Published:Updated:

கொளுத்தும் வெயிலை எதிர்கொள்வது எப்படி? - செய்ய வேண்டியவை, கூடாதவை!

கோடைக்காலத்தில் வெப்பம் காரணமாக ஏற்படும் எந்தவொரு பிரச்னையையும் அலட்சியம் செய்ய வேண்டாம். இல்லாவிட்டால் அவை பாதிப்பை மேலும் தீவிரப்படுத்தும். எனவே, உடலில் மாற்றங்களோ, அறிகுறிகளோ தெரியவந்தால் மருத்துவ ஆலோசனை பெற்றுக்கொள்வது நல்லது.

கொளுத்தும் வெயிலை எதிர்கொள்வது எப்படி? - செய்ய வேண்டியவை, கூடாதவை!
கொளுத்தும் வெயிலை எதிர்கொள்வது எப்படி? - செய்ய வேண்டியவை, கூடாதவை!

னவரி இறுதிவரை கொட்டித் தீர்த்தது பனி. அடுத்த சில நாள்களில் பருவநிலையில் சில மாற்றங்கள். கோடைக்காலத்துக்கு இன்னும் பல நாள்கள் இருக்கும் சூழலில் வெயில் இப்போதே வாட்டி வதைக்கத் தொடங்கிவிட்டது. `ஆரம்பமே இப்படி என்றால் ஏப்ரல், மே மாதங்களில் எப்படி இருக்கப்போகிறதோ' என்ற பீதி நிலவுகிறது. வெயில் காலங்களில் வரக்கூடிய சரும பாதிப்புகளும், உடல்நலப் பிரச்னைகளும் இப்போதே அச்சுறுத்தத் தொடங்கிவிட்டன. 

சுட்டெரிக்கும் வெயிலால் என்ன மாதிரியான உடல்நலப் பாதிப்புகள் ஏற்படும், அவற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்வது எப்படி என்று பொதுநல மருத்துவர் சாருமதியிடம் கேட்டோம். 

"கோடைக்காலம் என்றில்லை, அதிக வெப்பம் நிலவும் காலங்களில் டிஹைட்ரேஷன், சிறுநீர்த் தொற்று, அம்மை நோய், செரிமானப்

பிரச்னை போன்ற வயிற்றுக் கோளாறுகள், தொண்டை அழற்சி (Pharyngitis), சரும நோய்கள் எனப் பல்வேறு பிரச்னைகள் ஏற்படும். வயதானவர்களுக்கு வெயிலால் உடல் பலவீனமாகி 'ஹீட் ஸ்ட்ரோக்' (Heat Stroke) என்னும் வெப்பத்தாக்கு நோய் வரலாம். கோடைக் காலத்தில் வியர்வைச் சுரக்காமலோ, சுரந்தும் ஆவியாகாமல் இருந்தாலோ, ஹைபோதலமஸ் (Hypothalamus) சரியாக வேலை செய்யாமல் இருந்தாலோ ஹீட் ஸ்ட்ரோக் வர வாய்ப்புகள் அதிகம். அதேபோல, நடுத்தர வயதினருக்கு சிறுநீரகப் பிரச்னைகளும், குழந்தைகளுக்குத் தொண்டையில் பாதிப்புகளும் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். 

இப்படிப்பட்ட சூழலில் முன்னெச்சரிக்கையாக நாம் சிலவற்றை கடைப்பிடிக்க வேண்டியது அவசியம். 

* வெப்பம் அதிகமுள்ள காலங்களில் அதிக வியர்வை மற்றும் அளவுக்கதிகமாக சிறுநீர் வெளியேறுவதால் உடலில் நீர் வறட்சி (Dehydration) ஏற்படும். அதைத் தவிர்க்க இளநீர், மோர், நன்னாரி சர்பத்  போன்ற ஆரோக்கியமான இயற்கை பானங்களை அருந்தவேண்டும். தர்பூசணி, வெள்ளரி போன்ற பழங்களைச் சாப்பிடலாம்.

* கோடைக்காலத்தில் மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு, அல்சர் பிரச்னைகள் போன்றவை பலருக்கும் ஏற்படும். இவற்றைச் சரிசெய்ய நார்ச்சத்து அதிகமுள்ள முழுதானிய உணவுகள், காய்கறிகள், பருப்பு வகைகள், நீர்ச் சத்து நிறைந்த பழவகைகளை அதிகம் சாப்பிடவேண்டும்.

* கோடைக்காலத்தில் அதிகம் வியர்க்கும் என்பதால் காலை, இரவு என இரண்டு வேளையும் கட்டாயம் குளிக்கவேண்டும்.

*  சூரிய ஒளியில் இருக்கும் புறஊதாக் கதிர்களால் கோடைக்காலங்களில் சருமத்தில் அரிப்பு ஏற்படும். எனவே, பகலில் வெளியே செல்லும்போது முகம் மற்றும் கைகளை துணிகளால் மூடியபடி செல்வது நல்லது. தலையில் தொப்பி அணிந்துகொள்வது, குடை எடுத்துச் செல்வது நல்லது. 

* வெயில் அதிகமாக இருக்கும் நேரங்களில் வயதானவர்கள் வெளியே செல்வதைத் தவிர்க்கலாம். குழந்தைகள் மதியவேளையில் வெயிலில் விளையாடுவதைத் தவிர்த்து மாலைநேரங்களில் விளையாடலாம். 

* கோடையில் சருமப் பாதிப்புகள் அதிகம் ஏற்படும். இதனால் சருமத்தில் நமைச்சல், அரிப்பு, எரிச்சல், வலி என நிறையத் தொந்தரவுகள் ஏற்படும். மெல்லிய பருத்தியால் ஆன ஆடைகளை அணிவது நல்லது. முகம் உள்பட உடலில் வெயில் படும் எல்லா இடங்களிலும் லோஷன் பூச வேண்டும்.

* சிறுநீரில் கலந்துள்ள உப்புகள் சரியாகக் கரையாமல் வெளியேறும்போது பாதிப்பு ஏற்பட்டால், சிறுநீரகத் தொற்று ஏற்படும். இதனால் நீர்க்கடுப்பு உண்டாகும். இளநீரில் பொட்டாசியம், மெக்னீசியம் போன்ற தாது உப்புகள் இருப்பதால் சிறுநீரகக் கற்கள் உருவாவதையும் நீர்க்கடுப்பு வருவதையும் தடுக்கலாம்.

* கோடைக்காலத்தில்தான் அம்மை நோய்க்கான பாதிப்புகள் அதிகம். `வெரிசெல்லா ஜாஸ்டர்' (Varicella Zoster) என்ற வைரஸ் காரணமாகச் சின்னம்மை பரவும். இது காற்று மூலம் ஒருவரிடமிருந்து மற்றவருக்குப் பரவும் ஒரு தொற்றுநோய். குழந்தைகளுக்குத்தான் இதன் பாதிப்பு அதிகம். இந்த நோய் வந்தவர்கள் குளிர்ச்சியான, தனி அறைகளில் இருப்பது நல்லது. நீர்ச்சத்து அதிகமுள்ள காய்கள், பழங்களை உணவில் அதிகமாக சேர்த்துக் கொள்ளவேண்டும். 

* உடலில் நீர்ச் சத்துக் குறைந்தாலும் 'ஹீட் ஸ்ட்ரோக்'பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. தண்ணீர்தான் கோடைக்காலத்தில் உடலுக்குத் தேவையான முக்கிய மருந்து. மற்ற காலங்களில்  குடிக்கும் தண்ணீரின் அளவைவிட அதிகமாகக் குடிக்கவேண்டும். வெயிலில் வெளியே சென்றாலும்  கையில் தண்ணீர் பாட்டில்களைக் கொண்டு செல்லலாம். 

வெயில் காலங்களில் சில உணவுகளைத் தவிர்ப்பதுடன் சில பழக்கவழக்கங்களை மாற்றிக்கொள்ள வேண்டியது அவசியம். இது கோடைக்கால நோய்களிலிருந்து காத்துக்கொள்ள உதவும்.

* கொழுப்புச் சத்து அதிகமுள்ள உணவுகள், செரிமானத்தில் சிக்கலை ஏற்படுத்தக்கூடும். எனவே, முடிந்தவரை அவற்றைத் தவிர்த்துவிடுங்கள்.

* டீ, காபி அடிக்கடி குடிப்பதைத் தவிர்க்கவேண்டும். அவற்றிலுள்ள கஃபைன் நீர் வறட்சியை ஏற்படுத்தும். மேலும் அதிக கஃபைன் சேரும்போது, அல்சர், நெஞ்செரிச்சல், அசிடிட்டி போன்றவை ஏற்படலாம். கோடைக்காலத்தில் குளிர்பானங்களைத் தவிர்ப்பது நல்லது. 

* சாலையோரங்களில் சுகாதாரமற்ற நிலையில் விற்கப்படும் உணவுகள், புரூட்ஸ் சாலட்டுகள் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். 

* சிறுநீர் கழிக்கும் உணர்வு வந்தவுடனே சிறுநீர் கழித்துவிட வேண்டும். சிறுநீரை அடக்குவது சிறுநீரகக் கற்கள் உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்பட வழிவகுக்கும்.

* அடர் நிறத்திலான ஆடைகள், இறுக்கமான ஆடைகள் அணிவதைத் தவிர்க்கவேண்டும். 

* ஐஸ் வாட்டர் குடிப்பது உடலுக்குக் கேடு விளைவிக்கும். குறிப்பாக, ஐஸ்கிரீமைத் தவிர்க்க வேண்டும். ஃப்ரிட்ஜில் வைத்த தண்ணீரையும் தவிர்க்க வேண்டும். இது தொண்டையில் பாதிப்பை ஏற்படுத்தும். மேலும் காற்று வழியாகப் பாக்டீரியாக்கள் பரவி தொண்டையில் தொற்று (Pahargnagitis) ஏற்படுத்தும். சில குழந்தைகளுக்கு தொண்டையில் ஏற்படும் தொற்று இதய வால்வு நோய்களை உண்டாக்கலாம். எனவே தொண்டையில் தொற்று ஏற்பட்டவருக்குக் காய்ச்சல், சருமத்தின் வழியாக ரத்தப்போக்கு, உடல் சோர்வு போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவரைச் சந்திக்கவேண்டும். இது ரத்தச் சிவப்பணுக்களைக் குறைப்பதுடன் இதயச் செயலிழப்பு, பக்கவாதம் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும். 

இவற்றை முறையாகப் பின்பற்றினாலே கோடைக்காலத்தில் வரக்கூடிய நோய்களிலிருந்து தற்காத்துக் கொள்ளலாம். 

கோடைக்காலத்தில் வெப்பம் காரணமாக ஏற்படும் எந்தவொரு பிரச்னையையும் அலட்சியம் செய்ய வேண்டாம். இல்லாவிட்டால் அவை பாதிப்பை மேலும் தீவிரப்படுத்தும். எனவே, உடலில் மாற்றங்களோ, அறிகுறிகளோ தெரியவந்தால் மருத்துவ ஆலோசனை பெற்றுக்கொள்வது நல்லது" என்கிறார் சாருமதி.