Published:Updated:

கண்ணான கண்ணே...

கண்ணான கண்ணே...
பிரீமியம் ஸ்டோரி
News
கண்ணான கண்ணே...

அகிலாண்டபாரதி, பொது மற்றும் கண் மருத்துவர்ஹெல்த்

ண் மருத்துவமனைகளில் இந்தக் காட்சியைக் காணலாம்.  கண்ணைத் துண்டால் அழுத்தியபடி ஒரு வயதானவர் வருவார், ‘பத்து நாள் முன்னாடி கண்ணுல குச்சி குத்திடுச்சு’ என்றபடி. ‘என்ன ட்ரீட்மென்ட் எடுத்தீங்க?’ என்று கேட்டால், ‘கொஞ்சம் தாய்ப்பால் வாங்கி விட்டுப் பார்த்தேன், சரியாகலை; கடையில் ட்யூப் மருந்து வாங்கிப் போட்டேன்’ என்பார். பரிசோதித்துப் பார்த்தால், கருவிழி முழுவதும் புண்ணாகி,  குணப்படுத்த முடியாத நிலைக்குப் போயிருக்கும். கண் மருத்துவத்தின் முதல் எதிரி, இப்படித் தானாகச் செய்யப்படும் சுயவைத்தியங்கள்தாம். இதற்கு ஒரு படி மேலே போய், மாதம் ஒரு முறை முகாம் நடத்தி, பச்சிலை மருந்தைக்  கண்ணுக்குள் ஊற்றும் பேர்வழிகளும் இருக்கிறார்கள்... கண்புரையைத் தடுப்பதற்காகவாம்.  

கண்ணான கண்ணே...

விவசாயம், கால்நடை வளர்த்தல் போன்ற தொழில்களில் கண்ணில் காயம் ஏற்படுவதென்பது சாதாரணமாக நடக்கக்கூடியது. கம்புகள், குச்சிகள், இலைகள், செடிகள் மூலம் கண்ணின் கருவிழியில் காயம்பட்டால் பூஞ்சைக்காளான் கிருமித்தொற்று (Fungal Infection) ஏற்படும். தூய்மையான நீரில் கண்களைக் கழுவிவிட்டு மருத்துவரிடம் காட்டினால், அவர் காயத்தின் தன்மையைப் பொறுத்து மருந்துகளைப் பரிந்துரைப்பார். அவற்றை முறையான கால அளவுகளில் குறிப்பிட்ட காலம்வரை  பயன்படுத்தவேண்டியிருக்கும். கருவிழிக் காயங்களை தினமும் பரிசோதிக்க அறிவுறுத்தப்பட்டால், தினமும் மருத்துவரிடம் செல்ல வேண்டும்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
கண்ணான கண்ணே...வெள்ளைவிழியில் காயம்பட்டால், பெரும்பாலான நேரங்களில் தானாகவே சரியாகிவிடும். அந்தச் சூழலில், சுய மருத்துவம் பார்ப்பது கேடு விளைவிக்கும். தாய்ப்பால் பல நேரங்களில் சர்வரோக நிவாரணிதான். அதில் பல சத்துகள் உள்ளதையும் மறுக்க முடியாது. ஆனால் காயம்பட்ட, பூஞ்சைத்தொற்று ஏற்பட்ட காயத்தை அது எப்படிச் சரிசெய்யும்? தாய்ப்பால் மற்றும் மருந்துகளை வைத்திருக்கும் பாத்திரங்களும், கண்ணில் அவற்றைப் போடப் பயன்படுத்தப்படும் கருவிகளும் நோய்த்தொற்று ஏற்படுவதற்கு முக்கியக் காரணங்கள்.

அடுத்த பொதுவான பிரச்னை,  ‘மெட்ராஸ் ஐ.’ அந்தக் காலத்தில் சென்னை துறைமுகத்தில் வந்து இறங்கிய கப்பல்களில் பயணம் செய்த அயல்நாட்டவர்களிடமிருந்து சென்னை மக்களுக்கு வந்ததாம். அதன் பின்னர் அனைத்து ஊர்களுக்கும் பரவிவிட்டாலும், ‘மெட்ராஸ் ஐ’ என்ற பெயரே நிலைத்துவிட்டது. இது, ‘அடினோ வைரஸ்’ என்ற வைரஸ் கிருமியால் ஏற்படுவது. சளி, காய்ச்சல், தொண்டைவலி போன்ற தொந்தரவுகளையும் இது சேர்த்து உருவாக்கும். மூன்று முதல் ஏழு நாள்களுக்குள் தானாகவே சரியாகிவிடும்.  வெள்ளைவிழி (Conjunctiva) பாதிப்புதான் முதன்மையானது. எனினும், வீரியமிக்க கிருமியாக இருந்தால், கருவிழியிலும் தொற்று ஏற்படும். கருவிழி பாதித்தால், பார்வைக் குறைபாடு, வெயிலில் கண் கூசுதல், நீர்வடிதல் போன்ற தொந்தரவுகள் இருக்கும்.

கண்வலி வந்த ஒருவர் துண்டு, கைக்குட்டை, தலையணை, போர்வை போன்றவற்றைத் தனியாக வைத்துக்கொள்ள வேண்டும். கண்ணில் கையைவைத்துக்கொண்டே இருந்தால், மற்றவர்களுக்கு அதன் மூலம் கிருமித்தொற்று பரவும். கண்வலி உள்ளவர்களைப் பார்த்தாலே, நமக்கும் கண்வலி வரும் என்பது தவறான நம்பிக்கை. தொடுகையின் மூலமாகவும், இருமும்போதோ, தும்மும்போதோ காற்றின் மூலமாகவும் அது பரவலாம். கண்வலிக்கு மருந்துக் கடையில் மருந்து வாங்கிப் போடும் பழக்கம் சிலருக்கு இருக்கிறது. பல கடைகளில் ஸ்டீராய்டு கலந்த கண் மருந்துகளையே விற்கிறார்கள். அலர்ஜி போன்ற பிரச்னைகளைத் தீர்க்கும் ஸ்டீராய்டு, கிருமித்தொற்று இருக்கும் வேளையில் கண்ணுக்கு எமனாக மாறிவிடும். நோய் எதிர்ப்பு சக்தியைக் குறைத்துவிடும். நோய்க்கிருமி பெருக்கமும் நோயின் தாக்கமும் அதிகரிக்கும். ஸ்டீராய்டு போடுவதால் கிருமி வீரியமிக்கதாகிவிடும்.  

கண்ணான கண்ணே...

வாகனங்கள் பெருகிவிட்ட இன்றைய காலகட்டத்தில் கண்ணில் தூசு விழுவது சகஜம். இரும்பு, வெல்டிங் வேலைகளின்போதும், மரம் அறுப்பது, கல் உடைப்பது போன்ற பணிகளின்போதும் கண்களில் தூசு விழும். பாதுகாப்புக் கண்ணாடி அணிந்தால், தூசு படுவதைத் தவிர்க்கலாம். தூசு விழுந்தவுடன் கண்ணைக் கசக்கினால், அது கண்ணின் ஒரு பகுதியில் ஒட்டிக்கொள்ளும். கண்ணைக் கசக்காமல் தொடர்ச்சியாக இமைத்துக்கொண்டிருந்தாலே தூசு, கண்ணீருடன் வெளியேறிவிடும். தூசை எடுக்காவிட்டால், எத்தனை நாளானாலும் உறுத்தல் போகாது. கண்களில் ஒவ்வொரு மில்லிமீட்டர் பரப்பளவிலும் லட்சக்கணக்கான நரம்புகள் இருக்கின்றன. ஒரு மைக்ரோமீட்டர் அளவுக்குத் தூசு விழுந்தால்கூட கடப்பாரை விழுந்ததுபோல் உறுத்தல் இருக்கும். உறுத்தல் இல்லையென்றால், அப்படியே விட்டு விடுவோமல்லவா... அதற்காகவே இயற்கை அளித்த உணர்ச்சி இது.

பிறந்தவுடனேயே குழந்தைகளுக்குக் கண்ணில் சில சமயம் பீளை சேரும். லேசான கிருமித்தொற்றினாலோ அல்லது பேறுகாலத்தின்போது தாய், குழந்தை மேலுள்ள திரவங்கள் சேர்வதாலோ இது ஏற்படலாம். சுத்தமான நீரால் கண்ணைக் கழுவி, மிதமான ஆன்டிபயாடிக் மருந்துகளைப் போடுவார்கள். அதிலேயே சரியாகிவிடும்.

சில குழந்தைகளுக்கு இரண்டு வயதுவரை  கண்களில் நீர் வடிதல் பிரச்னை இருக்கும். இது கண்களிலுள்ள நீர்ப்பை (Nasolacrimal Sac) அடைத்துக்கொள்வதால் ஏற்படலாம். ஒவ்வொரு முறை தாய்ப்பால் கொடுக்கும்போதும் குழந்தையின் கண்கள் மூக்கின் அருகில் சந்திக்கும் இடத்தில் லேசாக மசாஜ் செய்ய, அம்மாவிடம் அறிவுறுத்துவோம். தொடர்ந்து மசாஜ் செய்தால், கண்களில் நீர் வடிதல் சரியாகிவிடும்.

உடலின் எல்லா உறுப்புகளிலுமே நல்ல கிருமிகள் உள்ளன. இவைதான் நோய்க்கிருமிகள் நம் உடலைத் தாக்காமல் தடுக்கும் முதல் அரண்கள். தேவையற்ற நேரங்களில் ஆன்டிபயாடிக் மருந்துகள் போடுவதால், கண்களிலுள்ள நல்ல கிருமிகள் அழிந்துவிடும். ‘ஆபரேஷன் பண்ணின கண்ணு’ என்று கூறிக்கொண்டே ஆயுசுக்கும் சொட்டு மருந்து ஊற்றிய வண்ணம் சிலர் இருப்பார்கள். அறுவை சிகிச்சை முடிந்தவுடன்,  45 முதல் 60 நாள்கள்வரை மட்டுமே சொட்டு மருந்து போடும்படி மருத்துவர் கூறியிருப்பார். அதிகப் பாதுகாப்பு உணர்வுடன் அந்த மருந்தையே தொடர்ந்து வாங்கிப் போட்டுக்கொண்டிருப்பார்கள் சிலர். இந்த மருந்திலும் ஸ்டீராய்டு கலந்துதிருக்கிறது. ஆறு மாதங்களுக்குத் தொடர்ச்சியாக ஸ்டீராய்டு போட்டால், கண் நரம்பு பாதிக்கப்பட்டு பார்வை பறி போக வாய்ப்பிருக்கிறது.

கண்ணான கண்ணே...

உளவியல் உண்மைகள்!

ருவா் உங்களிடம் நிஜமாகப் பழகுகிறாரா என்பதைப் புரிந்துகொள்ள, அவா் உங்களுடன் இருக்கும்போது, அவா்கள் சிரிப்பதைப் பாருங்கள். கண்களின் கீழ் சுருக்கமில்லாமல், முகத் தசைகள் அசையாமல் சிரித்தால், அது போலி சிரிப்பு.