Published:Updated:

நுரையீரலைப் பாதிக்கும் நிக்கோட்டின்... வெளியேற்ற 10 எளிய வழிமுறைகள்!

"மூச்சுப்பயிற்சி போன்று தினமும் பலூன் ஊதிப் பழகி வருவது நல்லது. அது, மூச்சுக்குழாய்க்குச் சிறந்த பயிற்சி அளித்து, அதனை வலுப்படுத்தும்"

நுரையீரலைப் பாதிக்கும் நிக்கோட்டின்... வெளியேற்ற 10 எளிய வழிமுறைகள்!
நுரையீரலைப் பாதிக்கும் நிக்கோட்டின்... வெளியேற்ற 10 எளிய வழிமுறைகள்!

`ருவர் புகைப்பிடிக்கும்போது சிகரெட்டிலுள்ள தொண்ணூறு சதவிகித நிக்கோட்டின் அவரது உடலால் உட்கிரகித்துக் கொள்ளப்படும்' என்கிறது அறிவியல். சுவாசத்தின்மூலம் அப்படி உட்கிரகிக்கப்படும் நிக்கோட்டின் மூச்சுக்குழாய் வழியாகச் சென்று நுரையீரலில் சேரத்தொடங்கிவிடும். அந்த நபர் ஒருகட்டத்தில், புகைப்பழக்கத்திலிருந்து விடுபட்டாலும்கூட, நுரையீரலில் சேர்ந்த நிக்கோட்டின் நுரையீரலைவிட்டு அகலாது. இது, நுரையீரல் தொடர்பான பல பிரச்னைகளை பிற்காலத்தில் ஏற்படுத்தக்கூடும். ஆக, சிகரெட் பழக்கத்தைக் கைவிடுவது என்பது பிற்காலத்தில் நுரையீரல் பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்க உதவுமே தவிர, ஏற்கெனவே நேர்ந்த பாதிப்பை எந்த விதத்திலும் சரி செய்யாது. அதனால் நுரையீரலில் சேர்ந்துள்ள நச்சுகளை வெளியேற்ற, அதற்கெனச் சில வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். 

``நிக்கோட்டின் என்பது உடலில் சேரும் நச்சு வகைகளில் ஒன்று. எனவே, அந்த நஞ்சை நீக்குவதற்கு வாழ்க்கை முறை மாற்றம் மற்றும் ஆரோக்கியமான உணவுப்பழக்க வழக்கங்களைப் பின்பற்றினாலே போதுமானது" என்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் சௌமியா.

நிக்கோட்டின் நச்சை நீக்குவதற்கான பத்து வழிமுறைகளை அவரே விளக்குகிறார்.

* நிக்கோட்டினால் பாதிக்கப்பட்டுள்ள நுரையீரல், சீரான இயக்கத்துக்கு வருவதற்கு ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் நிறைந்த ஆரஞ்சு, மாம்பழம், திராட்சை, கீரை வகைகள் போன்றவற்றை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

* சிகரெட் பழக்கத்தைக் கைவிடும்போது, அதன் காரணமாக சில ஒவ்வாமைகள் ஏற்படும் (Withdrawal Syndrome). அதீத பசி, தலைவலி, வயிற்றுப்போக்கு, புகைப்பிடிக்க வேண்டுமென்ற உணர்ச்சி மேலோங்குவது, கவனமின்மை போன்றவை ஏற்படக்கூடும். பெரும்பாலானவர்களுக்கு ஏற்படும் முக்கியமான ஒவ்வாமை, வயிற்றுப்போக்குதான். உணவில் இஞ்சி அதிகமாகச் சேர்த்துக்கொண்டால், இதைத் தடுக்கலாம்.

* வெங்காயத்தைப் பொடியாக வெட்டிக்கொண்டு, இஞ்சியை லேசாக நசுக்கி, இவற்றோடு மஞ்சள் தூள் சேர்த்து நீரில் விட்டுக் காய்ச்சவும். நன்கு கொதித்த பிறகு, வடிகட்டிக்கொள்ளவும். இந்த `மஞ்சள் டீ'யை தினமும் இரண்டு முறை குடிப்பது நல்லது. மஞ்சளிலுள்ள குர்குமின் என்ற சத்து, உடலில் நச்சுத்தன்மையை நீக்க உதவும்.

* நிக்கோட்டின் சேர்ந்த நுரையீரலில் சளி சேர்ந்தால், பாதிப்பு மற்றும் தொற்றின் தீவிரம் அதிகரிக்கும். எனவே, சளி பிரச்னையை ஏற்படுத்தும் பால், பதப்படுத்தப்பட்ட உணவுகள், காபி ஆகியவற்றைத் தவிர்ப்பது நல்லது. 

* உடலில் சேர்ந்துள்ள நச்சுகளை நீக்குவதற்கு, தண்ணீர் போன்ற சிறந்த மருந்து வேறு கிடையாது. நிக்கோட்டின் மட்டுமன்றி, நுரையீரலில் சேரும் அழுக்குகள் அனைத்தும் தண்ணீர் மூலம் சிறுநீரகம் மற்றும் கல்லீரலுக்குத் தள்ளப்பட்டு உடலிலிருந்து வெளியேற்றப்படும். எனவே, ஒருநாளைக்கு 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.

* வைட்டமின் `சி' நிறைந்த பழங்கள், காய்கறிகளை உணவில் அதிகமாகச் சேர்த்துக்கொள்வது நல்லது.

* தினமும் காலையில் உடற்பயிற்சி செய்வது அவசியம். உடற்பயிற்சி செய்யும்போது, ரத்த ஓட்டம் சீராகத் தொடங்கும், வியர்வை அதிகமாக வெளியேறும். வியர்வை வெளியேறும்போது, அதன் வழியாக நிக்கோட்டினும் வெளியேற்றப்படும். சீராக உடற்பயிற்சி செய்தால், சுவாசப் பிரச்னைகள் மற்றும் அதை ஏற்படுத்தும் தொற்றுகள் அனைத்தும் சரியாகும்.

* தினமும், மூன்று முதல் பத்து முறை மூச்சுப்பயிற்சி செய்வது நல்லது. உள்ளங்கைகளில் ஒன்றை வயிற்றின் மேலும், மற்றொன்றை நெஞ்சிலும் வைக்கவும். அதன் பிறகு மூச்சை மெதுவாக உள்ளிழுத்து வெளியேவிட வேண்டும். மூச்சை உள்ளிழுக்கும்போது வயிற்றுப்பகுதியை மிருதுவாகத் தடவிக்கொடுக்கவும். நெஞ்சின் மேலுள்ள கைகள் அதே நிலையிலேயே இருக்க வேண்டும். மூச்சுப்பயிற்சி செய்வதால் மூச்சுக்குழாய் வலுப்பெறும்.

* சிகரெட் பழக்கத்தை நிறுத்தியவர்களுக்கு, அதன் சுவை நினைவுக்கு வந்து, உடனடியாகப் புகைப்பிடிக்க வேண்டுமென்ற உணர்வு தூண்டப்படும். இந்தத் தூண்டுதல் உணர்ச்சிகள் யாவும், உடலில் சிலிகான் மற்றும் டைரோசைன் போன்ற ஊட்டச்சத்துகள் குறைவதாலேயே ஏற்படும். நட்ஸ், ஆரஞ்சு, வைட்டமின் சி நிறைந்த பழங்கள், காய்கறிகளை உட்கொள்வதன் மூலம் இந்தப் பிரச்னை கொஞ்சம் கொஞ்சமாக சரியாகி, புகைப்பிடிக்க வேண்டும் என்ற எண்ணம் முற்றிலும் நீங்கிவிடும்.

* மூச்சுப்பயிற்சி போன்று தினமும் பலூன் ஊதிப் பழகி வருவது நல்லது. அது, மூச்சுக்குழாய்க்கு சிறந்த பயிற்சி அளித்து, அதை வலுப்படுத்தும்.