Published:Updated:

ஒரு ஹெச்.ஐ.வி நோயாளி எய்ட்ஸ் நிலையை அடைவது எப்போது?

ஒரு ஹெச்.ஐ.வி நோயாளி எய்ட்ஸ் நிலையை அடைவது எப்போது?

ஹெச்.ஐ.வி தடுப்பூசி கண்டுபிடிப்பதற்கான ஆய்வுகள் உலகெங்கும் தீவிரமாக நடந்துவருகின்றன. இது வர இன்னும் ஐந்து ஆண்டுகளோ, பத்து ஆண்டுகளோ ஆகலாம். இப்படியொரு தடுப்பூசி எப்போது வரும் என்று மருத்துவர்களே காத்திருக்கிறார்கள்.

ஒரு ஹெச்.ஐ.வி நோயாளி எய்ட்ஸ் நிலையை அடைவது எப்போது?

ஹெச்.ஐ.வி தடுப்பூசி கண்டுபிடிப்பதற்கான ஆய்வுகள் உலகெங்கும் தீவிரமாக நடந்துவருகின்றன. இது வர இன்னும் ஐந்து ஆண்டுகளோ, பத்து ஆண்டுகளோ ஆகலாம். இப்படியொரு தடுப்பூசி எப்போது வரும் என்று மருத்துவர்களே காத்திருக்கிறார்கள்.

Published:Updated:
ஒரு ஹெச்.ஐ.வி நோயாளி எய்ட்ஸ் நிலையை அடைவது எப்போது?

ஹெச்.ஐ.வி... இன்றுவரை மருத்துவ உலகத்துக்குச் சவாலாகத்தான் இருக்கிறது. முறையற்ற பாலியல் உறவு கொள்வோருக்கு மட்டுமே ஹெச்.ஐ.வி வரும் என்றிருந்த நம்பிக்கைகள் சமீப காலங்களில் தகர்ந்து வருகின்றன. ரத்தமேற்றுவதன் மூலம், சுத்திகரிக்கப்படாத, பிறர் பயன்படுத்திய ஊசியைப் பயன்படுத்துவதன் மூலம்கூட ஹெச்.ஐ.வி பரவலாம். பிரசவத்துக்காக அரசு மருத்துவமனைக்கு வந்த சாத்தூர் பெண்ணுக்கு ஏற்றப்பட்ட ரத்தத்தில் ஹெச்.ஐ.வி தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. 

ஹெச்.ஐ.வி என்றால் என்ன? அதை ஏன் குணப்படுத்த முடியவில்லை..? 

1982-ம் ஆண்டில் அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ, நியூயார்க் நகரங்களில் மக்கள் `நிமோசிஸ்டிஸ் நிமோனியா’ (Pneumocystis Pneumonia) என்னும் நிமோனியா தாக்குதலுக்கு உள்ளானார்கள். எந்தக் காரணமுமே இல்லாமல் 20 முதல் 35 வயதுக்குட்பட்ட ஏராளமானோருக்கு இந்த நிமோனியா வந்தது மருத்துவ உலகையே பரபரப்புக்குள்ளாக்கியது. இந்த நிமோனியாவோடு கூடவே, `கேபோசி’ஸ் சார்கோமோ’ (Kaposi’s Sarcoma) என்ற புற்றுநோயின் பாதிப்பும் அதிகமிருந்தது. ரத்தக்குழாயிலும் சருமத்திலும் ஏற்படக்கூடியது இந்தப் புற்றுநோய். ஆப்பிரிக்காவில் இந்தப் பாதிப்பு அதிகமுண்டு. ஆனால், அமெரிக்காவுக்குப் புதிது. நிமோனியாவும், இந்தப் புற்றுநோயும் அமெரிக்க மருத்துவத்துறையைப் பெரும் குழப்பத்துக்கு உள்ளாக்கியது.  

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பாதிக்கப்பட்டவர்களைச் சோதித்தபோது, நோய் எதிர்ப்பு சக்தி படிப்படியாகக் குறைவது கண்டறியப்பட்டது. இந்த நிலைக்கு `AIDS’ (Acquired Immuno Deficiency Syndrome) என்று பெயர் வைத்தார்கள். அதாவது, `அக்கொயர்டு இம்யூனோ டெஃபிசியன்சி வைரஸ்’. 

1983-ம் ஆண்டில்தான் இது `இன்ஃபெக்‌ஷன்’ மூலமாக வருகிறது என்று கண்டறிந்தார்கள். இதே மாதிரியான பிரச்னை, 1956-ம் ஆண்டில்  ஆப்பிரிக்காவில் உருவாகியிருக்கிறது. `குரங்கின் மூலம் மனிதர்களுக்கு ஒருவித வைரஸ் பரவி இதே மாதிரியான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன’ என்று தெரியவந்தது. அந்த வைரஸுக்குப் பெயர், எஸ்.ஐ.வி (SIV). அதாவது, `சிமியன் இம்யூனோ டெஃபிசியன்ஸி வைரஸ்’ (Simian Immuno Deficiency Virus). குரங்கின் மாமிசத்தைச் சாப்பிட்டதன் காரணமாக இந்த வைரஸ் மனிதர்களுக்குப் பரவியிருக்கிறது. 

ஆனால், குரங்குக்கும் அமெரிக்கர்களுக்கும் எந்தத் தொடர்புமில்லை. அதனால் இதற்கு, `ஹியூமன் இம்யூனோ டெஃபிசியன்ஸி வைரஸ்’ (Human Immuno Deficiency Virus) அதாவது, `ஹெச்.ஐ.வி’ என்று பெயர் வைத்தார்கள். தீவிர ஆராய்ச்சிக்குப் பிறகு, `ஒரே பாலினத்தவர்கள் உடலுறவு கொள்வதன் மூலமாக இது ஏற்படுகிறது’ என்ற முடிவுக்கு வந்தார்கள். 

ஹெச்.ஐ.வி ஒரு மனிதனுக்கு மூன்றுவிதங்களில் பரவலாம். உடலுறவு மூலமாகப் பரவலாம்; ரத்தம் மூலமாகப் பரவலாம்; குழந்தைக்குத் தாயின் மூலமாகவும் பரவலாம். தாய்ப்பால் மூலமாகப் பரவவும் வாய்ப்பிருக்கிறது. இவைதவிர, தொடுவதாலோ, இருமுவதாலோ, தும்முவதாலோ, முத்தமிடுவதாலோ, கட்டி அணைப்பதாலோ பரவ வாய்ப்பேயில்லை. ஈக்கள், கொசுக்கள் மூலமாகவும் பரவாது. 

நமது ரத்தத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை வழங்கும் வெள்ளை உயிரணுக்கள் இருக்கின்றன. `சிடி4’ (CD4) என்று மருத்துவ மொழியில் சொல்வார்கள். ஒருவரது உடலுக்குள் செல்லும் ஹெச்.ஐ.வி கிருமி, நேராக அந்த வெள்ளை உயிரணுவில் ஒட்டிக்கொள்ளும். மெள்ள மெள்ள அது அந்த உயிரணுவின் உள்ளே சென்று  படிப்படியாக நியூக்ளியஸுக்குப் போய், மரபணுவினுள்  கலந்துவிடும். குறிப்பிட்ட கால இடைவெளியில் மரபணுவுடன் ஒன்றிணைந்துவிடும். 

செல்களிலிருக்கும் நியூக்ளியஸ் மற்றும் மரபணு மூலமாகத்தான் நமது உடலுக்குத் தேவையான என்சைம்களும் சில புரதங்களும் உருவாகும். ஹெச்.ஐ.வி கிருமி, நமது மரபணுவின் உள்ளே கலந்துவிட்டால், என்சைம், புரதம் உற்பத்தியாவதுபோலவே, ஹெச்.ஐ.வி வைரஸ்களை உற்பத்திசெய்யத் தொடங்கிவிடும். அப்படி உருவாகிற ஒவ்வொரு வைரஸும் ஒவ்வொரு மரபணுவோடு ஐக்கியமாகத் தொடங்கிவிடும். 

நமது உடலின் இயற்கையான எதிர்ப்பு சக்தி, ஹெச்.ஐ.வி வைரஸ்களின் உற்பத்தியின் வேகத்துக்குச் சக்தி செயல்படாது. ஒரு ஹெச்.ஐ.வி வைரஸை அழிப்பதற்கு முன்னர், பத்து வைரஸ்கள் உற்பத்தியாகிவிடும். படிப்படியாக, மூளை மற்றும் நரம்பு செல்களை பாதித்து உடலின் எதிர்ப்பு சக்தி மண்டலத்தையே குலைத்துப்போடுவதால், உடலில் நிறைய நோய்கள் ஏற்படும். 

ரத்தத்திலுள்ள வெள்ளை உயிரணுக்களில் இருக்கும் லிம்போசைட்ஸ் அணுக்களில் இரண்டு வகைகள் உள்ளன. `சிடி4’, `சிடி8’ என்பார்கள். இந்த சிடி4தான் ஹெச்.ஐ.வி வைரஸின் இலக்கு. ஆரோக்கியமான மனிதர்களுக்கு 800 முதல் 1,500 வரை இந்த சிடி4 அணுக்களின் எண்ணிக்கை இருக்கும். இந்த எண்ணிக்கை 500-ஆகக் குறையும்வரை உடலில் பெரியளவில் பாதிப்புகள் ஏற்படாது. ஹெச்.ஐ.வி கிருமி பாதிக்கப்பட்டவருக்கு சிடி4 எண்ணிக்கை 500-க்கு வர ஐந்து முதல் ஆறு வருடங்கள்வரை ஆகலாம். அதுவரை பாதிக்கப்பட்டவர், ஆரோக்கியமாகத்தான் இருப்பார். 500-க்கும் கீழே குறையும்போது பேதி, வாயில் புண், அக்கி போன்ற சிறு சிறு பாதிப்புகள் ஏற்படும்.  

இந்த சிடி4-ன் எண்ணிக்கை 200-க்கும் கீழே போகும்போதுதான் தீவிரமான பேதி, எடை குறைதல், கடுமையான காய்ச்சல், பிற தொற்றுநோய்கள் ஏற்படத் தொடங்கும். சிடி-4 எண்ணிக்கை 100-க்கும் குறைவாகும்போது நிலைமை கவலைக்கிடமாகிவிடும். 

நேரடியாக, ஹெச்.ஐ.வி கிருமியால் யாரும் உயிரிழப்பதில்லை. அந்தக் கிருமி உடலின் எதிர்ப்பு சக்தியைக் குறிவைத்துக் குறைக்கிறது. நோய்கள் உடம்பில் ஏறுகின்றன. பாதிப்பு தீவிரமாகி உயிரிழப்பு நேர்கிறது. தீவிரமான காய்ச்சல் இருந்தால், மருத்துவர்கள் காய்ச்சலுக்குத்தான் சிகிச்சையளிப்பார்கள். பேதியானால் அதற்கான வைத்தியம்தான் செய்யப்படும். ஹெச்.ஐ.வி பாதித்தவருக்கு ஏற்படும் எல்லா நோய்களும் பாதிக்காதவர்களுக்கும் ஏற்படலாம். பாதிப்புகளை மட்டும்வைத்து ஹெச்.ஐ.வி பாதிப்பு இருக்கக்கூடும் என்று சொல்ல முடியாது. இதுதான் மருத்துவத்தில் இருக்கிற பெரிய சிக்கல்.

எய்ட்ஸ் என்பது, ஹெச்.ஐ.வி வைரஸ் பாதிப்பில் ஓர் உச்சநிலை. எய்ட்ஸ் இருக்கும் எல்லோருக்கும் ஹெச்.ஐ.வி இருக்கும்; ஹெச்.ஐ.வி இருக்கும் எல்லோருக்கும் எய்ட்ஸ் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. கண்களை பாதிக்கக்கூடிய `டாக்ஸோப்ளாஸ்மோசிஸ்’ தொற்று (Toxoplasmosis) சாதாரண மனிதருக்கு வந்தால், ஐந்தாறு நாள்கள் காய்ச்சல் இருக்கும். நெறி கட்டிக்கொள்ளும். மூட்டுவலி இருக்கும். அதோடு தானாகவே சரியாகிவிடும். மருத்துவமே தேவையில்லை. இதே பாதிப்பு ஹெச்.ஐ.வி பாதித்தவருக்கு வந்தால், நோய் எதிர்ப்பு சக்தி இல்லாததால் மூளையில் கட்டி வந்துவிடும். இதை ‘செரிப்ரல் டாக்ஸோப்ளாஸ்மோசிஸ்’ (Cerebral Toxoplasmosis) என்போம்.  

இதேபோல, கண்களைத் தாக்கும் சி.எம்.வி - `சைட்டோமெகலாவைரஸ்’ (CMV - Cytomegalovirus). இதை நம் நோய் எதிர்ப்பு சக்தியே அழித்துவிடும். இந்த வைரஸ், ஹெச்.ஐ.வி நோயாளியைத் தாக்கினால் சி.எம்.வி ரெட்டினைட்டிஸ் (CMV Retinitis) என்ற பாதிப்பை உருவாக்கும். இந்த பாதிப்புகளை எட்டியவர்கள், எய்ட்ஸ் கட்டத்தை எட்டிவிடுவார்கள். 

ஹெச்.ஐ.வி பாதித்தவருக்கு உணவுக்குழாயில் பூஞ்சைத்தொற்று ஏற்படுவது, பெண்ணுக்குக் கர்ப்பப்பைவாய் புற்றுநோய் ஏற்படுவது, `ஹெர்பிஸ்’ என்ற பால்வினை நோய் வந்து ஒரு மாதத்துக்கு மேல் நீடிப்பது இவையெல்லாம் எய்ட்ஸ் நிலை. `டிமென்ஷியா’ என்ற ஞாபகமறதிநோயால் ஹெச்.ஐ.வி தாக்குதலுக்குள்ளானவர் பாதிக்கப்பட்டால் அவர் எய்ட்ஸ் கட்டத்தை அடைந்துவிட்டார். இப்படி 15 விதமான பாதிப்புகளை வகைப்படுத்தி வைத்திருக்கிறார்கள். 

எய்ட்ஸ் நிலையை எட்டிவிட்ட ஒருவர் சிகிச்சை எடுத்துக்கொள்ளாவிட்டால், அதிகபட்சம் இரண்டு ஆண்டுகளில் நிலை மோசமாகிவிடும். ஹெச்.ஐ.வி-யை உறுதி செய்ய நிறைய சோதனைகள் உண்டு. குறிப்பாக ஆன்டிபாடி டெஸ்ட். 20 ஆண்டுகளுக்கு முன்புவரை நோயை உறுதிப்படுத்த மூன்று மாதங்கள் ஆகும். அதற்கு `விண்டோ பீரியட்’ என்று பெயர். இப்போது மூன்று வாரங்களிலேயே பாதிப்பை உறுதி செய்துவிட முடியும். 30 சதவிகிதம் பேருக்கு மூன்று முதல் ஆறு வாரங்களுக்குள் காய்ச்சல் ஏற்படலாம். அதை `சீரோ- கன்வெர்ஷன் இல்னெஸ்’ (Sero-conversion illness) என்று சொல்வோம்.  

ஹெச்.ஐ.வி வைரஸ் என்பது ரத்தம் மூலம் பரவும். பாலுறவின்போது ஆணுக்கும் பெண்ணுக்கும் வெளிப்படும் நீர்மத்தின் மூலமும் பரவும். பெண்ணிடமிருந்து ஆணுக்கு ஹெச்.ஐ.வி வைரஸ் பரவும் விகிதம் குறைவு. பெரும்பாலும் ஆணிடமிருந்தே பெண்ணுக்குப் பரவும். 

ஒருவரிடமிருந்து ரத்தம் எடுத்து, இன்னொருவருக்கு ஏற்றும் முன்னர் ஆறுவிதமான நோய்களுக்கான சோதனைகளைச் செய்துதான் எடுப்பார்கள். அப்படிச் சோதித்து எடுக்கப்படும் ரத்தத்தை ஏற்றினால், 100 சதவிகிதம் நோய்த்தொற்றுகள் இருக்காது என்று நிச்சயம் நம்ப முடியாது. பாதிப்புள்ள ஒருவரின் ரத்தத்தை நவீன சோதனையில் ஆய்வு செய்தால்கூட 18 நாள்கள் கழித்துத்தான் ஹெச்.ஐ.வி பாதிப்பைக்  கண்டறியமுடியும். இந்த 18 நாள்களில் அவரது ரத்தத்தை மற்றவருக்கு ஏற்றிவிட்டால், ஏற்றப்பட்டவருக்கு ஹெச்.ஐ.வி பாதிப்பு ஏற்பட வாய்ப்பிருக்கிறது.

ஆக, `தவிர்க்கவே முடியாது’ என்ற நிலையில் மட்டும்தான் ரத்தம் ஏற்ற வேண்டும். ஹெச்.ஐ.வி பாதித்த பெண், குழந்தை பெற்றுக்கொள்ளும்போது முறையாகச் சிகிச்சையில் வைரஸ் அளவைக் கட்டுக்குள் வைத்துக்கொண்டால், குழந்தைக்கு 99 சதவிகிதம் ஹெச்.ஐ.வி பாதிப்பைத் தவிர்க்க முடியும்.  

ஹெச்.ஐ.வி தடுப்பூசி கண்டுபிடிப்பதற்கான ஆய்வுகள் உலகெங்கும் தீவிரமாக நடந்துவருகின்றன. இந்தியாவுக்கு வர இன்னும் ஐந்து ஆண்டுகளோ, பத்து ஆண்டுகளோ ஆகலாம். இப்படியொரு தடுப்பூசி எப்போது வரும் என்று மருத்துவர்களே காத்திருக்கிறார்கள். காரணம், ஹெச்.ஐ.வி பாதித்தவர்களைப் பரிசோதிக்கும்போதோ, சிகிச்சையளிக்கும்போதோ அவர்களுக்கு ஏற்றப்படும் ஊசி தவறுதலாக மருத்துவர்கள், செவிலியர்கள் கைகளில் குத்திவிடலாம். அந்த ரத்தத்தின் வழி வைரஸ் பரவ வாய்ப்பிருக்கிறது. மருத்துவர்களும் செவிலியர்களும் தடுப்பூசி போட்டுக்கொண்டால் இது போன்ற சூழலை எளிதாகக் கையாள முடியும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism