Published:Updated:

கர்நாடகாவை மிரட்டும் குரங்குக் காய்ச்சல்... எப்படிப் பரவும் தெரியுமா?

குரங்குக் காய்ச்சல் எதனால் ஏற்படுகிறது, எப்படிப் பரவுகிறது, பரிசோதனை முறைகள் என்னென்ன, சிகிச்சை முறைகள் என்னென்ன என்பது குறித்த கட்டுரை.

கர்நாடகாவை மிரட்டும் குரங்குக் காய்ச்சல்... எப்படிப் பரவும் தெரியுமா?
கர்நாடகாவை மிரட்டும் குரங்குக் காய்ச்சல்... எப்படிப் பரவும் தெரியுமா?

டந்த சில வாரங்களாக, கர்நாடகாவை அச்சுறுத்தி வருகிறது குரங்குக் காய்ச்சல். ஒரு வாரத்தில் மட்டும், குரங்குக் காய்ச்சல் காரணமாகக் கர்நாடக மாநிலம் ஷிமோகா மாவட்டம் சாகர் பகுதியில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 15 பேருக்குப் பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கர்நாடக மாநிலத்தின் சுகாதாரத் துறை சார்பில் நோய் பாதித்த பகுதி மக்களுக்கு `ரெல் அலர்ட்' கொடுக்கப்பட்டுள்ளது. தேசியப் பூச்சியியல் துறை சார்பில், அப்பகுதி மக்களுக்குத் தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருகின்றன. கடந்த சில நாள்களில் மட்டும், ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்குத் தடுப்பு மருந்துகள் அளிக்கப்பட்டுள்ளன. 

கர்நாடக மாநிலம் கியாசானுர் வனப்பகுதியில் வாழ்ந்தவர்களிடம் 1957-ம் ஆண்டு முதன்முதலில் இந்த நோய் பாதிப்பு கண்டறியப்பட்டது. அதனால் `கியாசானூர் ஃபாரெஸ்ட்' நோய் (Kyasanur Forest Disease) என்று பெயர் வந்தது. காலப்போக்கில் அது குரங்குக் காய்ச்சல் என்று பேச்சுவழக்கில் மாறியது. ஃப்ளேவிவிரிடே (Flaviviridae) என்ற வைரஸால் ஏற்படும் பாதிப்பு இது.  

குரங்குக் காய்ச்சல் எதனால் ஏற்படுகிறது, எப்படிப் பரவுகிறது, பரிசோதனை முறைகள் என்னென்ன, சிகிச்சை முறைகள் என்னென்ன என்பது குறித்து மருத்துவர் அர்ஷத் அகிலிடம் கேட்டோம்.

``ஃப்ளேவிவிரிடே வைரஸை தங்கள் உடலில் கொண்ட சில உண்ணிகள்,  விலங்குகளைக் கடிப்பதால் அவற்றுக்கு அந்த வைரஸ் கடத்தப்படும். ஃப்ளேவிவிரிடே வைரஸ் தாக்கிய விலங்குகளைக் கடிக்கும் பூச்சிகள், மனிதர்களைக் கடிக்க நேர்ந்தால் அந்த வைரஸ் மனிதர்களுக்குக் கடத்தப்பட்டு காய்ச்சல் ஏற்படும். பாதிக்கப்பட்ட அல்லது நோய்வாய்ப்பட்ட விலங்குகள் மற்றும் மிகச் சமீபத்தில் இறந்த விலங்குகளிடம் இருந்துதான் பாதிப்பு அதிகமாகப் பரவும். 

விலங்குகளில் செம்மறி ஆடுகள், மாடுகள் போன்றவற்றிலிருந்தும் நோய் பரவும் என்றாலும், குரங்குதான் ஆபத்தானது. குரங்குகள்தான் இந்த வகை வைரஸால் எளிதில் பாதிக்கப்படும். வைரஸால் பாதிக்கப்பட்ட விலங்குகளின் ரத்தத்தை உட்கொள்ளும் பூச்சியினங்கள்,  மனிதரைக் கடிக்கும்போது இந்த நோய் மனிதர்களுக்குப் பரவுகிறது. எந்தச் சூழலிலும் ஒரு மனிதரிடமிருந்து இன்னொரு மனிதருக்கு இந்த நோய் பரவாது. 

வைரஸ் தொற்றினால் ஏற்படும் காய்ச்சல் மூன்று முதல் எட்டு நாள்களுக்குள் பெரும்பாலானவர்களுக்கு தானாகவே சரியாகிவிடும். அதற்குப் பிறகும் காய்ச்சல் நீடித்தால் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி குறையத் தொடங்கும். உடல் கொஞ்சம் கொஞ்சமாகப் பாதிப்படையத் தொடங்கும். அதன் அறிகுறிகளாக, உடல் சில்லிடுவது, தலைவலி, அதிகமான காய்ச்சல், தீவிரமான தசைப்பிடிப்பு, வாந்தி அல்லது வயிற்றுப்போக்கு, மனநலம் சார்ந்த பிரச்னைகள் போன்றவை ஏற்படும். டெங்குக் காய்ச்சல் பாதிப்பை ஏற்படுத்தும் வைரஸ்தான் குரங்குக் காய்ச்சலுக்கும் காரணம் என்பதால், டெங்குவைப் போன்று பல்வேறு பாதிப்புகளும் ஏற்படும். உதாரணமாக, ரத்த சிவப்பணுக்கள், வெள்ளை அணுக்களின் அளவு குறைவது, ரத்த அழுத்தம் குறைவது, தட்டணுக்களின் எண்ணிக்கை குறைவது, உள்ளுறுப்புகளில் ரத்தக்கசிவு, இரைப்பைத் தொடர்பான பிரச்னைகள் போன்றவை ஏற்படும். பி.சி.ஆர் அல்லது ரத்தப் பரிசோதனை மூலமாகவே குரங்குக் காய்ச்சல் பரிசோதிக்கப்படும். எலிசா (ELISA) பரிசோதனை மூலம் உறுதிப்படுத்தப்படும்.

சிகிச்சை முறைகளைப் பொறுத்தவரையில், பாதிக்கப்பட்டுள்ள நோயாளியின் உடலில் நீர்ச்சத்து குறைவதைத் தடுப்பது மற்றும் உள்ளுறுப்புகளில் ஏற்படும் ரத்தக்கசிவை சரிசெய்வது என நோய் அறிகுறிகளுக்கான சிகிச்சையே அளிக்கப்படும். காரணம், இதற்கெனத் தனி சிகிச்சை முறை கிடையாது.

சிலருக்கு, காய்ச்சலுக்கான மருந்து மாத்திரைகளை உட்கொண்டாலே ஓரிரு நாள்களிலோ, வாரங்களிலோ சரியாகிவிடும். உடல் சார்ந்த பிரச்னைகள் தீவிரமாக இருந்தால் மட்டும், சில மாதங்கள் வரை காய்ச்சல் நீடிக்கும். தேசிய சுகாதார அமைப்பின் அறிவுரையின்படி, இறப்பு விகிதம் மூன்று முதல் பத்து சதவிகிதம்தான் என்பதால் மக்கள் தேவையற்ற பயம் கொள்ளத் தேவையில்லை. மருந்து மாத்திரைகளைச் சரியாக உட்கொண்டாலே போதுமானது. காய்ச்சலுடன், நரம்பு சார்ந்த பிரச்னைகள், தீவிர தலைவலி, மனநலப் பிரச்னைகள், பார்வை மங்குதல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் பாதிப்பு தீவிரமாக உள்ளது என்று புரிந்துகொள்ள வேண்டும். இதுபோன்ற அறிகுறிகள் உள்ளவர்கள், உடனடியாக மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்கு உட்படுத்த வேண்டியது அவசியம்.

விலங்குகளிடமிருந்து பரவும் நோய் என்பதால், பெரும்பாலும் வனப் பகுதிகளைச் சுற்றியுள்ளவர்களுக்குத்தான் இந்த நோய் ஏற்படும். வனங்களைச் சுற்றி இருப்பவர்கள், சுற்றுலாப் பயணிகள் போன்றோர் தடுப்பு முறையை அவசியம் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும். பூச்சிகளிடமிருந்து தற்காத்துக் கொள்வது அனைத்தையும் விட முதன்மையானது. இறந்த குரங்குகளுக்கு அருகில் செல்வதைத் தவிர்க்க வேண்டும். பூச்சியியல் துறையைச் சேர்ந்தவர்கள், விலங்கு பாதுகாவலர்களின் உதவியோடு இறந்த குரங்குகளின் மீது, `மலதியான்’(malathion powder) என்ற மருந்து தெளித்து, அவற்றைப் பாதுகாப்பாக உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். நவம்பர் முதல் ஜனவரி மாதம்வரை தான் இந்தக் காய்ச்சல் அதிகமாகப் பரவும். எனவே வனப்பகுதியில் இருக்கும் மக்கள் குறைந்தபட்சம் இந்தக் காலகட்டத்திலாவது முன்னெச்சரிக்கையோடு செயல்பட வேண்டும்" என்றார்.