Published:Updated:

நோய்நாடி நோய்முதல் நாடி

நோய்நாடி நோய்முதல் நாடி
பிரீமியம் ஸ்டோரி
நோய்நாடி நோய்முதல் நாடி

வாழ்வியல் - 8வேலாயுதம், சித்த மருத்துவர்

நோய்நாடி நோய்முதல் நாடி

வாழ்வியல் - 8வேலாயுதம், சித்த மருத்துவர்

Published:Updated:
நோய்நாடி நோய்முதல் நாடி
பிரீமியம் ஸ்டோரி
நோய்நாடி நோய்முதல் நாடி

லாசாரமும் பண்பாடும் நாட்டுக்கு நாடு வேறுபடும். உணவு, உடை என அனைத்தும் அந்தந்த நாட்டுக்கும் அவரவர் வாழ்வியலுக்கும் ஏற்ப சிறப்பு பெற்றிருக்கும். அவற்றில் பல அந்தந்த நாட்டின் சூழலுக்கும் உடல்நலனுக்கும் ஏற்ப தனித்துவத்துடன் அமைந்திருக்கும். அவற்றில் முக்கியமான ஒன்று, உடை கலாசாரம். நாகரிக மோகத்தில் நாம் கைவிட்ட நல்ல விஷயங்களில் இதுவும் ஒன்று. `ஆள்பாதி, ஆடைபாதி’ என்ற பழமொழிக்கேற்ப ஓர் அடையாளச் சின்னமாக உடை இருக்கிறது. 

நோய்நாடி நோய்முதல் நாடி

`உணவுப் பழக்கம், வாழ்வியல்முறை, சுற்றுச்சூழல், கிருமிகள் போன்றவை நோய் பாதிப்புகளுக்கு அடிப்படையாக இருப்பதுபோல, உடையும் நோய் பாதிப்புக்கு முக்கியக் காரணமாக இருக்கிறது’ என்கிறது சித்த மருத்துவம். ‘பொருந்தாத உடைகளை உடுத்துவது பல்வேறு உடல்நலப் பிரச்னைகளுக்கு வழிவகுக்கும்’ என இன்றைக்கு நவீன மருத்துவ ஆய்வுகள் எச்சரிக்கின்றன. இதன் முக்கியத்துவத்தை உணர்ந்த நம் முன்னோர் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே வாழ்வியலுக்கேற்ற உடைகள் அணிவதை முக்கிய ஒழுக்கமாகப் பின்பற்றிவந்திருக்கிறார்கள்.

உடையும் உடல்நலனும்

`உடைக்கும் உடல்நலனுக்கும் தொடர்பு இருக்கிறது’ என்பது நம்ப முடியாததாக, ஆச்சர்யத்தைத் தருவதாக இருக்கலாம். ஆனால், அது உண்மையே. உடை, அவரவர் ஊருக்கும் நாட்டுக்கும் ஏற்ப மனிதன் தன் நாகரிகத்தின் அடிப்படையில் வடிவமைத்துக்கொண்டது. 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நோய்நாடி நோய்முதல் நாடி

அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் குளிர்ப் பிரதேசங்களாக இருப்பதால், உடலை புறத்தாக்குதலிலிருந்து தற்காத்துக்கொள்ள அவர்கள் அடுக்கடுக்காக ஆடை அணிகிறார்கள். நாம் வசிப்பது வெப்ப மண்டலப் பிரதேசம். அதை மறந்துவிட்டு, இன்றைய தலைமுறையினர் ஜீன்ஸ் பேன்ட், லெக்கிங்ஸ் என இறுக்கமானவற்றை அணிகிறார்கள். தகிக்கும் வெயிலில்கூட கோட், பிளேஸர் என ஒன்றுக்கு இரண்டாக மேலாடைகளை உடுத்திக்கொள்ளும் வழக்கம் பரவலாகிவருகிறது. மேற்கத்திய நாகரிக மோகத்தால் இவை நம் நாட்டில் பிரபலமாகிவருகின்றன. இவை நம் தட்பவெப்பநிலைக்கு பொருந்தக்கூடியவையா...  உடல்நலனுக்கு உகந்தவையா... என்பது பற்றிய கவலையில்லாமல் அணிந்துகொள்கிறார்கள். வெயில் நேரத்தில் சருமத்துடன் ஒட்டிக்கொள்ளும் அளவுக்கு ஜீன்ஸ் உடுத்துவதால், சருமத்தில் சிவந்த நிறக் கொப்புளங்கள், கடுமையான அரிப்பு, எரிச்சல், படர் தாமரை போன்ற சரும நோய்கள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.

தொடர்ந்து இறுக்கமான உடைகள், ஜீன்ஸ் போன்றவற்றைப் பயன்படுத்துவதால், கால்களில் நரம்புகளும் தசைகளும்கூட பாதிக்க வாய்ப்புள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இன்றைய தலைமுறையினரிடம் அதிகரித்துவரும் குழந்தையின்மைப் பிரச்னைக்கும் இப்படி உடை அணியும் பழக்கம் முக்கியக் காரணமாக இருக்கிறது. விந்தணு உற்பத்தி, விரைப்பையில்தான் நடக்கும். அது சமச்சீரான சீதோஷ்ண நிலையில் இருக்க வேண்டும் என்பதற்காக, உடலுக்கு வெளியே தொங்கிக்கொண்டிருக்கும் நிலையில் இயல்பாகவே அமைந்திருக்கிறது. கோடைக்காலத்தில் விரைப்பை நீண்டு இறங்கிவிடும். குளிர்காலத்தில் உடலுடன் சேர்ந்துகொள்ளும். அதிக நேரம் இறுக்கமான ஜீன்ஸ் அணிவதால் விந்துப்பை இருக்கும் பகுதி சூடாகி, உயிரணு உற்பத்தி குறைந்துவிடும். அதனால்தான் நம் முன்னோர் இயற்கையாகக் காற்றோட்டமாக இருக்கும் வேட்டியை அணிந்தார்கள்.  

நோய்நாடி நோய்முதல் நாடி

பெண்களின் அங்க அவயங்கள் ஆண்களிடமிருந்து வேறுபட்டவை.  அவற்றுக்கேற்ப உடைகளை அணிய வேண்டும். பெண்கள் அணியும் ஆடைகளுக்கும், கர்ப்பம் தரிக்கும் தன்மைக்கும் தொடர்புண்டு. பெண்களின் இடுப்புப் பகுதி, ‘கூபகப் பகுதி’ என்று சித்த மருத்துவத்தில் கூறப்படுகிறது. ‘கூபகப் பகுதி’ வெப்பமில்லாமல், காற்றோட்டமாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் அந்தக் காலத்தில் பாவாடை, புடவை போன்றவற்றை அணியச் சொன்னார்கள். புடவை உடுத்துவதால், கூபகப் பகுதியிலிருக்கும் பிறப்புறுப்பு பகுதியில் தட்பவெப்பம் சீராகத் தகவமைக்கப்படும். பாவாடையின் மடிப்பும், புடவையின் கொசுவமும் கூபக அறைக்கு, திரைச்சீலை மாதிரி பாதுகாப்பாக வடிவமைக்கப்பட்டவை.

கொசுவம் கட்டும்போது அந்த மடிப்புகளில் காற்று தேங்கும்.  உடைகளால் தட்பவெப்பம் தகவமைக்கப்படுவதால் பெண்களுக்கு வெள்ளைப்படுதல் வராமலும், தொடை இடுக்குகளில் சரும நோய்கள் உருவாகாமலும் தடுக்கப்படுகிறது. குறிப்பாக, பிறப்புறுப்பிலிருக்கும் அமிலத் தன்மை, காரத் தன்மையால் கர்ப்பப்பை வாயில் ஏற்படும் சிக்கல்கள் புற்றுநோய்வரை கொண்டுபோய்விடும். புடவை கட்டுவதால் கர்ப்பப்பைப் புற்றுநோய் வராமல் தடுக்கலாம் என்பது அறிவியல்பூர்வமான உண்மை. மாதவிடாய்க் காலங்களில் பெண்களுக்கு ஏற்படும் வலி, அதிகப்படியான ரத்தப்போக்கு போன்றவற்றுக்கு லெக்கிங்ஸ் போன்ற இறுக்கமான உடைகளே காரணம். எனவே, பெண்கள் ஜீன்ஸ், லெக்கிங்ஸ் போன்றவற்றை அணிவது ஆரோக்கியத்துக்குக் கேடு விளைவிக்கும். 

நோய்நாடி நோய்முதல் நாடி

பருத்தி, பட்டு, கம்பளி என்று நம் நாட்டு தட்பவெப்பநிலைக்கேற்ப உடைகளை மாற்றி மாற்றி உடுத்துகிறோம். வெப்பத்தின் ஆதிக்கம் அதிகம் இருப்பதால், நம் முன்னோர் பருத்தி உடைகளைத் தேர்ந்தெடுத்தனர். பருத்தி உடை மிகவும் மெலிதானது, தடிமன் இல்லாதது, தளர்வானது. நம் உடலிலிருந்து வியர்வை வெளியேறும்போது அதை உறிஞ்சவும், வெளியிலிருந்து வரும் வெப்பத்தைத் தடுக்கவும் கூடியது. ஆணும் பெண்ணும் தடிமன் இல்லாத, தளர்வான உடைகளையே அணிய வேண்டும்.

கறுப்பு நிற ஆடை

`உடையின் நிறமும் ஆரோக்கியத்துடன் நெருங்கிய தொடர்புடையது’ என்கிறது சித்த மருத்துவம். கோடையில் அடர் நிற உடைகளைத் தவிர்க்க வேண்டும். கொளுத்தும் வெயிலில் கறுப்பு நிற ஆடைகளை அணிந்து செல்வது சூட்டை அதிகரித்து, உடல்நலப் பிரச்னைகளை ஏற்படுத்தும். வெள்ளை, மஞ்சள், இளம் பச்சை, நீலம் போன்றவை வெயிலிலிருந்து நம்மைப் பாதுகாக்கும். உடையில் மட்டுமல்ல குடை, தொப்பி, உள்ளாடை என எதுவாக இருந்தாலும் கறுப்பு நிறம் வேண்டாம். மஞ்சள் நிறம் பல்வேறு நோய்களைப் போக்கும்  தன்மைகொண்டது என்பதால்தான், அம்மை நோயை விரட்ட மஞ்சள் நிற ஆடைகளைப் பயன்படுத்துகிறார்கள்.

தலைப்பாகை கவசம்!

நம் முன்னோர் தலைப்பாகை அணியும் வழக்கத்தைக்கொண்டிருந்தனர். வெயிலில் வெளியே செல்லும்போது தலையில் நேரடியாக சூரியக் கதிர் படக் கூடாது. தலைப்பாகை அணிவதால், அது தலையை முழுமையாக மூடிவிடும். கறுப்பு நிறம் சூரியனின் வெப்பத்தை முழுமையாக உட்கிரகிக்கும் என்பதால், வெள்ளை நிறத் தலைப்பாகையை அணிந்தனர். அது தலையில் விழும் சூரியனின் வெப்பக் கதிரை திருப்பி அனுப்பிவிடும். ஈர்க்கப்படும் சிறிய அளவிலான வெப்பத்தையும் தலைக்குள் செல்லாதபடி பல அடுக்கு பருத்தித்துண்டு பார்த்துக்கொள்ளும். பருத்தியின் இயற்கையான குளிர்ச்சி, வியர்வையை உறிஞ்சும் தன்மை போன்றவற்றால் கிடைக்கும் சுகம் அதை அணிபவர்களுக்குத்தான் தெரியும்.

`முண்டாசு வாதபித்தமுடன் பொழிக்கு மெய்க்கவசம்
உண்டாயிற் காந்திபுட்டி உண்டாகுந் - திண்டாடு
பித்தமறுத் தீயாம் பினைத்தநடுக் கட்டுக்குக்
‘கொற்றமுறு வீரியமாங் கூறு’

‘முண்டாசு’ என்னும் தலைப்பாகை கட்டுவதால் வாதம், பித்தம் போன்ற பிரச்னைகள் ஏற்படாது. `தலைக்குக் கவசமாக இருந்து பாதுகாப்பதுடன், உடலுக்கு வலிமையும் வீரியமும் தரும்’ என்கிறது சித்த மருத்துவம். அயோத்திதாசர், பாரதியார், பகத் சிங் எனப் பலரும் தலைப்பாகை கட்டியிருந்தனர். அந்தத் தலைப்பாகையே அவர்களுக்கு ஓர் அடையாளமாகவும் இருந்தது. சீக்கியர்கள் டர்பன் அணிவது, முஸ்லிம்கள் தொப்பி அணிவது எனப் பல்வேறு மதத்தினரும் தலைப் பகுதிக்கு முக்கியத்துவம் கொடுத்ததன் பின்னணியும் இதுதான். இன்றைக்குக் கடைகளில் கிடைக்கும் தொப்பிகள் தலையைக் கவ்வி நிற்பதால், குளிர்ச்சியற்ற தன்மையை ஏற்படுத்துகின்றன. பெரும்பாலும் அந்தத் தொப்பிகளை அணிவதால் தலையில் ஏற்படும் வியர்வை உடல்நலத்துக்கு கேடு விளைவிக்கும் என்பதால், நம் முன்னோரின் தலைப்பாகையே சிறந்தது. இப்படி நாம் உடுத்தும் உடைக்கும் உடல்நலனுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என்பதை உணர்ந்து, வாழ்வியலுக்கேற்ற பாரம்பர்ய உடைக்கு மாறுவோம். நோய்கள் நெருங்காமல் பாதுகாத்துக்கொள்வோம்.

தெளிவோம்...

ஜி.லட்சுமணன்

நோய்நாடி நோய்முதல் நாடி