Published:Updated:

67 வயதில் 15,000 கிலோமீட்டர் பயணம் - வியக்க வைக்கும் விவசாயி பிரமோத் மகாஜன்!

67 வயதில் 15,000 கிலோமீட்டர் பயணம் - வியக்க வைக்கும் விவசாயி பிரமோத் மகாஜன்!
67 வயதில் 15,000 கிலோமீட்டர் பயணம் - வியக்க வைக்கும் விவசாயி பிரமோத் மகாஜன்!

67 வயதில் 15,000 கிலோமீட்டர் பயணம் - வியக்க வைக்கும் விவசாயி பிரமோத் மகாஜன்!

சிறுசீரகத்தை தானமாக வழங்கிய 67 வயது விவசாயி ஒருவர், இந்தியா முழுவதும் சுற்றி உறுப்பு தானம் குறித்து விழிப்புஉணர்வு ஏற்படுத்தி வருகிறார்.


மகாராஷ்டிராவின் சங்கலி என்ற பகுதியைச் சேர்ந்தவர் பிரமோத் மகாஜன். விவசாயியான அவருக்கு 67 வயதாகிறது. ஏறத்தாழ 18 வருடங்களுக்கு முன், தனது சிறுநீரகத்தை நண்பர் ஒருவருக்குத் தானமாக அளித்தார் பிரமோத். இத்தனை வருடங்கள் கழித்தும், ஒரு சிறுநீரகத்துடன் முழு உடல் ஆரோக்கியத்தோடு இருக்கும் அவர் தனது உடலை முன்னிறுத்தி, உறுப்பு தானம் குறித்து விழிப்புஉணர்வு ஏற்படுத்தி வருகிறார். 

தனது சிறுநீரகங்களில் ஒன்றை தானமாக வழங்கிய பிரமோத், முதலில் சில ஆண்டுகள் தன்னைச் சுற்றி இருப்பவர்களிடம் உறுப்புதானம் குறித்து விழிப்புஉணர்வு ஏற்படுத்தி வந்தார். அதன்பிறகு, என்.ஜி.ஓ ஒன்றின் உதவியுடன் 'உறுப்பு தானம்' குறித்த நிகழ்ச்சிகளில் ஈடுபட்டார். இதையடுத்து பலர் தங்களது உறுப்புகளை தானமளிக்க முன்வந்தனர். எனவே, உறுப்பு தானம் குறித்த விழிப்பு உணர்வை இந்தியா முழுவதும் செய்ய திட்டமிட்டார். அதன்படி தனது இருசக்கர வாகனத்தில் 100 நாட்கள்  பயணம் செய்து 18 மாநிலங்களில் விழிப்புஉணர்வு ஏற்படுத்தி வருகிறார். இதற்காக, 10 முதல் 15 ஆயிரம் கிலோமீட்டருக்கும் மேல் பயணம் செய்ய திட்டமிட்டிருக்கும் அவர், தனது வயது பற்றி கவலைப்படவில்லை.


இந்நிலையில், இருதினங்களுக்கு முன் சென்னை வந்து சேர்ந்த பிரமோத், சிறிது ஓய்வுக்குப் பிறகு கேரளா செல்ல திட்டமிட்டிருந்தார். சென்னையிலிருந்து அவர் கிளம்புவதை அறிந்ததும், தமிழக அரசின் சார்பில்  சென்னை ஓமந்தூரார் பன்னோக்கு அரசு மருத்துவமனையில் அவருக்கு சிறப்பு செய்யப்பட்டது. அவரது விழிப்பு உணர்வு பயணம் வெற்றி பெற கொடி அசைத்து வழியனுப்பி வைக்கப்பட்டது. 

கேரளா செல்ல தயாராக இருந்த பிரமோத் மகாஜனிடம் உறுப்பு தானம் மற்றும் அவரது பயண அனுபவம் குறித்து கேட்டோம்.
"2000-ம் ஆண்டு என நினைக்கிறேன். எங்க கிராமத்துல உள்ள ஒருத்தருக்கு ரெண்டு சிறுநீரகமும் செயலிழந்துபோனதா சொன்னாங்க. அதோட அவருக்குக் கல்யாணமாகி 13 வருஷமாகியும் அவருக்கு குழந்தை இல்லைன்னு கேள்விப்பட்டேன். உடனே, நானே அவரைத் தேடிப்போய் பார்த்தேன். அப்போதான் அவரோட குடும்பத்தில உள்ளவங்க மனஅழுத்தத்துல இருந்தது தெரியவந்தது. ஆனா, அவருக்கு யாரும் சிறுநீரகம் கொடுக்க முன்வரலை. நான், அவரோட ரத்தம் குரூப் என்னன்னு விசாரிச்சேன், எனக்கும் அவருக்கும் ஒரே குரூப்னு தெரிஞ்சுது. உடனே, நான் என்னோட சிறுநீரகத்தை கொடுக்கிறதா சொல்லிட்டேன். 


`லிவிங் டோனர்ஸ்' (Living Donars) தொடர்பான சில சிக்கல்களும், பயங்களும் இப்போ இருக்கிறதைக் காட்டிலும் அப்போ அதிகமாகவே இருந்தது. ஆனாலும், நானே முன்வந்ததால, அவங்க ஒண்ணும் சொல்லலை. என்னைப் பொறுத்தவரை, இதனால என்னோட உயிருக்கு எந்த ஆபத்தும் வராதுங்கிறது தெரியும். நான் ஏற்கெனவே பாதி வாழ்க்கையை வாழ்ந்து முடிச்சுட்டேன். அதனால, தைரியமா நான் தானம் கொடுக்கச் சம்மதிச்சிட்டேன். என் குடும்பத்துல உள்ள யார்கிட்டயும் நான் கேட்கல. என் மனைவிக்கிட்ட மட்டும் தகவலா சொன்னேன். அவளும் ஒண்ணும் சொல்லல. இன்னும் சொல்லப்போனா எனக்குப் பெரிய பக்கபலமா இருந்தது என் மனைவி மட்டுமே.

சிறுநீரக தானம் கிடைச்ச, கொஞ்ச வருஷத்துலயே அந்த நண்பருக்கு குழந்தை பிறந்தது. அவங்க குடும்பத்தையும், குழந்தையையும் பார்த்தப்போ என்னோட சந்தோஷத்துக்கு எல்லை இல்லை. இதுக்கு இடையில என்னைச் சுத்தி இருந்தவங்க, என் உடம்புக்கு ஏதாச்சும் முடியாம போயிடுமோன்னு கவலைப்பட்டாங்க. எல்லோரோட கேள்விக்குமான பதில், சிறுநீரகத்தை தானம் செஞ்சி இத்தனை வருஷமாகியும், எந்த பாதிப்பும் இல்லாம ரொம்ப ஹேப்பியா, ஹெல்த்தியா இருக்கேன். ஆனா, இன்னும் பல பேருக்கு பயம் போகலை. அதனால, அதைப்பத்தி விழிப்புஉணர்வு தேவைங்கிறதை புரிஞ்சுக்கிட்டேன்.

என்னோட இந்த ஆரோக்கியத்தை முன்மாதிரியா வெச்சு, என்னையே நான் ஒரு விழிப்புஉணர்வுக்கான பொருளா மாத்திக்கிட்டேன். இப்படி செய்றது மூலமா, யாராச்சும் ஒருத்தர் உறுப்புதானத்துக்கு முன் வந்தாக்கூட, அது எனக்கான வெற்றிதான். அந்த வகையில, இதுவரைக்கும் நிறைய வெற்றிகள் கிடைச்சது.  பலபேரோட சிறுநீரகத்தை தானம் பண்ண வச்சிருக்கேன். பலர் தானம் செய்ய உதவியிருக்கேன். இதனால, எத்தனையோ குடும்பம் சந்தோஷமா இருக்கு. அந்த சந்தோஷம்தான் இன்னைக்கும் நான் இவ்வளவு உயிர்ப்போட இருக்க உதவுது" என்று முகம் மலர்ந்தார் பிரமோத்.


தொடர்ந்து பேசியவர், "எங்க கிராமத்தில உள்ள ஒரு என்.ஜி.ஓ.வுல உறுப்பினரா இருக்கேன். ஏற்கெனவே நிறைய விழிப்புஉணர்வு நிகழ்ச்சிகள் பண்ணியிருக்கேன். 2009-ல எய்ட்ஸ் தொடர்பான விழிப்புஉணர்வுக்காக 4 மாநிலங்கள் வழியா இதேமாதிரி போனேன். அப்போ 7,500 கிலோமீட்டர் தூரம் போய் வந்தேன். பத்து வருஷத்துக்குப் பிறகு,இப்போ அதைவிட வேகமா போறேன். எனக்கு சோர்வே இல்லை.நடுவுல கொஞ்சம் ஓய்வு எடுத்துக்கிறேன். என்.ஜி.ஓவுல உள்ளவங்களோட ஆலோசனைப்படி, போன அக்டோபர் மாசம் 21-ம் தேதி இந்த பயணத்தை தொடங்கினேன். பயணத்துல, நிறைய பேரைச் சந்திக்கிறேன். சில நேரங்கள்ல 'இன்னும் நிறைய விழிப்புஉணர்வு தேவை'னு தோணுது. அந்தக் கேள்வி என்னைத் தொடர்றவரைக்கும், அதுக்காக ஏதோ ஒரு விதத்துல என்னோட செயல்பாடு இருக்கும்" என்று அடுத்தகட்ட பயணத்துக்குத் தயாரானார் பிரமோத் மகாஜன். 

வயதுக்கேற்ற சோர்வை அவரிடம் காண முடியவில்லை, பயணத்துக்கேற்ற களைப்பும் அவரிடம் தென்படவில்லை. வயது ஒரு பொருட்டல்ல, மனமிருந்தால் மார்க்கமுண்டு.

அடுத்த கட்டுரைக்கு