வெண்புள்ளிகள் ஒருவரது தோற்றத்தில் ஏற்படுத்தும் மாற்றம், அவரது மனநலத்தைப் பெருமளவு பாதித்துவிடும். சமூகம் மற்றும் தொழில் சார்ந்த சூழல்களிலும் அவருக்கு நிறைய சிரமங்கள் ஏற்படும். குறிப்பாக, முகம், கைகால்கள், பாதங்கள் போன்றவற்றில் வெண்புள்ளிகள் இருந்தால், அவர்களுக்கு ஏற்படும் மன அழுத்தம், சொல்லி மாளாது.

``உண்மையில் வெண்புள்ளி என்பது அழகியல் சார்ந்த பிரச்னைதானே தவிர, வேறெதுவுமில்லை’’ என்கிறார் `வெண்புள்ளிகள் விழிப்புணர்வு இயக்க’த்தின் செயலாளர் கே.உமாபதி. வெண்புள்ளி பாதிப்பு குறித்து பல்வேறு தவறான தகவல்கள் சமூகத்தில் உலவிவருகின்றன. அவை குறித்தப் பல கேள்விகளுக்கு இங்கே பதிலளிக்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

“வெண்புள்ளி என்பது என்ன?”
“வெண்புள்ளி என்பது சருமத்தில் ஏற்படும் நிறமி இழப்பு. இதனால், சருமத்தில் வெண்மை நிறப் புள்ளிகள் தோன்றும். குறிப்பிட்ட பகுதிகளிலுள்ள நிறமி செல்கள் பலவீனமடைவது அல்லது சேதமடைவதால், அந்த நிறமி அழிந்துவிடும் அல்லது அதன் உற்பத்தி நின்றுவிடும். இதனால்தான் வெண்புள்ளிகள் உருவாகின்றன. பெரும்பாலான மருத்துவர்களும் ஆராய்ச்சியாளர்களும் வெண்புள்ளிகளை `ஆட்டோ இம்யூன் டிஸ்ஆர்டர்’ (Auto Immune Disorder) என்கிறார்கள். வெண்புள்ளிகளால் சருமத்தின் நிறம் மட்டுமே பாதிக்கப்படும். சருமத்தின் மேற்பரப்பின் தன்மையும், அதன் இதர அம்சங்களும் இயல்பான நிலையிலேயே இருக்கும். இது `லூகோடெர்மா’ (Leucoderma), `விட்டிலிகோ’ (Vitiligo) என்றும் அழைக்கப்படுகிறது.”
“வெண்புள்ளியை அடையாளம் காண்பது எப்படி?”
“வெண்புள்ளிகள், சருமத்தில் ஆங்காங்கே வெளிறிய பழுப்பு நிறத்திலும், வெண்மை நிறத்திலும் இடத்திற்கேற்றவாறு, வேறுபட்டு காணப்படும். கைகள், பாதங்கள், கால்கள், முகம், உதடுகள் போன்ற சூரிய ஒளி நேரடியாகப்படும் பகுதிகளில் வெண்புள்ளிகள் தெளிவாகத் தெரியும். அக்குள், வயிறு, தொடைகள் சேரும் பகுதி, வாயைச் சுற்றியுள்ள பகுதிகள், கண்கள், மூக்குத் துவாரங்கள், தொப்புள் மற்றும் பாலுறுப்புகள் போன்ற இடங்களில்தாம் வெண்புள்ளிகள் பொதுவாகக் காணப்படும்.
வெண்புள்ளிகள் தோன்றியதும், அவற்றை உடனடியாக சாதாரண சோதனைக்கு உட்படுத்த வேண்டும். வெண்புள்ளிகள் தோன்றிய இடத்தைத் தொட வேண்டும் அல்லது ஊசியால் மிக லேசாகக் குத்திப் பார்க்க வேண்டும். தொடு உணர்வும் ஊசி குத்தும் உணர்வும் இருந்தால் அது வெண்புள்ளி. தொடு உணர்வு இல்லையென்றால், அது தொழுநோயின் அறிகுறியாக இருக்கலாம். உடனே மருத்துவரை அணுகுவது நல்லது.”
“இவற்றில் எத்தனை வகைகள் உள்ளன?”
``வெண்புள்ளிகளில் மூன்று வகைகள் உள்ளன. முதல் வகை, `ஃபோகல் பேட்டர்ன் விட்டிலிகோ’ (Focal Pattern Vitiligo). இந்த வகை வெண்புள்ளிகள், உடலில் மிகச் சில இடங்களில் மட்டுமே தோன்றும். அதிகமாகப் பரவாது.

இரண்டாவது வகை, `செக்மென்டல் விட்டிலிகோ’ (Segmental Vitiligo). இவை உடலை இரண்டு பாகங்களாகப் பிரித்து, உடலின் வலது புறமோ அல்லது இடது புறமோ தோன்றும்.
மூன்றாவது வகை, `பை-லேட்டரல் விட்டிலிகோ’ (Bi-Lateral Vitiligo) அல்லது `ஜெனரலைஸ்டு விட்டிலிகோ’ (Generalised Vitiligo). உடல் முழுவதும் வெண்புள்ளிகள் தோன்றும். கண் இமைகள், புருவங்கள், தாடி அனைத்திலும் வெள்ளைமுடிகள் வளரும். பெரும்பாலானோர் இந்த வகையான வெண்புள்ளிகளாலேயே பாதிக்கப்படுகின்றனர்.”
“இவை எப்படிப் பரவும்?”
“வெண்புள்ளிகள் பரவும் வேகமும் தீவிரமும் ஆளுக்கு ஆள் வேறுபடும். பெரும்பாலானோருக்கு ஒரு சிறிய இடத்திலிருந்துதான் ஆரம்பிக்கும். ஆண்டுகள் போகப் போக, மற்ற இடங்களுக்குப் புள்ளிகள் பரவத் தொடங்கலாம். ஏற்கெனவே இருந்த புள்ளிகள் அளவில் பெரிதாகலாம். பாதிக்கப்பட்ட சிலர், வெண்புள்ளிகள் சில வருடங்கள் அல்லது பத்து வருடங்களுக்குக்கூட அளவிலும் எண்ணிக்கையிலும் மாறாமல் இருந்தாகவும், பிறகு திடீரென்று புதிய பகுதிகளில் உருவானதாகவும் தெரிவித்திருக்கிறார்கள்.”
“எந்த வயதில் இவை தோன்றும்?”
“எந்த வயதிலும், யாருக்கு வேண்டுமானாலும் வெண்புள்ளிகள் தோன்றலாம். வயது வரம்பு எதுவும் கிடையாது. ஆனால், சமீபத்திய ஆய்வுகளில் 13 வயது முதல் 40 வயதுக்குள் அதிகமாக வருவது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.”
“வெண்புள்ளிகள் தோன்றிய ஒருவருக்கு வேறு பாதிப்புகள் ஏற்படுமா?”
“எதுவும் ஏற்படாது. பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டுமல்ல, அவர்களால் மற்றவர்களுக்கும் எந்தத் தொந்தரவும் ஏற்படுவதில்லை. வெண்புள்ளிகள் தொற்றும் தன்மை கொண்டதல்ல. இது ஓர் அழகியல் பிரச்னை, அவ்வளவுதான். ஆனால், தற்போது மிகப்பெரிய சமூகப் பிரச்னையாக உருவெடுத்திருக்கிறது.”
“சருமத்தில் நிறமிழப்பு ஏற்படும்போது அரிப்பு ஏற்படுமா?”
“வெண்புள்ளிகளால் பாதிக்கப்பட்டவர்கள் எல்லோருக்குமே அரிப்பு இருக்காது. மிகச் சிலர்தான் நிறத்தை இழப்பதற்கு முன்னரும் அல்லது நிறத்தை இழக்கும்போதும் அரிப்பை உணர்வார்கள். இதற்கான காரணத்தைக் கண்டறிவதற்கான ஆராய்ச்சிகள் நடந்துவருகின்றன.”
வெண்புள்ளிகள் பாதிப்பு பரம்பரையாகத் தொடருமா?
வெண்புள்ளிகளால் பாதிக்கப்பட்டோர் திருமணம் செய்துகொள்ளலாமா?
அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கும் வெண்புள்ளிகள் வருமா?
விளக்கங்கள் அடுத்த இதழில்...
கிராபியென் ப்ளாக்