Published:Updated:

``அவர்கள் எதிர்பார்ப்பது கைகுலுக்கலைத்தான்... கருணையை அல்ல!’’ - மூளை முடக்குவாதம் பாதித்த குழந்தைகளுடன் ஒரு நாள்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
``அவர்கள் எதிர்பார்ப்பது கைகுலுக்கலைத்தான்... கருணையை அல்ல!’’ - மூளை முடக்குவாதம் பாதித்த குழந்தைகளுடன் ஒரு நாள்
``அவர்கள் எதிர்பார்ப்பது கைகுலுக்கலைத்தான்... கருணையை அல்ல!’’ - மூளை முடக்குவாதம் பாதித்த குழந்தைகளுடன் ஒரு நாள்

பள்ளிக்குள் நுழைந்தது முதல் வெளியேறியது வரை நாம் சந்தித்த அனைத்துக் குழந்தைகளுமே, நம்மிடம் அவர்களை அறிமுகப்படுத்திக் கொள்வதில் மிகுந்த ஆர்வம் காட்டினார்கள். ``அவர்கள் நம்முடன் உரையாட, கைகுலுக்க, அளவளாவ விரும்புகிறார்கள்’’ என்பதை நாம் அதிலிருந்து புரிந்துகொள்ள முடிந்தது. 

ப்பான் நாட்டின் 125-வது மன்னர் அகிஹிடோ, ராணி மெஸிகோ இருவரும் 2013, டிசம்பரில் இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் வந்திருந்தார்கள். அப்போது தமிழ்நாட்டுக்கும் வந்தார்கள். மன்னரும் அரசியும் சென்னையில் பல இடங்களைச் சுற்றிப் பார்க்க அதிகாரிகள் திட்டம் வகுத்திருந்தார்கள். ஆனால், அவர்களின் திட்டத்தில் இல்லாத ஓரிடத்தைப் பார்க்க மன்னரும் ராணியும் பெரிதும் விரும்பினார்கள். அந்த இடம், மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்காக, சென்னை தரமணியில் செயல்பட்டு வரும் சிறப்புப் பள்ளி. தாங்கள் விரும்பியபடியே பள்ளியையும் குழந்தைகளையும் பார்த்து அளவளாவி, கண்ணீர் மல்க விடை பெற்றார்கள் மன்னரும் அரசியும். 

அப்படி அந்தப் பள்ளியில் என்னதான் இருக்கிறது? அறிந்துகொள்வதற்காக அங்குச் சென்றேன். 

சென்னை, திருவான்மியூர் ரயில் நிலையம் அருகே, வலதுபுறம் பிரிகிற சாலையில் இரண்டு கட்டடங்களைக் கடந்தால் நம் கண்ணில் படுகிறது `ஸ்பாஸ்டிக் சொசைட்டி ஆஃப் தமிழ்நாடு’ என்னும் அறிவிப்புப் பலகை.  

ஐ.டி மக்கள், சாரை சாரையாகத் தங்களின் அலுவலகங்களை நோக்கிப் பறந்துகொண்டிருக்கும் பரபரப்பான அந்தச் சாலையின் நடுவே உள்ளது அந்தப் பள்ளி. பெற்றோரின் விரல் பிடித்து ஸ்கூல் பேக் சகிதமாக வந்திறங்குகிறார்கள் அந்தச் சிறார்கள். அந்த இளம் பறவைகளுக்கு, சிறகுகளும் பறப்பதற்கு ஆசையும் இருக்கிறது. ஆனால், அவர்களின் சிறகுகளில் வலுவில்லை. விருப்பத்துக்கேற்ப அவர்களின் சிறகுகள் ஒத்துழைக்காமல்போனது என்பதுதான் பெருந்துயரம். அந்தத் துயரங்களை மறந்து தம் தாய்ப் பறவைகளின் துணையோடு, அதிகாலையிலேயே கிளம்பி பள்ளிக்கு வந்துவிடுகிறார்கள். 

என்னை அறிமுகப்படுத்திக்கொண்டு, ஆசிரியர் ஒருவரின் துணையோடு பள்ளியைச் சுற்றி வந்தேன். ஒரு சில பெற்றோர் வகுப்பறைக்குள்ளும், பலர் அந்த வளாகத்துக்குள்ளிருக்கும் மர நிழலிலும் தங்களின் குழந்தைகளுக்காகக் காத்திருக்கிறார்கள். தேவைப்படும்போது வகுப்பறைக்குச் சென்று குழந்தைகளைப் பார்க்கவோ, அவர்களின் அருகில் இருக்கவோ அவர்களுக்கு அனுமதியுண்டு என்பதுதான் ஆறுதல்.   

வகுப்பறைகளை நோக்கி நானும் அந்த ஆசிரியரும் நடக்க ஆரம்பித்தோம். முதலில் நாங்கள் சென்றது, 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான 'பிளே ஸ்கூல்'. குழந்தைகளைச் சுற்றிலும் விளையாட்டுப் பொருள்கள் கொட்டிக் கிடந்தன. ஆனாலும் அவர்களால் கை, கால்களை அசைத்து அவற்றை எடுக்க முடியவில்லை. அவர்களின் விரல் பிடித்து பொருள்களை எப்படித் தொடுவது, தூக்குவது, விளையாடுவதெனக் குழந்தைகளின் அம்மாக்களும் ஆசிரியரும் பொறுமையாகக் கற்றுக்கொடுத்துக்கொண்டிருந்தார்கள்.   
எல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்புகளும் பிளே ஸ்கூலின் தன்மையிலேயே இருக்கின்றன. கூடுதலாக, 'அ', 'ஆ'-வையும், ஏ.பி.சி.டி-யையும் கற்றுக் கொண்டிருந்தார்கள் குழந்தைகள். 

ஒன்று முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை இருக்கிறது இந்தப் பள்ளியில். பொதுவாக மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் அறிவு வளர்ச்சியில் எந்தப் பாதிப்பும் இருக்காது. தசைச் செயல்பாடுகளில்தான் தடுமாற்றம் இருக்கும். ஆனாலும், ஒரு சில குழந்தைகளுக்குக் கவனச்சிதறல் போன்ற பிரச்னைகள் இருக்கின்றன. ஆசிரியர் சொல்லிக்கொடுப்பதை, கவனம் குவித்து புரிந்துகொள்ள இயலாத குழந்தைகளுக்காகவே செயல்படுகிறது  'ஃபங்‌ஷனல் ஸ்கில் யூனிட் .' அங்கே கவனச்சிதறலைச் சரிசெய்வதற்கான சிறப்புப் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. 

கை,கால் மட்டுமல்லாது பார்வைக் கோளாறுகளாலும் ஒரு சில குழந்தைகள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களுக்கானது `மல்டிபிள் டிசேபிள் யூனிட்’ (Multiple disable unit). தங்களுடைய வகுப்பறைதானா என்பதைக் கண்டறிந்து கொள்வதற்கென சில அடையாளங்களை வைத்திருக்கிறார்கள். பார்வைத் திறனை மேம்படுத்துவதற்காக அவர்களுக்குப் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. இவை தவிர ஒரு பொருளை இறுகப் பற்றுவதற்குரிய பயிற்சி, ஊஞ்சலில் ஆடுவதற்குரிய பயிற்சி, உயரமான இடங்களில் ஏறுவதற்குரிய பயிற்சி ஆகியவை 'சென்சரி இன்டகரேஷன் யூனிட்டி'ல் வழங்கப்படுகிறது. இங்கே வழங்கப்படும் பயிற்சிகளுக்கு 'சென்சரி இன்டகரேஷன் தெரபி' என்று பெயர். ஆக்குபேஷனல் தெரபிஸ்ட் ஒருவர் இந்தப் பயிற்சிகளை வழங்குகிறார்.

இந்த அறைகளை எல்லாம் கடந்தால் 'கம்ப்யூட்டர் லேப்'. மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டு, கை, கால்கள் சரியாகச் செயல்பட முடியாத, தலை நேராக நிற்காத பெண் ஒருவர், அங்குமிங்கும் அலைந்துகொண்டிருந்தார். வயதில் கொஞ்சம் பெரிய தோற்றமுடையவராக இருந்ததால் ஒருவேளை பன்னிரண்டாம் வகுப்பு மாணவியாக இருப்பாரோ என்று யோசித்துக் கொண்டிருக்கும்போதே, அவர்தான் இந்த லேப்பின் இன்சார்ஜ் என அறிமுகம் செய்து வைத்தார் நம்முடன் வந்த ஆசிரியர். 

``பெயர் ஜெயஸ்ரீ, 17 வருஷமா இந்த லேப்ல இருக்காங்க’’ எனச் சொன்னதும், ``பதினேழு இல்ல 24 வருஷம்’’ என வேகமாகப் பதில் வந்தது ஜெயஸ்ரீயிடமிருந்து. '``நான் எம்.ஏ சோசியாலஜி படிச்சுருக்கேன். நான்தான் இந்த லேப் இன்சார்ஜ்’’ எனப் பெருமிதமாகச் சொன்னார்.  'டான்ஸ் தெரபி, மியூசிக் தெரபி, ஹைட்ரோ தெரபி' போன்ற பல தெரபிகளும் இந்தக் குழந்தைகளுக்கு வழங்கப்படுகின்றன.
பொதுவாக மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து குழந்தைகளாலும் நன்றாகப் படிக்க முடியாது. ஒரு சில குழந்தைகளுக்குக் கற்றல் குறைபாடு இருக்கும். அவர்களை மேலும் மேலும் படிக்கச் சொல்லி வற்புறுத்துவது, ஒருவிதத்தில் அவர்களுக்கு உளவியல் பாதிப்பை ஏற்படுத்தும். அப்படிப்பட்ட மாணவ, மாணவியர்களுக்கென சிறப்புத் தொழில் பயிற்சிகளும் இங்கே வழங்கப்படுகின்றன. அதற்கு `ஒக்கேஷனல் ட்ரெயினிங் பிளாக்' என்று பெயர்.

என்ன மாதிரியான பயிற்சிகளாக இருக்கும் என மனதுக்குள் ஆயிரமாயிரம் எதிர்பார்ப்புகளுடன் அந்தச் சாலையில் நடக்கத் தொடங்கியபோது, ``சார், எங்க போறீங்க, இங்க வந்து காஃபி சாப்பிட்டுப் போங்க’’ என ஒரு குரல் கேட்டது. திரும்பிப் பார்த்தால் பத்தாவது படிக்கத்தக்க இரு மாணவர்கள் கைகளை அசைத்து என்னை அழைத்தார்கள். 

``சில பசங்களுக்கு படிப்பு வராது. அவங்களுக்காக, காபி போடுறது, ஜூவல்லரி தயாரிக்கிறதுன்னு சில பயிற்சிகள் கொடுப்போம். இந்தப் பிள்ளைகள் காபி போடப் பயிற்சி பெற்றவங்க. ஒரு காபி 10 ரூபாய்...’’ என்றார் என்னுடன் வந்த ஆசிரியர். ``சும்மா சொல்லக் கூடாது, எங்க பசங்க காபி பிராமாதமாகப் போடுவாங்க சார்’’ என அவர் சொல்லவும் அந்த மாணவர்களின் இதழ்களில் அப்படியொரு புன்னகை. அவர் சொன்னது உண்மைதான். பாரம்பர்யமான ஒரு காபிக்கடையில் சாப்பிட்டது போன்ற சுவை. அவர்களைப் புகைப்படம் எடுக்க எத்தனித்தபோது, `என் பேரு ஜெயபிரகாஷ்', 'என் பேரு கே.டி.பிரவீன்' என உற்சாகத்தோடு தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டார்கள்.

அவர்களைக் கடந்து தொழில் பயிற்சிகளுக்கான பிரிவுக்குள் நுழைந்தால், வியப்பாக இருக்கிறது. அழகழகான கண்ணாடி ஆபரணங்கள், வண்ண வண்ண கால் மிதிகள், பேப்பர் பேக்ஸ், கீ செயின், பெல்ட், மெழுகுவத்திகள் என விதவிதமான கலைப் பொருள்களை மிகவும் நிதானமாகவும் நேர்த்தியாகவும் செய்துகொண்டிருந்தார்கள். மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டதற்கான எந்தவித அடையாளங்களும் அந்தக் குழந்தைகளிடத்தில் இல்லை. அவ்வளவு உற்சாகமாகவும் நம்பிக்கையாகவும் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். பெயர் சொல்லித் தங்களை அறிமுகப்படுத்திக் கொள்கிறார்கள். ``சார் இது நான் செஞ்சது’’, ``சார் இது நான் செஞ்சது சார்’’ என ஒவ்வொருவரும் ஒவ்வொரு பொருள்களைக் காட்டுகிறார்கள். அவர்களின் உதடுகளில் விரியும் புன்னகை, நம்பிக்கையையும் பெருமிதத்தையும் வெளிக்காட்டுகிறது.  

உடல் நன்றாகச் செயல்படும் பலரே இன்று ஏதேதோ காரணங்களைச் சொல்லி உழைக்கத் தயங்கும் வேளையில், இந்தக் குழந்தைகளின் உழைப்பு நம்மைச் சிலிர்க்க வைக்கிறது. 

பெரும்பாலும் 14 வயதுக்கு மேற்பட்ட, கல்வியால் வாழ்வைக் கடத்த முடியாது எனக் கண்டறியப்படும் குழந்தைகளுக்கு மட்டுமே இது போன்ற சுய தொழில் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. சுய தொழில் மட்டுமல்ல, வளாகத்துக்கு வெளியே இயங்கும் அதிநவீன புத்தகக் கடை, அதற்கடுத்தாக இருக்கும் ரெஸ்டாரண்டிலும் ஸ்பாஸ்டிக் பிரச்னையால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் வேலை பார்த்து வருகிறார்கள். 

அந்த உணவகத்துக்குச் சென்றேன். பரபரப்பான அந்த மதிய வேளையில், சாப்பிட வரும் ஐ.டி ஊழியர்களை இன்முகத்துடன் வரவேற்று உபசரித்துக்கொண்டிருக்கிறார்கள் அவர்கள். பட்டாம் பூச்சியைக் குட்டிக் குழந்தைகள் எட்டிப் பிடிப்பதைப்போல, உள்ளன்போடு தங்களுக்கு வழங்கப்பட்ட வேலைகளை மிகவும் ரசித்துச் செய்துகொண்டிருந்தார்கள். ஒவ்வொருவராக ``நான் அருண் சார்’’, ``நான் தினேஷ் சார்’’ எனத் தங்களை எங்களிடம் அறிமுகப்படுத்திக் கொண்டார்கள். நமக்கு முன்பே தெரிந்தாலன்றி அவர்கள் சிறப்புக் குழந்தைகள் என்பதை நாம் கண்டறியவே முடியாது. அந்தளவுக்கு உற்சாகத்தோடு இருந்தார்கள்.

இறுதியாக ட்ரஸ்ட்டின் இயக்குநர் ஜெயஸ்ரீயிடம் பேசினோம்,

``1981-ல், அப்போதைய தமிழக கவர்னர் சாதிக் அலியின் மனைவி சாந்தி சாதிக் அலி மற்றும் பல பெண் சமூக ஆர்வலர்களால் தொடங்கப்பட்டது இந்தப் பயிற்சிப் பள்ளி. அயனாவரத்தில் ஆறு குழந்தைகளுடன், வாடகை கட்டடத்தில் செயல்பட்டு வந்த இந்தப் பள்ளி, அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர் அளித்த ஐந்து எக்கர் நிலத்தில் விரிவுபடுத்தப்பட்டது. இன்று அயனாவரம், ராயப்பேட்டை, தரமணி என மூன்று இடங்களில் இப்பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. கிட்டத்தட்ட 1,200 குழந்தைகள் பயின்று வருகிறார்கள். இங்கு பயின்ற குழந்தைகள் பொறியாளர்களாக, வழக்கறிஞர்களாக இன்னும் பல துறைகளிலும் சாதித்துக்கொண்டிருக்கிறார்கள். 

இது போன்ற குழந்தைகளுக்குக் கற்பிப்பதற்காகப் பயிற்சிப் பள்ளி ஒன்றையும் நடத்தி வருகிறோம். ஆனால், இது பற்றிய போதிய விழிப்புஉணர்வு வெளியில் இல்லை. இது போன்ற படிப்புகளையும் படிக்க மாணவர்கள் முன்வர வேண்டும். பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு முடித்தவர்கள் இந்தச் சிறப்பு ஆசிரியர் பயிற்சியில் சேரலாம். எங்கள் காலம் முடியப்போகிறது. எங்களுக்கு அடுத்து யார் வழிநடத்துவது என்பதுதான் மிகப்பெரிய கேள்விக்குறியாக இருக்கிறது. இளைஞர்கள்தான் எங்களுக்கு ஆதரவு தர வேண்டும்’’ என்கிறார் இந்த டிரஸ்டின் இயக்குநர் ஜெயஸ்ரீ. இவரும் இந்தப் பயிற்சிப் பள்ளியில் பயின்று ஆசிரியாகப் பணியாற்றி, பின்னர் இயக்குநராகப்  பொறுப்பேற்றவர்கள்.

பள்ளிக்குள் நுழைந்தது முதல் வெளியேறியது வரை நாம் சந்தித்த அனைத்துக் குழந்தைகளுமே, நம்மிடம் அவர்களை அறிமுகப்படுத்திக் கொள்வதில் மிகுந்த ஆர்வம் காட்டினார்கள். ``அவர்கள் நம்முடன் உரையாட, கைகுலுக்க, அளவளாவ விரும்புகிறார்கள்’’ என்பதை நாம் அதிலிருந்து புரிந்துகொள்ள முடிந்தது.

குறைந்தபட்சம் இனிவரும் நாள்களில், நீங்கள் செல்லும் சாலையில் ஒரு சிறப்புக் குழந்தையைச் சந்தித்தால், அவர்களுடன் இரண்டு நிமிடங்களாவது செலவழியுங்கள். அவர்கள் விரும்புவது, உங்களின் கருணையை அல்ல. உங்களின் தோழமையை, உங்களின் கைகுலுக்கலைத்தான்.  

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு