Published:Updated:

தொற்று நோய்களின் உலகம்!

தொற்று நோய்களின் உலகம்!
பிரீமியம் ஸ்டோரி
தொற்று நோய்களின் உலகம்!

ஹெல்த் - 32வி.ராமசுப்பிரமணியன், தொற்றுநோய் சிறப்பு மருத்துவர்

தொற்று நோய்களின் உலகம்!

ஹெல்த் - 32வி.ராமசுப்பிரமணியன், தொற்றுநோய் சிறப்பு மருத்துவர்

Published:Updated:
தொற்று நோய்களின் உலகம்!
பிரீமியம் ஸ்டோரி
தொற்று நோய்களின் உலகம்!

டுமையான காய்ச்சலோடு உடம்புவலியும் வந்தால் விவரமறிந்த சிலர், “ ‘வைடால்’ (Widal) டெஸ்ட்’ பண்ணிப் பாத்துடு” என்பார்கள். ஆனால், மருத்துவ ஆராய்ச்சிகள், `வைடால் டெஸ்ட் அத்தனைத் துல்லியமாக டைபாய்டு காய்ச்சலைக் காட்டிக்கொடுப்பதில்லை’ என்கின்றன. இந்தியா மாதிரி டைபாய்டு காய்ச்சல் அதிகம் பரவுகிற நாடுகளில் இந்த டெஸ்ட் பயனளிப்பதில்லை. உண்மையில், நம்மில் பெரும்பாலானோர் நம்மையறியாமலேயே டைபாய்டு காய்ச்சலை உருவாக்கும் கிருமிகளை உள்ளே வைத்திருக்கிறோம். சிலருக்கு டைபாய்டு வந்து குணமாயிருக்கும்; ஆனாலும், கிருமி உடலுக்குள் தங்கியிருக்கும். சிலருக்கு, உடலுக்குள் கிருமி சென்றிருந்தும், நோய் எதிர்ப்பு சக்தி காரணமாக எந்த பாதிப்பையும் உருவாக்காமல் முடங்கிக்கிடக்கும். இப்படி ஏதோவொரு வகையில் டைபாய்டு கிருமியை உடலுக்குள் வைத்திருப்பவர்களுக்கு, சாதாரண வைரஸ் காய்ச்சல் வந்தாலும், வைடால் டெஸ்ட்டில் ‘பாசிட்டிவ்’ என்று காட்டும். அதைப் பார்த்து, டைபாய்டு சிகிச்சையைத் தொடங்கிவிடுவார்கள். இப்படி சிகிச்சையளிப்பது உள்ளேயிருக்கும் கிருமியின் எதிர்ப்புத்திறனை அதிகப்படுத்திவிடும். முன்பெல்லாம் டைபாய்டு பாதித்தவர்களுக்கு சிப்ரோஃப்ளாக்ஸசின் (Ciprofloxacin) மாத்திரைகள் கொடுத்தால் முன்னேற்றம் ஏற்படும். இப்போது அவற்றையெல்லாம் தின்று செரித்துவிடுகின்றன கிருமிகள். முன்பு பயன்படுத்தி கைவிட்ட சல்பா (Sulfa), குளோரம்பெனிக்கால் (Chloramphenicol) போன்ற மருந்துகளை மீண்டும் பயன்படுத்தத் தொடங்கியிருக்கிறார்கள். 

தொற்று நோய்களின் உலகம்!

என் 25 ஆண்டுகால மருத்துவ வாழ்க்கையில் ஒருமுறைகூட இந்த டெஸ்ட்டை நான் பரிந்துரைத்ததில்லை. டைபாய்டு கிருமி நேரே குடலுக்குள் செல்லும். வசதியாக ஓரிடத்தைப் பிடித்துக்கொண்டு வேலையைக் காட்டத் தொடங்கும். கடுமையான காய்ச்சல் ஏற்படும். உடல் சோர்ந்துவிடும். குழந்தைகளாக இருந்தால், பேதியாகும். பெரியவர்கள் என்றால், மலச்சிக்கல் உண்டாகும். உடனே கண்டுபிடித்துவிட்டால், எதிர்ப்பு மருந்துகள் கொடுத்து குணப்படுத்திவிட முடியும். முன்பெல்லாம் கண்டுபிடிப்பதற்கு காலதாமதமானது. அதற்குள் கிருமிகள் குடலில் ஓட்டையே போட்டுவிடும். ஐந்து முதல் பத்து சதவிகிதம் பேர் உயிரிழப்பதும் நடந்தது. இப்போது மரணங்கள் தடுக்கப்பட்டுவிட்டன. டைபாய்டு வந்தவர்களைச் சோதித்தால், வெள்ளை உயிரணுக்கள் குறைவாக இருக்கும். குறிப்பாக, `ஈசினோபில்’ (Eosinophil) என்ற வெள்ளை உயிரணு மிகவும் குறைந்துவிடும். பொதுவாக, நம் உடலில் வெள்ளை உயிரணுக்களின் எண்ணிக்கை குறைந்தபட்சம் 4,000 முதல் அதிகபட்சம் 10,000வரை இருக்க வேண்டும். இந்த எண்ணிக்கை 3,500-க்கும் கீழாகச் சென்று, ஈசினோபில் எண்ணிக்கை ஜீரோவாக இருந்தால் டைபாய்டு இருப்பதை உறுதிசெய்யலாம். மண்ணீரல் வீங்குவதும் டைபாய்டின் அறிகுறிதான். 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தொற்று நோய்களின் உலகம்!

டைபாய்டு இருப்பதை உறுதிசெய்ய, ‘பிளட் கல்ச்சர்’ சோதனைதான் சிறந்தது. ரத்தத்தை எடுத்து, கிருமிகளை வளரச்செய்து கண்டுபிடிப்பது. இந்தச் சோதனையின் முடிவுவர மூன்று முதல் நான்கு நாள்களாவது ஆகும். இதைவிடவும் ‘கோல்டு ஸ்டாண்டர்டு’ என்று சொல்லத்தக்க உறுதியான சோதனை ஒன்று உண்டு. எலும்பின் உள்ளேயிருக்கும் மஜ்ஜையை எடுத்து பரிசோதிப்பது. இதை ‘போன் மேரோ’ சோதனை (Bone Marrow Test) என்பார்கள். ஆனாலும் இந்த அளவுக்கு மருத்துவர்கள் செல்வதில்லை. ‘பிளட் கல்ச்சர்’தான் பெரும்பாலும் செய்வார்கள். சிகிச்சை ஆரம்பித்து நான்கைந்து நாள்களுக்குப் பிறகுதான் நோயாளி ஓரளவுக்கு மீண்டு வருவார். ஓரிரு நாள்களிலேயே குணமாகிவிட்டால், அது டைபாய்டாக இருக்க வாய்ப்பில்லை. டைபாய்டைத் தடுக்கத் தடுப்பூசி இருக்கிறது. வாழ்நாளில் ஒருமுறை போட்டால் போதும். டைபாய்டை முழுமையாக குணப்படுத்திவிட முடியும். ஆனாலும், ஒரு சதவிகிதம் உயிரிழப்பு நிகழ்ந்துகொண்டுதான் இருக்கிறது. குடலில் ஓட்டை ஏற்படலாம். சில நேரம் மூளை பாதிப்புகூட ஏற்படலாம். இந்தக் கிருமி ரத்தம் மூலமாகப் பரவுவதால் உடலில் எந்த இடத்தில் வேண்டுமானாலும் போய் அமர்ந்துகொண்டு, எதிர்பாராத விளைவுகளை ஏற்படுத்தலாம்.

தொற்று நோய்களின் உலகம்!60 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் சமீபத்தில் என்னைச் சந்திக்க வந்தார். அவருக்குக் காய்ச்சல் வந்து சில நாள்களில் குணமாகிவிட்டது. ஒரு மாதம் கழித்து கடுமையான முதுகுவலி ஏற்பட்டது. காய்ச்சல் வந்து இரண்டு மாதங்கள் கழித்து மீண்டும் வந்தார். அவரது முதுகை ஆய்வுசெய்து பார்த்தபோது, அங்கு டிஸ்க்கும், ஓர் எலும்பும் முழுவதுமாக பாதிக்கப்பட்டிருந்தன. 

தொற்று நோய்களின் உலகம்!

நாளாக நாளாக அவருக்கு வலி அதிகமாகிக்கொண்டே இருந்தது. அறுவை சிகிச்சைதான் தீர்வு என்ற நிலை வந்தது. மீண்டும் மிக நுட்பமான சோதனைகள் செய்து பார்த்தபோது, அந்த இடத்தில் இருந்தது டைபாய்டு கிருமி என்பது உறுதியானது. அந்தக் கிருமிதான் முதுகெலும்பை அரித்திருக்கிறது. உடனடியாக டைபாய்டுக்கான சிகிச்சையை ஆரம்பித்தோம். இப்போது முற்றிலும் குணமடைந்துவிட்டார். இதே மாதிரி, டைபாய்டு கிருமி இதய வால்வில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், இவையெல்லாம் மிகவும் அரிதாகவே நடக்கும். எல்லோருக்கும் நடக்கும் என்று சொல்ல முடியாது. டைபாய்டு 100 சதவிகிதம் குணமாக்கக்கூடிய நோய் என்பதை மட்டும் நீங்கள் அழுத்தமாக மனதில் வைத்துக்கொண்டால் போதும்!

அடுத்த இதழில் இன்னொரு தொற்றுநோயின் உலகத்துக்குள் செல்வோம்!

- களைவோம்... 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism