Published:Updated:

தென் துருவம் சென்று சாதனை படைத்த அபர்ணா ஐ.பி.எஸ்க்கு தீவிர நிமோனியா!

தென் துருவம் சென்று சாதனை படைத்த அபர்ணா ஐ.பி.எஸ்க்கு தீவிர நிமோனியா!
தென் துருவம் சென்று சாதனை படைத்த அபர்ணா ஐ.பி.எஸ்க்கு தீவிர நிமோனியா!

ன்டார்டிகா சென்று சாதனை படைத்த முதல் பெண் ஐ.பி.எஸ் அதிகாரிக்கு நிமோனியா பாதிப்பு ஏற்பட்டது. கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர் அபர்ணா குமார். 44 வயதாகும் இவர் கடந்த 2002-ம் ஆண்டில் உத்தரப் பிரதேச மாநிலப் பிரிவிலிருந்து ஐ.பி.எஸ் அதிகாரியாகத் தேர்வு செய்யப்பட்டவர்.

தற்போது இந்தோ - திபெத் எல்லை காவல் படையில் டி.ஐ.ஜியாகப் பணிபுரிந்து வருகிறார். இவரின் கணவர் சஞ்சய்குமார், உத்தரப்பிரதேச மாநிலத்தில் அரசு அதிகாரியாகப் பணிபுரிகிறார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். 

ஏற்கெனவே பல்வேறு மலையேற்றப் பயிற்சிகள் மேற்கொண்ட அபர்ணா, புதிய சாதனை படைக்கத் திட்டமிட்டார். அதன்படி 7 பேர் கொண்ட குழுவினருடன் அன்டார்டிகாவில் உள்ள தென் துருவத்துக்குப் பயணம் மேற்கொண்டார்.

8 நாள்களுக்குப் பிறகு, கடந்த 13-ம் தேதி கடும் குளிர் நிலவும் தென் துருவத்தை வெற்றிகரமாகச் சென்றடைந்தார். இது உலக சாதனை ஆகும். இதன் மூலம் அங்கு சென்ற முதல் பெண் ஐ.பி.எஸ் அதிகாரி என்ற பெருமை இவருக்குக் கிடைத்துள்ளது. 


``பெரும் சவாலான பயணம். கடும் பனிப்பொழிவைக் கடந்து பயணம் செய்தோம். இதுவரை அப்படியொரு பனியையும் குளிரையும் சந்தித்ததில்லை. ஒரு நாளைக்கு 8 மணி நேரம் பயணித்தோம். இதுவரை 7 கண்டங்களில் உள்ள சிகரங்களில் ஏறிவிட்டேன். அடுத்து, வட அமெரிக்காவில் உள்ள தெனாலி என்ற சிகரத்தில் ஏறுவதற்குத் திட்டமிட்டுள்ளேன்’’ என்கிறார் அபர்ணா.

கடும் பனியிலும் குளிரிலும் பயணம் செய்ததால் தீவிர நிமோனியா பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறார் அபர்ணா. தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.