Published:Updated:

நோய்நாடி நோய்முதல் நாடி

நோய்நாடி நோய்முதல் நாடி
பிரீமியம் ஸ்டோரி
News
நோய்நாடி நோய்முதல் நாடி

வாழ்வியல் - 5வேலாயுதம், சித்த மருத்துவர்

`கூழானாலும் குளித்துக் குடி’ என்பது உடல் சுத்தத்தை வலியுறுத்தும் பழமொழி. `மனிதராகப் பிறந்த அனைவரும் அன்றாடம் பின்பற்றவேண்டிய முக்கிய ஒழுக்க நெறி `குளியல்’ ’ என்கிறது சித்த மருத்துவம். `முந்தைய தினம் உடலுழைப்புக் காரணமாக ஏற்பட்ட அழற்சிக் கழிவுகள், மாசுகளால் உண்டாகும் நச்சுகள் உடலில் தேங்கியிருக்கும். அவற்றை அகற்றிய பிறகே அன்றைய நாளைத் தொடங்க வேண்டும்’ என்கிறார்கள் சித்தர்கள். கழிவு நீக்கத்தின் ஒரு பகுதியாக, உடல் கழிவுகள் சருமத்தின் நுண்ணிய துவாரங்கள் வழியாக வியர்வையாகவும் அழுக்குகளாகவும் வெளியேறிவிடும். உடலிலுள்ள அழுக்குகளை அன்றாடம் அகற்றுவதால், வியர்வைச் சுரப்பிகளின் வாயில்கள் சுத்தமாகும். இது, நோய்  உடலை அண்டாமல் பாதுகாப்பதிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது.    

நோய்நாடி நோய்முதல் நாடி

`குளியல்’, உடலின் மீது படிந்துள்ள அழுக்குகளை வெளியேற்ற மட்டுமல்ல, உடலில் உண்டாகும் சூட்டை வெளியேற்றி, உடலைச் சமநிலையில் வைத்திருக்கவும் உதவும். ‘குளித்தல் என்பது உடல் உறுப்புகளைக் குளிர்வித்தல்’  என்கிறது சித்த மருத்துவம். காலப்போக்கில் `குளிர்வித்தல்’ என்பது மருவி ‘குளியல்’ என்றாகிவிட்டது. குளிப்பதால், உடலிலுள்ள சூடு குறைந்து, குளிர்ச்சியான அலைகள் உடலில் பரவி சரியான வெப்பநிலை நிலைநிறுத்தப்படுகிறது. இது உடலை சீதோஷ்ணநிலைக்கு ஏற்பத் தயார்ப்படுத்தும். சித்த மருத்துவத்தில் குறிப்பிடப்படும் 4,448 நோய்களில் 4,000-க்கும் மேற்பட்ட நோய்கள்  ‘அழல்’ என்னும் உடற்சூடு மற்றும் பித்தத்தால் ஏற்படுவதாக சித்தர்கள் குறிப்பிடுகின்றனர். வாழ்வியல் நோய்களான ரத்த அழுத்தம், சர்க்கரைநோய், புற்றுநோய் போன்றவையும் இவற்றில் அடங்கும். இத்தகைய நோய்கள் அண்டாமலிருக்க `குளியல்’ பெரிதும் உதவும்.

எப்படிக் குளிப்பது?

சித்தர்கள் குளியலின் அவசியம் பற்றியும், எப்படிக் குளிக்க வேண்டும் என்பது பற்றியும் பல்வேறு இடங்களில் குறிப்பிட்டிருக்கிறார்கள். முன்பெல்லாம் ஆறு, குளம், ஏரி போன்ற நீர் நிலைகளில் குளித்தார்கள். இன்றைக்கு அதற்கான வாய்ப்புகள் இல்லை. புற உடலை நீரால் தூய்மை செய்ய வேண்டும் என்பதை `புறள்தூய்மை நீரான் அமையும்’ என்ற வள்ளுவரின் வாக்கு நமக்கு உணர்த்துகிறது. குளிக்கும்போது கண், காது உள்ளிட்ட திறந்த பக்கங்களின் வழியாக உடல்சூடு வெளியேறும். எனவே, உச்சி முதல் பாதம்வரையிலான சூட்டை வெளியேற்ற, முதலில் பாதங்களில் நீர் ஊற்ற வேண்டும். பிறகு முழங்கால், தொடை, இடுப்பு, மார்பு, தோள்பட்டை, கழுத்து, தலை எனப் படிப்படியாக நீர் ஊற்றுவதே சரி. இது உடலில் தங்கியிருக்கும் வெப்பத்தை முழுமையாக வெளியேற்றும்.  

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
நோய்நாடி நோய்முதல் நாடி

இன்றைக்கு கழுத்துவரை குளிக்கும் பழக்கமே பலரிடமும் இருக்கிறது; இது தவறானது. இதை `தண்டக் குளியல்’ என்கிறார்கள். `பாதிக் குளியல்’ என்று பொருள்படும். தலைமுதல் கால்வரை நீர் ஊற்றிக் குளிப்பதே நல்லது. அதேபோல, நிர்வாணமாகக் குளிக்கக் கூடாது. ஆண்கள் இடுப்புவரை ஆடை கட்டிக் குளிக்க வேண்டும். பெண்கள் கழுத்துவரை ஆடை கட்டிக் குளிக்க வேண்டும். குளிக்கும்போது கண், காது, மூக்கு ஆகியவற்றில் நீரை அடித்துத் தேய்த்துக் குளிக்க வேண்டும். இப்படித் தேய்த்துக் குளிப்பதால், இயற்கையாகவே மசாஜ் செய்ததுபோல செயல்பட்டு, உடல் உறுப்புகளுக்கு ரத்த ஓட்டம் அதிகரிக்கும். எந்த உறுப்புக்கும் ரத்த ஓட்டம் அதிகரித்தால் அதன் செயல்பாடும் அதிகரிக்கும். ரத்தக்குழாய்கள் சுருங்கி விரியும்; உடல் உறுப்புகள் புத்துணர்வு பெறும்.

அடுத்தாக, `முதுகைத் தேய்த்துக் குளிக்க முக்கியத்துவம் தர வேண்டும்’ என்கிறார்கள் சித்த மருத்துவர்கள்.  இதனால் அதிக உடல் உழைப்பில்லாத உட்கார்ந்த நிலையிலான வேலை, வாகனம் ஓட்டுதல் போன்ற வாழ்வியல் பிழைகளால் பலரையும் பாதிக்கும் கழுத்துவலி, முதுகுவலி, இடுப்புவலி போன்றவைகூட நம்மை நெருங்காது. அவ்வாறு செய்யாவிட்டால், உடலின் மிக முக்கியப் பகுதியான முதுகு பலவீனமடையும். முதுகிலுள்ள தசைகள் பலவீனமடைந்தால், முதுகுத்தண்டிலிருக்கும் அடுக்குகள் எளிதில் இடம் மாறி பெல்ட் அணியவேண்டிய நிலை ஏற்படுகிறது. 

நோய்நாடி நோய்முதல் நாடி

பாதங்களில்தான் எண்ணற்ற வர்மப் புள்ளிகள் முடிவுறுகின்றன என்பதால், அவற்றை அழுத்தித் தேய்க்க வேண்டும். அப்படித் தேய்ப்பதால் வர்மப் புள்ளிகள் தூண்டப்பட்டு, உடல் உள்ளுறுப்புகள் புத்துணர்வு பெறும். பாதங்களை நன்றாகத் தேய்த்துக் குளிக்காவிட்டால் பாதங்களின் ஓரங்களில் அழுக்குகள் தேங்கி, உடலில் பித்தம் அதிகரித்து, பித்தவெடிப்பு ஏற்படும். பாதங்களில் ஒரு பாதத்தைக்கொண்டு அடுத்த பாதத்தை அழுத்தித் தேய்க்க வேண்டும். இதனால் பாதங்களில் அழுக்குகள் தேங்குவது தவிர்க்கப்படும்; பித்தவெடிப்புகள் ஏற்படாமலிருக்கும்.

நலுங்குமாவு தேய்த்துக் குளித்தல்

இன்றைக்குக் குளியலைப் பற்றி நினைத்தாலே நுரை ததும்பும் சோப்பும், அதன் வாசனையுமே நினைவுக்கு வரும். `சருமத்தில் சோப்பு தேய்த்துக் குளிப்பது உடல் அழுக்குகளை நீக்கும்; உடலுக்கு நல்ல நறுமணத்தைத் தரும்’ என்று நம்புகிறோம். ஆனால், உண்மையில் சோப்பு பயன்படுத்துவதால், அதிலுள்ள ரசாயனங்களால் சருமம் வறண்டுவிடுவதுடன் செல்களும் பாதிக்கப்படலாம். நம் முன்னோர் வெறும் நீரை மட்டுமே உடலில் ஊற்றிக் குளித்தனர். உடலில் அதிக அழுக்குகள் இருப்பதாகத் தோன்றினால் மண், தேங்காய் நார் போன்றவற்றைப் பயன்படுத்தி தேய்த்துக் குளித்து ஆரோக்கியமாக இருந்தனர். பெண்கள் கடலை மாவு, மஞ்சள் போன்றவற்றை உடலில் தேய்த்துக் குளித்தனர். தலைக்கு செம்பருத்திப் பூ, வெந்தயம், சீயக்காய் போன்ற இயற்கைப் பொருள்களைப் பயன்படுத்தினர். அதிலும் நலுங்கு மாவுக்கு அதிக முக்கியத்துவம் அளித்தனர்.

சந்தனம், வெட்டிவேர், விலாமிச்சைவேர், கோரைக்கிழங்கு, பற்படாகம், சந்தனம், பாசிப்பயறு ஆகியவற்றின் கலவையே நலுங்கு மாவு எனப்படும்.  இதைத் தலை முதல் கால்வரை தேய்த்துக் கழுவினால், சரும நோய்கள் வராமல் தடுப்பதுடன், அவை வந்த பிறகு குணமாக்கும் மருந்தாகவும் பயன்படும். இதைத் தேய்த்துக் குளிப்பதால் அதிலுள்ள மருத்துவ குணங்கள் கரப்பான், படர்தாமரை போன்ற சருமப் பிரச்னைகள் வராமல் தடுக்கும்; சருமம் பொலிவு பெறும். முன்னோரின் குளியல், மருத்துவக் குளியலாக இருந்ததற்கு இது உதாரணம்.

இன்றைக்குத் திருமணம் மற்றும் பருவ வயது எட்டிய பெண்களுக்கு நடத்தப்படும் நிகழ்வுகளில்  ‘நலுங்கு வைத்தல்’ பற்றிக் கேள்விப்பட்டிருப்போம். ஆனால், இப்போது நடைபெறும் `நலுங்கு வைத்தல்’ நிகழ்வில் நலுங்கு மாவு பயன்படுத்தப்படுவதில்லை. வெறும் சந்தனத்தை மட்டுமே பயன்படுத்துகிறார்கள். பெண்கள்  மஞ்சள் பூசிக் குளிப்பதால், சருமம் பொலிவு பெறும்; வெள்ளைப்படுதல் உள்ளிட்ட பிரச்னைகள் வராமல் தடுக்கப்படும். சித்தர்கள் வலியுறுத்துவதைப்போல, உரிய நேரம் ஒதுக்கி, முறையாகக் குளிப்பதை வழக்கமாக்கிக்கொள்ள வேண்டும். குளியலை நோய் இல்லா நெறியாகக் கொண்டால், வாழ்வியல் நோய்களை வெல்லலாம்.

தெளிவோம்...

ஜி.லட்சுமணன்

நோய்நாடி நோய்முதல் நாடி
நோய்நாடி நோய்முதல் நாடி

கறுத்த கைகளுக்கு கற்றாழை

வெ
யில்பட்டு சிலருக்கு கைகளின் ஒரு பகுதி மட்டும் கறுத்துப்போயிருக்கும். கற்றாழை ஜெல் 5 டீஸ்பூன், வைட்டமின் ஈ ஆயில் அல்லது பாதாம் ஆயில் இரண்டு டீஸ்பூன்.... இரண்டையும் கலந்து கருமை படர்ந்த இடங்களில் தடவவும். 40 நிமிடங்கள் கழித்துக் குளிர்ந்த நீரால் கழுவவும்.