Published:Updated:

தொற்று நோய்களின் உலகம்!

தொற்று நோய்களின் உலகம்!
பிரீமியம் ஸ்டோரி
News
தொற்று நோய்களின் உலகம்!

ஹெல்த் - 29வி.ராமசுப்பிரமணியன், தொற்றுநோய் சிறப்பு மருத்துவர்

‘இன்ஃப்ளூயென்ஸா-ஏ’,  ‘இன்ஃப்ளூயென்ஸா-பி’,  ‘இன்ஃப்ளூயென்ஸா-சி’  என மூன்று வகையான வைரஸ்கள் பற்றிப் பார்த்தோமல்லவா? இவற்றில் ‘இன்ஃப்ளூயென்ஸா-ஏ’-தான் மிக மோசமானது. ‘இன்ஃப்ளூயென்ஸா-பி’-யும் மோசம்தான். ஆனால், முன்னதோடு ஒப்பிடும்போது வீரியம் குறைவு. ‘இன்ஃப்ளூயென்ஸா-சி’-யால் பெரிதாக எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை.   

தொற்று நோய்களின் உலகம்!

இவை அனைத்துமே ஒரு மனிதரிடமிருந்து இன்னொரு மனிதருக்குப் பரவக்கூடியவை. காய்ச்சலோடு இருமல், சளி, உடல்வலி மூன்றும் இருந்தால், அவருக்கு ஃப்ளூ பாதித்திருக்க வாய்ப்பிருக்கிறது.  இருமல், தும்மல் மூலம் பரவக்கூடிய இந்த வைரஸ், அதிகபட்சம் மூன்றடிவரை பறந்து செல்லும். அது இன்னொருவரின் சுவாசத்தில் கலந்தால் அவருக்கு பாதிப்பு ஏற்படும். எதிரில் எவரும் இல்லாதபட்சத்தில் ஏதேனும் ஒரு பொருளில் விழும் வைரஸ், நான்கு முதல் ஐந்து மணி நேரம்வரை உயிரோடிருக்கும். அதை விரலால் தொடுபவர், எதேச்சையாக மூக்கில் அந்த விரலை வைத்தால் சுவாசத்தில் கலந்து பாதிப்பு ஏற்பட வாய்ப்பிருக்கிறது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
தொற்று நோய்களின் உலகம்!



சிலர்  இந்தத் தாக்குதலிலிருந்து தப்பிக்க ‘மாஸ்க்’ போட்டுக்கொள்வார்கள். ஆனால், அதைப் பாதுகாப்பு என்று சொல்ல முடியாது. மாஸ்க்கின் வெளிப்புறத்தில் இந்த வைரஸ் ஒட்டியிருந்து, அதை நாம் எதேச்சையாக விரலால் தொட்டு, அந்த விரலால் நம் மூக்கைத் தொட்டாலும் வைரஸ் நம் சுவாசத்தில் கலந்துவிடும். எவருக்கு பாதிப்பு இருக்கிறதோ அவர்தான் மாஸ்க் போட வேண்டும். அது மட்டும்தான் பாதுகாப்பு.

‘இன்ஃப்ளூயென்ஸா’ வகைக் கிருமிகள் உடலுக்குள் நுழைந்துவிட்டால், இரண்டு நாள்களுக்குள்ளாகவே இருமல், சளி, உடம்புவலி ஏற்படும். 99.5 சதவிகிதம், மூன்று முதல் ஐந்து  நாள்களில் தானாகவே குணமாகிவிடும். அதன் பிறகு கொஞ்சம் உடம்புவலி இருக்கலாம். வெகு சிலருக்கு மட்டும் கொஞ்சம் சிக்கலாகலாம். இந்த வைரஸ் நுரையீரலுக்குள் சென்று நிமோனியாவாக மாறிவிடுவதற்கான வாய்ப்புகள் அதிகமுண்டு. அப்படி மாறினால்தான் பிரச்னை தொடங்கும். சரி, யாருக்கெல்லாம் இப்படி மாறவாய்ப்பிருக்கிறது..?

* 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள்.

* 65 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள்.

* புகைப்பழக்கம், மதுப்பழக்கம், இதயப் பிரச்னை, சிறுநீரகப் பிரச்னை, நுரையீரல் பிரச்னை உள்ளவர்கள்.

இவர்களுக்கெல்லாம் ஃப்ளூ காய்ச்சல் வந்தால் கொஞ்சம் கூடுதல் கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும்.

`ஸ்வைன் ஃப்ளூ’ எனப்படும் பன்றிக்காய்ச்சலுக்கும் இவை அனைத்தும் பொருந்தும். ஆனால், 2009-ம் ஆண்டில் முதன்முறையாகப் பன்றிக்காய்ச்சல் வந்தபோது ஒரு பெரிய குழப்பம் உருவானது. மிகவும் ஆரோக்கியமாக இருப்பவர்களுக்கே நிமோனியா ஏற்பட்டது. 25 வயது, மேலே நாம் குறிப்பிட்ட எந்தப் பிரச்னையும் இல்லை... ஆனால், ஃப்ளூ பாதித்த சில நாள்களிலேயே இறந்தார்... இப்படிப் பல பதிவுகள். அதன் பிறகுதான் பன்றிக்காய்ச்சல் என்றாலே  மிகப் பெரும் அச்சமும் பதற்றமும் ஏற்பட்டன.  

தொற்று நோய்களின் உலகம்!

ஃப்ளூ பாதிப்பு இருப்பவர்களுக்கெல்லாம் பன்றிக்காய்ச்சல் இருக்க வேண்டும் என்றில்லை. எவருக்கும் பரவாமல் தனித்து இருந்தாலே சாதாரண ஃப்ளூ, தானாக குணமாகிவிடும். மேலே குறிப்பிட்ட மூன்று வகையினரை மட்டும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சோதித்துவிடுவது நல்லது. பன்றிக்காய்ச்சல் இருப்பது உறுதிசெய்யப்பட்டால் இவர்களுக்கு ‘ஆன்டி ஃப்ளூ’ மாத்திரை தரப்படும். ஆனால், சமீபத்திய ஆராய்ச்சிகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அந்த மருந்தைக் கொடுப்பதால் பெரிதாக எந்தப் பயனும் இல்லை என்று தெரியவந்திருக்கிறது. அதிகபட்சம் 12 மணி நேரம் மட்டும் நோயின் தீவிரத்தைக் குறைக்கிறது என்று கண்டறிந்திருக்கிறார்கள். ஆனால், பாதிப்பு வராமல் தடுக்க இந்த மாத்திரையைக் கொடுக்கலாம்.  75 மி.கி., தினம் ஒரு மாத்திரை, பத்து நாள்களுக்கு எடுத்துக்கொள்ள வேண்டும்.

ஃப்ளூ வைரஸ் தாக்காமலிருக்கத் தடுப்பூசி  இருக்கிறது. ஆனால், அதிலும் ஒரு சிக்கல் இருக்கிறது. இந்த ஃப்ளூ வைரஸானது தன் தன்மையை மாற்றிக்கொண்டேயிருக்கும். ஆராய்ச்சியாளர்கள், தட்பவெப்பநிலைகளையெல்லாம் கணித்து, ‘வரும் ஆண்டு இந்த வகை ஃப்ளூ வைரஸ் தாக்கக்கூடும்’ என்று அறிவிப்பார்கள். தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனங்கள் அந்த வைரஸைத் தடுக்கும் மருந்தைக் கண்டுபிடிப்பார்கள். சில நேரங்களில் ஆராய்ச்சியாளர்களின் கணிப்பு சரியாக அமைந்துவிடும். பெரும்பாலான நேரங்களில் இந்த கணிப்பு தவறாகிவிடுவதும் உண்டு. அப்போது தடுப்பூசி பயனளிக்காது.

சரி... பன்றிக்காய்ச்சல் வராமல் தடுக்க வேறென்ன செய்யலாம்? அடுத்த இதழில் பார்ப்போம்!

- களைவோம்...