Published:Updated:

காமமும் கற்று மற 1 - மனதும் மனதும் ஒன்றிப்போதல்

கூடற்கலை - 1 புதிய பகுதி!

‘பாலும் கசந்தது
பஞ்சணை நொந்தது
காரணம் நீயறிவாய்
தேவையை நானறிவேன்’


- பஞ்சு அருணாசலம்

ந்தோஷ்... பெயரைப்போலவே சந்தோஷத்துக்கு இம்மியளவுகூட குறையிருக்கக் கூடாது என்பதில் தீர்க்கமாக இருக்கும் இளைஞர். வயது 27. படிக்கும்போதே, ஒரு பன்னாட்டு நிறுவனம் நடத்திய கேம்பஸ் இன்டர்வியூவில் தேர்வாகிவிட்டார். பெங்களுருவில் வேலை, கை நிறைய சம்பளம். அவர் சம்பளத்தை நம்பி குடும்பம் இல்லை. விடலைப் பருவத்தில், சுதந்திரமாகச் சுற்றித் திரிந்தவருக்கு, வாலிபச் சேட்டைகளும் அதிகம். காலேஜில் ஆரம்பித்த சிகரெட், மதுப்பழக்கத்தோடு பாலியல் தொழிலாளிகளுடன் பழக்கம் வேறு. மகிழ்ச்சிக்குக் கேட்கவா வேண்டும்?

கார்த்திக் குணசேகரன்
கார்த்திக் குணசேகரன்

வேலையில் சேர்ந்த பிறகு ஐந்து ஆண்டுகள் மது, ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம்... பிறகு? அவரின் நிம்மதியையும் மகிழ்ச்சியையும் ஒருசேரப் புரட்டிப்போட்டது திருமணம். பெண்ணைப் பெற்றோர் முடிவு செய்திருந்தாலும், காபி ஷாப்பில் நேரில் பார்த்துப் பேசி, தனக்கு `ஓகே’ என்ற பிறகுதான் கல்யாணத்துக்கும் சம்மதித்திருந்தார்.

சந்தோஷின் ‘அந்த’த் திறமை நண்பர்கள் மத்தியில் வெகு பிரபலம். அதற்காகவே அவருக்கு ஒரு பெயர் வைத்திருந்தார்கள்... ‘வித்தைக்காரன்.’ ஆனால், அவரது வித்தை மனைவியிடம் பலிக்கவில்லை. வசதியான தனியறை, பிரமாண்டமான கட்டில், ஏ.சி., மணக்க மணக்கக் கூந்தலில் மல்லிகைப் பூ வைத்துக்கொண்டு தொட்டுவிடும் தூரத்தில் மனைவி. கண்ணுக்கு லட்சணமான பெண். பேரழகி.

 எல்லாம் சரியாக இருந்தும் மனைவியிடம், ‘அது’ மட்டும் சந்தோஷால் முடியவில்லை. மனைவியைத் தொட்டதுமே மரவட்டை மாதிரி சுருண்டுகொண்டது மனது. பிறகு, தூக்கம் வந்ததுபோல பாவனை செய்து, கண்களை மூடிக்கொள்வார். `ஒரு மாதத்தில் சரியாகிவிடும், இரண்டு மாதங்களில் சரியாகிவிடும்’ என்று நினைத்து மாதங்கள்தாம் கடந்தன. வேறு ஒன்றும் நடக்கவில்லை. ஒரு கட்டத்தில் சந்தோஷுக்கு மனைவியிடம் முகம் கொடுத்துப் பேசவே கூச்சம் வந்துவிட்டது. நெருங்கிய நண்பர் ஒருவரிடம் விஷயத்தைப் பகிர்ந்துகொண்டார். நண்பரின் ஆலோசனையின் பேரில் மனைவியை அழைத்துக்கொண்டு என்னிடம் கவுன்சலிங்குக்கு வந்தார். முதலில் அவரின் மனைவியிடம் பேசினேன். அவர் பேச்சிலிருந்தே பிரச்னை சந்தோஷிடம்தான் என்பது புரிந்துவிட்டது.

காமமும் கற்று மற 1 - மனதும் மனதும் ஒன்றிப்போதல்

அந்தப் பெண்ணை அனுப்பிவிட்டு, சந்தோஷிடம் சில கேள்விகள் கேட்டேன். தன் ஆண்மை குறித்த சந்தேகமோ, கேள்வியோ எழுந்தால் அதற்கு பங்கம் வந்துவிடக் கூடாது என்பதில் மிக கவனமாக இருந்தார். ‘தான் அந்த விஷயத்தில் கில்லாடி’ என்று சொல்லும்போது அவருடைய குரலில் பெருமை தொனித்தது. திருமணத்துக்குப் பின்னர் இருமுறை, தன் பழைய தோழிகளிடம் சென்றதையும், அப்போது, முழு நிறைவாக உணர்ந்ததையும் குறிப்பிட்டார்.
 
``அவ்வளவுதான் சந்தோஷ்... உங்களுக்கு ஒரு குறையும் இல்லை’’ என்றேன் நான். ஒரு கணம் என்னை நம்ப முடியாமல் பார்த்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பிரச்னை இதுதான்… சந்தோஷுக்கு இருந்தது `மனத்தடை.’ பெண்களை மிக எளிதாகக் கையாள முடியும் என்கிற நம்பிக்கை இருந்தாலும், அவர் பழகியிருந்த பெண்களைப்போல மனைவியிடம் நெருங்க முடியவில்லை. நெருங்கும்போதெல்லாம் உளவியல்ரீதியாக ஏதோ ஒரு பாதிப்பு. `அவள் என்ன நினைப்பாளோ.... அவளுடைய ஆசைளைத் தீர்க்க என்னால் முடியுமா... அவளுக்கு முழு திருப்தியைத் தர இயலுமா?’ இப்படி அடுக்கடுக்கான சந்தேகங்கள்.

மனைவியிடம் தீராத ஆசை. ஆனால், மனத்தடை அவரது கிளர்ச்சியைச் செயல்படவிடாமல் தடுத்தது. எதிராளியைத் தாக்கி வெற்றி பெற்றுத் தரும் ஆயுதம் தன்னிடம் இருப்பது தெரியாமல், தன் பலம் புரியாமல் தோற்றுப் போவதைப்போல பாதிக்கப் பட்டிருந்தார் சந்தோஷ்.

காமமும் கற்று மற 1 - மனதும் மனதும் ஒன்றிப்போதல்

நான் உண்மையை விளக்கிச் சொன்னேன். புரிந்துகொண்டார். இப்போது மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ்கிறார். தாம்பத்யத்தின் அடிப்படையே உளவியல்தான். `மனதும் மனதும் ஒன்றிப்போதல்’ என்று நம் முன்னோர் சொல்லிவைத்தது இதைத்தான். தாம்பத்யக் குறைபாடு என்றவுடனேயே, `உடல்ரீதியான பிரச்னையாகத்தான் இருக்கும்’ என்று நம்பிவிடக் கூடாது.

ஹார்மோன்களின் கூட்டுத் தொகுப்பில், உணர்வுகளைக் கடத்தும் மனிதனுக்கு மனம்தான் பிரதானம். அதை உணர்ந்து அனுபவிக்கும் போதுதான் தாம்பத்யம் முழுமை பெறும். சந்தோஷுக்கு இருந்த மனத்தடை, இங்கு பலருக்கும் உண்டு. அதைத் தெரிந்து தெளிவு பெறுவதில் இருக்கிறது தாம்பத்யத்தின் உச்சம்!

- கற்போம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு