Published:Updated:

''காதலும் உயர் ரத்த அழுத்தமும்... அந்த ஆராய்ச்சி சொல்வது உண்மைதான்!'' சைக்காட்ரிஸ்ட் விளக்கம்

``ஒருவர்மீது நாம் காதலோ, அன்போ செலுத்தும்போது நம் உடலில் ஆக்ஸிடோசின் என்கிற ஹார்மோன் ஒன்று சுரக்கிறது. இது நாம் மகிழ்ச்சியாக இருக்கும்போது சுரக்கிற ஹார்மோன்.’’

''காதலும் உயர் ரத்த அழுத்தமும்... அந்த ஆராய்ச்சி சொல்வது உண்மைதான்!'' சைக்காட்ரிஸ்ட் விளக்கம்
''காதலும் உயர் ரத்த அழுத்தமும்... அந்த ஆராய்ச்சி சொல்வது உண்மைதான்!'' சைக்காட்ரிஸ்ட் விளக்கம்

``ஒரே ஸ்ட்ரெஸ்... பீபி எகிறுது’’ என்று சொல்லாத நாள் இல்லையென்றாகிவிட்டது இன்றைக்கு. சிலருக்குப் பிரியாணி நல்ல ஸ்ட்ரெஸ் பஸ்டர் என்றால், நகைச்சுவைப் பிரியர்களுக்கு வடிவேலு காமெடியே ஸ்டிரெஸ்ஸை விரட்டும் நிவாரணி. இசை பிடித்தவர்களுக்கு எம்.எஸ்.வி, இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் என்று நபர்களைப் பொறுத்து மாறும். இனிமேல் இதனுடன், உங்கள் மனதுக்குப் பிடித்த காதலையும் சேர்த்துக்கொள்ளுங்கள். யெஸ், உங்கள் மனதுக்கு நெருக்கமான காதல், ஸ்டிரெஸ்ஸை விரட்டுவது மட்டுமல்லாமல், அதிகமான ரத்த அழுத்தத்தையும் குறைக்கும் என்கிறது சமீபத்திய ஆராய்ச்சி ஒன்று.  

ஹரிசோனாவில் இருக்கிற பல்கலைக்கழகம் ஒன்று, காதலில் விழுந்த 102 நபர்களிடம் ஸ்ட்ரெஸ் தருவது போன்ற டாஸ்க்குகளைத் தந்து செய்யச் சொல்லியது. அவற்றை அவர்கள் செய்யும்போது, அவர்களின் துணையை நேரில் நிற்க வைத்தும், மனதுக்குப் பிடித்தவர்களை நினைக்கச் சொல்லியும் ஆராய்ச்சி செய்திருக்கிறார்கள். அப்படி ஆராய்ந்ததில் கஷ்டமான டாஸ்க்குகள் செய்தபோது அதிகரித்த அவர்களுடைய ரத்த அழுத்தமானது மனதுக்குப் பிடித்தவர்களைப் பார்த்தவுடன் மற்றும் நினைத்தவுடன் படிப்படியாகக் குறைந்திருக்கிறது. ஸோ, உங்கள் காதலால் ஹை பீபியைக்கூட நார்மலுக்குக் கொண்டு வர முடியும் என்பது தெளிவாகிவிட்டது. இதுபற்றி, சைக்காட்ரிஸ்ட் கண்ணனிடம் பேசினோம். 

``வெளிநாடுகளைப் பொறுத்தவரை ஆண் - பெண் உறவுக்குத்தான் மிகவும் முக்கியத்துவம் கொடுப்பார்கள். ஆனால், நம் நாட்டைப் பொறுத்தவரை, அம்மா, அப்பா, அண்ணன், தம்பி, அக்கா, தங்கை, குழந்தைகள் என்று எல்லா வகை உறவுகளுக்கும் முக்கியத்துவம் தருவோம். நம் கலாசாரத்தில் எதிர்பார்ப்பில்லாத உறவு நிலைகள் பல உள்ளன. அதே நேரம் இயற்கையின் நியதிப்படி எதிர்பாலின ஈர்ப்புக்குச் சற்று வலிமை அதிகம்தான். இனி அந்த ஆராய்ச்சி குறித்த சப்ஜெக்ட்டுக்கு வருகிறேன்’’ என்றவர், தொடர்ந்து பேச ஆரம்பித்தார். 

``ஒருவர் மீது நாம் காதலோ, அன்போ செலுத்தும்போது நம் உடலில் ஆக்ஸிடோசின் என்கிற ஹார்மோன் ஒன்று சுரக்கிறது. இது நாம் மகிழ்ச்சியாக இருக்கும்போது சுரக்கிற ஹார்மோன் என்பது எல்லோருக்குமே தெரியும். இது சுரக்கிறபோது நம் உடல், மனம் இரண்டும் ஆரோக்கியமாக இருக்கும். இந்த ஹார்மோன் அந்த ஆராய்ச்சியில் சொல்லியிருப்பதுபோல ரொமான்டிக் சிச்சுவேஷனில் மட்டுமல்லாமல், மனதுக்கு நெருக்கமான ஒரு நட்புடன் பேசிக் கொண்டிருக்கும்போதுகூடச் சுரக்கும். இதனால், உடலுக்கு ஒரு எனர்ஜி கிடைக்கும். காலையில் சோர்வாக இருந்த நபர், மனதுக்குப் பிடித்த காதலரிடம் இருந்தோ அல்லது தோழியிடம் இருந்தோ ஒரு போன் கால் வந்ததும் உற்சாகமாகப் பரபரவென வேலைபார்ப்பது ஆக்ஸிடோசின் செய்கிற வேலைதான். ஈர்ப்பு அதிகம் இருக்கிற உறவுகளில் இது இன்னும் எஃபெக்டிவாக வேலைபார்க்கும்.  

சிலருக்கு வேலை முடித்து வீட்டுக்குக் கிளம்பும்போது தன் குழந்தையை நினைத்தால்கூட ஆக்ஸிடோசின் சுரந்து உற்சாகமாகி விடுவார்கள். சிலரோ, மனதுக்கு இசையை ஹெட் செட்டில் போட்டுக்கொண்டார்கள் என்றால் நடப்பதையே மிதப்பதைப்போல உணர்கிற அளவுக்கு ஏகாந்த உலகத்துக்குள் சென்றுவிடுவார்கள். இவ்வளவு ஏன், நண்பன் போன்ற பாஸ் கிடைத்தால், அவர் கேபினுக்குள் செல்லும்போதுகூட இந்த ஹார்மோன் சுரக்கலாம்’’ என்று சிரித்த டாக்டர் கண்ணன், ``அந்த ஆராய்ச்சி சொல்வது உண்மைதான். உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்கிற அளவுக்கு ஒரு காதல் துணை அமைவது பெரிய கொடுப்பினை. கிடைத்தவர்கள் உயர் ரத்த அழுத்தம் இல்லாமல் வாழுங்கள்’’ என்று முடித்தார்.