சினிமா நடிகர்களுக்கு இணையாக மக்களை அதிகம் ஈர்ப்பவர்கள் விளையாட்டு வீரர்கள். தங்கள் துறையில் முத்திரை பதிக்கவேண்டுமென்றாலும், ரசிகர்களை குஷிப்படுத்தவேண்டுமென்றாலும் வீரர்கள் தொடர்ந்து போட்டிகளில் விளையாடிக்கொண்டே இருக்க வேண்டும். அதற்கு முக்கியத் தடையாக இருப்பவை, அவர்களின் ஆரோக்கியக் குறைபாடுகள்தாம்.

காயங்கள், உணவுப்பழக்கம்... என அவர்கள் ஃபிட்னெஸைப் பறிகொடுப்பதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. விளையாட்டு வீரர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள், அவற்றுக்கான தீர்வுகள், ஆரோக்கியத்தைத் தக்கவைத்துக்கொள்ள பின்பற்றவேண்டிய வழிமுறைகள் எல்லாவற்றையும் விளக்குகிறார் விளையாட்டு மருத்துவ நிபுணர் சத்யா விக்னேஷ்.

மருத்துவத்தில் ஒரு சிறப்புப் பிரிவாக மாறியிருக்கிறது. `விளையாட்டு மருத்துவம்.’ 20-ம் நூற்றாண்டில்தான் இது, ஒரு தனித் துறையாக உருவெடுத்தது. இந்தத் துறையின் மருத்துவ நிபுணர்கள், ஒவ்வொரு விளையாட்டு வீரரின் தன்மைக்கேற்ப சிகிச்சையளிப்பார்கள். மேலும், அவர்களுக்கான ஃபிட்னெஸ், அவர்களுக்கு ஏற்படும் காயங்கள், எலும்பு முறிவுகளுக்கான சிகிச்சைகள் மற்றும் அடிபடாமல் விளையாடுவதற்கான ஆலோசனைகளை வழங்குவார்கள். அதோடு, உணவு மற்றும் ஊட்டச்சத்து ஆலோசனைகளையும் வழங்குவார்கள்.

சாலை விபத்துகளில் சிக்கிக்கொள்ளும் விளையாட்டு வீரர்களுக்கு ஏற்படும் காயத்துக்கும் இதே மருத்துவர்கள்தாம் சிகிச்சையளிக்கிறார்கள். கைப்பகுதியைப் (Upper Limb) பயன்படுத்தி விளையாடும் டென்னிஸ், பேட்மிண்டன், இறகுப்பந்து, கூடைப்பந்து, கைப்பந்து போன்றவை, ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் போன்ற தனிநபர் விளையாட்டுகள், மற்றொருவருடன் சேர்ந்து விளையாடும் கால்பந்து, குத்துச்சண்டை, மல்யுத்தம், கபடி என மூன்று முக்கியப் பிரிவுகளாக விளையாட்டுகள் பிரிக்கப்பட்டிருக்கின்றன. கைப்பகுதியைப் பயன்படுத்தி விளையாடுபவர்களுக்கு தோள்பட்டை இணைப்பு விலகுதல், தசைகளில் ஜவ்வு கிழிதல் போன்ற பிரச்னைகள் ஏற்படலாம். அப்போது தோள்பட்டையில் வலி, தோள்பட்டைப் பகுதியில் உணர்விழப்பது, கூச்ச உணர்வு போன்றவை ஏற்படும். இவை தோள்பட்டை விலகியதற்கான அறிகுறிகள்.

கால்களைப் பயன்படுத்தி விளையாடும் ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், தடை தாண்டுதல் ஆகியவற்றை விளையாடுபவர்களுக்குக் கால்களில் தசை இறுக்கம், சுளுக்கு, கணுக்கால் சேதம், மூட்டு ஜவ்வு கிழிதல் போன்றவை ஏற்பட வாய்ப்பிருக்கிறது. வட்டு எறிதல், குண்டு எறிதல், ஈட்டி எறிதல் போன்றவற்றில் ஈடுபடுபவர்களுக்கு தோள்பட்டையில் ஜவ்வு கிழிய வாய்ப்பிருக்கிறது. கிரிக்கெட், கால்பந்து போன்றவற்றில் ஈடுபடுபவர்களுக்கும் இதே பிரச்னைகள் ஏற்படலாம். மற்றவருடன் சேர்ந்து விளையாடும் மல்யுத்தம், குத்துச்சண்டை, கபடி, கால்பந்து, ஹாக்கி போன்றவற்றில் காயங்கள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். ஒருவருடன் ஒருவர் தெரிந்தோ, தெரியாமலோ மோதும்போது இயல்பாகவே காயம் ஏற்படுவது சகஜம். சில நேரம் எலும்பு முறிவுகூட ஏற்படலாம்.

மோட்டார் சைக்கிள் மற்றும் கார் பந்தயத்தில் ஈடுபடுபவர்கள் விபத்துக்குள்ளாகும்போது காயங்கள் ஏற்படும். கார் பந்தயத்தைவிட, பைக் பந்தயத்தில்தான் விபத்துக்கான வாய்ப்புகள் அதிகம். விபத்தில் எலும்பு முறிவு, ஜவ்வு கிழிதல் போன்றவை ஏற்படலாம். விபத்தின் தன்மையைப் பொறுத்து காயங்கள் அமையும். மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் உரிய தற்காப்பு நடவடிக்கைகளுடன் பங்கேற்க வேண்டும். சைக்கிள் பந்தய வீரர்கள் அதிக நேரம் சைக்கிள் ஓட்டுவதால் அவர்களுக்கும் ஜவ்வு கிழிதல் பிரச்னை ஏற்பட வாய்ப்பிருக்கிறது. இதிலும் விபத்துக்கு வாய்ப்பு உண்டு.

விளையாட்டு வீரர்களின் பொதுவான பிரச்னை தோள்பட்டை மற்றும் கால் மூட்டில் ஜவ்வு கிழிதல் (Ligament Tear). எம்ஆர்ஐ ஸ்கேன் எடுத்து, எந்த இடத்தில் பிரச்னை என்பதைக் கண்டறிய வேண்டும். இதற்கு நுண்துளை கருவி மூலம் ‘ஆர்த்ரோஸ்கோப்பி லிகமென்ட் ரீகன்ஸ்ட்ரக்ஷன், (Arthroscopy Ligament Reconstruction) என்ற சிகிச்சை அளிக்கப்படும். உடலின் வேறு பகுதியிலிருக்கும் ஜவ்வை எடுத்து பாதிக்கப்பட்ட இடத்தில் பொருத்துவார்கள். சாலை விபத்தால் ஜவ்வு கிழிதல் பிரச்னை ஏற்படுபவர்களுக்கும் இதே சிகிச்சை அளிக்கப்படும். ஆர்த்ரோஸ்கோப்பி லிகமென்ட் ரீகன்ஸ்ட்ரக்ஷன் சிகிச்சைக்குப் பிறகு, விளையாட்டு வீரரின் செயல்திறனை மீட்டெடுக்கும் உடற்பயிற்சிகளையும் (Rehabilitation Exercises) செய்ய வேண்டும். இதன் மூலம் அவர்களின் பழைய அதே செயல்திறனை மீட்டெடுக்க முடியும். ஆனால், சிகிச்சை, உடற்பயிற்சிகளின் மூலம் இயல்புநிலைக்குத் திரும்ப ஏழு முதல் எட்டு மாதங்கள்வரை ஆகலாம்.

தொடை எலும்புக்கும் கால் எலும்புக்கும் இடையில் ‘C’ வடிவில் ஒரு ஜவ்வு (Meniscus) காணப்படும். இரண்டு எலும்புகளும் நேரடியாக உராய்வதைத் தடுக்கும் வகையில் தலையணைபோல இது அமைந்திருக்கும். இது கிழிந்தால் ஆர்த்ரோஸ்கோப்பி சிகிச்சை மூலம் தைத்துவிடுவார்கள். சீரமைக்க முடியாத அளவுக்குச் சேதமடைந்திருந்தால், சேதமடைந்த பகுதியை கத்தரித்துவிடும் (Trim) சிகிச்சை செய்யப்படும். விளையாடும்போது எலும்பு மூட்டில் சுளுக்கு ஏற்பட்டால், `RICE’ என்ற முதலுதவியைச் செய்ய வேண்டும்.

R - Rest
I - Ice
C - Compress
E - Elevate

சுளுக்கு ஏற்பட்டால், அந்தப் பகுதிக்கு வேலை கொடுக்காமல் முதலில் ஓய்வெடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட இடத்தில் ஐஸ் பேக் வைத்து ஒற்றடம் கொடுத்து, அந்த இடத்தை அழுத்திப் பிடித்துக்கொள்ள வேண்டும். அடிபட்ட இடத்தை சற்று உயரமாக வைத்துக்கொள்ள வேண்டும். பிறகு மருத்துவரிடம் சென்று எக்ஸ்ரே பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். பரிசோதனையில் வெறும் சுளுக்கு என்று தெரிந்தால், மாத்திரைகளும் போதிய ஓய்வும் இருந்தால் போதும், குணமாகிவிடும். சுளுக்கு ஏற்பட்ட மூன்றிலிருந்து நான்கு வாரங்களுக்குள் மீண்டும் விளையாட்டுக்குத் திரும்பிவிடலாம்.

தோள்பட்டை விலகுதல் (Shoulder Dislocation) ஏற்பட்டால், அந்தப் பகுதிக்கு அசைவு கொடுக்கக் கூடாது. உடனடியாக மருத்துவரைச் சந்தித்து எக்ஸ்ரே பரிசோதனை செய்ய வேண்டும். முதன்முறையாக இந்தப் பிரச்னை ஏற்படும்போது விலகிய தோள்மூட்டை அறுவை சிகிச்சை செய்யாமலேயே பொருத்திவிட முடியும்.

சிலருக்குத் தொடர்ச்சியாக தோள்பட்டை விலகும் பிரச்னை இருக்கும். தோள்பட்டை என்பது ஒரு பந்து கிண்ண மூட்டு. கையின் மூட்டு, பந்துபோல இருக்கும். தோள்பட்டை பகுதி கிண்ணம்போல இருக்கும். கையின் மூட்டுப் பகுதி கிண்ணம் போன்ற பகுதியில் பொருந்தியிருக்கும். கையின் இயக்கம் அதிகமாக இருக்கும்போது பந்து போன்ற மூட்டு, கிண்ணத்தைவிட்டு விலகி ஓடிவிடும். அதைத் தடுப்பதற்கு தோள்பட்டைப் பகுதியில் வேகத்தடை போன்ற திசுக்கள் அமைப்பு (Labrum) இருக்கும். பந்து, கிண்ணத்தைவிட்டு விலகும்போது வேகத்தடையில்பட்டு மீண்டும் அதன் இடத்துக்கு வந்துவிடும். அந்தத் திசுக்கள் அமைப்பு சேதமடையும்போது, இயல்பானநிலைக்கு கைமூட்டு செல்ல முடியாமல், தோள்பட்டை விலகுதல் ஏற்படும்.

இந்தப் பிரச்னைக்கு நுண்துளை சிகிச்சையின் மூலம் (Arthroscopic Bankart Surgery) சேதமடைந்த ‘லேப்ரம்’ திசுக்கள் இழுக்கப்பட்டு, மீண்டும் அதே இடத்தில் வைத்து தைக்கப்படும். அடிக்கடி இந்தப் பிரச்னை ஏற்படுபவர்களுக்கு, திசுக்களுடன் எலும்பும் தேய்மானம் அடைந்திருக்கும். அதற்கு திசுக்கள் சீரமைப்புச் சிகிச்சையுடன், அறுவை சிகிச்சை மூலம் வேறு பகுதியிலிருக்கும் எலும்பை எடுத்து, தேய்மானம் அடைந்த இடத்தில் வைத்து ஸ்க்ரூ போட்டுப் பொருத்தும் சிகிச்சை செய்யப்படும்.

மற்றவருடன் சேர்ந்து விளையாடும் விளையாட்டுகளில் ஒருவருடன் ஒருவர் மோதி காயங்கள், எலும்பு முறிவு ஏற்படலாம். ஆனால், அதற்கான வாய்ப்பு மிக மிகக் குறைவு. அதன் தீவிரமும் சாலை விபத்துகளில் ஏற்படும் எலும்பு முறிவுகளைவிடக் குறைவாகவே இருக்கும். இதற்கு, அறுவை சிகிச்சையின் மூலம் முறிவு ஏற்பட்ட பகுதியில் செயற்கை உபகரணங்கள் பொருத்தித் தீர்வு காணலாம். இதனாலும் ஒரு வீரர் மீண்டும் விளையாட்டுக்குத் திரும்புவது சாத்தியமாகும்.

காயங்களுக்கு சிகிச்சை பெறும்போது, குறிப்பிட்ட தசைகள் வலுவடையும்வரை விளையாடக் கூடாது என்று மருத்துவர்கள் அறிவுறுத்துவார்கள். அறுவை சிகிச்சை அல்லது பிற சிகிச்சைகளுக்குப் பிறகு அளிக்கப்படும் பயிற்சிகளால் தசைகள் வலுவடைந்துவிட்டனவா என்பதைக் கண்டறிய தர அளவீட்டு முறைகள் இருக்கின்றன. அவை கணக்கிடப்பட்ட பிறகு மீண்டும் விளையாட அனுமதியளிப்பார்கள்.

மிக மோசமான காயங்கள், மூட்டுகளில் ஒரே நேரத்தில் பல ஜவ்வுகள் கிழிதல் போன்றவை ஏற்பட்டவர்களுக்கு எதிர்காலத்தில் மீண்டும் பாதிப்பு ஏற்பட வாய்ப்பிருக்கிறது. அவற்றுக்கும் சில சிகிச்சைகளின் மூலம் தீர்வு காணலாம். ஒருவருக்கு 60 வயதில் மூட்டுத் தேய்மானம் வர வாய்ப்பிருந்தால், இதுபோலக் காயங்கள் ஏற்பட்டு அறுவை சிகிச்சை செய்தவர்களுக்கு 55 வயதிலேயே வரலாம்.

மூட்டில் காயம், ஜவ்வு கிழிதல் ஏற்பட்டால் சிலர் சிகிச்சையெடுக்காமல் தொடர்ந்து விளையாடிக்கொண்டே இருப்பார்கள். அதனால் பாதிப்புகள் மேலும் தீவிரமாகும்; மூட்டுத் தேய்மானம் ஏற்படும் வாய்ப்புகள் அதிகரிக்கும். ஒருவர், தான் விளையாடும் உத்தியை திடீரென மாற்றும்போதும் காயங்கள் ஏற்படலாம். இத்தனை நாள்களாக பழக்கத்தில் இல்லாத அசாதாரண நிலையில் விளையாடுவதால் தசைகளில் இறுக்கம் ஏற்பட்டு, காயம் ஏற்படலாம். ஒரு புதிய உத்தி, அந்த வீரருக்கு ஏற்றதாக இருந்தால் மட்டுமே பின்பற்ற வேண்டும். கட்டாயத்தின்பேரில் உத்தியை மாற்றி விளையாடினால் நிச்சயம் பாதிப்பு ஏற்படும்.

விளையாட்டுகளிலேயே மிகவும் பாதுகாப்பானவை உள் அரங்க விளையாட்டுகளான சதுரங்கம், கேரம், பில்லியர்ட்ஸ் போன்றவை. இவற்றில் ஈடுபடுபவர்களுக்கு உடல்ரிதீயான எந்தப் பிரச்னையும் ஏற்படாது. ஆனால், மனச்சோர்வு அதிகமாக இருக்கும். தியானம், உடற்பயிற்சிகள், உளவியல் ஆலோசனை போன்றவற்றின் மூலம் இதிலிருந்து விடுபடலாம்.

விளையாட்டு வீராங்கனைகள் மாதவிடாய் நாள்களில் விளையாட்டில் அல்லது பயிற்சியில் பங்கேற்றால், தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும். பெண்களின் உடல் இயக்கம் மாதவிடாய் சுழற்சிக்கு ஏற்றதாகவே இருக்கும். அதனால் மாதவிடாயால் கூடுதல் பலவீனம் ஏற்படாது. அந்த நாள்களில் நடக்கும் ஹார்மோன்கள் மாற்றத்தால் சோர்வு ஏற்படலாம். அதைச் சமாளிக்க போதிய அளவு தண்ணீர், ஊட்டச்சத்துள்ள உணவுகள், ஓய்வு போன்றவை போதுமானவை.

`நீண்ட நாள்கள் விளையாட்டில் ஈடுபடும் பெண்களுக்கு ஆண்மைத் தன்மை ஏற்படும்’ என்றொரு கருத்து இருக்கிறது. பெண்கள் பிரிவில் பங்கேற்று வெற்றி பெற்றிருந்தாலும், `ஆண்மைத் தன்மை இருக்கிறது’ என்று மருத்துவப் பரிசோதனையில் நிரூபிக்கப்பட்டு, வென்ற பதக்கங்கள் திரும்பப் பெறப்பட்ட சம்பவங்களும் வரலாற்றில் உள்ளன. ஆனால், விளையாடுவதால் ஒரு பெண்ணின் இயல்பு மாறுவதற்கு 100 சதவிகிதம் வாய்ப்பில்லை.

தொடர்ந்து விளையாட்டில் ஈடுபடும் பெண்கள் தசைகள் வலிமை பெற்று, கட்டுமஸ்தான உடல் அமைப்புக்கு மாறி, சற்று முரட்டுத்தனமாக இருப்பதுபோலத் தோற்றமளிக்கலாம். இதனால் அவர்களுக்கு ஆண்மைத் தன்மை ஏற்பட்டுவிட்டது என்று நமக்கு நினைக்கத் தோன்றுகிறது. ஒரு விளையாட்டு வீராங்கனை தொடர்ந்து விளையாடி, உடலை ஆரோக்கியமாக வைத்திருந்தால் அவர்களுக்கு ஹார்மோன்களின் செயல்பாடு நன்றாக இருக்கும். ஆனாலும், ஹார்மோன் மாற்றங்கள் ஏற்பட்டு ஆண்மைத் தன்மை வருவதற்கு வாய்ப்பே இல்லை.

பெண்களுக்குப் பிரசவத்தின்போது ஹார்மோன் மாற்றத்தால் அனைத்துத் தசைகளும் தளர்வடையத் தொடங்கும். இடுப்பு எலும்புப் பகுதி தளர்ந்து, குழந்தையைப் பிரசவிக்கத் தயாராகும். பிரசவத்தின்போது ஏற்பட்ட ஹார்மோன்கள் மாற்றத்தின் தன்மை குறையும்வரை பழைய ஃபிட்னெஸுக்குப் பெண்களால் திரும்ப முடியாது. ஐந்து அல்லது ஆறு மாதங்களுக்குப் பிறகுதான் இயல்புநிலைக்குத் திரும்பி, மீண்டும் விளையாட்டில் ஈடுபட முடியும். பெண்கள், தங்கள் உடலிலிருக்கும் சத்துகள் அனைத்தையும் பிரசவத்தின்போது இழந்திருப்பார்கள். அதனால் மீண்டும் விளையாட வரும்போது கால்சியம், புரதச்சத்துள்ள உணவுகளை அதிகம் உட்கொள்ள வேண்டும். விளையாட்டுக்குத் திரும்பினாலும், அவர்கள் குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்த வேண்டியதில்லை.

டென்னிஸ் எல்போ

விளையாட்டின் பெயராலேயே அழைக்கப்படும் ஒரு பிரச்னை ‘டென்னிஸ் எல்போ’ (Tennis Elbow). முழங்கையிலிருந்து மணிக்கட்டுக்கு ஒரு ஜவ்வு செல்லும். மணிக்கட்டின் இயக்கத்தை நிர்வகிப்பது அதுதான். முழங்கையில் அந்த ஜவ்வு தொடங்கும் இடத்தில், வெளிப்புறமாக ஏற்படும் வீக்கம்தான் டென்னிஸ் எல்போ. டென்னிஸ் வீரர்களுக்கு இது அதிகமாக ஏற்படுகிறது என்பதால் இதற்கு இந்தப் பெயர் வந்தது. கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு இந்தப் பிரச்னை இருந்தது.

முழங்கைப் பகுதி ஜவ்வின் வெளிப்புறம் ஏற்படும் வீக்கம் டென்னிஸ் எல்போ. அதே வீக்கம் உட்புறம் ஏற்பட்டால் அதற்கு ‘கோல்ஃபர்ஸ் எல்போ’ (Golfers Elbow) என்று பெயர். கோல்ஃப் விளையாட்டு வீரர்களுக்கு இது அதிக அளவில் ஏற்படும். ஒரு குறிப்பிட்ட நிலையில், அதிக நேரம் சிரமப்பட்டு விளையாடினால் டென்னிஸ் எல்போ, கோல்ஃபர்ஸ் எல்போ பிரச்னைகள் ஏற்படும். அந்தப் பகுதியை அசைத்தால் வலி அதிகரிக்கும். இதற்கு பிசியோதெரபி சிகிச்சைகள், ஸ்ட்ரெச்சிங் பயிற்சிகள், வீக்கத்தைக் குறைப்பதற்கான மருந்துகள் கொடுக்கப்படும். அதற்குப் பிறகும் வலி குறையவில்லையென்றால், அறுவை சிகிச்சை மூலம் வலியை ஏற்படுத்தும் சதைப்பகுதி அகற்றப்பட்டு, அந்த இடம் மீண்டும் சீரமைக்கப்படும்.

மைதானத்தில் அடிபட்ட வீரருக்கு, மருத்துவர்கள் அல்லது பிசியோதெரபி நிபுணர்கள் ஓடிச் சென்று ஸ்பிரே அடிப்பதைப் பார்த்திருப்போம். அது அடிபட்ட காயத்துக்கான சிகிச்சை அல்ல. வலி நிவாரண ஸ்பிரே. விளையாட்டைப் பாதியில் நிறுத்தாமல் தொடர்ந்து விளையாட, அடிபட்ட இடத்தில் வலி தெரியாமல் இருப்பதற்குத்தான் அந்த மருந்து.

எந்த விளையாட்டாக இருந்தாலும், அதைத் தொடங்குவதற்கு முன்னர் ‘வார்ம் அப்’ பயிற்சிகளைச் செய்ய வேண்டும். அதேபோல, விளையாட்டை நிறைவு செய்ததும் ‘கூலிங் டவுண்’ பயிற்சி செய்யவேண்டியது மிக அவசியம். போட்டிகளில் மட்டுமல்ல, பயிற்சியின்போதும் இரண்டு வகையான உடற்பயிற்சிகளையும் செய்ய வேண்டும். `வார்ம் அப்’ பயிற்சிகள் உடலிலிருக்கும் தசைகளின் இறுக்கத்தைத் தளர்த்தி, இயல்பாக இயங்க உதவும். இவற்றை முறையாகச் செய்தால், விளையாட்டின்போது காயங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் குறையும்.

‘கூலிங் டவுண்’ பயிற்சிகளும் முக்கியமானவையே. சில வீரர்கள், குறிப்பிட்ட சில தசைகளை அதிகம் பயன்படுத்துவார்கள். அதனால் அந்த இடங்களில் லாக்டிக் அமிலம் அதிகமாகச் சுரக்கும். விளையாட்டு முடிந்ததும், ‘கூலிங் டவுண்’ பயிற்சிகளை மேற்கொண்டால்தான், அந்த அமிலம் தசைகளால் உறிஞ்சப்படும். அப்போதுதான் மீண்டும் விளையாடும்போது அவர்களால் சோர்வில்லாமல் விளையாட முடியும்.

விளையாட்டு மருத்துவத் துறையில் `விளையாட்டு உளவியல்’ என்ற பிரிவும் பிரபலமாகிவருகிறது. விளையாட்டு வீரர்களுக்கு ஏற்படும் பிரச்னைகளுக்கு மனநல மருத்துவர்கள் உளவியல்ரீதியாக தீர்வு அளிப்பார்கள். காயம் காரணமாக ஒரு வீரரால் விளையாட முடியாமல் போனால், அது அவருக்கு மனஅழுத்தத்தை ஏற்படுத்தும். அப்படிப்பட்ட வீரர்களுக்கு மருத்துவச் சிகிச்சை நிறைவடைந்து குணமாகும் தறுவாயில், உளவியல் ஆலோசனைகள் அளிக்கப்படும். விளையாட்டு உளவியல் நிபுணர்கள் அவர் மீண்டும் விளையாட்டுக்குத் திரும்ப ஊக்கமளிப்பார்கள்.

மோசமாக விளையாடி, மனஅழுத்தத்துக்கு ஆளாகும் வீரர்கள், காயத்திலிருந்து குணமடைந்ததும் சரியாக விளையாட முடியுமா என்ற பதற்றத்துக்குள்ளாவார்கள். அவர்களுக்கு நவீன தொழில்நுட்ப உதவியுடன் ‘கைடடு இமேஜரி’ (Guided Imagery) என்ற பயிற்சி அளிக்கப்படும். அந்தப் பயிற்சியில் குறிப்பிட்ட வீரர் மைதானத்தில் விளையாடுவதுபோல உருவகப்படுத்தப்படும். போட்டியில் பிரமாதமாக விளையாடி, அவர் வெற்றி பெறுவதுபோலப் பயிற்சி அளிக்கப்படும். வெற்றி பெறும் நேர்மறை விளைவு, சம்பந்தப்பட்ட வீரரின் மனதுக்குக் கடத்தப்படும். இதன் மூலம் வெற்றி பெற்ற நிகழ்வு அவர் மனதில் மீண்டும் மீண்டும் பதியவைக்கப்படும். இதனால் நீண்ட இடைவேளைக்குப் பிறகும்கூட ஒருவர் மீண்டும் வெற்றிகரமாக விளையாடத் தொடங்குவது எளிதாகும்.

இன்றைய குழந்தைகள் வெளியில் சென்று விளையாடுவதற்கு பெற்றோர் அனுமதிப்பதில்லை. அப்படி விளையாடினால்தான் விதிகளைப் பின்பற்றுவது, சமூகப் பழக்கம் போன்றவை மேம்படும். சூரிய ஒளியிலிருந்து கிடைக்கும் வைட்டமின் டி கிடைக்கும், ஆக்ஸிஜன் அதிக அளவில் தசைகளுக்குச் சென்று, அவற்றை வலிமையடையச் செய்யும். உடலிலுள்ள தேவையற்ற கலோரிகள் எரிக்கப்படும்.

ஒரு குழந்தையோ அல்லது ஓர் இளைஞரோ தான் எந்த விளையாட்டை விளையாட வேண்டும் என்று சுயமாகத் தீர்மானிக்க வேண்டும். பெற்றோரின் கட்டாயத்தால் ஒரு விளையாட்டைத் தேர்ந்தெடுக்கக் கூடாது. ஆர்வமில்லாததால் கவனம் செலுத்தி ஒரு விளையாட்டை விளையாடவும் முடியாது. அது தொடர்ந்தால், விளையாட்டில் அவர்களின் செயல்திறன் பாதிக்கப்படும். இது போன்றவர்கள் குழு விளையாட்டுகளில் ஈடுபடும்போது, `நம்மால்தான் அணி தோற்றுவிட்டது’ என்ற தாழ்வு மனப்பான்மையும் மனஅழுத்தமும் ஏற்படும்.

வெளிப்புறங்களில் அதிக சூரிய ஒளியில் விளையாடுபவர்கள் தங்கள் சருமத்தைப் பாதுகாத்துக்கொள்ள சன்ஸ்கிரீன் லோஷன் பயன்படுத்தலாம். வெளிப்புறத்தில் அதிக நேரம் விளையாடுபவர்கள் எஸ்பிஎஃப் (SPF) அதிகமாக இருக்கும் சன்ஸ்கிரீன் லோஷன்களைப் பயன்படுத்தலாம். குறைவான நேரம் விளையாடுபவர்கள் அல்லது மீண்டும் மீண்டும் சன்ஸ்கிரீன் பயன்படுத்த முடியும் என்பவர்கள் குறைவான எஸ்பிஎஃப் அளவுள்ள சன்ஸ்கிரீன் லோஷன்களைப் பயன்படுத்தலாம். சரும மருத்துவரின் ஆலோசனையுடன் ஒவ்வொருவரின் சருமத்தின் தன்மைக்கேற்றதைத்தான் பயன்படுத்த வேண்டும்.

தொழில்முறையாக அல்லாமல் ஆர்வத்தோடு சிலர் அவ்வப்போது குழுவாக இணைந்து விளையாடுவார்கள். திடீரென்று விளையாடுவதால் அவர்களில் சிலர் காயமடைவார்கள். ஒருவர், பல ஆண்டுகளுக்கு முன்னர் தொழில்முறை விளையாட்டு வீரராக இருந்திருப்பார். அவர் பல ஆண்டுகளாக விளையாடாமல், திடீரென்று விளையாடினால் காயம் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். காரணம், இத்தனை ஆண்டுகளில் அவர் உடல் எடை அதிகரித்திருக்கலாம்; விளையாட்டில் இடைவெளி விழுந்துவிட்டதால் ஃபிட்னெஸ் பாதிக்கப்பட்டிருக்கலாம்.

`முன்பு எப்படி விளையாடினோமோ, அதேபோல இப்போதும் முடியும்’ என்று நினைத்து, அதே வேகத்தில் விளையாடினால் காயம் ஏற்படலாம். சிறு குழுக்களாக இணைந்து அவ்வப்போது விளையாடினாலும் வார்ம் அப், கூலிங் டவுண் பயிற்சிகளைச் செய்ய வேண்டும். உண்மையாகவே ஆர்வம் இருந்தால் விளையாடலாம். அலுவலகத்தில் அல்லது நண்பர்கள் கட்டாயப்படுத்துகிறார்கள் என்பதற்காக விளையாடக் கூடாது. நுட்பம் தெரியாமல் விளையாடினால் காயம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. பொழுதுபோக்குக்கான விளையாட்டாக இருந்தால், அதே மனநிலையில் விளையாட வேண்டும். மாறாக, போட்டியில் பங்கேற்றதாக நினைத்துக்கொண்டு கஷ்டப்பட்டு விளையாடினால் காயங்கள்தாம் பரிசாகக் கிடைக்கும்.

மைதானத்தில் விளையாட்டில் நிகழ்ந்த விபத்துகளால் வீரர்கள் உயிரிழந்த பல சம்பவங்கள் உண்டு. எனவே, எந்த விளையாட்டில் ஈடுபட்டாலும் வீரர்கள் அதற்கான தற்காப்பு வழிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். அவற்றைக் கையாள்வதில் அலட்சியம் காட்டக் கூடாது; பாதுகாப்பு உபகரணங்கள் அணிவதைத் தவிர்க்கக் கூடாது.

விளையாட்டு வீரர்கள் என்றாலே `திடகாத்திரமானவர்கள்; அவர்களுக்கு எந்த நோயும் வராது’ என்ற எண்ணம் பலருக்கும் இருக்கும். புற்றுநோய் போன்ற பல நோய்களால் பாதிக்கப்பட்ட வீரர்களும் இருக்கிறார்கள். அவை மரபணு பிரச்னைகளாலும், வேறு காரணங்களாலும் ஏற்படுவதேயன்றி, அவற்றுக்கும் விளையாட்டுக்கும் தொடர்பில்லை. ஒருவரின் மரபணுவில் ஒரு நோய் ஏற்படுவதற்குச் சாதகமான அம்சம் இருந்தால், அது வருவதைத் தடுக்க முடியாது. ஆனால், ஆரோக்கியமான வாழ்க்கைமுறை, உணவுப் பழக்கம் ஆகியவற்றால் நோயைத் தள்ளிப்போட முடியும்.

விளையாட்டு வீரர்கள் சரிவிகித உணவைச் சாப்பிட வேண்டும். கார்போஹைட்ரேட், புரதச்சத்து ஆகியவற்றைச் சமமாக எடுத்துக்கொள்ள வேண்டும். அப்போதுதான் விளையாடுவதற்குத் தேவையான ஆற்றல் கிடைக்கும். ஊட்டச்சத்து நிறைந்த இயற்கை உணவுகள், காய்கறிகள், பழங்கள் போன்றவற்றைச் சாப்பிடுவது நல்லது.

விளையாட்டு வீரர்களுக்கு வியர்வை அதிகம் வெளியேறும் என்பதால், நீரிழப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம். போதுமான அளவு தண்ணீர், நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகள், பழங்கள் சாப்பிடுவது நீரிழப்பைத் தடுக்கும். பயிற்சியின்போதும், விளையாட்டின்போதும் உப்பு, சர்க்கரைக் கரைசல் குடிப்பதும் நீர்ச்சத்து இழப்பைத் தடுக்கும்.

செயல்திறனை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக விளையாட்டு வீரர்கள் புரோட்டீன் பவுடர் போன்ற துணை உணவுகளை எடுத்துக்கொள்கிறார்கள். ஒரு நாளைக்கு ஒரு மனிதனுக்கு அவரது எடையின் ஒவ்வொரு கிலோவுக்கும் ஒரு கிராம் அளவு புரதச்சத்து தேவை. அதாவது 60 கிலோ எடையுள்ள ஒருவருக்கு தினமும் 60 கிராம் புரதச்சத்து தேவை. ஒரு முட்டையில் 14 கிராம் புரதச்சத்து இருக்கிறது. ஒரு கப் சாம்பாரில் ஏழு கிராம் புரதம் இருக்கிறது. இயற்கையான உணவிலிருக்கும் புரதச்சத்து போதவில்லையென்றால், உடல் எடைக்கு ஏற்ற புரோட்டீன் துணை உணவுகளை எடுத்துக்கொள்ளலாம். பாலாடை தயாரிக்கும் செய்முறையின்போது மீதமாகும் தண்ணீரிலிருந்து தயாரிப்பது, பாலிலிருந்து நேரடியாகத் தயாரிக்கப்படுவது, பீன்ஸ் வகைகளில் தயாரிக்கப்படுவது என மூன்று வகை புரோட்டீன் பவுடர்கள் இருக்கின்றன.

உடற்பயிற்சி செய்வதற்கு முன்னர் குடிக்கும் பானங்கள் (Pre Workout Protein) விற்பனை செய்யப்படுகின்றன. இவற்றில் அதிக அளவில் ரசாயனங்கள் சேர்க்கப்பட்டிருக்கும். தசைகள் வலிமையடைந்து, செயல்திறன் அதிகரிக்கும் என்பதற்காக அவற்றை வாங்கிக் குடிக்கிறார்கள். இவற்றில் சேர்க்கப்படும் ரசாயனங்கள் ஊக்க மருந்தாகச் செயல்படுகின்றன என்பதால் சில நிறுவனங்களின் பானங்கள் ஒலிம்பிக் போட்டிகளில் தடைசெய்யப்பட்டிருக்கின்றன. ரசாயனங்கள் மிகுந்த பானங்கள் நாளடைவில் உடலுக்கு பாதிப்பை விளைவிக்கும். அவற்றுக்கு பதில் சர்க்கரை சேர்க்காத காபி (Black Coffee), பீட்ரூட் சாறு ஆகியவற்றை அருந்துவது ஆரோக்கியம்.

புரோட்டீன் பவுடரைப்போல `கிரியாட்டின்’ என்றொரு (Creatine) துணை உணவுப் பொருள் இருக்கிறது. உடலிலுள்ள தசைகளின் இயக்கத்துக்கு ‘அடினோசைன் ட்ரைபாஸ்பேட்’ (Adenosine Triphosphate) என்ற மூலக்கூறு தேவை. இந்த கிரியாட்டின் பவுடரை எடுக்கும்போது, இது அளவுக்கு அதிகமாக மூலக்கூறை தசைகளுக்கு அளித்துவிடும். இது ஆற்றலை அதிக அளவில் அளித்து, குறுகிய காலத்தில் தசைகளை வலிமைப்படுத்தும். எனவே, மருத்துவ நிபுணரின் ஆலோசனையுடன் சரியான அளவில் இதை எடுத்துக்கொள்ள வேண்டும். அளவுக்கு அதிகமாக எடுக்கும்போது `கிரியாட்டினின்’ (Creatinine) என்ற ரசாயனக் கழிவு அதிக அளவில் சுரக்கும். அளவுக்கு அதிகமாகச் சுரக்கும் இந்தக் கழிவை வெளியேற்ற முடியாமல் சிறுநீரகம் பாதிக்கப்படும்.

விளையாட்டு வீரர்கள் உடற்பயிற்சியை முடித்த பிறகு குடிப்பதற்காக விற்பனை செய்யப்படும் பானங்களையும் (Sports Drinks) குடிக்கக் கூடாது. ஆற்றல் அளிக்கும் பானங்கள் அவை. இது போன்ற பானங்களில் சர்க்கரை அதிக அளவில் சேர்க்கப்படும்; காண்போரை ஈர்க்கும் வண்ணம் இருக்க வேண்டும் என்பதற்காக நிறமிகள், சுவையூட்டிகள் சேர்க்கப்படுகின்றன; கெட்டுப்போகாமல் இருப்பதற்காக, பதப்படுத்தும் ரசாயனங்களும் சேர்க்கப்படுகின்றன. எனவே, இவற்றுக்கு பதிலாக இளநீர், எலுமிச்சைச் சாறு ஆகியவற்றை அருந்தலாம்.

மது அருந்துவது விளையாட்டு வீரர்களுக்கு எதிர்மறையான விளைவுகளைத்தான் ஏற்படுத்தும். அது, வீரர்களின் செயல்பாட்டைக் கடுமையாக பாதிக்கும். மதுப் பழக்கத்தால் தசைகளின் சமநிலையை உடல் இழந்துவிடும். விளையாடும்போது அதைச் சமநிலைப்படுத்துவதும் கடினம். எனவே, மது அருந்துவதைக் கட்டாயம் தவிர்க்க வேண்டும்.

ஒருவருக்குப் பழக்கப்பட்ட காலச் சூழலிலிருந்து முற்றிலும் மாறுபட்ட பருவநிலை உள்ள நாடுகள் அல்லது வேறு இடங்களுக்குச் சென்று விளையாடினால் நிச்சயம் உடல்நலத்தில் பாதிப்பு ஏற்படும். விளையாட்டு எந்த நாட்டில் நடக்கிறதோ, அந்த நாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரர்களைவிட மற்ற நாட்டைச் சேர்ந்தவர்களுக்குச் செயல்திறனில் மாற்றங்கள் ஏற்படலாம். ‘வார்ம் அப்’ பயிற்சிகள்தாம் வானிலைக்கு ஏற்ப உடலைச் சமன்செய்ய உதவும்.

சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியால் 1999-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட உலக போதை மருந்து தடுப்பு ஏஜென்சி, உலகம் முழுக்க இருக்கும் விளையாட்டு வீரர்கள், ஒரே தன்மையோடு விளையாட வேண்டும் என்பதற்காகச் சில ஊக்க மருந்துகளின் பயன்பாட்டைத் தடைசெய்திருக்கிறது. சில வீரர்கள் ‘அனபாலிக் ஸ்டீராய்ட்ஸ்’ (Anabolic Steroids) என்ற செயல்திறனை ஊக்குவிக்கும் ஊசியைப் பயன்படுத்துவார்கள். இந்த மருந்துகள் தசைகளை வலிமையாக்கி, உடலுறுப்புகளின் செயல்பாட்டை அதிகரிக்கும். செயல்திறனை அதிகரிக்கும் ஹார்மோன்களை சிலர் ஊசி மூலம் எடுத்துக்கொள்வார்கள். இவை உடலிலுள்ள ஹார்மோன்களின் செயல்பாட்டைத் தூண்டி, செயல்திறனை அதிகரிக்கும். இவையும் ஊக்க மருந்துகளே. மத்திய நரம்பு மண்டலம், இதயத்துடிப்பு, ரத்த ஓட்டம் ஆகியவற்றைத் தூண்டும் (Stimulants) மருந்துகளும் ஊசிகளும் தடை செய்யப்பட்டுள்ள பட்டியலில் இருக்கின்றன.

குறிப்பிட்ட எடைப் பிரிவுகளில் நடத்தப்படும் தடகளப் போட்டிகளில் பங்கேற்பவர்கள், உடலிலிருக்கும் நீர்ச்சத்தை வெளியேற்றுவதற்கு ‘டையூரெடிக்ஸ்’ (Diuretics) என்ற மருந்தைப் பயன்படுத்துவார்கள். இந்த மருந்து சிறுநீர் மூலமாக உடலிலிருக்கும் நீர்ச்சத்துகளை வெளியேற்றிவிடும் என்பதால், உடல் எடையைக் குறைவாகக் காட்ட முடியும். விளையாடும்போது வலியை உணராமல் இருப்பதற்காகவும் வலி மரத்துப்போகவும் ‘நார்கோட்டிஸ்’ (Narcotics) என்ற மருந்துகளைப் பயன்படுத்துகிறார்கள். துப்பாக்கிச் சுடுதல், வில்வித்தை போட்டிகளில் பங்கேற்பவர்கள் பதற்றத்தால் கை நடுக்கம் ஏற்படாமலிருக்க, ரத்த அழுத்த நோயாளிகளுக்கு மருத்துவர்கள் பரிந்துரைக்கும் ‘பீட்டா பிளாக்கர்ஸ்’ (Beta Blockers) என்ற மருந்தை எடுப்பதுண்டு.

ஒரு வீரர், ஊக்க மருந்துகளைப் பயன்படுத்தியிருக்கிறாரா என்பதை அவரது ரத்தம் மற்றும் சிறுநீர்ப் பரிசோதனை மூலம் கண்டறிய முடியும். அனைத்து ஊக்க மருந்துகளும் பக்கவிளைவுகளை ஏற்படுத்துபவையே. ஊக்க மருந்துகளை, தொடர்ந்து எடுத்துக்கொண்டால், அவை உடலின் வளர்சிதை மாற்றத்தில் தாக்கத்தை ஏற்படுத்தி சிறுநீரகத்தையும் கல்லீரலையும் பாதித்து, அவற்றைச் செயலிழக்க வைத்துவிடும். அதிக ஸ்டீராய்டு பயன்பாட்டால், மூட்டுகளிலிருக்கும் ஜவ்வு, தசைகள் எளிதில் சிதைவதற்கான (Rupture) வாய்ப்புகளும் அதிகம்.

- ஜெனி ஃப்ரீடா