Published:Updated:

மண் வாசம்!

கற்கலாம் கை வைத்தியம்!

மண் வாசம்!

கற்கலாம் கை வைத்தியம்!

Published:Updated:
மண் வாசம்!
##~##

ன் மண்ணின் மீதும் மக்கள் மீதும் மாறாத அன்புகொண்ட தமிழச்சி மண் வாசம் வீசும் மருத்துவ முறைகளைப் பகிர்ந்துகொள்ளும் பகுதி... 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பெரிய உரலில் மாவாட்டிக்கொண்டு இருந்த பெரியக்கா பாட்டியிடம் 'கை மருந்து’ வாங்க ஒரு கூட்டமே காத்திருந்தது. 'என்னதான் அப்படி மருந்து தருகிறாள் இந்தப் பாட்டி?’ எனப் பார்ப்பதற்காக அங்கே போக பல முறை நினைத்தது உண்டு. முறையான மருத்துவரிடம் சென்று நோய்க்கான சிகிச்சை எடுக்காமல், இந்த மாதிரியான 'கை வைத்தியம்’ செய்வதில், எனக்கு நம்பிக்கைக் குறைபாடும் உண்டு. இருந்தாலும், இரண்டு படி அரிசி, ஒரு படி உளுந்து போட்டு, இந்தத் தள்ளாத வயதிலும் தனி ஆளாக அரைத்து எடுக்கின்ற பெரியக்கா பாட்டியின் ஆரோக்கியமே, அவளது 'கை மருந்தின்’ மேல் ஆர்வத்தைத் தூண்டியது.

ஓலைக் கொட்டகை வேயப்பட்டு இருந்த இடத்தில், இடது ஓரமாக ஒரு பெட்டிக்கடை. வலது ஓரத்தில் ஆட்டு உரல். சாணமிட்டு மெழுகிய மண் தரையில் சாவகாசமாக உட்கார்ந்திருந்தனர் இரண்டு பெருசுகள்; கைக் குழந்தையோடு ஒரு பெண்; பள்ளிச் சீருடையில் ஒரு சிறுமி எனக் கலவையாகக் காத்து இருந்தவர்களின் அருகில் சென்றேன்.

மண் வாசம்!

என்னைப் பார்த்ததும், மாவாட்டுவதை நிறுத்திய பெரியக்கா, ''என்ன செமதி இந்தப் பக்கம்?' என்றாள் சிரிப்புடன். ''சும்மாத்தான்...' என்றபடியே அருகில் இருந்த சின்ன முக்காலியில் அமர்ந்தேன். ''மாவத் தள்ள ஒத்தாசைக்கு யாரும் இல்லையேங்கிற கவலை போச்சு. ஒரு கையால அப்படியே தள்ளிவிடுறியா...' என்று கேட்டுவிட்டு உடனே, ''வேணாம் தாயி, வெண்டைக்கா விரலப் பத்திரமா வைச்சுக்க'' என்றாள் சிரித்தபடி. ''என்ன மாதிரி நோவுக்கு என்ன மருந்து தர்றீங்கனு தெரிஞ்சுக்க ரொம்ப நாளாவே ஆசை பெரியக்கா பாட்டி...'' என்றேன்.  

மாவாட்டியதை நிறுத்திவிட்டு,  கைகள் இரண்டையும் முழங்கை வரை சுத்தமாகக் கழுவித் துடைத்துக்கொண்டாள். வசதியாக மண் தரையில் சம்மணமிட்டு உட்கார்ந்தபடி, கைக் குழந்தையோடு வந்திருந்த பெண்ணைப் பக்கத்தில் கூப்பிட்டாள்.

''வயிறு வலிக்குது போல... நலுக்கி வெளியே போகுது'' என்றபடி பாப்பாவைப் பெரியக்காவிடம் தந்த அந்த பெண்ணைப் பார்த்து, ''மாம்பழம் சாப்பிட்டியாக்கும்? பச்ச உடம்புக்காரிக்கு நாக்கு கேட்டாலும் மனசு தள்ளிவிடணும். இப்பப் பாரு கஷ்டப்படறது புள்ளைல...'' என்றாள். குழந்தையின் வயிற்றைத் தடவிப் பார்த்து ''மந்தம்தான்'' என்றவள், வெற்றிலையில் மடித்த இரண்டு விதமான பொட்டலங்களைக் கொடுத்தாள். ''இந்தப் பொடியை தாய்ப்பால்ல கரைச்சுச் சங்குல இரண்டு வேளைக்குக் கொடு. அந்த லேகியத்தை நீ சாப்பிடு'' என்றவள், ''இந்த மருந்து கொடுத்தும் நிக்கலைன்னா, விருதுநகர் காட்டாஸ்பத்திரிக்குக் கூட்டிட்டுப் போயிடு!'' என்று அனுப்பிவைத்தாள்.

அடுத்து, பள்ளிச் சிறுமியைக் கூப்பிட்டாள். ''வயிறு கடமுடாங்குது ஆத்தா'' என்றவளின் தலையில் செல்லமாகக் குட்டிவிட்டு, ''புளிப்பு மிட்டாய ஏகத்துக்குத் திங்காத... போறப்ப வாறப்பல்லாம் அரிசியை

மண் வாசம்!

அள்ளி மெல்லுறதைக் குறைச்சுக்க... ஊறவெச்ச பலாக்கொட்டையை ஒரேடியா மொக்காத...'' என்ற பெரியக்கா, சிட்டிகை அளவு லேகியமும், வயிற்றில் தடவிக்கொள்ள சின்ன சீசாவில் விளக்கெண்ணையும் கொடுத்து அனுப்பினாள்.

இரண்டு பெரிசுகளையும் பார்த்து, ''என்னவாம், இன்னிக்கு இந்தப் பக்கம்?'' என்றவள், என்னிடம், ''வீட்ல வெறும் வயிறோட மருமக்க மகராசிகளுக்குச் சமைச்சு வெச்சுட்டு, இங்கன வந்து ரெண்டு வடை சாப்பிட்டுப் போகுதுங்க'' என்றபடியே, வடைகளைக் கொஞ்சம் சட்னியோடு, வாழை இலையில் எடுத்துத் தந்தாள். கூச்சத்தோடு என்னைப் பார்த்த பெரிசுகளிடம், ''நம்ம செமதிதான்... என்னாத்துக்குக் கூச்சம். கலந்து கட்டிச் சாப்பிடுங்க. தேங்கா மந்தம்னுட்டுக் கொத்தமல்லிதேன் அதிகமாச் சேத்திருக்கேன்'' என்றாள்.

''நீங்க தந்தது என்ன மருந்து பெரியக்கா பாட்டி? வயிற்று வலியில் பல தினுசு இருக்குமே. எல்லாத்துக்கும் ஒரே மாதிரி மருந்தா? உங்க கையால தயாரிக்கிறதால இதுக்குப் பேரு 'கை மருந்தா?’ இந்த வைத்தியத்தை யாருகிட்டக் கத்துக்கிட்டீங்க?'' என்று கேள்விகளை அடுக்கினேன்.    

கால்களை நன்றாக நீட்டி ஒன்றின் மேல் ஒன்றை வைத்து வசதியாக உட்கார்ந்தபடி பெரியக்கா பாட்டி சொன்னாள்: '' 'பத்து மிளகு இருந்தா பகையாளி வீட்லகூட தைரியமாச் சாப்பிடலாம்’னு சும்மாவா சொன்னாக. வயிறு முட்டச் சாப்பிட்டா, செமிக்க வேலை செய்யணும் செமதி. மல்லாங்கிணத்து வரப்புலயும் கம்மாயிலயும் இல்லாத கீரையும், கிழங்குமா? இங்கிலீசுக் காய் வேணாங்கலை. ஆனா, நம்மூர்ல கிடைக்கிறதைக் கீழ்த்தரமாப் பார்த்துட்டு டவுன்ல கண்ணாடிப் பொட்டிக்குள்ள வெச்சிருக்கிறத ஒசத்தியாப் பார்க்கிறதை நிறுத்தணும்.

வாய் நிக்காமக் கண்டதையும் சாப்பிட்டு வயிறு கோளாறு பண்ணினா, வீட்ல இருக்கிற மிளகும் திப்பிலியும்தான் அருமருந்து. நான் தர்ற லேகியத்துல மிளகு, திப்பிலியோட கொஞ்சம் கருப்பட்டியும் கலந்திருக்கும். கைப் பிள்ளைகளுக்குத் தர்றது 'பேர் சொல்லாதது.’ அதுதான் வசம்புப் பொடி. அதோட வாசனையே குழந்தைகளுக்கு அஜீரணம் வராமத் தடுக்கும். எனக்கு என் ஆத்தா, அவளுக்கு என் அம்மாத்தான்னு, வழி வழியா வர்றதுதான் இந்தச் சின்ன வைத்திய முறை எல்லாம். நாடி பாத்து உடம்பைப் படிக்கிற லாகவமும் கைச்சுத்தமும் கைகூடி வந்துட்டா, என் வைத்தியத்தை நீயும் கத்துக்கலாம்!''

80 வயதான பெரியக்கா பாட்டி பேசுவதை ஆச்சர்யத்துடன் கேட்டுக்கொண்டு இருந்தேன். இந்த வயதில் அவளது ஆரோக்கியத்துக்கான அர்த்தம் புரிந்தது. உணவே மருந்தாய், நம் வீட்டின் கொல்லைப்புறமே சிறந்த மருத்துவச்சாலையாய், இந்த மல்லாங்கிணறு மருத்துவச்சி எவ்வளவு எளிமையாக, அழகாகச் சொல்லிவிட்டாள்.

வடை சாப்பிட மறந்து, பெரியக்கா பாட்டி பேசுவதையே வாய் பிளந்து கேட்டுக்கொண்டு இருந்த பெருசுகள் இரண்டும் வடையைச் சாப்பிட ஆரம்பித்தார்கள். வாழ்வின் ருசி, ஒளி வட்டம் விழாத இண்டு, இடுக்குகளில் தானே அபரிமிதமாக இருக்கிறது!

- மல்லாங்கிணறு மணக்கும்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism