Published:Updated:

நோய்நாடி நோய்முதல் நாடி

நோய்நாடி நோய்முதல் நாடி
பிரீமியம் ஸ்டோரி
News
நோய்நாடி நோய்முதல் நாடி

வாழ்வியல் - 4வேலாயுதம் சித்த மருத்துவர்

நோயின்றி வாழ, சித்தர்கள் வகுத்த ஒழுக்கநெறிகளில் காலை எழுந்ததும் செய்யவேண்டிய  முக்கியக் கடமையாக உடற்பயிற்சியை வகுத்துவைத்திருக்கிறார்கள். பழங்காலத்தில் கடின உழைப்பு அவசியமாக இருந்தது. நம் முன்னோர் காடுகளைத் திருத்தி, தங்களது கடும் உழைப்பால் விளைந்தவற்றை அறுவடைசெய்து இயற்கைச்சூழலில் ஆரோக்கியத்துடனும், திடகாத்திரமான உடல்வாகுடனும் திகழ்ந்தார்கள். அத்தகைய கடின உடல் உழைப்பு இருந்த காலத்திலும்கூட, உடற்பயிற்சி ஓர் அங்கமாக இருந்தது. ‘சூரிய வணக்கம்’, ‘அசைவுப் பயிற்சி’, ‘தேகப் பயிற்சி’ எனப் பல்வேறு உடற்பயிற்சிகள் அக்காலத்தில் நடைமுறையில் இருந்தன. உடற்பயிற்சியின் வடிவம் வேறாக இருந்ததே தவிர, உடற்பயிற்சி இல்லாமல் இல்லை. ஆனால், எந்திரமயமாகிவிட்ட இன்றையச் சூழல் உடல் உழைப்பை வெகுவாகக் குறைத்துவிட்டது. உடலைவிட மூளைக்கு அதிக வேலை கொடுக்கவேண்டிய நிலை வந்துவிட்டது. நம் வாழ்க்கைமுறையில் உடற்பயிற்சி என்ற ஒன்றே இல்லாமல் போனதால், இளம் வயதிலேயே உடல் பருமன், சர்க்கரைநோய், இதயநோய் என வாழ்வியல் தொடர்பான பல்வேறு நோய்கள் நம்மை வதைக்கின்றன. 

நோய்நாடி நோய்முதல் நாடி

‘நாம் கண்விழிப்பதுபோல, உடலுக்கு விழிப்புநிலையை அடையச் செய்யும் முறையே உடற்பயிற்சி’ என்கிறது சித்த மருத்துவம். எலும்புகள், மூட்டுகள், அவற்றை இணைக்கும் ஜவ்வுகள், திசுக்களால் ஆன கட்டுமானம்தான் உடல். இரவில் படுத்து உறங்குவதை ‘கிடத்தல்’ என்கிறது சித்த மருத்துவம். அப்போது ஒவ்வோர் உடல் உறுப்பிலும், தசையிலும் மூட்டிலும் இறுக்கம் ஏற்பட்டிருக்கும். எனவே, அவற்றை இயக்கத்துக்குக் கொண்டு வரவேண்டியது அவசியம். முதல் நாள் உறக்கத்தில் நீண்ட நேரம் அசைவற்றுக் கிடந்த உடலை மறுநாள் இயக்கத்துக்குத் தயார்ப்படுத்த சிறு சிறு அசைவுகளைச் செய்ய வேண்டும்.

உதாரணமாக உடலிலுள்ள கழிவுகளை வெளியேற்றிய பிறகே கைகளை உயர்த்துதல், கால்களை அசைத்தல், உட்கார்ந்து எழுந்திருத்தல், திரும்புதல், கழுத்தை அசைத்தல் போன்ற செயல்களைச் செய்வதுடன், எங்கெல்லாம் மூட்டுகள், இணைப்புகள் இருக்கின்றனவோ அவற்றை மெதுவாகவும் முறையாகவும் அசைக்க வேண்டும். சித்த மருத்துவம் இத்தகைய உடற்பயிற்சியை முக்கியமான ‘அசைவுப் பயிற்சி’ என்கிறது. இதுவே அன்றைய நாள் முழுவதும் உடல் இயங்கவும் செயல்படுவதற்குமான அடித்தளம்.

தேகப்பயிற்சி

`சிலம்பமுதன் மல்யுத்தத் தேசிநடை கொள்ளிற்
பலரவு மெய்யிறுகும் பன்னத் துலங்குபசி
யுண்டாங் கபவாத மோடுவலி சூளையும்போம்
பண்டா மலமிறங்கும் பார்’


என்கிறது தேரையர் சித்தரால் இயற்றப்பட்ட மருத்துவ நூலான பதார்த்த குண சிந்தாமணி. அதாவது, ‘சிலம்பம் பழகுதல், மல்யுத்தம் செய்தல், நடத்தல், குதிரையேறிச் செல்லுதல் ஆகிய பயிற்சிகளால் தளர்ந்த உடல் இறுகுவதுடன் வன்மையும் பெறும்’ என்கிறது. அத்துடன் கபம், வாதக்கோளாறுகள், மலக்கட்டு போன்றவை நீங்கும் என்று உணர்த்துகிறது.   

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
நோய்நாடி நோய்முதல் நாடி

`எந்த உறுப்பை அதிகம் பயன்படுத்துகிறோமோ, அந்த உறுப்பு அதிகம் வலுவடையும்’ என்கிறது சித்த மருத்துவம். அதே நேரம், தண்டால் பயிற்சி, சிலம்பம், மல்யுத்தம் போன்ற தேகப்பயிற்சிகளால் எல்லா உறுப்புகளும் வலுவடையும். இந்தப் பயிற்சிகளை வாதம், பித்தம் மற்றும் அஜீரணக்கோளாறு உள்ளவர்களும், 12 வயதுக்குட்பட்டவர்களும், முதியோரும் செய்யக் கூடாது. அவர்களுக்கு யோகா, நடைப்பயிற்சி போன்றவை ஏற்றவை.    

நோய்நாடி நோய்முதல் நாடி

உடலில் உப்புகள் தேங்கினால் நோய்கள் உண்டாகும். குறிப்பாக, சோடியம் அதிகரித்தால், ரத்த அழுத்தம் ஏற்படும். உடற்பயிற்சியின்போது உடலில் தேங்கியிருக்கும் கழிவுகளும் கசடுகளும் வியர்வையுடன் சேர்ந்து சருமத்தின் நுண் துளைகள் வழியாக வெளியேறும். உடற்பயிற்சியால் உப்பு மூலம் உண்டாகும் நோய்கள் குறையும். உடலில் தலை முதல் பாதம்வரை ரத்த ஓட்டம் நடைபெறும். முக்கியமாக, உடற்பயிற்சிதான் வயிறு, கல்லீரல், மண்ணீரல் போன்ற உள்ளுறுப்புகளுக்கு ரத்தத்தை உந்திச் செல்ல உதவும். உறுப்பின் நுனிப்பகுதிவரை ரத்தமும் பிராணவாயுவும் செல்வதால் உறுப்புகள் பலப்படும்.

உடற்பயிற்சி செய்ய ஏற்ற நேரம்

`அதிகாலை விழிக்கும்போதுதான் மனம் இலகுவாக இருக்கும். உடலில் உற்சாகமும் வீரியமும் மிகுந்திருக்கும். அதுவே உடற்பயிற்சி செய்ய ஏற்ற நேரம்’ என்கிறது சித்த மருத்துவம். ஆனால், இந்தப் பயிற்சிகளையும் படிப்படியாகவே செய்ய வேண்டும். அதாவது, வாகனத்தை இயக்கும்போது எப்படி முதல் கியர், இரண்டாவது கியர் என்று படிப்படியாக வேகத்தை அதிகரிக்கிறோமோ அதேபோல உடற்பயிற்சியையும் சீராக அதிகரிக்க வேண்டும். இதைத்தான் ஆங்கிலத்தில் ‘வார்ம் அப்’ என்பார்கள். அதன் பிறகு உடலை வலுவாக்கும் தேகப்பயிற்சிகளைச் செய்யலாம். 

நோய்நாடி நோய்முதல் நாடி

உணவு உண்டவுடன் உடற்பயிற்சி மேற்கொள்ளக் கூடாது. அப்போது உடல் செரிமானத்துக்கு தயாராவதால், ரத்த ஓட்டம் முழுவதும் வயிற்றை நோக்கி அதிகமாக இருக்கும். அத்துடன் உணவு உண்டதும், உடல் களைப்புறும். அதனால் சாப்பிட்டவுடன் உடற்பயிற்சி செய்யக் கூடாது. கடும்பசியினால் உடல் சோர்வுற்றிருக்கும்போதும் உடற்பயிற்சி செய்வதைத் தவிர்க்க வேண்டும். பகலில் வேலை செய்து, களைப்பும் மனச்சோர்வும் இருக்கும்போது உடற்பயிற்சி செய்யக் கூடாது. தனி அறைகளில் உடற்பயிற்சி செய்யக் கூடாது. காற்றோட்டமான அறைகள் அல்லது திறந்தவெளிகளில்தான் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.

சூரிய வணக்கம்

சூரிய வணக்கம் நம் முன்னோர் நமக்குக் கற்றுத்தந்த ஓர் அற்புதப் பயிற்சி. இயற்கையைவிட்டு விலகியிருக்கும் இன்றைய நவீன காலத்தில் நமது உடல், மனம் போன்றவற்றை நன்றாகச் செழுமைப்படுத்த சூரிய வணக்கம் உதவும். இது சுவாசம், உடல், மனம் மூன்றையும் ஒருங்கிணைத்துச் செய்யும் பயிற்சி முறை. சில காரணங்களால் உடற்பயிற்சி, யோகா செய்ய முடியாதவர்கள் சூரிய வணக்கம் செய்யலாம்.

சூரிய வணக்கம் செய்வது உடலிலுள்ள ஆறு சக்கரங்களையும் வலுப்படுத்தி, ஹார்மோன்களைச் சீராக்க உதவும். மேலும், சூரிய வணக்கத்திலுள்ள ஆசனங்கள் உடலிலுள்ள பெரும்பாலான உறுப்புகள் சீராகச் செயல்பட உதவும். நம் கைகளும் கால்களும் பெரும்பாலும் கீழ்நோக்கியே இருக்கும். எனவேதான் கைகளை மேலே தூக்கும் சூரிய வணக்கம் முக்கியமான பயிற்சி என்கிறது சித்த மருத்துவம். கைகள் மட்டுமல்லாமல் விலா எலும்புகளும் வலுப்பெறும். எனவே உடற்பயிற்சியுடன் சூரிய வணக்கம், யோகா போன்றவற்றையும் நம் வாழ்வின் ஓர் அங்கமாக ஆக்கிக்கொண்டால் வாழ்வியல் மாற்றங்களால் ஏற்படும் நோய்களைத் தடுக்கலாம்.

தெளிவோம்...

ஜி.லட்சுமணன்

நோய்நாடி நோய்முதல் நாடி
நோய்நாடி நோய்முதல் நாடி

உளவியல் உண்மைகள்!

ங்களைப் பற்றி பிறருக்கு நல்ல அபிப்ராயம் ஏற்படுத்த விரும்பினால் (வேலை இன்டா்வியூ, வேலையின் முதல் நாள், காதலன் காதலியைச் சந்திக்கும் முதல் நாள்...) எதிரில் இருப்பவரின் கண்களைப் பார்த்து, தீா்க்கமாக, நிதானமாகப் பேச வேண்டும். தன்னம்பிக்கையின்றி, பதற்றமாக இருக்கும் சூழலிலும், அதை மறைத்தபடி, தோள்களை உயா்த்தி நிமிர்ந்து நடப்பதைப் பழக்கப்படுத்திக்கொண்டு, அதைக் கடைப்பிடிக்கலாம்.