Published:Updated:

நல்ல கரும்பை எப்படித் தேர்ந்தெடுக்கலாம்? வழிகாட்டும் ஆயுர்வேதம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
நல்ல கரும்பை எப்படித் தேர்ந்தெடுக்கலாம்? வழிகாட்டும் ஆயுர்வேதம்!
நல்ல கரும்பை எப்படித் தேர்ந்தெடுக்கலாம்? வழிகாட்டும் ஆயுர்வேதம்!

பழங்காலத்தில் மனிதன், விலங்கு, தாவரம் எனப் பாகுபாடில்லாமல் ஒவ்வொன்றுக்கும் ஓர் அரசன் இருந்திருக்கிறான். அந்தவகையில் தாவரங்களில் அதுவும் புல் வகைக்கு அரசனாக கரும்பு இருந்திருக்கிறது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

பொங்கல் பண்டிகை என்றதும் புதுப்பானை, பச்சரிசி, மஞ்சள் குலைக்கு அடுத்தபடியாக தித்தித்தும் கரும்புதான் நினைவில் வரும். அதிலும் குறிப்பாக பொங்கல் பானையின் இருபுறமும் புதுக்கரும்புகளை கட்டி வைத்து புத்தரிசியைச் சமைப்பது வழக்கம்.

பொங்கலின்போது புதிதாக அறுவடை செய்யப்பட்ட நெல்லிலிருந்து பெறப்படும் அரிசியைப் போல புதிதாக அறுவடை செய்யப்பட்ட கரும்புகளை கடித்துச் சுவைப்பது என்பது இனிமையான ஓர் அனுபவம். பண்டிகையின்போது மட்டுமல்ல ஒருவார காலமாவது சிறுவர் முதல் பெரியவர்கள் வரை எல்லோரும் கரும்பைக் கடித்துச் சுவைப்பார்கள். ஆனால், இன்றைக்கு ஏதோ சம்பிரதாயத்துக்காக கரும்பை வாங்கிக் கட்டி வைக்கும் நிலையே உள்ளது. அப்படிச் சம்பிரதாயத்துக்கு வாங்கப்படும் கரும்பை கடித்துச் சுவைத்து சாப்பிடப் பெரிதாக ஆர்வம் காட்டுவதில்லை. குறிப்பாக இன்றைய தலைமுறையிடம் அந்தப் பழக்கம் கிடையாது. வேண்டுமானால், கடைகளில் கிடைக்கும் கரும்பு ஜூஸை வாங்கி அருந்திவிட்டுச் செல்கிறார்கள்.

கரும்பைக் கடித்துச் சாப்பிட்டால்தான் அதன் குணம் நமக்குக் கிடைக்கும். கரும்பை கடித்துச் சாப்பிடுவதால் நாவில் உள்ள சுவை அரும்புகளில் புதுவித அனுபவத்தைக் கொடுக்கும். கரும்பின் சுவை அமிர்தத்துக்கு ஒப்பானது என்கிறது ஆயுர்வேதம். அத்துடன் ஆயுர்வேத மருத்துவத் துறையில் முக்கிய மருந்துகளாகக் கருதப்படும் லேகியம், பானகம், அரிஷ்டம், சூரணம் போன்றவற்றுக்கு மிக முக்கிய மூலப்பொருள்களாக வெல்லம், சர்க்கரை, கல்கண்டு போன்றவையே பயன்படுத்தப்படுகின்றன. இவை அனைத்தும் கரும்பிலிருந்தே தயாரிக்கப்படுகின்றன.

பழங்காலத்தில் மனிதன், விலங்கு, தாவரம் எனப் பாகுபாடில்லாமல் ஒவ்வொன்றுக்கும் ஓர் அரசன் இருந்திருக்கிறான். அந்தவகையில் தாவரங்களில் அதுவும் புல் வகைக்கு அரசனாகக் கரும்பு இருந்திருக்கிறது. கரும்பு ஒரு புல்லினமாகும். நீர்ப்பாங்கான இடங்களில் பரவலாகக் காணப்படும் இது வெள்ளை, மஞ்சள், சிவப்பு, ஊதா என நிறத்தை அடிப்படையாகக் கொண்டு நான்கு வகைப்படும். ஒவ்வொரு கரும்பின் சுவையையும் அடிப்படையாகக் கொண்டு அடிப்பகுதி இனிப்பாகவும் நடுப்பகுதி மிகவும் இனிப்பாகவும் நுனிப்பகுதி உவர்ப்புத் தன்மையுடனும் இருக்கும். கணுக்கள் அதிகம் இருந்தால் அது மிகச் சிறந்த கரும்பு என்று ஆயுர்வேதம் கூறுகிறது. வெள்ளை நிற கரும்பிலிருந்தே சர்க்கரை எடுக்கப்படுகிறது. சிவப்பு நிற கரும்பு அரிதாகக் கிடைக்கிறது.

கரும்பு குளிர்ச்சித் தன்மை உடையது; ரத்தம், சிறுநீரைச் சுத்திகரிக்கக்கூடியது. விந்தணுக்களை அதிகரிக்கும் தன்மை கரும்பில் உள்ளது. சர்க்கரை நோயாளிகள் கரும்பு சாப்பிடக் கூடாது என்றாலும் பல்லால் கடித்துச் சாப்பிடலாம். மாறாக அரவை எந்திரத்தில் கரும்பை அரைத்துச் சாறு எடுத்துக் குடிக்கக் கூடாது. மேலும், அழுக்கு நிறைந்த ஈ, கொசுக்கள் நிறைந்த கரும்பிலிருந்து சாறு எடுத்து அருந்தினால் வயிற்றில் எரிச்சலை ஏற்படுத்தும்.

கரும்பிலிருந்து சாறு எடுத்து உடனே குடித்துவிட வேண்டும். நேரம் கழித்துக் குடித்தால் ஜலதோஷம் ஏற்படும். ஆனால், சாறு எடுத்து நீண்ட நேரமானாலும் சீரகம், ஏலக்காய் சேர்த்துக் குடித்தால் ஜலதோஷம் எதுவும் நெருங்காது. கரும்புச் சாற்றை மதியவேளையில் குடிப்பதே நல்லது. காரணம் மதியவேளைதான் பித்தத்தைக் குறைக்கும் நேரம் என்பதால், அப்போது குடிப்பதே நல்லது.

மஞ்சள்காமாலை நோயிலிருந்து உடனே குணமாக இரண்டு டம்ளர் கரும்புச்சாற்றுடன் எலுமிச்சைச் சாறு, உப்பு சேர்த்துக் குடித்து வரலாம். கரும்பை ஊன்றுகோலாகப் பயன்படுத்தி, பன்னாட்டுக் குளிர்பானங்களுக்கு எதிராக முதல் அடியை எடுத்துவைப்போம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு