ஹெல்த்
Published:Updated:

உங்கள் மருந்து, மாத்திரைகளை சரியாகத்தான் பயன்படுத்துகிறீர்களா

உங்கள் மருந்து, மாத்திரைகளை சரியாகத்தான் பயன்படுத்துகிறீர்களா
பிரீமியம் ஸ்டோரி
News
உங்கள் மருந்து, மாத்திரைகளை சரியாகத்தான் பயன்படுத்துகிறீர்களா

அஜிதா பொற்கொடி, நோய்க்குறியியல் மருத்துவர்ஹெல்த்

ருந்து, மாத்திரைகள் நம் வாழ்வின் ஓர் அங்கமாகவே மாறிவிட்டன. யாருடைய கைப்பையைத் திறந்தாலும் தலைவலிக்கு ஒன்று, காய்ச்சலுக்கு ஒன்று என கலர் கலராக மாத்திரைகள் வைத்திருக்கிறார்கள்.  சிலர் மருத்துவமனைக்கே செல்லாமல் சுயவைத்தியம் செய்துகொள்கிறார்கள். சிலர், மருத்துவர் பரிந்துரைத்த அவசரகால மருந்துகளைக் கையில் வைத்துக்கொள்ள மாட்டார்கள். வேறொருவருக்குப் பரிந்துரைத்த மருந்துச்சீட்டை வாங்கி, அதிலுள்ள மாத்திரைகளை வாங்கிச் சாப்பிடுவார்கள். `இவையெல்லாம் மிகவும் தவறு’ என்கிறார்கள் மருத்துவர்கள். மருந்து, மாத்திரைகளைச் சாப்பிடும்போது கவனிக்கவேண்டிய விஷயங்களை விரிவாக விளக்குகிறார் நோய்க்குறியியல் மருத்துவர் அஜிதா பொற்கொடி.

உங்கள் மருந்து, மாத்திரைகளை சரியாகத்தான் பயன்படுத்துகிறீர்களா

* உடலில் சுரக்கும் அமிலத் தன்மைக்கேற்பத்தான் ‘மருந்துகளை உணவுக்கு முன்னர் சாப்பிட வேண்டுமா, பின்னர் சாப்பிடவேண்டுமா’ என்பது தீர்மானிக்கப்படுகிறது. உணவுக்கு முன்னர் சாப்பிடவேண்டிய மருந்தை மறந்துவிட்டால் அதை உணவுக்குப் பின்னர் சாப்பிடக் கூடாது. சரியான நேரத்தில் மருந்து சாப்பிடப் பழக்கப்படுத்திக்கொள்வது அவசியம்.

* மூக்கடைப்பு, தும்மல், அலர்ஜி இருக்கும்பட்சத்தில் `செட்ரிஸைன் ’ (Cetirizine) மாத்திரை கொடுப்பார்கள். இந்த மாத்திரைகளைப் போட்டுக்கொள்ளும்போது தூக்கம் நன்றாக வரும். தூங்கப் போவதற்கு முன்னர் இந்த மாத்திரைகளை உட்கொள்ளலாம். ஆனால் இதுபோன்ற மாத்திரைகளை உட்கொண்டுவிட்டு இரவில் வாகனம் ஓட்டக் கூடாது. 

உங்கள் மருந்து, மாத்திரைகளை சரியாகத்தான் பயன்படுத்துகிறீர்களா* மாத்திரைகள் சாப்பிடும் நேரத்தில் வீட்டிலுள்ள பெண்களை, ‘சமையல் வேலையில் ஈடுபட வேண்டாம்’ என்று சொல்ல வேண்டும். ஏனென்றால், நோய் பாதிப்பால் அவர்கள் ஏற்கெனவே சோர்வாக இருப்பார்கள். அந்த நேரத்தில் மருந்து உட்கொண்டால் மயக்கம்வர வாய்ப்பிருக்கிறது.

* எத்தனை நாள்களுக்கு மருந்து கொடுக்கிறார்கள் என்பதைக் கவனத்தில்கொள்ள வேண்டும். மருத்துவர் கொடுக்கும் மருந்துச்சீட்டு தொலைந்துபோக வாய்ப்பிருக்கிறது. இதற்காக ஒரு நோட்டைப் பராமரிக்கவேண்டியது அவசியம். அதில், ‘என்னென்ன மருந்துகளை எதற்காக, எப்படிச் சாப்பிட வேண்டும்’ என்பதை தெளிவாகக் குறித்துவைத்துக்கொள்ள வேண்டும். மருந்தின் பெயர், பிராண்ட் நேம், எந்த மருத்துவர் கொடுத்தது போன்ற விவரங்களை எழுதி வைத்துக்கொள்வது நல்லது.

* மருந்து வாங்கும்போது அதில் உள்ள குறிப்புகள், எச்சரிக்கை போன்ற தகவல்களைப் பெரும்பாலும் நாம் படிப்பதில்லை. அதற்கான துண்டுச் சீட்டுகள் அந்த மருந்து பாக்கெட்டில் இருக்கும். நாம் படிக்காமலேயே அதை தூக்கிப் போட்டுவிடுவோம். அதில் உள்ளவற்றைப் படித்து நினைவில் வைத்திருக்க வேண்டும். அல்லது அது குறித்து மருத்துவரிடம் கேட்டு்த் தெரிந்துகொள்வது நல்லது.

* மருந்துக்கடைகளில் மருந்து வாங்கிச் சாப்பிடும் பழக்கம் நல்லதல்ல. மருந்துக் கடைக்காரர் உங்கள் உடல்நிலை, ஏற்கெனவே உடலில் உங்களுக்கிருக்கும் பிரச்னைகள் என்னென்ன என்பதையெல்லாம் கேட்டுத் தெரிந்துகொண்டு மருந்து கொடுப்பதில்லை. `மூட்டுவலி’ என்றால் வலி நிவாரணி மருந்து கொடுப்பார். சிலர், நான்கு மாத்திரைகளை வாங்குவார்கள். ஒரு மாத்திரை சாப்பிட்டு வலி குறையவில்லையென்றால், சில மணி நேரத்தில் அடுத்த மாத்திரையைப் போட்டுக்கொள்வார்கள். இது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். 

உங்கள் மருந்து, மாத்திரைகளை சரியாகத்தான் பயன்படுத்துகிறீர்களா

* மருத்துவர்  குறிப்பிட்ட மருந்து அல்லது மாத்திரையை எத்தனை நாள்கள் சாப்பிடச் சொல்கிறாரோ, அத்தனை நாள்களுக்கு மட்டுமே சாப்பிட வேண்டும். முக்கியமாக வலி நிவாரணி மற்றும் ஸ்டீராய்டு மருந்துகளைத் தொடர்ந்து பயன்படுத்தக் கூடாது.

* ஒவ்வாமை அறிகுறிகள் ஏற்பட்டால், மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும். தலைச்சுற்றல், வாந்தி, தலைவலி, மயக்கம் போன்றவை புதிய மருந்து உட்கொள்ளும்போது ஏற்படும் ஒவ்வாமை அறிகுறிகள். மருத்துவரிடம் தெரிவித்தால் அவர் உடனடியாக மருந்தை மாற்றிக் கொடுப்பார்.

* ‘ஓய்வெடுக்க வேண்டும்’, ‘வாகனம் ஓட்டக் கூடாது’ என மருத்துவர் சொன்னால் அதை அவசியம் பின்பற்ற வேண்டும்.

* காய்ச்சலின்போது போதுமான தண்ணீர் குடிக்க வேண்டும். நீர்ச்சத்துக் குறைபாட்டால் மயக்கம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. மருந்து உட்கொள்ளும்போதும் மருத்துவரின் அறிவுரைப்படி போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். வயிற்றுப்போக்கு இருந்தாலும், தண்ணீர் குடிக்க வேண்டும்.  போதுமான அளவு தண்ணீர் குடிக்காமல் `ஆன்டிபயாடிக்’ மாத்திரைகளைச் சாப்பிடுவதால் நோயின் தன்மை குறையாது. எனவே, நோய் குணமாக நிறைய தண்ணீர் குடிக்கவேண்டியது அவசியம். இரண்டரை லிட்டரில் இருந்து மூன்றரை லிட்டர்வரை தண்ணீர் குடிப்பதை வழக்கப்படுத்திக்கொள்ள வேண்டும்.

* மருத்துவர் எழுதும் மருந்துகள் குறித்து கூகுளில் தேடும் பழக்கம் பலருக்கும் உண்டு. வலிப்பு நோய்க்காகக் கொடுக்கப்படும் மருந்துகளால் உடல் எடை கூடலாம். இதைப் படித்துவிட்டு வலிப்புக்காக மருந்து எடுத்துக்கொள்வதையே நிறுத்திவிடும் ஆபத்தும் இருக்கிறது. அதிகபட்சத் தகவல்களை கூகுளில் தேடுவது குழப்பத்தைத்தான் தரும். மருத்துவரைப்போல நோயாளியை நேரில் பரிசோதனை செய்து மருந்துகளைப் பரிந்துரைப்பதில்லை கூகுள். 

- யாழ் ஸ்ரீதேவி

உங்கள் மருந்து, மாத்திரைகளை சரியாகத்தான் பயன்படுத்துகிறீர்களா

வேலைக்குச் செல்பவர்கள் கடைப்பிடிக்கவேண்டியவை

* இளம் வயதில் ஏற்படும் டைப் 1 சர்க்கரைநோயாக இருந்தாலும் சரி, வயதானவர்களுக்கு ஏற்படும் டைப் 2 சர்க்கரைநோயாக இருந்தாலும் சரி, பாதிக்கப்பட்டவர்கள் பாக்கெட்டில் நோய் விவரம் அடங்கிய கார்டு வைத்திருக்க வேண்டும். முக்கியமாக, சர்க்கரை நோயாளிகளுக்கு போதிய அளவு இன்சுலின் சுரக்காவிட்டால், சர்க்கரையின் அளவு அதிகரித்து மயக்கமடைந்து கீழே விழுந்துவிடுவார்கள். அப்போது சட்டை பாக்கெட்டில் அவர்கள் வைத்திருக்கும் கார்டு உதவும். அந்த கார்டில் பெயர், வயது, வீட்டு முகவரி, உதவிக்கு அழைக்கவேண்டிய செல்போன் எண், சர்க்கரைநோயின் தன்மை, உட்கொள்ளும் மருந்துகள் குறித்த விவரங்கள், ரத்த வகை போன்ற தகவல்கள் இடம்பெற்றிருக்க வேண்டும். இத்துடன் வேறு ஏதாவது உடல்நலக் குறைபாடு இருக்கிறதா என்பதையும் அந்த கார்டில் குறிப்பிட்டிருக்க வேண்டும்.

* மருந்து, உணவு சாப்பிடுவதற்கு செல்போனில் `ரிமைண்டர்’ வைத்துக்கொள்ளலாம்.

* நீண்ட நாள்கள் மருந்து உட்கொள்பவர்களுக்கு புதிதாக ஒரு மருந்தை மருத்துவர் பரிந்துரைத்தால்,  அதை வார விடுமுறை நாளிலிருந்து ஆரம்பிக்கலாம். மருத்துவர் உடனடியாக புதிய மருந்தை உட்கொள்ளச் சொன்னால், உடன் வேலை பார்க்கும் இரண்டு பேரிடமாவது இது குறித்துத் தெரிவிக்க வேண்டும். 

* வேலைக்குச் செல்பவர்கள் மருந்துப்பை அல்லது பவுச் வைத்துக்கொண்டு ஒரு வாரத்துக்குத் தேவையான மருந்துகளை அதில் வைத்திருப்பது நல்லது.