Published:Updated:

தமிழகத்தில் அதிகரிக்கும் பனி... நோய்களிலிருந்து தப்புவது எப்படி?

பனிக்காலத்தில் மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்குச் செல்வதைத் தவிர்க்கவேண்டும். கண்டிப்பாகப் போயாக வேண்டிய சூழல் இருந்தால் மாஸ்க் அணிந்து செல்வது பாதுகாப்பு. 

தமிழகத்தில் அதிகரிக்கும் பனி... நோய்களிலிருந்து தப்புவது எப்படி?
தமிழகத்தில் அதிகரிக்கும் பனி... நோய்களிலிருந்து தப்புவது எப்படி?

ழக்கமாக, தமிழகத்தில் ஜனவரி மத்தியில் பனியின் தாக்கம் குறையத் தொடங்கும். ஆனால், இப்போது பனியின் அளவு அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. மேலும் சில நாள்களுக்குப் பனியின் அளவு அதிகரிக்க வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

பனிக்காலம் என்பது ஆரோக்கியத்துக்குச் சவால் விடும் காலம். சளி, இருமல் தொடங்கி காய்ச்சல்கள் வரை வந்து படுத்தி எடுத்துவிடும். பனிக்காலத்தை எதிர்கொள்வது எப்படி? நோய்கள் வராமல் தற்காத்துக்கொள்வது எப்படி?

பொதுநல மருத்துவர் சிவராம் கண்ணன் விரிவாகப் பேசினார். 

``பனிக் காலத்தில் நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்கள் அதிகம் வரலாம். சிலருக்கு ஆஸ்துமா வரவும் வாய்ப்புண்டு. நுரையீரலில் பாதிப்பு இருந்தால், அது இன்னும் அதிகமாகும். வைரஸ் மற்றும் பாக்டீரியாவால் நுரையீரல் தொற்று ஏற்படவும் வாய்ப்புண்டு. 

பனிக்காலத்தில் மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்குச் செல்வதைத் தவிர்க்கவேண்டும். கண்டிப்பாகப் போயாக வேண்டிய சூழல் இருந்தால் மாஸ்க் அணிந்து செல்வது பாதுகாப்பு. தமிழகத்தில் பன்றிக் காய்ச்சல் பாதிப்பு செப்டம்பர், அக்டோபர், நவம்பரில் அதிகமாக இருந்தது. டிசம்பரில் அது வெகுவாகக் குறைய ஆரம்பித்துவிட்டது. பனி அதிகரிப்பதால் அது மீண்டும் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்பிருக்கிறது” என்கிறார் சிவராம கண்ணன். 

``பனிக்கால நோய்களைத் தடுப்பதற்கு என்னவகையான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன?’’ பொதுச் சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்புத் துறை இயக்குநர் குழந்தைசாமியிடம் கேட்டோம். 

``பொதுவாகப் பனிக்காலத்தில் ஆஸ்துமா நோயாளிகளுக்குப் பாதிப்பு இருக்கும். காய்ச்சல் பரவலாகக் காணப்படும். பன்றிக் காய்ச்சல் உள்ளிட்ட நோய்கள் பரவாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறோம். இந்த வகைக் காய்ச்சலைத்  தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். அனைத்து அரசு மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளிலிருந்து தினந்தோறும் நோயாளிகளின் பட்டியலைக் கேட்டுப் பெறுகிறோம். 

இந்தப் பட்டியலைப் பொதுவான காய்ச்சல், டயேரியா, போலியோ, மஞ்சள் காமாலை, மூளைக் காய்ச்சல், பன்றிக் காய்ச்சல் என்று ஆறு வகையாகப் பிரித்துள்ளோம். இந்த நோய்களைத் தொடர்ந்து கண்காணிக்கிறோம். தமிழகத்தில் வேலூர் வாலாஜா போன்ற இடங்களில் மஞ்சள் காமாலைக்கு நாட்டு மருந்து வாங்கி, உட்கொள்ளும் பழக்கம் இருக்கிறது. இதுபோல தமிழகத்தில் எட்டுக்கும் மேற்பட்ட இடங்கள் உண்டு. அங்கேயும் நோய் பாதிப்பு உள்ளவர்கள் குறித்த பட்டியலைக் கேட்டுப் பெறுகிறோம். 

இந்த நோய்களை எல்லாம் 24 மணி நேரமும் கண்காணிக்கக்கூடிய கட்டுப்பாட்டு அறை பொதுச் சுகாதார இயக்குநரகத்தில் செயல்படுகிறது. காலை முதல் மாலை வரை மருத்துவமனைகளில் சேகரிக்கப்பட்ட பட்டியலை ஆய்வு செய்து, அதற்குரிய நடவடிக்கைகளில் மருத்துவக் குழுவினர் ஈடுபடுவார்கள். எந்தெந்த இடங்களில் நோய் பாதிப்பு இருக்கிறதோ, அந்த இடங்களில் சிகிச்சை அளிப்பார்கள். அதேபோல, மேலும் நோய் பரவாமல் இருப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடுகிறோம். 

இதுமட்டுமல்லாமல், குடிநீர் விநியோகத்தையும் கண்காணிக்கிறோம். சென்னையில் உள்ள மக்களுக்கு வழங்கப்படும் குடிநீரில் குளோரின் உள்ளதா என்பதையும் தண்ணீர் வழங்கும் குழாய்களில் கழிவு நீர் கலக்கிறதா என்பதையும் சோதனை செய்கிறோம். பெரும்பாலான நோய்கள் தண்ணீர் மூலமாகப் பரவுவதால் இந்த நடவடிக்கைகளில் ஈடுபடுகிறோம்” என்கிறார் குழந்தைசாமி.

பனிக்காலத்தில் பரவும் நோய்களைத் தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவந்தாலும் நாமும் விழிப்பு உணர்வோடு 
இருக்க வேண்டியது அவசியம்.