Published:Updated:

``சோர்விலிருந்து என்னை மீட்பது இசையே!’’ - எஸ்.ராமகிருஷ்ணன்

+
``சோர்விலிருந்து என்னை மீட்பது இசையே!’’ - எஸ்.ராமகிருஷ்ணன்
News
``சோர்விலிருந்து என்னை மீட்பது இசையே!’’ - எஸ்.ராமகிருஷ்ணன்

மனசே மனசே... புதிய பகுதி!

``சோர்விலிருந்து என்னை மீட்பது இசையே!’’ - எஸ்.ராமகிருஷ்ணன்

நாவல், சிறுகதை, சிறார் இலக்கியம், சினிமா, பயணம் என பல தளங்களில் தொடர்ந்து இயங்கிக்கொண்டே இருப்பவர் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன். ‘சஞ்சாரம்’ நாவலுக்கு 2018-ம் ஆண்டுக்கான விருதை வழங்கி, சாகித்ய அகாடமி இவருக்கு மேலும் ஒரு புகழைச் சேர்த்திருக்கிறது. ‘எப்போதும் உற்சாகமாக, புத்துணர்ச்சியோடு வலம்வரும் எஸ்.ரா-வுக்கு மனச்சோர்வு ஏற்பட்டால் என்ன செய்வார்?’

“ `எழுத்தே என் முழு நேர வேலை’ என்று முடிவுசெய்த பிறகு விருதுநகரைவிட்டுச் சென்னைக்கு வந்தேன். அவமானங்களை மட்டுமே சந்தித்து வாழ்ந்த காலகட்டம் அது. பணத்துக்காக எப்போதும் யாரையாவது சார்ந்து இருக்கவேண்டிய சூழல்... பகலெல்லாம் வெளியில் சுற்றிவிட்டு, அடுத்து எங்கே போவது என்று தெரியாமல் அறைக்குத் திரும்புவேன். தூக்கம் வர இரவு ஒரு மணி ஆகிவிடும். அப்போதெல்லாம் எனக்குப் பெரிய துணையாக இருந்தது இசைதான். மேற்கத்திய இசையை விரும்பிக் கேட்பேன். சில நேரங்களில் ஹிந்துஸ்தானியையும் ரசிப்பேன்.

``சோர்விலிருந்து என்னை மீட்பது இசையே!’’ - எஸ்.ராமகிருஷ்ணன்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

சிறு வயதிலேயே என் வீட்டில் கர்னாடக இசை அல்லது ஏதேனும் இசைத் துணுக்கு ஒலித்துக்கொண்டேயிருக்கும். திரையரங்குகளில் படம் தொடங்குவதற்கு முன்பு ஒரு பாடல் ஒலித்துக்கொண்டிருக்கும். என் நண்பருடன் சர்ச்சுக்குச் சென்றால் அங்கும் பாடல். என் கிறித்துவ நண்பர் வீட்டில் இசைத் தட்டுகள் தொகுப்புகளாக இருந்தன. அங்குதான் நான் அதுவரை கேட்டதெல்லாம் மேற்கத்திய இசையின் மிகப் பெரிய ஜாம்பவான்களால் இசைக்கப்பட்டவை என்று தெரிந்தது. பிறகு இசைத் தட்டுகளைச் சேகரிப்பதே என் வேலையாகிவிட்டது.

திரையிசைப்பாடல்களும் எனக்கு விருப்பமானவை. எனக்குப் பிடித்தது இளையராஜாவின் இசை. புல்லாங்குழல் இசைக்கலைஞர் ஹரி பிரசாத் இசையைக் கேட்டுத்தான் என் மகனுக்கு `ஹரி பிரசாத்’ என்ற பெயரையே வைத்தேன். அருணா சாய்ராம், பிஸ்மில்லா கான், சிவக்குமார் சர்மா, எல்.சங்கர், சஞ்சய் சுப்ரமணியம்... எனக்குப் பிடித்த கலைஞர்கள். எழுதும்போது ஒவ்வொரு பகுதியையும், ஒவ்வொரு சிறுகதையையும் எழுதி முடித்தவுடனேயே ஏதாவது இசை கேட்பேன். சில நேரம், ‘இது நாம் எழுதுவதன் இசை வடிவமாக இருக்கிறதே?’ என்று தோன்றும்.

எதுவும் செய்ய முடியாத அளவுக்குச் சோர்வாக இருந்தால், என்னிடமிருக்கும் இசைத் தட்டுகளில் ஒன்றைத் தேடி, தேர்ந்தெடுப்பேன். பெரும்பாலும் ஐந்து நிமிடங்கள் ஓடும் ஓர் இசைத்தட்டு. பிறகு, ஒன்று அதன் பின்னர் ஒன்று என்று மாறி மாறிக் கேட்டுக்கொண்டே இருப்பேன். அது இரண்டு நாள்கள், மூன்று நாள்கள் என்று தொடர்வதும் உண்டு. பிறகு மனச் சோர்விலிருந்து விடுபட்டுவிடுவேன். ஒவ்வோர் இசையுமே ஒரு சம்பவத்தின் மூலம்தான் எனக்கு நினைவில் இருக்கிறது. எப்போதெல்லாம் சோர்விலிருந்தேனோ, அப்போதெல்லாம் இசையே என்னை மீட்டுக்கொண்டு வந்திருக்கிறது; எல்லா நோய்மைகளிலிருந்தும் வெறுமைகளிலிருந்தும் விடுவித்திருக்கிறது. எனக்கு இருக்கும் ஒரே வடிகால் இசை.
 
ஓர் அருவியோ, பெரிய ஏரியோ நீங்கள் தண்ணீருக்குள் இறங்கியதும் தண்ணீர் உங்களைச் சூழ்ந்துகொள்கிறது. அவ்வளவுதான், அதன் பின்னர் நீங்கள் எதுவும் செய்வதில்லை. வெறும் கையைக் காலை மட்டுமே அசைக்கிறீர்கள். அந்த நீந்துதலில் ஒரு பேரானந்தம் உங்களைத் தொற்றிக்கொள்ளும் இல்லையா? அதுதான் இசையிலும் நடக்கிறது. இசை உங்கள் காதுக்குள் போக ஆரம்பிக்கும். கொஞ்ச நேரம் கழித்து கைகால் அசையாது. மனம்தான் அசையும்.

என் குழந்தைகளுடனும் இசை கேட்பதையே வழக்கமாக வைத்துக்கொண்டிருக்கிறேன். இசை என்பது எனக்கு நாவல் படிப்பது போன்றது” என்கிறார் எஸ்.ரா.

- ச.அழகுசுப்பையா படங்கள்: க.பாலாஜி