Published:Updated:

நோய்நாடி நோய்முதல் நாடி

நோய்நாடி நோய்முதல் நாடி
பிரீமியம் ஸ்டோரி
News
நோய்நாடி நோய்முதல் நாடி

வாழ்வியல் - 1புதிய பகுதி!

நோய்நாடி நோய்முதல் நாடி

ணவே மருந்து, மருந்தே உணவு... இதுதான் சித்த மருத்துவத்தின் கொள்கை. இந்தக் கொள்கையை தமிழர்கள் பின்பற்றியதால்தான் நோய்களை வென்று வாழ்ந்தனர். `எது உனக்கு உணவாக இருக்கிறதோ அதுவே மருந்தாக இருக்க வேண்டும்’ என்பதே அந்தக் கொள்கை. நம் முன்னோர் மண்ணுக்கேற்ற பழக்கவழக்கங்களைக் கடைப்பிடித்தனர்; இயற்கையோடு இயைந்த வாழ்க்கையை வாழ்ந்தனர்; தாம் வாழும் சூழலில் கிடைத்தவற்றை உண்டனர்; அதனால் ஆரோக்கியமாக இருந்தனர்.
 
சித்த மருத்துவத்தின் இந்தக் கொள்கையை ஆராய்ந்து பார்த்தால், நம் மண்ணுக்கும் மரபுக்கும் ஏற்ற மருத்துவமாக அது இருப்பது புலப்படும். இதை மருத்துவம் என்பதைவிட ‘வாழ்வியல் கோட்பாடு’ என்றே சொல்லலாம். ஆனால், நாம் நவீனம், வளர்ச்சி என்ற பெயர்களில் அதைவிட்டு விலகி வெகு தூரம் வந்துவிட்டோம். இதன் விளைவாக சர்க்கரைநோய், குழந்தையின்மை, புற்றுநோய், நுரையீரல் தொடர்பான நோய்கள் குறைபாடுகள் என நோய்கள் வரிசைகட்டி நம்மை வதைக்கின்றன.

“இந்தியர்களின் ஆரோக்கியமற்ற வாழ்க்கைமுறையால் எதிர்காலத்தில் கிருமிகளால் பரவக்கூடிய தொற்றுநோய்களைவிட (Communicable Disease), `லைஃப் ஸ்டைல் டிசீசஸ்’ (Lifestyle Diseases) எனப்படும் வாழ்க்கைமுறை மாற்றத்தால் ஏற்படும் தொற்றாநோய்களால்தான் அதிக மரணங்கள் நிகழும்” என்ற உலக சுகாதார நிறுவனத்தின் எச்சரிக்கையே இதற்கு சாட்சி.

நோய்நாடி நோய்முதல் நாடி

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

தொற்றாநோய்கள் பெருக அடிப்படைக் காரணமாக இருப்பது, நம் வாழ்க்கைமுறையே.  வாழ்க்கைமுறையை மாற்றாமல் நோய்களைக் கண்டறிவதும், சிகிச்சையளிப்பதும் பயனற்ற வேலை. ஆனால், `நோயற்ற வாழ்வு அமைய நோய் வராமல் தடுக்கவேண்டியது மருத்துவத்தின் ஓர் அங்கம்’ என்கிறது சித்த மருத்துவம்.

இதையே திருமூலர்,

`மறுப்பது உடல்நோய் மருந்தென லாகும்
மறுப்பது உளநோய் மருந்தெனச் சாலும்
மறுப்பது இனிநோய் வாரா திருக்க
மறுப்பது சாவை மருந்தென லாமே
என்று திருமந்திரத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.

 - மருத்துவம் என்பது, நோய்களைத் தீர்ப்பது மட்டுமல்ல, நோய் எதனால் வருகிறது என்று அதன் மூலத்தைக் கண்டறிவது.  ஆரோக்கியமான வாழ்க்கைமுறையால் நோய் தலைதூக்காமல் சரிசெய்வது... இதுதான் நமது பாரம்பர்ய மருத்துவத்தின் சிறப்பு. இதற்கு சித்த மருத்துவம் வகுத்த ஆரோக்கியமான வாழ்வியல் கோட்பாட்டைப் பின்பற்றவேண்டியது அவசியம்.

இன்றைய நவீன மருத்துவ ஆய்வுகள், ‘இது முற்றிலும் உண்மை’ என்று மெய்ப்பிக்கின்றன.  குறிப்பாக, வாழ்க்கைமுறை நோய்களுக்கெல்லாம் காரணம், ‘நமது உடலின் உயிரியல் கடிகாரமும் (Biological Clock) சர்காடியன் இசைவும் (Circadian Rhythm) பாதிக்கப்படுவதுதான்’ என்கிறது நவீன அறிவியல். ஆனால், பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே ‘நோயில்லா நெறி’ அல்லது ‘நோய் அணுகா விதி’ என்ற கோட்பாட்டில் கால ஒழுக்கம், நாள் ஒழுக்கம் ஆகிய நெறிமுறைகளைச் சித்த மருத்துவம் வகுத்திருக்கிறது. அவற்றைச் சரியாகப் பின்பற்றினால், நோய் நெருங்கா வாழ்வு நம் வசமாகும். முதலில் நாள் ஒழுக்கத்தையும் அதன் பிறகு கால ஒழுக்கத்தையும் பார்ப்போம். நாள் ஒழுக்கத்தில் நாம் தினமும் படுக்கையிலிருந்து எழுந்து, மீண்டும் படுக்கைக்குச் செல்லும்வரை ஒரு நாளைக்குப் பின்பற்றவேண்டிய வழிமுறைகள் என்னென்ன என்பது பற்றித் தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறது சித்த மருத்துவம்.  அதன்படி, அதிகாலையில் விழித்தெழுதல் என்பது அவசியமாகும்.

நோய்நாடி நோய்முதல் நாடி

ஒவ்வொரு நாளின் தொடக்கமும் நாம் கண் விழிப்பதிலிருந்தே தொடங்குகிறது. காலையில் கண் விழித்தல் என்பது ஒவ்வொருவருக்கும் ஒரு புதிய பிறப்பு என்றே சொல்லப்படுகிறது. அந்த நேரத்தில் நிலவும் ஒரு மனிதனின் புறச்சூழலும் அகச்சூழலுமே அன்றைய தினத்தைத் தீர்மானிக்கின்றன. அதிகாலை விழிப்பதன் பின்னணியில், நோய்களைப் போக்கும் அறிவியல் உண்மை இருக்கிறது. புவியியல் அமைப்பில் உலக அளவில் ஒவ்வொரு நாட்டுக்கும் வெவ்வேறு நேரம் காட்டும் கடிகாரங்கள் இருப்பதுபோல, உடல் இயக்கத்துக்கென ஒரு கடிகாரம் இருக்கிறது. இதையே நவீன மருத்துவம் உடலின் ‘உயிரியல் கடிகாரம்’ என்றும், `அந்தக் கடிகாரம் சரியாக இயங்கவில்லையென்றால், உடல் இயக்கம் தலைகீழாக மாறிவிடும்’ என்றும் கூறுகிறது. இதைப் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே சித்தர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

`அண்டத்திலுள்ளதே பிண்டம்
பிண்டத்திலுள்ளதே அண்டம்
அண்டமும் பிண்டமு மொன்றே
அறிந்து தான் பார்க்கும் போதே
’ என்பது சித்தர் பாடல்.

அதாவது இந்தப் பிரபஞ்சத்தில் ஐம்பூதங்களான நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் போன்றவற்றின் பிரதிபலிப்பு ஒவ்வோர் உயிரிலும் நிறைந்திருக்கிறது. அதன்படி ஒருவர் தன்னுடைய நாளை அந்தப் புவியியல் அமைப்பின்படி தொடங்க வேண்டும். பூச்சிகள், பறவைகள், விலங்குகள் விழித்தெழுவது, மலர்கள் மலர்வது என உயிர்களின் தொடக்கச் செயல்பாடு சூரியனின் சுழற்சிக்கேற்ப அதிகாலையில்தான் நடக்கிறது. எனவே, மற்ற உயிர்களைப்போல, நாமும் அதிகாலை நேரத்தில் கண் விழிக்க வேண்டும். அதிகாலையில், குறிப்பாக சூரிய உதயத்துக்கு முன்னர் தூக்கத்திலிருந்து எழுவதால், உடலுக்கும் மனதுக்கும் பல்வேறு நன்மைகள் கிடைக்கும். `உடலுக்கு ஆதாரமாக விளங்கும் வாத, பித்த, கபம் போன்ற உயிர் தாதுக்கள் தங்களின் நிலையிலிருந்து மாறும்போது நோய் உண்டாகும்’ என்கிறது சித்த மருத்துவம். வெப்பக் காற்று எதுவும் இல்லாததால், அதிகாலையில் பூமி குளிர்ந்திருக்கும். வளர்சிதை மாற்றம், பல்வேறு செயல்பாடுகள் காரணமாக உடலில் அதிகரித்திருக்கும் பித்தம் இதன் மூலம் குறையும்.

சுற்றுச்சூழல் துறையின் புள்ளிவிவரப்படி, காற்று மாசு, ஒளி மாசு போன்ற பாதிப்புகள் நேரம் செல்ல செல்லக் அதிகரித்துக்கொண்டே போகும். மேலும் இந்த பாதிப்புகள் குறைவாக இருக்கும்  காலை நேரத்தில், சுத்தமான ஆக்சிஜன் நிறைந்திருக்கும். அப்போது ஆழமாக மூச்சை உள்வாங்கினால், நுரையீரலின் அடிப்பாகம்வரை சென்று தூய காற்று நிரம்பும். அந்தத் தூய காற்று (ஆக்சிஜன்) ரத்தத்தின் மூலம் ஒவ்வோர் உறுப்பிலும், அதிலுள்ள செல்களையும் சென்றடையும். நிணநீர் மற்றும் நரம்புகளின் செல்களுக்கும் புத்துணர்ச்சி கொடுக்கும். அதிகச் சத்தமின்றி காணப்படும் அந்தச் சூழலில் உறக்கம் கலைவது மனதுக்கு இதம் தரும். இதனால் குழப்பமில்லாத தெளிவான மனநிலை உண்டாகும். அதேபோல, கண் விழிக்கும்போது நேர்மறையான எண்ணங்களை உருவாக்கும் விஷயங்களைப் பார்க்க வேண்டும். சூரிய உதயத்தைப் பார்ப்பது, மலர்களைப் பார்ப்பது, கனிகளைப் பார்ப்பது, கண்ணாடியில் முகம் பார்ப்பது, மனைவி மக்களைப் பார்ப்பது, உள்ளங்கையைப் பார்ப்பது ஆகியவை  உளவியல்ரீதியாக நம்மை நெறிப்படுத்தும்; அந்த நாள் முழுக்க சிறப்பான நாளாக அமையும்.

அதிகாலை 4:30 முதல் 6:30 மணிக்குள்ளான நேரத்தை ‘பிரம்ம முகூர்த்தம்’ என்பார்கள். ‘பிரம்மம்’ என்றால் ‘தொடக்கம்’. ‘முகூர்த்தம்’ என்பதற்கு ‘நல்ல நேரம்’ என்று பொருள். `உனக்கான நாளை நல்ல நேரத்தில் தொடங்கினால், அன்றைய நாள் நன்றாக முடியும்’ என்பதே அதற்கான பொருள். எனவே, தினமும் கண்விழிக்கும் நேரத்தை, பிரம்ம முகூர்த்தமான அதிகாலையில் தொடங்கினால், அந்த நாள் முழுவதும் சிறப்பாக அமையும்.

தெளிவோம்...


-ஜி.லட்சுமணன்