பாற்றுவதுதான் நாடிசுத்தி பிராணாயாமம். 

நிலம் முதல் ஆகாயம் வரை... - பிராணாயாமம்நாடிசுத்தி பிராணாயாமம் செய்தால், உடலுக்குத் தேவையான ஆற்றல் கிடைப்பதுடன் நாடிகள் தூண்டப்படும். குழந்தைகள் இந்த வகை பிராணாயாமம் செய்வதால், உடலுக்குள் சீராக ஆக்சிஜன் சென்று மூளையின் இயக்கத்தை விரைவுபடுத்தும். இதனால் நினைவாற்றல் மேம்படும். பக்கவாதம் மற்றும் தூக்கமின்மை பிரச்னை உள்ளவர்களுக்கு இந்த வகை பிராணாயாமம் மிகவும் நல்லது. நரம்பு மண்டலத்தைச் சிறப்பாகச் செயல்படத் தூண்டும். நோயின் தீவிரம் குறையும்.

சூரிய பேதனா பிராணாயாமம் செய்யும்போது பிங்கல நாடி எனப்படும் வலது நாடி தூண்டப்படும். வலது மூக்கு வழியாக மூச்சை உள்ளிழுக்கும் இந்தப் பயிற்சியைச் செய்வதால் சளி, மூக்கடைப்பு, சைனஸ் பிரச்னைகள் சரியாகும். தொடர்ந்து இதைச் செய்தால் ஆண்மையைத் தூண்டும் ஹார்மோன்கள் சிறப்பாகச் செயல்படும். தூக்கமின்மை, மனச்சோர்வு, ஒற்றைத் தலைவலி போன்றவை சரியாகும். 

நிலம் முதல் ஆகாயம் வரை... - பிராணாயாமம்

சந்திர பேதனா பிராணாயாமம் செய்தால் இட நாடி தூண்டப்பட்டு மன அமைதி கிடைக்கும். தூக்கமின்மை பிரச்னை உள்ளவர்கள் இரவில் இந்தப் பயிற்சியைச் செய்தால் நிம்மதியான தூக்கம் வரும்; ரத்த அழுத்தம் சீராகும்; பெண்மைக்கான ஹார்மோன்கள் தூண்டப்படும். பிராமரி பிராணாயாமம் என்பது, காதுகளை அதனதன் பக்க ஆள்காட்டி விரலால் மூடிக்கொண்டு மூச்சை நன்றாக உள்ளே இழுத்து வெளியேவிடுவது. அப்போது வண்டு ரீங்காரமிடுவதுபோல `ம்...’ என்று சத்தம் வெளிப்படும். இந்த வகை பிராணாயாமம் செய்வதால் உடலும் மனமும் அமைதி பெறும். நேர்மறையான ஆற்றல் (Postive Energy) கிடைக்கும். கர்ப்பிணிகள் இதைத் தொடர்ந்து செய்தால், பிரசவத்தின்போது வலி குறையும். படபடப்பு, பதற்றம், கோபம் போன்றவை கட்டுக்குள் இருக்கும். தலைவலி, மன அழுத்தம் போன்ற பிரச்னைகளுக்கும் இது நல்ல தீர்வு தரும். ரத்தச் சர்க்கரை கட்டுக்குள் இருக்கும்.

கபாலபதி பிராணாயாமம் என்பது, மூச்சை மெதுவாக உள்ளிழுத்து வேகமாக வெளியேவிடும் பயிற்சி. இதன் மூலம் மூளை சுறுசுறுப்பாகும். இந்த பிராணாயாமம், மார்பகப் புற்றுநோயின் வீரியத்தைக் குறைப்பதாக அமெரிக்காவைச் சேர்ந்த ஆய்வு மையம் ஒன்று தெரிவித்திருக்கிறது. இதைத் தொடர்ந்து செய்தால், வயிற்றுப் பகுதியில் உள்ள தசைகள் வலிமை பெறும்; உடல் உறுப்புகளுக்கு ரத்தம் சீராகப் பாயும். இதனால் மலச்சிக்கல், செரிமானக் கோளாறு, குடல் பிரச்னைகள் தீரும். பஸ்திரிகா பிராணாயாமம் என்பது மூச்சை வேகமாக உள்ளிழுத்து, அதே வேகத்தில் வெளியேவிடும் பயிற்சி. இதைத் தொடர்ந்து செய்தால், உடல் பருமன், ஆஸ்துமா, சைனஸ் குறைபாடுகள் சரியாகும். ஷீதலி மற்றும் ஷீத்காரி பிராணாயாமங்களைச் செய்தால், உடல் குளிர்ச்சியடையும். முடி உதிர்தல், நரம்புத் தளர்ச்சி, கோபம், உடல் எரிச்சல், நெஞ்செரிச்சல், ரத்த அழுத்தம் போன்ற பிரச்னைகள் சரியாகும்.

தகுதிவாய்ந்த இயற்கை மற்றும் யோகா மருத்துவரிடம் ஆலோசனையுடன் தேவையான பிராணாயாமங்களை அடையாளம் கண்டு செய்வது நல்லது.

அடுத்த இதழில் கிரியா யோகா பற்றிப் பார்ப்போம்!

- எம்.மரியபெல்சின்