Published:Updated:

``அந்த டைரக்டர் ஏன் என்னை அடிக்கவந்தார் தெரியுமா..?’’ - மனம் திறக்கும் 2.0 ஆர்ட் டைரக்டர்! #LetsRelieveStress

``அந்த டைரக்டர் ஏன் என்னை அடிக்கவந்தார் தெரியுமா..?’’ - மனம் திறக்கும் 2.0 ஆர்ட் டைரக்டர்! #LetsRelieveStress
``அந்த டைரக்டர் ஏன் என்னை அடிக்கவந்தார் தெரியுமா..?’’ - மனம் திறக்கும் 2.0 ஆர்ட் டைரக்டர்! #LetsRelieveStress

"அந்தந்த காலகட்டங்களில் அந்தந்த பிரச்னைக்குத் தகுந்தவாறு மனஅழுத்தம் வந்திருக்கிறது. அதை எப்படி எதிர்கொள்கிறோம் என்பதைப் பொறுத்தே முடிவு இருக்கும். எனக்கு மனஅழுத்தம் அதிகமாக வரும். அப்போதெல்லாம் ஒன்றை மட்டுமே செய்வேன். என் மகனுடன் சேர்ந்து நன்றாகச் சமைக்க ஆரம்பித்துவிடுவேன். பிறகு, சாப்பிட்டுவிட்டு, ஒரு ஆழ்ந்த தூக்கம் போடுவேன்."

``நான் ஆறாம் வகுப்பு படிக்கும்போது ஒட்டகத்தை வரைந்து என்னுடைய டிராயிங் மாஸ்டரிடம் காட்டினேன். அதைப் பார்த்துவிட்டு, `இந்த ஓவியத்தில் எங்கெல்லாம் சரியாகவும் தவறாகவும் வரைந்திருக்கிறாய் என்பதை வட்டமிட்டுக் காட்டு' என்றார். ஓவியத்தில் இருந்த தவறான இடங்களை வட்டமிட்டேன். கடைசியில் முழு ஓவியமும் வட்டங்களால் நிரம்பியிருந்தது. அதைப்பார்த்ததும் `சரி... இப்போது எங்கெல்லாம் தவறாக வரைந்திருக்கிறாயோ அங்கெல்லாம் சரியாக வரைய முயற்சி செய்...' என்றார் மாஸ்டர். `உன்னுடைய வேலைகளில் நீ தவற்றைக் கண்டுபிடி. அந்தத் தவறு மீண்டும் ஏற்படக் கூடாது என்பதில் உறுதியாக இரு. இதை நீ கடைப்பிடித்தாலே வெற்றி உன்னை வந்து சேரும்’ - இது என்னுடைய டிராயிங் மாஸ்டர் பத்மராஜன் சார் எனக்குச் சொன்ன அறிவுரை.  

வாழ்க்கையில் நமக்குக் கிடைக்கும் அனுபவங்கள் மாதிரி பெரிய பாடம் வேறு ஏதுமில்லை. அங்கே தொடங்கிய பயணம்தான் இப்போது என்னை ` 2.0' வரை வந்து நிறுத்தியிருக்கிறது.’’  - வாழ்க்கை தந்த அனுபவங்களை வார்த்தைகளாக்குகிறார் ஆர்ட் டைரக்டர் டி.முத்துராஜ். இந்தியத் திரையுலகின் `டாப் டென்' கலை இயக்குநர்களில் ஒருவரான இவர், சாபுசிரில் பள்ளியிலிருந்து வந்திருப்பவர் என்பது கூடுதல் சிறப்பு.  

`அங்காடித் தெரு', `அவன் இவன்', `நண்பன்', `ராஜா ராணி', `தெறி', `ரெமொ', `மெர்சல்', `வேலைக்காரன்' போன்ற வெற்றிப் படங்களுக்குப் பின்னால் நின்றவர். தனக்கு மனஅழுத்தம் தந்த தருணங்களையும் அவற்றை எதிர்கொண்ட விதம்குறித்தும் நம்மிடம் பகிர்ந்துகொண்டார். 

``வீட்டில் வசதியில்லை என்பதற்காக எட்டாம் வகுப்புடன் படிப்பை நிறுத்திவிட்டார்கள். குடும்பக் கஷ்டம் போக்குவதற்காக வேலைக்குப் போனேன். ஒரு பேனர் ஆர்ட்ஸ் நிறுவனத்தில் பேக்ரவுண்ட் வரைய ஆரம்பித்தேன். அப்போது `இனிமேல் நாம் பள்ளிக்கெல்லாம் போய் படிக்க முடியுமா?' என்ற கேள்வி மனசுக்குள் எழுந்தது. கோடை விடுமுறை முடிந்ததும், நான் பள்ளிக்கு வராததைத் தெரிந்துகொண்ட என்னுடைய நண்பர்கள் இக்பாலும் சிவசுப்பிரமணியனும் என் வீட்டுக்கு வந்துவிட்டார்கள். ஒருவன் எனக்குப் பள்ளி சீருடைகள் வாங்கித் தந்தான். இன்னொருவன் என்னுடைய பள்ளிக் கட்டணத்தை செலுத்தி பாடப் புத்தகங்கள் வாங்கிக்கொடுத்தான். அவர்கள் செய்த உதவியால் பத்தாம் வகுப்பு வரை படித்து முடித்தேன். இல்லையென்றால், என் படிப்பு  எட்டாம் வகுப்புடன் நின்றுபோயிருக்கும். 

பள்ளியில் படிக்கும்போது நன்றாக ஓவியம் வரைவேன். அதைப் பார்த்து டிராயிங் மாஸ்டர் பத்மராஜன் சார்தான் என்னை ஓவியங்கள் வரைய ஊக்குவித்தார். அதேபோல டிராயிங் மெட்டீரியல்ஸ் எல்லாம் அவர்தான் வாங்கிக் கொடுப்பார். சென்னை கவின்கலைக் கல்லூரி பற்றிச் சொன்ன அவர், `அந்தக் கல்லூரியில் போய் படித்தால் உன்னுடைய வாழ்க்கையே மாறிவிடும்' என்றார்.  அப்படித்தான் கவின்கலைக் கல்லூரியில் சேர்ந்து படித்தேன். என்னுடைய வாழ்க்கையில் பத்மராஜன் சார், பள்ளி நண்பர்கள் இரண்டுபேர் என மூன்று பேரும் இல்லையென்றால் உங்கள் முன்னால் ஒரு கலை இயக்குநராக அமர்ந்து பேசியிருக்க மாட்டேன். அதேபோல, ஒவ்வொரு காலகட்டத்திலும் என்னை அடுத்தகட்டத்துக்கு அழைத்துச் சென்ற பலர் இருக்கிறார்கள். அவர்கள் எல்லோருடனும் இப்போதும் தொடர்பில் இருக்கிறேன். அவர்களுக்கு நன்றி உடையவனாகவும் இருக்கிறேன்.

சென்னை வந்து கவின் கலைக் கல்லூரியில் படிக்கும்போது நிறைய கஷ்டப்பட்டிருக்கிறேன். சுடுகாட்டின் அருகே மூன்று வருடங்கள் குடிசைபோட்டுத் தங்கியிருந்தேன். கோடம்பாக்கத்தில் இப்போதுள்ள சந்திரபவன் ஹோட்டல் அருகே அந்தக்காலத்தில், ராஜேஸ்வரி டைப் செட்டிங் என்ற ஒரு கடை இருந்தது. அந்தக் கடையில் படிக்கட்டின் கீழே சிறிய காலியிடத்தில் தங்கியிருக்கிறேன். எப்படியாவது கல்லூரிப் படிப்பை முடித்துவிட வேண்டும் என்ற வேட்கையுடன் இருந்தேன். அப்படித்தான் கல்லூரிப் படிப்பை முடித்தேன். ஆனால், அப்போது அது எனக்குக் கஷ்டமாகத் தெரியவில்லை. நினைத்ததை முடிக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே என் மனதில் இருந்தது.

கல்லூரியில் இறுதியாண்டு படித்துக்கொண்டிருக்கும்போதுதான் உதவி கலை இயக்குநராகச் சேர முயன்றேன். ஒவ்வொரு கலை இயக்குநராகப் போய் வாய்ப்புக் கேட்பேன். பிரபல இயக்குநர் ஒருவரிடம் வாய்ப்புக் கேட்க அடிக்கடி போவேன். அப்படி நான் போகும்போதெல்லாம் அவர் வீட்டில் இருக்க மாட்டார். `காலை 6 மணிக்குப் போனால்தான் அவரைப் பார்க்க முடியும்' என்று நண்பர்கள் சொல்வார்கள். ஒருநாள், அதிகாலையிலேயே போய் அவர் வீட்டுக் கதவைத் தட்டிவிட்டேன். அரைத் தூக்கத்தில் எழுந்து வந்த அவர், என்னை அடிக்க வந்துவிட்டார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். அப்படிப்பட்ட சம்பவங்களும் என் வாழ்க்கையில் நடந்துள்ளன. 
என்னுடைய நண்பர் கலை இயக்குநர் பிரபாகரன்தான் கலை இயக்குநர் சாபுசிரிலிடம் சொல்லி, சிபாரிசு செய்தார். அவரிடம் ஆர்ட் அசிஸ்டென்ட்டாகச் சேர்ந்து வேலை பார்த்தேன். அப்போது, ஓர் உதவியாளருக்கு என்னென்ன சிரமங்கள் ஏற்படுமோ அனைத்தையும் சந்தித்தேன். அவற்றையெல்லாம் எதிர்கொண்டுதான் கலை இயக்குநரானேன்.  

இயக்குநரானதும் முதல் படம் பண்ணுவதிலேயே பிரச்னை ஏற்பட்டது. படப்பிடிப்புத் தளத்தில் சாப்பாடு கொண்டு வந்திருப்பார்கள். சாப்பிடப் போனால் `யாராவது மேனேஜரை சொல்லச் சொல்லு சாப்பாடு தர்றேன்...' என்று விரட்டுவார்கள். ஏனென்றால், அப்போது எனக்கு 22 வயசு. அப்போதே வாய்ப்பு கிடைத்ததால், நான் கலை இயக்குநர் என்று சொன்னால்கூட நம்பமாட்டார்கள். அதன் பிறகு, மேனேஜர் வந்து சொன்னால்தான் சாப்பாடு கொடுப்பார்கள். இப்படி எல்லா இடத்திலும் பிரச்னைகள் இருக்கின்றன. அவற்றையும் நாம் எப்படி எடுத்துக்கொள்கிறோம் என்பதில்தான் வெற்றி, தோல்வி அடங்கியிருக்கிறது. 

ஒரு விஷயத்தைக் கஷ்டம் என்று நினைத்தால் அது கஷ்டமாகத்தான் தெரியும். என்னைப் பொறுத்தவரை, எதையும் கஷ்டம் என்று எடுத்துக்கொள்ள மாட்டேன். அப்படித்தான் ஒவ்வொரு வேலையையும் அணுகுவேன். அதனால், அது எனக்குக் கஷ்டமாகவே தெரியாது. அதனால்தான், பெரிய உயரங்களை என்னால் தொட முடிந்தது. 

1997-ம் ஆண்டு `குரு’ என்ற மலையாளப் படத்துக்கு கலை இயக்குநராகப் பணியாற்றினேன். அந்தப் படம் பெரிய கலை இயக்குநர்கள் வேலை செய்ய வேண்டிய படம். ஆனால், என் ஆரம்பக் காலகட்டத்திலேயே எனக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது. அந்தப் படத்துக்கு கேரள அரசின் `சிறந்த கலை இயக்குநருக்கான விருது' உள்ளிட்ட பல்வேறு விருதுகள் கிடைத்தன. இப்போது உள்ளதுபோல அப்போது இவ்வளவு வசதிகள் கிடையாது. உதவியாளர்கள்கூட குறைவுதான். அந்தப் படத்துக்கு ஒரு சிறிய குழுவை வைத்துக்கொண்டு இரவு, பகலாக வேலை செய்தேன். 

அந்தப் படத்துக்கு சேலத்தில் உள்ள ஒரு சுரங்கத்தில் செட் போட்டிருந்தோம். அது பெரிய செட் என்பதால், 500-க்கும் மேற்பட்ட கார்பென்டர்கள் தேவைப்பட்டார்கள். ஆனால், நான் குறைவான ஆட்களை வைத்துக்கொண்டு வேலை பார்த்தேன். காரணம், ஒரு வாரத்துக்குமேல் அந்தச் சுரங்கத்தில் வேலை பார்த்தால் மூக்கிலிருந்து ரத்தம் வடியும். அதனால், முதலில் 100 பேரை வரவழைத்து, அவர்களைக்கொண்டு செட் வேலைகளைப் பார்த்தேன். பிறகு, அவர்களை அனுப்பிவிட்டு வேறு 100 பேரை வரவழைப்பேன். இப்படியாக, அந்தப் படத்தின் செட் வொர்க்கை முடித்தேன். 

படப்பிடிப்புத் தளத்தில் ஓர் ஆம்புலன்ஸ் எப்போதும் நின்றுகொண்டிருக்கும். வேலையாட்கள் எத்தனை பேர் மாறினாலும், நான் மட்டும் அங்கேயே இருக்க வேண்டிய சூழல். எனக்கு மூக்கில் ரத்தம் வடியும். அதையெல்லாம் பொருட்படுத்தாமல் வேலை பார்த்தேன். ஏனென்றால், எனக்கு அந்தப் படத்தின் விஷுவல் நன்றாக வர வேண்டும் என்ற முனைப்பு மட்டுமே இருந்தது. எப்படியாவது அந்தப் படத்துக்கு சிறப்பான கலை இயக்கத்தைக் கொடுத்துவிட வேண்டும் என்ற ஆசையும் வெறியும் என்னுள் ஊறிப்போய் இருந்தது. பிறகு, அந்தப் படத்தின் `ப்ரீவியூ' பார்த்தபோது, நான் அழுதேவிட்டேன். இப்போது, அந்தப் படத்தின் காட்சிகளைப் பார்த்தால்கூட எனக்கு அழுகைவந்துவிடும்.

`குரு படத்துக்கு ஆர்ட் டைரக்ஷன் செய்தது நீங்கதானே?’ என்று இப்போதுகூட நிறைய நண்பர்கள் கேட்பதுண்டு. சினிமாவில் நிறைய படங்களுக்கு கலை இயக்குநராக வேலை பார்த்திருக்கிறேன். ஆனால், `குரு' படத்தை நினைத்தால்தான் எனக்கு மலைப்பாக இருக்கும். `இப்போது அதே படத்துக்கு நீங்கள் கலை இயக்குநராகப் பணியாற்றுங்கள்' என்று யாராவது சொன்னால், `என்னால் முடியாது' என்றுதான் சொல்வேன். தொழில்நுட்பங்கள் பெரிய அளவுக்கு வளராத அந்தக் காலகட்டத்தில் `குரு' படம், என் வாழ்க்கையில் ஒரு மைல்கல்தான்.

அந்தந்த காலகட்டங்களில் அந்தந்த பிரச்னைக்குத் தகுந்தவாறு மனஅழுத்தம் வந்திருக்கிறது. அதை எப்படி எதிர்கொள்கிறோம் என்பதைப் பொறுத்தே முடிவு இருக்கும். எனக்கு மனஅழுத்தம் அதிகமாக வரும். அப்போதெல்லாம் ஒன்றை மட்டுமே செய்வேன். என் மகனுடன் சேர்ந்து நன்றாக சமைக்க ஆரம்பித்துவிடுவேன். பிறகு, சாப்பிட்டுவிட்டு, ஒரு ஆழ்ந்த தூக்கம் போடுவேன். மனஅழுத்தத்தை கடக்க எனக்கு இது போதுமானதாக இருக்கிறது.

மனஅழுத்தம் ஏற்பட்டால் அதை அப்படியே ஏற்காமல், எப்படி எதிர்கொள்ளலாம் என்று யோசியுங்கள். இதை என்னால் செய்ய முடியும் என்று நம்பிக்கை கொள்ளுங்கள். பிரச்னை எதுவாக இருந்தாலும் அதை நீங்கள் வெல்லலாம்!” என்கிறார் டி.முத்துராஜ்.

அடுத்த கட்டுரைக்கு