Published:Updated:

இதய நோயாளிகளுக்கும் - இனிக்கும் இல்லறம்!

இதய நோயாளிகளுக்கும் - இனிக்கும் இல்லறம்!
பிரீமியம் ஸ்டோரி
News
இதய நோயாளிகளுக்கும் - இனிக்கும் இல்லறம்!

காமராஜ் செக்ஸாலஜிஸ்ட்ஹெல்த்

ருவருக்கு மாரடைப்பு வந்துவிட்டது; சிகிச்சை பெற்று, எப்படியோ அந்தப் பேராபத்திலிருந்து மீண்டுவிட்டார் என்று வைத்துக்கொள்வோம். அதற்குப் பிறகான வாழ்க்கை அவருக்குக் கொஞ்சம் கடினமானது. `படியெல்லாம் ஏறக் கூடாது’, `ஏன் இப்படி வேகமா நடக்குறீங்க... உடம்பு தாங்காது’ என்று பிறர் சொல்லும் அனைத்தையும் அவர் மனம் நம்ப ஆரம்பித்துவிடும். அதனால் ஏற்பட்ட பயத்தின் காரணமாகவே பலர் உடலுழைப்பையே ஒத்திவைத்துவிடுவதும் உண்டு.  அவற்றில் முக்கியமானது, தாம்பத்ய உறவு.   

இதய நோயாளிகளுக்கும் - இனிக்கும் இல்லறம்!

மனிதனின் உடல் மற்றும் மனதின் ஆரோக்கிய வாழ்வுக்கு அடிப்படையானது செக்ஸ் என்பதை நம்மில் பலர் மறந்துவிடுகிறோம். உண்மையில், `ஹார்ட் அட்டாக் வந்தவர்கள், சிகிச்சைக்குப் பிறகு தாராளமாக தாம்பத்ய உறவில் ஈடுபடலாம்’ என்று அடித்துச் சொல்கிறார்கள் இதயநோய் மருத்துவர்கள். `ஆனால் அதற்கு சில வழிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும்’ என்றும் அறிவுறுத்துகிறார்கள். செக்ஸாலஜிஸ்ட் காமராஜிடம் இது குறித்துப் பேசினோம்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
இதய நோயாளிகளுக்கும் - இனிக்கும் இல்லறம்!``இதய அறுவை சிகிச்சை செய்திருந்தாலோ, மாரடைப்பு வந்திருந்தாலோ தாம்பத்ய உறவுக்குப் போதுமான இடைவெளி கொடுக்க வேண்டும். குறைந்தது மூன்று மாதங்கள்வரைக்கும் உடலுக்குக் கஷ்டம் கொடுக்கக் கூடாது. மூன்று மாதங்களுக்குப் பிறகு, அவர்களால் இரண்டு மாடிப்படி ஏறி நடக்க முடிகிறது; அப்போது நெஞ்சுவலியோ, மூச்சுத்திணறலோ இல்லை என்றால் தாம்பத்ய உறவில் ஈடுபடலாம்.

உறவின்போது நெஞ்சுவலியோ, மூச்சுத்திணறலோ ஏற்பட்டால், இதயத்தில் பிரச்னை என்று அர்த்தம். அவர்கள், டாக்டரின் ஆலோசனைக்குப் பிறகுதான் உறவில் ஈடுபட வேண்டும். இதை மருத்துவத்தில் `Class III’ அல்லது `Class IV Angina’ என்போம். ஃபர்ஸ்ட் கிளாஸ், செகண்ட் கிளாஸ் ஆஞ்சைனாவாக இருந்தால் பிரச்னை இல்லை. கிளாஸ் த்ரீ, ஃபோர் ஆஞ்சைனா கொஞ்சம் தீவிரமானவை.   

இதய நோயாளிகளுக்கும் - இனிக்கும் இல்லறம்!

தாம்பத்ய உறவுகொள்ளும்போது தலையணைக்கு அடியில் சார்பிட்ரேட் (Sorbitrate), ஆஸ்பிரின் (Aspirin) மாத்திரைகளை வைத்திருக்க வேண்டும். படுக்கையறையைப் பயன்படுத்துவது நல்லது. தாம்பத்ய உறவை வசதியான, சாதாரண நிலையில்தான் செய்ய வேண்டும். `அக்ரோபாட்டிக்’ எனப்படும் விநோதமான நிலைகளிலெல்லாம் செய்யக் கூடாது. நெஞ்சுவலியோ, மூச்சுத்திணறலோ ஏற்பட்டால் உறவுகொள்வதை நிறுத்திவிட வேண்டும். கவலைப்படக் கூடாது. வசதியாகப் படுத்துக்கொள்ள வேண்டும். சார்பிட்ரேட் மாத்திரையை நாக்குக்கு அடியில் வைத்துக்கொண்டு, ஆஸ்பிரினை முழுங்கிவிட வேண்டும். 

ஹார்ட் அட்டாக் வந்தவர்கள் 50-லிருந்து 60 வயதுக்காரர்கள் என்றால், புதிய பெண்களோடு, 18-20 வயதுக்குட்பட்ட பெண்களோடு உறவுகொள்ளக் கூடாது. அதேபோல மனைவி அல்லாத பெண்களோடு,  வீட்டுக்கு வெளியே லாட்ஜ் போன்ற இடங்களில் உறவுகொள்வதைத் தவிர்த்துவிட வேண்டும். மனைவி என்றால் அறிமுகமானவராக, பல ஆண்டுகளாகப் பழகியவராக இருப்பார். அதனால் மனைவியோடு இருக்கும்போது பெரிதாகக் கிளர்ச்சி இருக்காது. ஆனால், ஏதோ ஒரு ஹோட்டலில், அறிமுகமில்லாத பெண்ணோடு உறவில் ஈடுபடும்போது இவர்கள் ஒரு த்ரில்லுக்கு ஆளாவார்கள். மார்பு படபடப்பது அதிகமாகும். இது ஆபத்தானது. தாம்பத்ய உறவும் ஓர் உடற்பயிற்சிதான். அதனால்தான் இதை `செக்ஸர்சைஸ்’ என்று சொல்கிறோம். இதில் ஈடுபடும்போது 250-லிருந்து 300 கலோரிவரைக்கும் செலவாகும். இதையெல்லாம் சரியாகக் கடைப்பிடித்து, அதையும் மீறி இதயத்தில் பிரச்னை என்றால், உடனே இதய மருத்துவரை ஆலோசிப்பது நல்லது’’ என்கிறார் காமராஜ்.  

இதய நோயாளிகளுக்கும் - இனிக்கும் இல்லறம்!

கார்டியாலஜிஸ்ட் வி.சொக்கலிங்கமும் இதே கருத்தைத்தான் வலியுறுத்துகிறார். ``சிகிச்சைக்குப் பிறகு முதல் நான்கு வாரங்களுக்குக் கண்டிப்பாக செக்ஸ்வைத்துக் கொள்ளக் கூடாது.  மூன்று மாதங்களுக்குப் பிறகு உறவுகொள்வது ஆரோக்கியம். அதிலும் ஆக்டிவ், பாஸிவ் என இரண்டு நிலைகள் உண்டு. பாஸிவ் என்பது, இவர் கீழே படுத்திருக்க, மனைவி மேலே இருந்து செய்யும் நிலை. இதை முதல் ரெண்டு வாரங்களுக்குக் கடைப்பிடித்துவிட்டு, பிறகு ஆக்டிவ் நிலையில் உறவுகொள்ளலாம். தாம்பத்ய உறவு, உணர்ச்சிகளைக் கட்டுக்குள்வைத்திருக்கும். இதயத்துக்கும் பலம் கொடுக்கும். ஆனால், மாரடைப்பு வந்தவர்கள், மருத்துவரின் ஆலோசனைக்குப் பிறகு உறவுகொள்வது நல்லது. அவரால்தான் இதயத்தின் திறன் எவ்வளவு, உடல் தாம்பத்யத்துக்குத் தாங்குமா என்று சொல்ல முடியும்.   

இதய நோயாளிகளுக்கும் - இனிக்கும் இல்லறம்!

மாரடைப்பு வந்தவர்களுக்கு சிகிச்சை முடிந்த மூன்று வாரங்களுக்குப் பிறகு, ஒரு வாரம் நடைப்பயிற்சி கொடுப்போம். அதில் அவர்களின்  இதயத்தின் திறன் தெரித்துவிடும். அவர்கள் சாதாரணமாக, சீராக நடக்க ஆரம்பித்தவுடன் உறவை ஆரம்பிக்கலாம். ஆரம்பத்தில் உறவை கொஞ்சம் குறைவாகவைத்துக்கொண்டு பிறகு அதை வழக்கமாக்கிக்கொள்ளலாம். செக்ஸின்போது சிலருக்கு நெஞ்சுவலி வரலாம். இதை `Angina on Sex’ என்று சொல்வோம். இவர்கள் `நைட்ரேட்’ (Nitrate) அஞ்சு மில்லிகிராம் மாத்திரையை நாக்குக்கு அடியில் வைத்துக்கொண்டு உறவில் ஈடுபட்டால் நெஞ்சுவலி வராது. அதையும் மருத்துவரின் ஆலோசனைப்படிதான் எடுத்துக்கொள்ள வேண்டும். இவர்களில் நூற்றில் ஒன்று அல்லது இரண்டு பேருக்கு இந்த மாதிரி நேரத்தில் மாரடைப்பு வர வாய்ப்பிருக்கிறது. முக்கியமான இன்னொரு விஷயம், நைட்ரேட் மாத்திரையோடு வயாக்ரா மாத்திரையைச் சேர்த்து எடுத்துக்கொண்டால் உயிரிழப்புக்குக்கூட வாய்ப்பிருக்கிறது.

அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன் அண்மையில் நடத்திய ஆய்வு ஒன்று, `வாரத்துக்கு ஒன்று அல்லது இருமுறை செக்ஸ் வைத்துக்கொள்பவர்களுக்கு அவர்களின் ஆயுள் 90 வயதுவரை நீடிப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது’ என்று சொல்கிறது. 60 வயதுக்குப் பிறகு பலர், `பேரன், பேத்தி எடுத்துட்டோமே’ என்று தயங்குவார்கள். உடலுறவு என்பது மனிதர்களுக்குக் கடவுள் கொடுத்த வரம். அதைச் சரியாக, முறையாகப் பயன்படுத்துவது நல்லது.’’

பாலு சத்யா

இதையெல்லாம் ஞாபகம் வெச்சுக்கோங்க!  

* மாரடைப்பிலிருந்து முழுமையாக குணமடையாமல் செக்ஸில் ஈடுபடவே கூடாது.

* நிறைவாகச் சாப்பிட்ட பிறகு குறைந்தது முன்று மணி நேரத்துக்கு உறவுகொள்ளக் கூடாது. உணவு சீராக செரிமானமடைய இந்த அவகாசம் தேவை. அதோடு செக்ஸின்போது பதற்றம் ஏற்படாமலும் இது தடுக்கும்.

* உறவுக்கு முன்னதாக கொஞ்ச தூரம் நடப்பது, மாடிப்படி ஏறுவது போன்ற எளிதான உடற்பயிற்சிகளைச் செய்யலாம். அந்தப் பயிற்சிகளின்போது லேசாக நெஞ்சுவலிப்பதுபோல இருந்தாலோ, மூச்சிரைத்தாலோ, சோர்வாக உணர்ந்தாலோ செக்ஸைத் தவிர்த்துவிடலாம்.

* மாரடைப்பு வருவதற்கு முன்னர் இருந்ததைப்போல இப்போதும் தாம்பத்ய உறவு இருக்கும் என்று நினைக்கக் கூடாது. மாரடைப்பு வந்த பலருக்கு செக்ஸில் ஆர்வம் இல்லாமல் போகலாம்; விரைப்புத் தன்மை குறைபாடு ஏற்படலாம்; உறவின்போது பதற்றம் உண்டாகலாம்.

* `மாரடைப்பு வந்தவர்கள் செக்ஸில் ஈடுபட்டால், திரும்பவும் மாரடைப்பு வரும்’ என்று ஒரு கட்டுக்கதை உண்டு. அதை நம்ப வேண்டாம். `அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் கார்டியாலஜி’ வெளியிட்டிருக்கும் ஓர் ஆய்வுக் கட்டுரை, `தாம்பத்ய உறவில் ஈடுபடுவதால் மாரடைப்பு ஏற்படும் அபாயம் மிக மிகக் குறைவு’ என்று குறிப்பிடுகிறது.

* உடலுறவின்போது நெஞ்சுவலிப்பதுபோல இருக்கிறதா? கொஞ்சம் ஓய்வெடுங்கள். சில நிமிடங்களுக்கு அறையைவிட்டு வெளியே செல்லாதீர்கள். உடனே மருத்துவ உதவியை நாடுங்கள்.

* தாம்பத்ய உறவு குறித்து உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெற, தயக்கமே படாதீர்கள்.

இதய நோயாளிகளுக்கும் - இனிக்கும் இல்லறம்!

வாய் நாற்றத்துக்கு வினிகர்

ரு டீஸ்பூன் பேக்கிங் சோடாவையும், ஒரு டீஸ்பூன் ஆப்பிள் சிடர் வினிகரையும் ஒரு கப் தண்ணீரில் கலக்கவும். இந்தத் தண்ணீரை வாயில்வைத்து, இரண்டு நிமிடங்களுக்குக் கொப்பளித்துத் துப்பவும். மொத்தத் தண்ணீரும் காலியாகும்வரை இதைச் செய்யவும். வாரம் இருமுறை இப்படிச் செய்துவந்தால் வாய் நாற்றமே ஏற்படாது.