இந்த அத்தியாயம் மாண்புமிகு மருத்துவர் ஒருவரின் வாழ்க்கைப் பாதை மட்டுமல்ல. அவரின் தாயாரின் அசாத்தியமான வெற்றிக்கதையும்கூட. கொல்கத்தாவில் இயங்கும் ஆதரவற்றோர் இல்லம் ஒன்று. அங்கே அஜோய் குமார் சேர்க்கப்பட்டான். அவனைக் கொண்டு வந்து சேர்த்தவர் அவன் தாய் சுபாஷினி மிஷ்ட்ரி. காரணம்... வறுமை. ஆம், அங்கேயாவது தன் மகனுக்கு இரண்டு வேளை உணவு கிடைக்கும்; கல்வி கற்க வாய்ப்்பு கிடைக்கும் என்று அந்தத் தாய் நினைத்தாள். தவிர, அவளுக்கு ஒரு லட்சியம் இருந்தது. அதைத் தன் மகன் மூலமாக நிறைவேற்றுவதற்காகவே அவனை அந்த இல்லத்தில் சேர்த்தாள். ஆனால், அதற்காக அஜோய் வருத்தப்படவில்லை. ஏனென்றால், அவனுடைய நெஞ்சிலும் தாயின் லட்சியம் ஆழப் பதிந்திருந்தது.

சுபாஷினி மிஷ்ட்ரியின் பால்ய வாழ்க்கை சோகம் நிறைந்தது. கொல்கத்தாவிலிருந்து சுமார் 30 கி.மீ தொலைவில், குல்வா என்ற கிராமத்தில் பிறந்தவர், சுபாஷினி. அவரின் தந்தை சிறு விவசாயி. அப்போது நிலவிய கடும் பஞ்சம் மற்றும் பட்டினியால் உடன்பிறந்த ஏழு பேரைப் பறிகொடுத்தார் சுபாஷினி. பன்னிரண்டாம் வயதில் சந்த்ரா என்ற நபருடன் சுபாஷினிக்குத் திருமணம் நடந்தது. சந்த்ரா விவசாயக்கூலி. இருவருக்கும் நான்கு குழந்தைகள் பிறந்தனர். 1971-ம் ஆண்டு சந்த்ரா நோயில் விழுந்தார். சுபாஷினி, தன் கணவரை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார். அவர்களின் தோற்றத்தைப் பார்த்ததுமே அங்கிருந்த மருத்துவர்களும், பணியாளர்களும் சிகிச்சையளிக்க மறுத்துவிட்டனர். கடும் வேதனையை அனுபவித்த சந்த்ரா இறந்து போனார். சந்த்ராவின் பிணத்தின் முன்பு உட்கார்ந்து அழுதபோது, சுபாஷினியின் மனதில் ஒரு லட்சியம் உருவானது.

`என் கணவர் சாகவில்லை. மனிதநேயம் இல்லாமல் கொன்றுவிட்டார்கள். காசில்லாதவர்களுக்கு மருத்துவச் சிகிச்சை கிடைக்காதா... அவர்கள் சாகத்தான் வேண்டுமா? இல்லை... இந்த நிலை மாற வேண்டும். என்னைப் போன்ற ஏழை மக்கள் சிகிச்சை பெறுவதற்காகவே இலவச மருத்துவமனை ஒன்றைக் கட்டுவேன். என்னைப்போல் பிற ஏழைப் பெண்கள் வருங்காலத்தில் கண்ணீர்விடக் கூடாது.’

- இப்படியொரு சபதத்தைத் தனக்குள் எடுத்துக்கொண்ட சுபாஷினிக்கு, அடுத்தவேளை சோற்றுக்கு வழியில்லை. அவளின் நான்கு பிள்ளைகளும் அம்மாவின் முகத்தைப் பரிதாபமாகப் பார்த்தனர். படிப்பறிவே இல்லாததால், சுபாஷினி வீட்டு வேலைக்குச் செல்லத் தொடங்கினார்; கட்டட வேலைக்குச் சென்றார். எங்கே, எந்த வேலை கிடைத்தாலும் செய்தார். ஆனால், பிள்ளைகளுக்கு ஒரு வேளை உணவளிக்கக்கூடச் சிரமப்படவேண்டியிருந்தது. `நான் வருங்காலத்தில் மருத்துவமனை கட்டப்போகிறேன்’ என்ற அவரது சபதத்தை வெளியே சொன்னால், எல்லோரும் சிரித்தார்கள். `உன்னால் சொந்தமாக ஒரு கூரைவீடுகூட கட்ட முடியாது’ என்று பரிகாசம் செய்தார்கள். எனவே, தன் லட்சியத்தைத் தனக்குள் புதைத்துக்கொண்ட சுபாஷினி, தன் மூத்த மகன் அஜோய் நெஞ்சிலும் அதை விதைத்தார். `நாம் இலவச மருத்துவமனை ஒன்றைக் கட்ட வேண்டும். அங்கே நீ மருத்துவராக ஏழைகளுக்குச் சிகிச்சை அளிக்க வேண்டும்’ என்று சொல்லிச் சொல்லி வளர்த்தார்.

ஆதரவற்றோர் இல்லத்தில் வளர்ந்த அஜோய், கண்ணும் கருத்துமாகப் படித்தார். பகுதி நேரமாக டீக்கடையில் வேலை பார்த்தார்; கூலி வேலை செய்தார். கொஞ்சம் வளர்ந்த பிறகு, பிற மாணவர்களுக்கு டியூஷன் எடுத்தார். லட்சியத்துக்காகக் கொஞ்சம் கொஞ்சமாகப் பணம் சேர்த்தார். இன்னொரு பக்கம், சுபாஷினியும் கொல்கத்தாவுக்கு இடம்பெயர்ந்தார். மார்க்கெட்டில் காய்கறிக் கடை போட்டார். மாதம் 500 ரூபாய் வருமானம் கிடைத்தது. குடும்பத் தேவைக்குப் போக மீதியை தன் லட்சியத்துக்காகச் சேமித்து வைத்தார். இருபது வருடங்கள் கடந்தன.

1992-ம் ஆண்டு தன் கணவரின் கிராமமான ஹன்ஸ்புகூருக்குச் சென்ற சுபாஷினி, 10,000 ரூபாய் கொடுத்து ஒரு ஏக்கர் நிலம் வாங்கினார். அப்போது அவர் ஊர் மக்களிடம், `நான் நம் ஊருக்காக இலவச மருத்துவமனை கட்டப்போகிறேன். முடிந்த அளவு உதவி செய்யுங்கள்’ என்று சொன்னார். பணம் இருப்பவர்கள் கிள்ளிக் கொடுத்தார்கள். எதுவும் இல்லாதவர்கள் மூங்கில், பனை ஓலை, மரக்கட்டைகள் என்று அள்ளிக் கொடுத்தார்கள். தற்காலிகக் குடில் ஒன்று அமைக்கப்பட்டது. அமையவிருக்கும் இலவச மருத்துவமனை குறித்து அறிவித்தபடி ஆட்டோ ஒன்று பக்கத்து ஊர்களிலெல்லாம் வலம்வந்தது.

டாக்டர் ரகுபதி சாட்டர்ஜி என்பவர், சுபாஷினியைத் தேடி வந்தார். ``நான் வாரந்தோறும் இங்கே வந்து சில மணி நேரம் இலவசமாகச் சிகிச்சை அளிக்கிறேன்’’ என்றார். சுபாஷினி அவரைக் கையெடுத்துக் கும்பிட்டார். அவரைத் தொடர்ந்து வேறு சில மருத்துவர்களும் சேவை நோக்குடன் வந்து சிகிச்சையளித்தனர். `ஹியூமானிட்டி ஹாஸ்பிட்டல்’ (Humanity Hospital) என்று பெயரிடப்பட்ட அங்கே முதல் நாளே 252 பேர் இலவசமாகச் சிகிச்சை பெற்றனர். மழைக்காலத்தில் நீர் தேங்கிவிட, மருத்துவமனை இயங்குவது சிக்கலானது. சுபாஷினியும் அஜோயும் கல் கட்டடம் கட்ட நிதி திரட்ட ஆரம்பித்தார்கள். அரசியல்வாதிகள் பாராமுகம் காட்டினர். சில நல்லவர்கள் கொடுத்த நம்பிக்கையால் 1993-ம் ஆண்டில் மருத்துவமனைக்குக் கட்டடம் கட்ட கவர்னரால் அடிக்கல் நாட்டப்பட்டது. அதே நேரம் அஜோய்க்கு கொல்கத்தா மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்தது. அஜோய் மருத்துவராக வெளியேவர, `ஹியூமானிட்டி’ மருத்துவமனை பரந்து விரிந்து, கல் கட்டடமாக நிமிர்ந்து நிற்க, சுபாஷினி தன் லட்சியக் கனவு நிறைவேறிய சந்தோஷத்தில் கண்கலங்கினார்.

பொது மருத்துவம், குழந்தைகள் பிரிவு, இதயநோய் பிரிவு, நரம்பியல், பல் மருத்துவம், நுரையீரல் பிரிவு, விபத்து சிகிச்சைப் பிரிவு என்று இப்போது அந்த மருத்துவமனை `ஹியூமானிட்டி மல்டிஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிட்டல்’ (Humanity Multispeciality Hospital) ஆக இயங்கிவருகிறது. இல்லாதவர்களுக்கும் இயலாதவர்களுக்கும் முற்றிலும் இலவசச் சிகிச்சை அளிக்கப்படுகிறது. நடுத்தர மக்களுக்கு பத்து ரூபாய் மட்டுமே கட்டணம். நிதி திரட்டுவதில் சிரமங்கள் இருந்தாலும், மனிதநேயம் குறையாமல் டாக்டர் அஜோய், அந்த மருத்துவமனையைச் சிறப்பாக இயக்கிவருகிறார். இதுதவிர, ஹன்ஸ்காலி என்ற ஊரிலும் இந்த மருத்துவமனை தொடங்கப்பட்டிருக்கிறது. தங்கள் மருத்துவமனைகளில் `ஐசியூ’ (ICU) உள்ளிட்ட கூடுதல் வசதிகளைப் பெருக்க வேண்டும் என்று டாக்டர் அஜோய் உழைத்துக்கொண்டிருக்கிறார். அன்றைக்குக் காசில்லாததால் கணவனைக் காப்பாற்ற இயலாத சுபாஷினி, இன்றைக்குப் பலரது உயிரைக் காப்பாற்றும் மருத்துவமனைகளைக் கட்டியிருக்கிறார். அரசு அவருக்கு `பத்மஸ்ரீ விருது’ வழங்கி கௌரவித்திருக்கிறது.

சேவை தொடரும்...

- முகில்,எழுத்தாளர், ஓவியம்: பாலகிருஷ்ணன்