Published:Updated:

யோகா... எண்ணெய்யில்லாத உணவுகள்... 123 மனிதரின் ஆரோக்கிய ரகசியம்!

யோகா... எண்ணெய்யில்லாத உணவுகள்... 123 மனிதரின் ஆரோக்கிய ரகசியம்!
யோகா... எண்ணெய்யில்லாத உணவுகள்... 123 மனிதரின் ஆரோக்கிய ரகசியம்!

சிவானந்த பாபா 123 வயதைத் தாண்டியும் ஆரோக்கியமாக இருக்கிறார். கைகளை வீசி வேகமாக நடக்கிறார். சம்மணமிட்டு உட்காருகிறார்.

ப்போதெல்லாம் 60 வயதை நெருங்கினால் நடக்கவே சிரமப்படுகிறார்கள். பல்வேறு நோய்களும் தொற்றிக்கொண்டு அவர்களைப் பாடாய்ப்படுத்துகிறது. மூட்டுவலி, பார்வைக் குறைபாடு, சர்க்கரை நோய், நினைவாற்றல் குறைதல் போன்ற பல பிரச்னைகளை எதிர்கொள்வார்கள். ஆனால், இங்கே ஒருவர் 123 வயதைத் தாண்டியும் ஆரோக்கியமாக இருக்கிறார். கைகளை வீசி வேகமாக நடக்கிறார். சப்பணமிட்டு உட்காருகிறார். தலையை அங்குமிங்கும் சுழற்றி, உடலை வளைத்து யோகா செய்கிறார். உலகின் அதிக வயதான மனிதர்களில் ஒருவர். அவர் பெயர் சிவானந்த பாபா. 

அண்மையில், சென்னை நுங்கம்பாக்கத்திலுள்ள தனியார் மருத்துவமனைக்கு உடல் பரிசோதனைக்காக வந்திருந்தார். இவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் முழு உடல்நலத்துடன் இருப்பதாகத் தெரிவித்தனர். பின்னர் சிவானந்த பாபா, பார்வையாளர்களிடம் தன் `ஹெல்த் சீக்ரெட்ஸ்' குறித்துப் பகிர்ந்துகொண்டார். 

1896-ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் 8-ம் தேதி மேற்குவங்கம் மாநிலத்தில் பிறந்தவர் சிவானந்த பாபா. இவரது குடும்பம் வறுமையில் பல துன்பங்களை அனுபவித்தது. வீடு வீடாகச் சென்று உணவு வாங்கிச் சாப்பிட்டு வாழ்க்கையை நகர்த்தினர். பலநாள்கள் சாதம் வடித்த நீரே பசியாற்றக் கிடைக்கும். 4 வயது இருக்கும்போது, சிவானந்த பாபாவை `நப்விட்' என்ற இடத்திலுள்ள சத்குரு ஓம்காரனந்தா சுவாமியிடம் ஒப்படைத்துவிட்டனர் இவரது பெற்றோர். பாபாவுக்கு ஒரு அக்கா உண்டு. ஆறு வயதில் பெற்றோரிடம் திரும்ப வந்தார் பாபா. அந்தச் சமயத்தில் பசியின் கொடுமையால் அவரது அக்கா இறந்துபோனார். அதே வாரத்தில் ஒருநாள் சூரிய உதயத்துக்கு முன் அவரது தாயும், அதேநாளில் சூரிய உதயத்துக்குப் பின் தந்தையும் உயிரிழந்தனர். 

Photo Courtesy : ANI 

அவர்களது வழக்கப்படி, இறந்தவர்களின் உடலை எரிப்பார்கள். எரிப்பதற்கு முன்பாக, உயிரிழந்தவரின் வாயில் தீ போடுவது நடைமுறையில் இருந்தது. ஆனால், சிவானந்த பாபா அப்படிச் செய்ய மறுத்துவிட்டார். `பெற்றோரின் வாயில் தீ வைப்பது மனிதத்தன்மையற்ற செயல். அது மிகப் பெரும் பாவம்... அநீதியும் கூட'  என்று, விளக்கம் தந்து, பின் இறுதிச் சடங்குகளைச் செய்தார். அதற்குப் பிறகு சத்குரு ஓம்காரனந்தா ஸ்வாமிகளிடம் அடைக்கலம் புகுந்தார்.

சிவானந்த பாபா, பள்ளிக்குச் சென்று கல்வி பயிலாதவர். ஆனால், ஆங்கிலத்தையும் இந்தியையும் சரளமாகப் பேசுகிறார். அதற்குக் காரணம், அவரது சத்குருதான். `எனக்குக் கல்வி புகட்டியதோடு அனைத்துவிதமான பயிற்சிகளையும் அளித்தார். ஆன்மிக அறிவையும் எனக்கு அளித்து, இந்த உலகின் இயக்கத்தையும் மனிதர்களையும் புரிந்துகொள்ள உதவி செய்தார்' என்று, நன்றி மறவாமல் நினைவுகூர்ந்தார்.

சிவானந்த பாபா 100 ஆண்டுகளைக் கடந்தும் உயிரோடும், செயல் திறனோடும் இருப்பதற்குக் காரணம், அவரது உணவுக் கட்டுப்பாடும் யோகாவும்தான்!

மருத்துவமனைக்கு வந்திருந்த பார்வையாளர்களிடம், தினசரி தான் மேற்கொள்ளும் யோகா பயிற்சிகளை செய்துகாட்டி, அனைவரையும் வாய்பிளக்க வைத்தார் .

காலையில் எழுந்ததும் சிறிது தூரம் நடைப் பயிற்சி மேற்கொள்வார். சுமார் அரைமணி நேரம் யோகா செய்வார். அதற்குப் பிறகு சப்பாத்தி, பிரட், கீரை வகைகளை விரும்பி உட்கொள்வார். இதுதவிர வேறு எந்த உணவுகளையும் சாப்பிடுவதில்லை. உங்களின் ஆரோக்கிய ரகசியம் என்னவென்று கேட்டால், `எண்ணெய் இல்லாத உணவுகளை உட்கொள்கிறேன். அதேபோல் உணவில் உப்புச் சேர்த்துக்கொள்வதில்லை. பால் அருந்த மாட்டேன். பழங்களை உண்பதில்லை. உணவு விஷயத்தில் எச்சரிக்கையோடு இருக்கிறேன். தினமும் யோகா பயிற்சிகளை மேற்கொள்வேன். அதற்கு மேல், அந்த இறைவனின் அருளினால் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்' என்று, அமைதியாகப் பதிலளிக்கிறார்.

மேலும், `என் வாழ்க்கை எனக்கானதில்லை. அது பிறருக்குத் தொண்டு செய்வதற்காகப் படைக்கப்பட்டுள்ளது. ஆகவேதான், நான் நோய்களின்றி ஆரோக்கியமாக இருக்கிறேன். என் வாழ்க்கையில் நடந்த துயரங்கள் மீது எனக்கு வருத்தமோ, கோபமோ ஏற்பட்டதில்லை. நான் ஆசைகளைக் கடந்தவன். ஆகவேதான், உயர் ரத்த அழுத்தம், மன அழுத்தம் போன்ற எந்த நோய்களும் என்னைத் தாக்குவதில்லை..'' என்கிறார் சிவானந்த பாபா.

தற்போது, உத்தர பிரதேச மாநிலம், வாரணாசி, கபீர் நகரிலுள்ள துர்கா குந்தில் ஆசிரமம் அமைத்து, ஆன்மிகப் பணியில் தன்னை முழுவதுமாக ஈடுபடுத்திக்கொண்டுள்ளார் சிவானந்த பாபா. தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு இலவசமாக யோகாவைக் கற்றுத்தருகிறார். இதற்காக, அவர் எந்த அன்பளிப்பையும், நன்கொடைகளையும் பெறுவதில்லை.  

`சிவானந்த பாபாவுக்கு 123 வயது என்பதற்கு ஆதாரங்கள் ஏதேனும் உண்டா...?' என்று கேட்டதற்கு, `பாபாவுக்கு மத்திய அரசு வழங்கியுள்ள பாஸ்போர்ட் இருக்கிறது...' என்று பதிலளிக்கிறார், அவரது சீடரான ஆஷிம் பைனா.  `தான் மட்டுமல்ல... தன்னைச் சுற்றியுள்ளவர்களும் சந்தோஷமாக, நீண்ட ஆயுளோடும் ஆரோக்கியத்தோடும் இருக்க வேண்டும்' என்பதே சிவானந்த பாபா, உலகுக்குச் சொல்லும் நற்செய்தி!  

அடுத்த கட்டுரைக்கு