Published:Updated:

கை, கால், தொடைகளில் எலும்பு வலியா..?! அலட்சியம் வேண்டாம்! #Osteoblastoma

கிராபியென் ப்ளாக்

`இரவில் எலும்பில் வலி', `வலிமாத்திரைக்கு ரெஸ்பான்ஸ் செய்வது’ இவை இரண்டுதான் `ஆஸ்டியோப்ளாஸ்டோமா'வுக்கான அறிகுறிகள்.

கை, கால், தொடைகளில் எலும்பு வலியா..?!  அலட்சியம் வேண்டாம்! #Osteoblastoma
கை, கால், தொடைகளில் எலும்பு வலியா..?! அலட்சியம் வேண்டாம்! #Osteoblastoma

``எலும்பு சார்ந்து நிறைய பிரச்னைகள் இருக்கின்றன. அதில், எலும்புப் பகுதியில் உருவாகும் ஒருவகைக் கட்டிதான் `ஆஸ்டியோப்ளாஸ்டோமா’ (Osteoblastoma). எலும்புக்குள்ளே உருவாகும் கட்டி இது. தொடர்ச்சியான வலியைக் கொடுக்கும். நடக்கும்போதும் அமர்ந்திருக்கும்போதும் வலி இருக்கும். இதை அலட்சியம் செய்யக் கூடாது. அலட்சியப்படுத்தினால் எலும்பு சார்ந்த புற்றுநோயாக மாற வாய்ப்புள்ளது’’ என்று எச்சரிக்கிறார் எலும்பு, மூட்டு அறுவைசிகிச்சை நிபுணர் அருண் கண்ணன். 

`ஆஸ்டியோப்ளாஸ்டோமா’ பாதிப்பு குறித்தும் அதற்கான காரணங்கள், சிகிச்சைகள் பற்றியும் விரிவாக விளக்குகிறார் அவர்.

``சில சமயங்களில் முதுகெலும்பு, கைகள், கால்கள், பாத எலும்புகளுக்குள் கட்டிகள் உருவாகும். இதில் இரண்டு வகை உண்டு. புற்றுநோயாக மாறாத கட்டிகளை `பினைன் ட்யூமர்' (Benign tumor) என்றும், புற்றுநோயாக மாறிய கட்டிகளை `மாலிகணன்ட் ட்யூமர் (Malignant tumor)' என்று குறிப்பிடுவோம். இந்தப் `பினைன் ட்யூமர்' வகைகளில் ஒன்றுதான் `ஆஸ்டியோப்ளாஸ்டோமா' (Osteoblastoma). இது 10 வயதிலிருந்து 30 வயதுக்குள் இருப்பவர்களுக்கு அதிகமாகக் காணப்படும். முக்கியமாக, இளம் வயது ஆண்களைப் பாதிக்கும். இரண்டு சென்டிமீட்டருக்குக் குறைவாக இருந்தால் அது `ஆஸ்டியோடோஸ்டோமா’ (Osteoidostoma) கட்டி என்றும், அதற்கு மேல் இருந்தால் `ஆஸ்டியோப்ளாஸ்டோமா' கட்டி என்றும் வகைப்படுத்தலாம். எலும்பினுள் `ஆஸ்டியோப்ளாஸ்டோமா’ கட்டி உருவாவதற்கு ஒருவகையான ஜெனடிக் மற்றும் ஜீன் மாடிபிகேஷன் காரணமாக இருக்கலாம். 

எலும்புக்குள்ளே ஏற்படும் கட்டியாக இருப்பதால் வெளிப்புறத்தில் எந்த அறிகுறிகளும் தென்படாது. ஆனால், இதன் முதன்மையான அறிகுறி என்பது, வலிதான். இரவில் தூங்கும்போது வலி அதிகமாக இருக்கும். பெரும்பாலும் இந்தக் கட்டிகளுக்காக வலி மாத்திரைகளை உட்கொண்டால் தற்காலிகமாக நிவாரணம் கிடைக்கும். அதற்காக, இதை அப்படியே விட்டுவிடுவதும் கூடாது. `இரவில் எலும்பில் வலி', `வலிமாத்திரைக்கு ரெஸ்பான்ஸ் செய்வது' இவை இரண்டுதான் `ஆஸ்டியோப்ளாஸ்டோமா'வுக்கான அறிகுறிகளாகக் குறிப்பிடலாம்.

தொடர்ந்து எலும்பில் வலி இருந்தால், அதை எக்ஸ்ரே பரிசோதனையின் மூலம் எளிதாகக் கண்டறியலாம். அதில் தெளிவாகக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் சிடி ஸ்கேன் அல்லது எம்.ஆர்.ஐ ஸ்கேன் மூலம் கண்டறிந்து, `ஆஸ்டியோப்ளாஸ்டோமா' பாதிப்பை உறுதிப்படுத்தலாம். இதுமட்டுமன்றி `போன் ஸ்கேன் (bone scan)' வழியாகவும் கண்டுபிடிக்க முடியும். `பயாப்ஸி டெஸ்ட்'டும் (Biopsy test) தேவைப்படும். 

எலும்புக்குள் இரண்டு சென்டிமீட்டருக்கு மேல் கட்டி இருந்தால், அந்த இடத்தில் எக்ஸ்ரே வழிகாட்டுதலின்படி ஓர் ஊசியைச் செலுத்தி, கட்டியிலிருந்து ஒரு சிறு பகுதியை வெட்டி எடுத்து, பரிசோதிப்பதுதான் `பயாப்ஸி டெஸ்ட்’. இந்தப் பரிசோதனையின் வழியே எந்த வகையான கட்டி என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள முடியும். இதில், எலும்புக்குள் ஏற்பட்டிருக்கும் கட்டி என்பது `ஆஸ்டியோப்ளாஸ்டோமா' என்றால், அதற்கு அறுவை சிகிச்சை ஒன்றே சரியான தீர்வு. 

அறுவை சிகிச்சையின்போது கட்டி இருக்கும் இடத்தில் எலும்பை எக்ஸ்போஸ் செய்து, அதன் மேலே ஒரு விண்டோபோல துளையிடுவோம். உள்ளே இருக்கும் கட்டியை நீக்குவோம். இதற்கு, `ஹைஸ்பீடு பர்' (High speed burr) என்ற கருவியைப் பயன்படுத்துவோம். அதனுடன் சேர்த்து `க்ரையோதெரபி' (Cryotherapy) என்ற கருவியைப் பயன்படுத்தி, முழுக் கட்டிகளையும் நீக்கிவிடுவோம். இப்படிச் செய்வதால் கட்டி மீண்டும் வராமல் தடுக்கப்படும். இதன் மூலம் 90 சதவிகிதம் `ஆஸ்டியோப்ளாஸ்டோமா’ கட்டியைச் சரிசெய்ய முடியும். மற்றபடி, அடிபடுவதாலோ, ஓடுவதாலோ இந்தப் பிரச்னை ஏற்படுவதில்லை. 

அதேபோல, `ஆஸ்டியோடோஸ்டோமா' கட்டியை அறுவைசிகிச்சை இல்லாமலேயே குணப்படுத்த முடியும். சிடி ஸ்கேன் வழிகாட்டுதலின்படி பினைன் ஹ்யூமர் இருக்கும் இடத்தில் `ரேடியோ ப்ரீக்யுன்ஸி ப்ரோப்ஸ்' (Radio frequency probes) எனும் கருவியை வைத்து, `ரேடியோ ப்ரீக்யுன்ஸி தெரபி' செய்ய வேண்டும். இதன்மூலம் ஒரு சென்டி மீட்டர் நீளத்துக்கு ட்யூமரை சுற்றி ஹீட் தெரபி தரும்போது, எலும்பினுள்ள `ஆஸ்டியோடோஸ்டாமா' கட்டிகள் அழிந்துவிடும்” என்கிறார் அருண் கண்ணன்.