Published:Updated:

தைராய்டு - ஒரு வண்ணத்துப் பூச்சியின் பயணம்..!

தைராய்டு - ஒரு வண்ணத்துப் பூச்சியின் பயணம்..!
பிரீமியம் ஸ்டோரி
News
தைராய்டு - ஒரு வண்ணத்துப் பூச்சியின் பயணம்..!

ஹெல்த் ஜனவரி - தைராய்டு விழிப்புஉணர்வு மாதம்

தைராய்டு - ஒரு வண்ணத்துப் பூச்சியின் பயணம்..!

ணவு உட்கொள்வதால், பாத்திரம் கழுவுவதால், வேலைக்குச் செல்வதால், எக்ஸ்-ரே எடுத்துக்கொள்வதால் உங்கள் சந்ததியின் கவனிக்கும்திறன் அல்லது பேச்சுத்திறன் பாதிக்கக்கூடும் என்றால், உங்களால் நம்ப முடிகிறதா? `சீனாவின் மலர்வனத்தில் சிறகசைக்கும் ஒரு பட்டாம்பூச்சியின் அசைவு, மேற்கிந்தியத் தீவுகளில் ஏற்படும் சூறாவளிக் காற்றுக்குக் காரணமாகிறது. ஒரு மிகச் சிறிய செயல், அதன் தொடர்ச்சியான சம்பவங்களால், எதிர்பார்க்க முடியாத மாபெரும் விளைவைத் தோற்றுவிக்கலாம்...’ என்று மேற்கத்திய விஞ்ஞானியான எட்வர்டு லோரென்ஸின் `கேயாஸ் தியரி’ (Chaos Theory) கோட்பாட்டில் கூறப்பட்டிருக்கிறது. அதை நினைவுகூர்ந்தபடி தைராய்டு, அதன் செயல்பாடு, அதனால் ஏற்படும் பாதிப்புகள் பற்றிப் பார்ப்போம்.

கிரேக்க மொழியில், `Thyreos’ என்றால் `கேடயம்’ எனப் பொருள்படும். இந்தத் தைராய்டு சுரப்பி, தோற்றத்தில் மட்டுமல்ல, அதன் செயலாலும் மனித உடலுக்குக் கேடயமாக விளங்குகிறது. தைராய்டு சுரப்பிக்குள் உள்ள `தைரோகுளோபுலின்’ (Thyroglobulin) என்ற புரதத்தில், T4 என்ற `தைராக்ஸின்’ (Thyroxine), T3 என்ற `ட்ரை அயோடோ தைரோனின்’ (Tri Iodo Thyronine), மற்றும் `கால்சிடோனின்’ (Calcitonin) போன்ற முக்கியமான ஹார்மோன்கள் சுரக்கின்றன. இவற்றில் `T3’, ‘T4’ போன்ற ஹார்மோன்களின் உற்பத்திக்கு, நமது உடலின் உள்ளேயே சுரக்கும் `டைரோசின்’ (Tyrosine) என்ற அமினோ அமிலமும், நாம் உணவில் சேர்த்துக்கொள்ளும் அயோடின் உப்பும் இன்றியமையாதவை.

`பேஸல் மெட்டபாலிக் ரேட்’ (Basal Metabolic Rate - BMR) என்ற உடலின் வளர்சிதை மாற்றத்தின் வேகத்தைக் கட்டுப்படுத்தும் இந்த தைராய்டு ஹார்மோன்கள், கரு உருவான 11-வது வாரத்திலேயே, சுரக்கத் தொடங்கிவிடுகின்றன. கருவிலேயே குழந்தையின் உடல் மற்றும் மூளை வளர்ச்சியில் பெரும் பங்கு வகிக்கின்றன; கரு வளர்ந்ததும், உடல் மற்றும் மூளை வளர்ச்சிக்கு உதவுகின்றன; இதயம் மற்றும் நுரையீரல் இயக்கம், சிறுநீரகம் மற்றும் குடலியக்கம், எலும்பு மற்றும் தசைகளின் உறுதி, திசுக்களின் வளர்ச்சி மற்றும் சீரமைப்புக்கு உதவுகின்றன; பெண்கள் பருவமடைதல், கருத்தரித்தல் மற்றும் கருவளர்ச்சிக்கும் உதவுகின்றன.

உணவிலுள்ள கார்போஹைட்ரேட், புரதம், கொழுப்புகளின் வளர்சிதை மாற்றப் பணிகளை ஊக்கப்படுத்துவதுடன் அவற்றிலிருந்து பெறப்படும் `ஏடிபி’ என்ற ஆற்றலை கட்டுப்படுத்துவதால், இந்த தைராய்டு ஹார்மோன், வாழ்க்கைப் பயணம் தடையின்றி சீராக ஓடச் செய்யும் இன்ஜின் என்றே கருதப்படுகிறது. `இன்ஜின்’ என்றால் அதற்கு இக்னிஷன் சாவி என்ற ஒன்று இருக்க வேண்டும். அந்தச் சாவி, மூளையிலுள்ள ஹைப்போதாலமஸிலும் பிட்யூட்டரியிலும் அமைந்திருக்கிறது. இங்கு உற்பத்தியாகும் தைராய்டு ஊக்கி ஹார்மோன்களான  `TRH, TSH’ இரண்டும், தைராய்டு என்ற இன்ஜினை, அதிலுள்ள `T3, T4’ ஹார்மோன்கள் ஆன், ஆஃப் செய்யும் சாவிகளாகத் திகழ்கின்றன. எப்போதெல்லாம் அந்த இன்ஜின் அல்லது சாவி செயல்படுவதில் தடை ஏற்படுகிறதோ, அப்போதெல்லாம் உடலின் பயணம் தடைப்படுகிறது.

தைராய்டு - ஒரு வண்ணத்துப் பூச்சியின் பயணம்..!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

தைராய்டு இன்ஜின் தறிகெட்டு வேகமாக ஓடும் நிலையை, `ஹைப்பர்தைராய்டிசம்’ (Hyperthyroidism) என்றும், இன்ஜின் மெதுவாக  ஓடுவதை அல்லது முழுவதும் நின்றுவிடுவதை `ஹைப்போதைராய்டிசம்’ (Hypothyroidism) என்றும், அவற்றில் ஏற்படக்கூடிய கழுத்து வீக்கத்தை `காய்ட்டர்’ (Goiter) என்றும் அழைக்கிறது மருத்துவ உலகம். வெறும் 30 கிராம் எடையுள்ள இந்த தைராய்டு இன்ஜின், ஹைப்போதைராய்டில் தடை ஏற்படும்போது, தன் எடையைக் கூட்டுவதுடன், உடலின் எடையை 30 கிலோவரை அதிகரிக்கச் செய்கிறது. அதேபோல, ஹைப்பர்தைராய்டின்போது  திடீரென பெருமளவு எடையைக் குறைக்கவும் செய்கிறது. இவற்றில் `ஹைப்போதைராய்டு’ என்ற சுரப்பிக் குறைபாடே, பெரும்பான்மையாகக் காணப்படுவதால், அதற்குத் தொடர் பரிசோதனைகளும் சிகிச்சைமுறைகளும் தேவைப்படுகின்றன.

`ஹைப்போதைராய்டு’ பெண்களைத்தான் அதிகம் பாதிப்பதாகக் கூறும் தைராய்டு கழகம், `குறைந்தது, 100 பேரில் 12 பெண்களுக்கு இந்தச் சுரப்பிக் குறைபாடு இருக்கிறது; அதிலும் குறைபாடு உள்ள 12 பேரில், எட்டு பேர் இதை அறியாமலே வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்’ என்கிறது. பெரியவர்களுக்கு தைராய்டு குறைபாடு இருந்தால் உடல் பருமன், வறண்ட சருமம், குளிர் தாங்க முடியாமை, மாதவிலக்குக் கோளாறு, குழந்தையின்மை, கருச்சிதைவு, குறைப் பிரசவம் போன்ற பல பிரச்னைகள் ஏற்படலாம். வளரும் குழந்தைகளுக்கு தைராய்டு பற்றாக்குறை ஏற்பட்டால், கவனிக்கும்திறன், மொழித்திறன் பாதிக்கப்படும்; மனவளர்ச்சிக் குறைபாடு ஏற்படும்; வளர்ச்சியில் பெருமளவில் தாமதம் உண்டாகும். பிறவியிலேயே தைராய்டு குறைபாடு இருந்தால், `க்ரெட்டினிசம்’ (Cretinism) எனப்படும் உடல் வளர்ச்சி மற்றும் மன வளர்ச்சிக் குறைபாடுகள், விகாரமான தோற்றத்துடன் கூடிய தடித்த நாக்கு, சரும வறட்சி, உடல் பருமன், காமாலை ஆகியவை உண்டாகும். அதனால்தான், பெண்களுக்கு கர்ப்பம் உறுதிசெய்யப்பட்டதும்  `Serum T3, T4, TSH’ என்ற எளிய ரத்தப் பரிசோதனைகள் மூலம், அந்த ஹார்மோன்களின் அளவு கண்டறியப்படுகிறது. குறைபாடு இருந்தால், தேவைக்கேற்ப தைராக்சின் மாத்திரைகள் பரிந்துரைக்கப்படும்.
 

தைராய்டு - ஒரு வண்ணத்துப் பூச்சியின் பயணம்..!

 தைராய்டு சுரப்பிக் குறைபாடு எதனால் ஏற்படுகிறது என்று ஆராய்ந்து, அயோடின் பற்றாக்குறை என்று கண்டுபிடித்தார்கள். அதைச் சரிசெய்ய அயோடின் உப்பு பரிந்துரைக்கப்பட்டது. எனவே, 1983-ம் ஆண்டு முதல் அயோடின் சேர்த்த உப்புதான் சமையல் உப்பாகப் பயன்படுத்தப்படுகிறது. ஆனாலும், உலக அளவில் மூன்று முதல் ஐந்து சதவிகிதம்வரை காணப்படும் இந்தக் குறைபாடு நம் நாட்டில் மட்டும் 11 முதல் 14 சதவிகிதமாக இருக்கிறது. அதிலும் கர்ப்பிணிகளிடையே இது அதிகம் காணப்பட்டதால், அயோடின் பற்றாக்குறை தாண்டிய வேறு காரணங்களை மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் தேடினார்கள். தொடர் ஆராய்ச்சிக்குப் பிறகு, ` `ஆட்டோ இம்யூன் டிசீஸ் (Auto Immune Diseases) எனப்படும் நோய்களும், `காய்ட்ரோஜென்ஸ்’ (Goitrogens) என்ற ரசாயனப் பொருள்களுமே சுரப்பிக் குறைபாட்டுக்குக் காரணம்’ என்று சொல்லியிருக்கிறது இந்திய தைராய்டு கழகம். தன் உடலே, தனது ஆரோக்கியத் திசுக்களை எதிரியாக நினைத்துப் போராடும் `ஆட்டோ இம்யூன் டிசீஸ்’-ஐ தவிர்க்க முடியாது. ஆனாலும் தைராய்டு வீக்கத்துக்கும், அதன் செயல்பாடு குறைவுக்கும் காரணமாக இருக்கும் ரசாயனப் பொருள்களைத் தவிர்க்க அழைக்கிறது மருத்துவ உலகம்.

செயற்கை உரங்களிலும், தொழிற்சாலைக் கழிவுகளிலும், வீட்டுக் கழிவுகளிலும், சிகரெட் மற்றும் வாகனப் புகைகளிலும் அதிகமாகக் காணப்படும் `ஆர்கனோகுளோரின் காம்பவுண்ட்ஸ்’ (Organochlorine Compounds), `சியானோஜெனிக் காம்பவுண்ட்ஸ்’ (Cyanogenic Compounds), `ரிசோர்சினால்’ (Resorcinol), `பிதாலிக் ஆசிட்’ (Phthalic Acid), `பெர்க்ளோரேட்ஸ்’ (Perchlorates), `ஃபுளூரைட்ஸ்’ (Fluorides), `பிஸ்பெனால்’ (Bisphenol) போன்ற ரசாயனங்களான `காய்ட்ரோஜென்ஸ்’தான் தைராய்டு வீக்கத்தை ஏற்படுத்தி, அதன் செயலிழப்புக்கும் காரணிகளாகத் திகழ்கின்றன.

நாம் பாத்திரம் கழுவவும், துணி துவைக்கவும் பயன்படுத்தும் ரசாயனங்களில் தொடங்கி, வாகனங்களின் புகைவரை அனைத்திலும் இந்த `காய்ட்ரோஜென்ஸ்’ நிறைந்துள்ளன. ஆக, மனிதனால் ஏற்படுத்தப்பட்ட மாசுபட்ட நீர், நிலம் மற்றும் காற்றினால் உருவாகும் இந்தத் தைராய்டு பற்றாக்குறை, நமக்குப் பிறக்கப்போகும் குழந்தைகளை பாதிக்கலாம். எனவேதான், கேயாஸ் தியரியில் கூறப்படுவதுபோல, எங்கோ சிறகசைக்கும் பட்டாம்பூச்சியின் சலசலப்பான இந்த `காய்ட்ரோஜென்ஸ்’ பெரும் சூறாவளியை ஏற்படுத்துவது நமது அடுத்த சந்ததியினரான குழந்தைகளிடம்தான் என்பதுடன் பொருந்திப்போகிறது பாருங்கள்.

இது ஜனவரி மாதம்..! தைராய்டு விழிப்புஉணர்வு மாதம்..! எனவே, தைராய்டு நோயைப் பற்றியும், அதன் காரணங்கள் பற்றியும், பாதுகாப்பு முறைகள் பற்றியும் விழிப்புடன் வாழ்ந்தால், பயன்பெறப் போவது நாம் மட்டுமல்ல, நமது சந்ததியினரும்தான்..!

தைராய்டாலஜி

• இப்போது அமெரிக்காவில் `தைராய்டாலஜி’ என்பது தைராய்டு நோய்க்கான ஒரு பிரத்யேக சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவத் துறை.

• தைராய்டு சுரப்பியை முதன்முதலாக ஓவியமாக வரைந்தவர் லியானார்டோ டாவின்சி.

• கி.மு.2700-ல், `சீன மருத்துவத்தின் தந்தை’ என அழைக்கப்படும், ஷென்-நூங், தனது பென்-சோ புத்தகத்தில், கழுத்து வீக்கத்துக்கு கடற்பாசிகளை உட்கொள்ளப் பரிந்துரை செய்திருக்கிறார்.

• இந்திய மருத்துவத்திலும், சுஷ்ருத மற்றும் சாரக சம்ஹிதைகளில், `முன்கழுத்துக் கழலை’ என்று அழைக்கப்படும் தைராய்டு வீக்கம், `காலகண்டா’ என குறிப்பிடப்பட்டிருக்கிறது.

• உலகெங்குமுள்ள மலைவாழ் பிரதேச மக்களிடையே காணப்பட்ட தைராய்டு வீக்கத்தைப் பெருமளவு குறைத்த பெருமை அயோடின் உப்பையே சாரும்.

• பிரேசில் அரசுதான், முதன்முதலாக உணவுடன் அயோடின் உப்பை சேர்த்துக்கொள்ளப் பரிந்துரைத்தது.

• அயோடின் என்றால் கிரேக்க மொழியில், `ஊதா நிறம்’ என்று பொருள். ஆனால், இந்த அயோடின் உப்பு தற்செயலாகத்தான் கண்டுபிடிக்கப்பட்டது.

• பெர்னார்டு கர்ட்டிஸ் என்ற வேதியியலாளர், வெடிமருந்து தயாரிப்பதற்காக கடற்பாசியின் சாம்பலை சல்ஃப்யூரிக் அமிலத்தில் கரைத்தவுடன், அதில் மேலெழும்பிய ஊதா நிறப் புகையிலிருந்து அயோடின் உப்பைக் கண்டறிந்தார்.

• 19-ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், முட்டைகோஸை உட்கொண்டால், கழுத்து வீக்கம் ஏற்படும் என ஐரோப்பிய நாடுகள் அதை ஒதுக்கிவைத்தனவாம்.

• தைராய்டு ஸ்கேனில், `ஹாட்-ஸ்பாட்’ என்பது ஹைப்பர்தைராய்டைக் குறிப்பது.

• சிறிய தோற்றம், பெரிய செயலாக்கம் என்பதால், தைராய்டு சுரப்பியை `மாஸ்டர் கிளாண்ட்’ என்றே அழைப்பார்கள். `அமெரிக்காவின் தைராய்டு நியூயார்க்’ என்ற வழக்கும் இதையே உணர்த்துகிறது..!