நீண்ட தூர ஓட்டம், இருளில் ஒரு நொடி தோன்றி மறையும் விசித்திர உருவம், பின்னால் நின்றுகொண்டு எதிர்பாரா நொடியில் சத்தமிட்டு நம்மைத் திடுக்கிடச் செய்யும் நண்பர்களின் கலாய், நள்ளிரவில் பிறந்தநாள் கேக்குடன் எழுப்பும் நண்பர்கள், காதலைச் சொல்லி பறந்துவரும் அந்தக் குறுஞ்செய்தி... நம் இதயத்துடிப்பை எகிறவைக்கும் இதுபோன்ற தருணங்களை முடியாத சரக்கு ரயிலின் பெட்டிகள்போல அடுக்கிக்கொண்டே போகலாம். உடலில் உள்ள அனைத்து பாகங்களுக்கும் செங்குருதியைப் பாய்ச்சி, ஒரு நிமிடம்கூட ஓய்வெடுக்காமல் துடிப்புடன் இருந்து நம்மை உயிர்ப்புடன் வைக்கிறது, கைப்பிடி அளவே உள்ள அந்தத் தசை!
உடலின் மிக முக்கிய அங்கமாகப் பார்க்கப்படும் இதைப் பேணிப் பாதுகாக்க, பல்வேறு வழிமுறைகளை மருத்துவ அறிவியல் அதன் முக்கியப் பக்கங்களில் பூர்த்திசெய்து நம்மிடம் நீட்டுகிறது. ஆரோக்கியத்தின் இடர்க்காலங்களில் இதயத்தில் என்ன பிரச்னை என்பதை எப்படி அறிந்துகொள்வது? இதயப் பிரச்னைகளைச் சரிசெய்ய இப்போது புதிதாக வந்திருக்கும், வரவிருக்கும் முக்கியத் தொழில்நுட்பங்கள் என்னென்ன?

கம்ப்யூட்டட் டோமோகிராபி ஆஞ்ஜியோகிராபி (Computed Tomography Angiography - CTA)
இதயநோய்கள் மற்றும் கோளாறுகளைக் கண்டறிய உதவும் பல கருவிகளில் மிகவும் முக்கியமானது கம்ப்யூட்டட் டோமோகிராபி ஆஞ்ஜியோகிராபி. தமனிகள் எனப்படும் ஆர்டரிஸ் குழாய்களில் உள்ள அடைப்புகளை இந்தத் தொழில்நுட்பம் மூலம் எளிதில் கண்டறிய முடியும். இந்த சிடி ஸ்கேனர் மெஷின், பார்ப்பதற்குப் பெரிய துளைகொண்ட டோனட் வடிவில் இருக்கும். இதன் செயல்பாடுகள் சாதாரண எக்ஸ்ரே மெஷின்கள்போலத்தான் இருக்கும். இதனுடன் இணைக்கப்பட்ட டேபிளில் நோயாளி படுத்துக்கொள்ள
ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வேண்டும். அவரின் உடலைச் சுற்றி சிடி ஸ்கேனர் சுழலும். அப்போது, பல்வேறு கோணங்களில் பலமுறை உடலினுள்ளே இருக்கும் விஷயங்களைப் படம்பிடிக்கும். இதன் மூலம் எடுக்கப்படும் படங்கள், சாதாரண ஸ்கேனர் அல்லது எக்ஸ்ரே மெஷின்களைவிட தெளிவாக இருக்க முக்கியக் காரணம், ஸ்கேனிங் செய்வதற்கு முன்பு நோயாளிக்கு ஏற்றப்படும் `கான்ட்ராஸ்ட் டை' (Contrast Dye). நோயாளியின் கை அல்லது காலின் மூலம் செலுத்தப்படும் இது, ரத்தக்குழாய்களைத் துல்லியமாகப் படம்பிடிக்க உதவுகிறது.
சில ஆண்டுகளுக்கு முன்பு, இவ்வகை இதயப் பிரச்னைகளைப் பற்றித் தெரிந்துகொள்ள கார்டியாக் கேத் என்னும் செயல்முறையே (Cardiac Cath Procedure) கையாளப்பட்டது. இதில் இதயத்தின் செயல்பாட்டை ஆராய, பெரிய ரத்தக்குழாய் ஒன்றினுள்ளே டியூப் ஒன்றைச் செலுத்துவார்கள். ஆனால், இப்போதைய நவீன கம்ப்யூட்டட் டோமோகிராபி ஆஞ்ஜியோகிராபி அதை ஓரங்கட்டி உள்ளது. இரண்டு மூன்று மணி நேரங்கள் கிட்டத்தட்ட அறுவை சிகிச்சைபோல செய்ய வேண்டிய ஒன்றை இந்த ஸ்கேனர் ஐந்தே நிமிடங்களில் செய்துவிடுகிறது. பழைய கார்டியாக் கேத் முறைதான் மிகத் துல்லியமானது என்றாலும், இந்த ஸ்கேனர் மூலம் ஆபத்தான நோய்களைச் சுலபமாகக் கண்டறிந்துவிடலாம். ரிஸ்க் என்பதும் பல மடங்கு குறைவு.

கிளாஸ் டெக்னாலஜி
கூகுள் கிளாஸை மறந்திருக்க மாட்டோம். 2013-ம் ஆண்டு 1,500 டாலர்களுக்கு புரோட்டோடைப்பாக வெளியான இது, அடுத்த ஆண்டே மக்கள் பயன்பாட்டுக்குக் கிடைக்க ஆரம்பித்தது. ஆனால், பிரைவசி தொடர்பான சட்டச் சிக்கல்கள், பாதுகாப்பு குறித்த கேள்விகள் எட்டிப்பார்த்ததும், ‘கிளாஸ்’ தயாரிப்பை நிறுத்திக்கொள்வதாக 2015-ம் ஆண்டின் தொடக்கத்தில் தெரிவித்தது கூகுள். அதன் பிறகு, இரண்டு வருடங்கள் கழித்து, விரைவில் கூகுள் கிளாஸ் என்டர்பிரைஸ் எடிஷன் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.
கூகுள் கிளாஸ் முதலில் வெளியான கால கட்டத்திலேயே, தனிநபர் பயன்பாட்டைத் தவிர்த்து பல்வேறு துறைகளின் வேலைகளுக்கு அது பயன்படும் என்று கூகுள் அறிவித்தது. அதில் மிக முக்கியமான ஒன்று, மருத்துவத் துறை. சாதாரண கண்ணாடிபோல மிகச் சுலபமாக நம் கண்களில் அணியக்கூடிய கேட்ஜெட் என்பதால், மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்கையில் இந்தத் தொழில்நுட்பம் உற்ற தோழனாக இருக்கும். இதய அறுவை சிகிச்சையின்போது கைகளைப் பயன்படுத்தாமலேயே அவ்வப்போது படங்களை எடுத்து அனுப்ப முடியும். குறிப்பாக, ஆஞ்ஜியோகிராமின்போது, கூகுள் கிளாஸ் கொண்டு கம்ப்யூட்டர் மற்றும் ஐ-பேட்களுக்குப் பகிரப்படும் படங்கள், மற்ற நிபுணர்கள் புரிந்துகொள்ளும் அளவுக்குத் தெளிவாக இருக்கும். சிகிச்சையின்போது உடன் இல்லாத அல்லது வெளிநாடுகளில் உள்ள நிபுணர்களிடம் இதன் மூலம் ஆலோசனைகளை நொடியில் பெற முடியும்.
எனவே, கூகுள் கிளாஸ் மீண்டும் வராவிட்டாலும் அதன் தொழில்நுட்பத்தை வைத்தே அதற்கு இணையான அல்லது அதனினும் மேலான தொழில்நுட்பம் விரைவில் வரும் என்று எதிர் பார்க்கலாம்.

எக்கோ கார்டியோகிராபி (Echocardiography)
பெரும்பாலான ஸ்கேனர் மெஷின்கள் ஒளி அலைகளைக் கொண்டு நம் உள்ளமைப்புகளைப் படம்பிடித்துக் காட்டுபவை. இந்த எக்கோ கார்டியோகிராபி முறை, ஒலி அலைகளை வைத்து ஓவியம் தீட்டுகிறது. பிரதானமாக வயிற்றில் வளர்ந்துவரும் கருவைப் படம்பிடிக்க உதவும் இந்தத் தொழில்நுட்பம், இதயப் பிரச்னைகளைக் கண்டறியவும் இப்போது பயன்படுத்தப்படுகிறது.
ஒரு மந்திரக்கோலைப்போலிருக்கும் இந்தக் கருவியை இதயத்தின் அருகில் வைப்பார்கள். உடனே இந்தக் கருவியிலிருந்து அல்ட்ராசவுண்டு அலைகள் வெளியேறும். அது துடித்துக்கொண்டிருக்கும் இதயத்தை அதன் அதிர்வலைகளைக்கொண்டே மிகத் துல்லியமாக வரைந்துவிடும். வளர்ந்துவரும் இந்தத் தொழில்நுட்பத்தில் பல நவீன வகைக் கருவிகள் இப்போதே வந்துவிட்டன. கையடக்கக் கருவியான போர்ட்டபிள் எக்கோ மெஷின், 3டி படங்கள் தரும் முப்பரிமாண எக்கோ மெஷின், அறுவை சிகிச்சையின்போதே நேரடியாகப் பயன்படுத்தக்கூடிய இன்ட்ரா கார்டியாக் எக்கோ என இம்மூன்றும் இப்போது பிரதானமாகப் பயன்படுத்தப்பட்டுவருகின்றன.

எம்.ஆர்.ஐ ஹார்ட் ஸ்கேனிங் (MRI Heart Scanning)
கார்டியாக் எம்.ஆர்.ஐ ஸ்கேனிங் மூலம் எடுக்கப்படும் படங்கள், மற்ற தொழில்நுட்பங்களைவிடவும் தெளிவாக இதயத்தை அறிய உதவுகின்றன. இதன் ஈடு இணையற்ற 3டி மீள் உருவாக்கமானது, எக்கோ கார்டியோ மற்றும் CTA தொழில்நுட்பங்களைவிடவும் அற்புதமான படங்களைத் தருகிறது. இதய வால்வு பிரச்னைகள், கோளாறுகள், கட்டிகள், அடைப்புகள் போன்றவற்றைத் துல்லியமாக இதில் பார்க்க முடியும்.
இதற்காகப் பயன்படுத்தப்படும் `கான்ட்ராஸ்ட் டை'யில் அயோடின் இருக்காது. அதனால், ஒவ்வாமை ஏற்பட வாய்ப்பில்லை. மற்ற ஸ்கேனர்கள் போல கதிர்வீச்சு அபாயமும் இதற்குக் கிடையாது. ஆனால், சக்திவாய்ந்த காந்த அலைகள் பயன்படுத்தப்படுவதால், பேஸ்மேக்கர் அல்லது பிளேட்கள் வைத்து அறுவை சிகிச்சை செய்யப்பட்டவர்களுக்கு இந்த முறையை மருத்துவர்கள் பரிந்துரைக்க மாட்டார்கள். அதே நேரம், டியூப் போன்ற குழாயில் நோயாளி படுக்க வேண்டும் என்பதால், கிளாஸ்ட்ரேபோபியா (மூடிய இடம் பற்றிய பயம்) உள்ளவர்களுக்கு இது அசௌகர்யமாக இருக்கக்கூடும். அதைச் சரிக்கட்ட விசேஷ மருந்துகள் தரப்படும்.
எது எப்படியோ, நாம் இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொண்டால் இதைப் பற்றியெல்லாம் கவலைப்படத் தேவையில்லைதானே!
- ர.சீனிவாசன்

உதட்டு வெடிப்பைச் சரிசெய்ய, தேங்காய் எண்ணெய் 10 சொட்டுகள், பீட்ரூட் ஜூஸ் - அரை டீஸ்பூன் எடுத்து இரண்டையும் ஒன்றாகக் கலக்கவும். பேஸ்ட் போன்ற பதம் கிடைக்கும். இதை தினமும் உதட்டில் அப்ளை செய்துவர, வெடிப்புகள் நீங்கி இதழ்கள் அழகாகும்.