Published:Updated:

மூளை முடக்குவாதத்தை முயற்சியால் வென்ற - ஸ்ரீராம் ஸ்ரீனிவாஸ்!

மூளை முடக்குவாதத்தை முயற்சியால் வென்ற - ஸ்ரீராம் ஸ்ரீனிவாஸ்!
பிரீமியம் ஸ்டோரி
News
மூளை முடக்குவாதத்தை முயற்சியால் வென்ற - ஸ்ரீராம் ஸ்ரீனிவாஸ்!

தன்னம்பிக்கை

`வாழ்க்கை எவ்வளவு சிரமமாகத் தெரிந்தாலும், அதில் ஏதோவொரு விஷயம் செய்ய முடிந்ததாக இருக்கும். அது என்னவென்று கண்டறிந்து, செயலாற்றத் தொடங்கினால் போதும். வாழ்க்கையில் ஜெயித்துவிடலாம்’ - இவை ஸ்டீபன் ஹாக்கிங் சொன்ன அனுபவ வார்த்தைகள். அந்த வார்த்தைகளில் தனக்கான வெளிச்சத்தைக் கண்டடைந்திருக்கிறார் ஸ்ரீராம் ஸ்ரீனிவாஸ். `மூளை முடக்குவாதம்’ எனப்படும் `செரிப்ரல் பால்சி’யால் (Cerebral Palsy) பாதிக்கப்பட்ட ஸ்ரீராம், 2016-ம் ஆண்டு தேசிய அளவிலான நீச்சல் போட்டியில் கலந்துகொண்டு, மாற்றுத்திறனாளிகளுக்கான பிரிவில் இரண்டு தங்கப் பதக்கங்களை வென்றிருக்கிறார். சீராக நடக்கவே சிரமப்படும் ஸ்ரீராம், ஆழ்கடலில் ஐந்து கிலோமீட்டர் நீந்தி, கின்னஸ் சாதனையும் படைத்திருக்கிறார்.  

மூளை முடக்குவாதத்தை முயற்சியால் வென்ற - ஸ்ரீராம் ஸ்ரீனிவாஸ்!

மூளையிலுள்ள நரம்புகள் சரியாகச் செயலாற்றாமல் இருப்பதுதான்  மூளை முடக்குவாதம். நம் ஒவ்வோர் அசைவுக்கும், மூளையிலிருந்து அதற்கான சமிக்ஞை செல்ல வேண்டும். சமிக்ஞை சரியாகச் செல்லாவிட்டால், தசைகள் குழப்பமடையும். அதனால் உடல் அசைவு ஒவ்வொன்றிலும் பாதிப்பு ஏற்படத் தொடங்கும். மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களால் எதையும் முழுமையாக நினைவில் வைத்துக்கொள்ள முடியாது. வயதானாலும் மழலை மாறாத குழந்தைகளாகவே இருப்பார்கள். அந்த வகையில் ஸ்ரீராம்  இன்றும் குழந்தையாகவே இருக்கிறார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
மூளை முடக்குவாதத்தை முயற்சியால் வென்ற - ஸ்ரீராம் ஸ்ரீனிவாஸ்!குழந்தையால், தான் நிகழ்த்தும் சாதனையின் வீரியத்தை எப்படி உணர முடியாதோ, அப்படித்தான் ஸ்ரீராமாலும் உணர முடியாது. ஸ்ரீராமின் தாய் வனிதாதான் தன் மகனின் நீச்சல்திறனை முதன்முதலில் கண்டறிந்து, வாழ்க்கையில் எதிர்நீச்சல் போடவைத்தவர். சென்னை, வடபழனியில் ஸ்ரீராம் பெயரில் பயிற்சி மையம் ஒன்றை நடத்திவருகிறார்கள் அவரின் குடும்பத்தினர். இந்தப் பயிற்சி மையத்தில் பயிலும் பத்து பேரும் மாற்றுத்திறனாளிகள்.

நாம் உள்ளே சென்றதும், ஸ்ரீராம் உட்பட அங்கிருந்த ஒவ்வொருவரும் தங்களுக்கான மொழியில் நம்மை வரவேற்றார்கள். ஸ்ரீராமின் அம்மா வனிதா நெகிழ்ச்சியாகப் பேசுகிறார்.

“எனக்கு ரெண்டு பிள்ளைங்க. பெரியவன் பாலாஜி, சின்னவன் ஸ்ரீராம். இன்னைக்கு சாதனையாளர் ஸ்ரீராமை உங்களுக்கெல்லாம் தெரியும். ஆனா, அவனோட குழந்தைப் பருவம் ரொம்பக் கஷ்டமான காலகட்டம். அந்த மாதிரி ஒரு நிலைமை இந்த உலகத்துல பிறக்குற எந்த உயிருக்கும் வரக் கூடாது. இந்தச் சமூகம், எல்லா குழந்தைகளையும் ஒரே மாதிரியான சூழல்ல, ஒரே மாதிரியா வளர்க்கவே நினைக்குது. ஆனா, இயற்கை எல்லாரையும் ஒரே மாதிரி படைக்கிறதில்லை.

நானும் இந்தச் சமூகத்துல ஒருத்திங்கறதாலயோ என்னவோ, சின்ன வயசுல என் மகனை ரொம்ப நோகடிச்சிருக்கேன். `செரிப்ரல் பால்சி’ பத்தி எனக்கு எதுவும் தெரியாது. ஆனா, அவனை எப்படியாவது குணமாக்கி, ஸ்கூலுக்கு அனுப்பி, படிக்கவெச்சு, பெரிய உத்தியோகத்துல உக்காரவெச்சுடணும்னு நினைச்சேன். பாவம், அவனுக்கு ஒண்ணு, ரெண்டு, மூணுங்குற எழுத்துகள்கூட மனசுல நிக்காது. சித்தா, ஆயுர்வேதம் தொடங்கி எண்ணெய் மசாஜ், மண் குளியல்வரை என்னென்னவோ ட்ரீட்மென்ட் கொடுத்துப் பார்த்துட்டோம். உச்சகட்டமா, `அதிகாலையில கடற்கரை மணல்ல பள்ளம் தோண்டி நிக்கவெச்சா கால் சரியாகிடும்’னு ஒருத்தர் சொன்னதைக் கேட்டு அதையும் செஞ்சோம்.  என் புள்ளையோட காலை மண்ணுல புதைச்சு நிக்கவெச்ச அன்னிக்கு அவன்பட்டபாட்டைப் பார்த்ததும், ‘இனிமே இவனை நாம கஷ்டப்படுத்தக் கூடாது’னு முடிவெடுத்தேன். ‘இனிமே என்ன ஆனாலும் அறிவியல்பூர்வமா தெரியாத ஒரு விஷயத்தை புள்ளைக்குக் கொடுத்து சிரமப்படுத்தக் கூடாது’ங்கிற முடிவுக்கு வந்தேன். 

மூளை முடக்குவாதத்தை முயற்சியால் வென்ற - ஸ்ரீராம் ஸ்ரீனிவாஸ்!

ஸ்ரீராம் பொறந்த அஞ்சாவது மாசமே, அவன் ஒரு சிறப்புக் குழந்தைனு மருத்துவர்கள் மூலமா எனக்கு தெரியவந்துச்சு. ஆனா, அதுக்குப் பின்னாடி இருக்குற உண்மையை நம்ப எனக்கு எட்டு வருஷமாச்சு. எட்டு வருஷத்துக்கு பிறகு அது தெரியவந்தபோது, அவனோட வலியும் அழுகையும் எனக்கு நிறைய குற்ற உணர்ச்சியைத் தந்துச்சு. அதுக்குப் பிறகு அவனையும் அவனோட உணர்ச்சிகளையும் கொஞ்சம் கொஞ்சமாகப் புரிஞ்சுக்க ஆரம்பிச்சேன்.

ரெண்டு பக்கக் கால் தசைகளும் திடீர்னு இறுக்கமடைஞ்சு, வலியால துடிக்க ஆரம்பிச்சுடுவான் ஸ்ரீராம். அதனால, முதல்ல அவனோட கால்களுக்குத் தீர்வுதேட ஆரம்பிச்சேன். அப்போதான், நீச்சலடிச்சா அவனோட கால் தசைகள் இறுகாம இருக்கும்னு எனக்குத் தெரிய வந்தது. தினமும் நீச்சல்பயிற்சிக்கு அவனைக் கூட்டிட்டுப் போனேன். நடத்தைப் பிரச்னைகளா தெரிஞ்ச எல்லாம், அவனைப் புரிஞ்சுக்க ஆரம்பிச்சதும் அவனோட எண்ணங்களோட பிரதிபலிப்பா தெரிய ஆரம்பிச்சுது. ‘நமக்கெல்லாம் பேசத் தெரியுது, பேசிடறோம். அவனுக்கு அது தெரியலை, அதனால அப்படி பிஹேவ் பண்றான்’னு புரிஞ்சுக்கிட்டேன். இன்னைக்குவரைக்கும், அவனோட சந்தோஷம்தான் என்னோட, எங்க குடும்பத்தோட சந்தோஷம்.

சின்னதா ஒரு நீச்சல் போட்டி நடத்துனாங்க. அதுல எதார்த்தமா இவன் பேரைக் கொடுத்தோம். அவனுக்கு பார்ட்டிசிபேஷன் சர்டிஃபிகேட்தான் கெடைச்சுது. ஆனா, அதுக்கே ரொம்ப குஷியாகிட்டான். `சர்டிஃபிகேட்டுக்குப் பின்னாடி இருக்குற கைதட்டல்கள்தான், அவனுக்கு சந்தோஷத்தை கொடுக்குது’னு எனக்குப் புரிஞ்சுது. `இந்த ‘கைத்தட்டல்களை’ அதிகப்படுத்துறதுதான், என் வேலை’னு புரிஞ்சுக்கிட்டேன். ஒவ்வொரு போட்டியிலயும் அவனைச் சேர வைக்கிறேன். அவன் வாழ்க்கை பூரா நீந்தணும்ங்கிறது, அவன் உடல் அவனுக்கு விட்ட விதி. எங்களால முடிஞ்சதெல்லாம், ‘விதி’யேனு செய்யாம, சந்தோஷமாச் செய்ய வைக்குறதுதான்” என்கிறார் வனிதா  அழுத்தமான குரலில்.  ஸ்ரீராமின் பெரியம்மாதான், முதன்முதலில் அவரை சிறப்புக் குழந்தைகளுக்கான பள்ளியில் சேர்த்துவிட்டவர். அதுதான் அவரின் பெற்றோரின் மனமாற்றத்துக்கான முதல் விதை. ஸ்ரீராம் உடலின் மேற்பகுதி, கீழ்ப்பகுதியைவிட சற்றே அதிக எடைகொண்டது என்பதால், தினமும் ஏதாவது ஓர் உடற்பயிற்சியை அவர் செய்தே ஆக வேண்டும் என்கிற கட்டாயம். அப்படிச் செய்தால்தான், தசைப்பிடிப்பைத் தவிர்க்க முடியும். முறையாக உடற்பயிற்சி செய்வதால், இப்போது, சில அடிகள்வரை ஸ்ரீராமால் கால்களை சற்றுக் குறுகலாக வைத்துக்கொண்டு நடக்கவும், சில நிமிடங்கள்வரை கால்களை ஊன்றி நிற்கவும் முடிகிறது. ஏதாவது தேவைப்பட்டால் தனக்கே உரிய பாணியில் சத்தம் எழுப்பி, அருகே இருப்பவரிடம் அதைக் கேட்க முடிகிறது.

நேர்காணலை முடித்துவிட்டுக் கிளம்பும்போது, ஸ்ரீராமிடம் ஒரு புகைப்படம் கேட்டோம். தன் பாணியில்,  சின்னச் சத்தம் எழுப்பி, பெருவிரலை உயர்த்தி ‘என்னால் முடியும்’ என்பதுபோல சைகை காண்பித்தார். அன்பும் அரவணைப்பும் அவரைச் சுற்றி இருந்துகொண்டே இருந்தால், அவரால் நிச்சயம் எதையும் சாதிக்க முடியும்!

ஜெ.நிவேதா - படங்கள்: ப.சரவணகுமார்

மூளை முடக்குவாதத்தை முயற்சியால் வென்ற - ஸ்ரீராம் ஸ்ரீனிவாஸ்!

உளவியல் உண்மைகள்!

நீ
ங்கள் பேசுவதைப் பிறா் கூா்ந்து கவனிக்க வேண்டுமானால் அவா்களின் உடல்மொழியை அப்படியே பிரதிபலியுங்கள். (எதிரிலிருப்பவா் வேகமாகப் பேசினாலோ, கைகளை ஒரு குறிப்பிட்டவிதமாக வைத்திருந்தாலோ அல்லது சிரித்தாலோ அதை அப்படியே செய்வது. ஆனால், எதிர்மறையான உடல்மொழியை (இரு கைகளைக் கட்டியிருப்பது, திரும்பிக்கொள்வது) பிரதிபலிப்பதை தவிர்த்துவிடவும். இந்த உத்தி, உறவு முறை திடப்படவும், பிறரைப் புரிந்துகொள்ளவும் உதவும்.