Published:Updated:

பலருக்கு எலும்பு முறிவு! - 300 பேரின் தலை, கழுத்தை பதம் பார்த்த மாஞ்சா நூல்

பலருக்கு எலும்பு முறிவு! - 300 பேரின் தலை, கழுத்தை பதம் பார்த்த மாஞ்சா நூல்
பலருக்கு எலும்பு முறிவு! - 300 பேரின் தலை, கழுத்தை பதம் பார்த்த மாஞ்சா நூல்

ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் பட்டம் பறக்கவிட்டபோது மாஞ்சா நூல் அறுத்ததில் 300 பேர் காயமடைந்தனர். சிறுவர்களுக்குப் பிடித்தமான விளையாட்டுப் பட்டம் பறக்கவிடுதல். இதை சிறுவர்கள் மட்டுமல்லாமல் இளைஞர்களும் பொழுதுபோக்காக விளையாடி மகிழ்கின்றனர்.

விதவிதமான வண்ணங்களில் தங்களுக்குப் பிடித்த வடிவங்களில் தயாரித்து இப்பட்டங்களைப் பறக்கவிடுவதில் அலாதி மகிழ்ச்சி. இதில் பயன்படுத்தப்படும் நூல் மாஞ்சா என்று அழைக்கப்படும். இந்த நூலில் மஞ்சள், மணல், கண்ணாடித் துண்டுகள் உள்ளிட்ட பொருள்கள் சேர்க்கப்பட்டு நன்றாக அரைத்துப் பூசப்படும். அப்படித் தயாரிக்கப்பட்ட நூல் மிகக் கடினமாக இருப்பதுடன் பட்டம் அறுந்துவிடாமல் பறக்க உதவும். இந்தப் பட்டங்கள் பறக்கவிடும்போது மாஞ்சா நூல் உடலில் சிக்கி உயிரிழப்புகள் ஏற்படும். இதனால் சென்னை போன்ற பெருநகரங்களில் பட்டம் பறக்கவிடுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. வெளி மாநிலங்களிலும் தடை உள்ளது.

இந்நிலையில், மகரசங்கராந்தியை முன்னிட்டு பட்டம் விடும் திருவிழா ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் நடைபெற்றது. அப்போது கட்டடங்களின் மேலே நின்று பொதுமக்கள் பட்டங்களைப் பறக்கவிட்டனர். இந்தத் திருவிழாவின்போது, மாஞ்சா நூல் அறுத்ததில் குழந்தைகள் உட்பட 300 பேர் காயமடைந்துள்ளனர். இவர்கள் அனைவரும் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 45 பேர் ஆபத்தான நிலையில் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

இதுகுறித்து ஜெய்ப்பூர் எஸ்.எம்.எஸ் மருத்துவக் கல்லூரி அதிகாரிகள் கூறுகையில், ``பட்டம் பறக்கவிடும்போது நிகழ்ந்த சம்பவங்களில் மாஞ்சா நூல் அறுத்து தலை, கழுத்து உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் அடைந்து பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிலருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டு எக்ஸ்ரே, ஸ்கேன் உள்ளிட்ட சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. பெரும்பாலும் இருசக்கர வாகனங்களில் வந்தவர்கள் மீது நூல் பட்டு காயம் ஏற்பட்டுள்ளது. பட்டத்தை துரத்திச் செல்லும்போதும் சிலருக்குக் காயம் ஏற்பட்டது. ஒரே நாளில் இப்படி பலர் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது" என்றனர். 

இதேபோல குஜராத் மாநிலத்தில் நடந்த பட்டம் பறக்கவிடும் திருவிழாவில் மேசானா என்ற பகுதியில் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது தாஜீப் என்ற சிறுவன் கழுத்தில் மாஞ்சா நூல் அறுத்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். அகமதாபாத்தில்  மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த அசோக் பாஞ்சால் (45) என்பவர் மீது, மாஞ்சா நூல் அறுந்து விழுந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.