Published:Updated:

`புரூபென்' மாத்திரையைக் கண்டுபிடித்த டாக்டர் ஸ்டீவ்வின் நிறைவேறாத ஆசை என்ன தெரியுமா?

`புரூபென்' மற்ற வலி மருந்துகளைப் போலவே, அலர்ஜி, வாந்தி, மயக்கம், வயிற்றில் அழற்சி, ஆஸ்துமா, மூச்சிரைப்பு, தட்டணுக்கள் செயலிழப்பினால் ரத்தக்கசிவு, உயிரிழப்பு வரைகூட கொண்டுபோகும் என்பதால் டெங்கு போன்ற வைரஸ் காய்ச்சல்களின்போது `புரூபென்' தவிர்க்கப்பட வேண்டும் என்றும் கூறியிருக்கிறார் ஸ்டீவ். 

`புரூபென்' மாத்திரையைக் கண்டுபிடித்த டாக்டர் ஸ்டீவ்வின் நிறைவேறாத ஆசை என்ன தெரியுமா?
`புரூபென்' மாத்திரையைக் கண்டுபிடித்த டாக்டர் ஸ்டீவ்வின் நிறைவேறாத ஆசை என்ன தெரியுமா?

E=mc2 என்ற மிகப்பெரிய ஆற்றல் நிறைந்த சமன்பாட்டை உலகுக்குத் தந்தவர் ஐன்ஸ்டீன். அந்தச் சமன்பாட்டின்மூலம் அவர் செய்த அணுகுண்டால் மனிதர்கள் சிதைந்தபோது, ``இயற்பியலைக் காட்டிலும் அரசியல் மிகவும் கடினமானது என்பதை உணராமல், ஓர்  அசுரனை உருவாக்கி விட்டேனே...(I have created a Monster...)" என்று அவர் மனம் வருந்தியதாகச் சொல்வார்கள். அதேபோல, மருத்துவ உலகின் ஒரு மிகப்பெரிய கண்டுபிடிப்பான `புரூபென்' (Brufen) எனப்படும் `இபுபுரோபென்' (Ibuprofen) மருந்தைக் கண்டுபிடித்ததன் மூலம் பலரது கண்ணீரைத் துடைத்த டாக்டர் ஸ்டீவர்ட் ஏடம்ஸும் ஒருமுறை வருந்தியதாகச் சொல்கிறார்கள்.


1940-50 களில்... காய்ச்சல், ரத்தக்கட்டு, எலும்பு முறிவு, மூட்டு வீக்கம், சரவாங்கி என அனைத்து வகையான சிறிய மற்றும் பெரிய வலிகளுக்குக் கைவசம் இருந்த ஒரே வலி நிவாரணி, ஆஸ்பிரின் என்ற `அசிடைல் சாலிசிலிக் ஆசிட்' (Acetyl Salicylic acid) என்ற மாத்திரை மட்டுமே. இந்த மாத்திரையால் பலன் இருந்தபோதும், தொடர்ந்து அதை உட்கொள்வதால் ஏற்படும் பக்கவிளைவுகளை உணர்ந்த மருந்தியல் நிறுவனங்கள், ஆஸ்பிரினுக்குப் பதிலாக ஒரு சிறந்த மாற்று மருந்தைத் தேடிக் கொண்டிருந்தன.

அதே காலகட்டத்தில், பள்ளிப்படிப்பைப் பாதியில் நிறுத்திவிட்டு, `பூட்ஸ்' (Boots) என்ற இங்கிலாந்து மருந்து நிறுவனத்தில், அப்ரென்டிஸ் ஆக வேலைபார்த்துக்கொண்டிருந்தான் ஸ்டீவர்ட் ஏடம்ஸ் என்ற சிறுவன். அவனது மருந்தியல் ஆர்வத்தைப் பார்த்த அந்த நிறுவனம், அவனை மேற்படிப்புக்கு அனுப்பியது. அதன்படி இங்கிலாந்தின் நாட்டிங்காம் பல்கலைக்கழகத்தில் மருந்தியல் பட்டப்படிப்பையும், லீட்ஸ் பல்கலைக்கழகத்தில் மருந்தியல் மேற்படிப்பையும் முடித்த ஸ்டீவ், மீண்டும் அதே `பூட்ஸ்' கம்பெனியிலேயே பணிக்குத் திரும்பி தனது ஆய்வுகளைத் தொடங்கினார். 


இரண்டாம் உலகப் போர் நேரம். முக்கியத் தேவையான பெனிசிலின் மருந்தைத் தயாரிக்கும் பணியில் அந்த நிறுவனம் இருந்தபோதும், ஸ்டீவின் மனமெல்லாம் புதிய வலி நிவாரணியைக் கண்டுபிடிப்பதிலேயே இருந்தது. தனது பணிநேரம் போக, மற்ற நேரங்களில் இங்கிலாந்தின் புறநகர்ப் பகுதியில் அமைந்திருந்த, பூட்ஸ் நிறுவனத்தின் பழைய விக்டோரியன் இல்லத்தை ஸ்டீவ் ஆய்வுக்கூடமாக மாற்றிக்கொண்டார். அங்கிருந்த சிறிய சமையலறையை ஆய்வுக்கூடமாக்கி டாக்டர் ஜான் நிக்கல்சன் மற்றும் காலின் பிரௌன் ஆகிய இருவருடன் சேர்ந்து புதிய வலி நிவாரணிக்கான ஆய்வுகளைத் தொடங்கினார். 

எந்தவொரு புதிய கண்டுபிடிப்பும் எப்போதும் சுலபமாக இருப்பதில்லை. ஒவ்வொரு முறையும் தனது ஆராய்ச்சி பொய்த்துக்கொண்டே இருக்க, வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையுடன் இருந்தார். தொடர்ந்து பத்து வருடங்களுக்கு மேல், கிட்டத்தட்ட 600-க்கும் மேற்பட்ட வேதிப்பொருள்களைக் கையாண்டு, அவர் மேற்கொண்ட கடுமையான ஆய்வின் முடிவில் கிடைத்ததே, `ஐசோபுடில்பினைல் பிரொபயோனிக் ஆசிட்' (Isobutylphenyl propionic acid) என்ற `இபுபுரோபென்' (Ibuprofen).

அப்போது உபயோகத்தில் இருந்த ஆஸ்பிரின் மாத்திரையைக் காட்டிலும், இதன் பயன்பாடுகள் அதிகம்; பக்கவிளைவுகள் குறைவு என்பதை உறுதியாக நம்பினார் ஸ்டீவ். மாஸ்கோவில் நடந்த ஒரு கருத்தரங்கில் தனது ஆய்வு முடிவைச் சமர்ப்பித்தார். ஆனாலும், உடனடியாக அவருக்கு அனுமதி கிடைக்கவில்லை. நீண்டகால மருத்துவசோதனைக்குப் பிறகு, ` `புரூபென்' என்ற `இபுபுரோபென்' மருந்து மூட்டுவலியைக் குறைக்கும்' என்பதற்கான ஒப்புதல் மற்றும் காப்புரிமை கிடைத்தது.

1969-ம் ஆண்டு, முதன்முதலாக `புரூபென்' மாத்திரை அறிமுகமானபோது, ஓர் அழகிய சுற்றுலாத் தலத்தின் புகைப்படத்துடன், `இந்த மூட்டுவலி நோயாளி, தனது விடுமுறை நாள்களை மீண்டும் இனிதே கழிக்கலாம்...' (This Arthritic patient can now enjoy a holiday again..) என்ற வரிகளுடன், அனைத்து பிரபல பத்திரிகைகளிலும் விளம்பரம் வெளியானது. தொடர்ந்து ஸ்டீவ் மேற்கொண்ட பரிசோதனைகள் மூலம் `இபுபுரோபென்' (Ibuprofen) மூட்டுவலிக்கு மட்டுமன்றி காய்ச்சல், தலைவலி, பற்சிதைவு, தசைவலி போன்றவற்றையும் குறைக்கும் என்பது உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து புரூபென்னுக்கு ஏறுமுகம் தொடங்கியது. இங்கிலாந்தில் மெதுவாகப் பிரபலமடைந்தது `புரூபென்'. 

இந்நிலையில்  ஸ்டீவ் அளித்த ஒரு பேட்டியில்,`எதையும் எதிர்மறையாகப் பார்க்கும் எனக்கு, புரூபென் அளித்த இடமோ, நான் அடைய முடியாத ஒரு மலையின் சிகரம். மலை உச்சியிலிருந்து கீழே விழாமலிருக்க, எடுத்த முயற்சிகள் ஒவ்வொன்றும் நேர்மறை விளைவுகளையே எனக்கு அளித்தன.

அதில் மிக முக்கியமான நிகழ்வு, அமெரிக்காவின் `எப்.டி.ஏ' (FDA) அங்கீகாரம்.  புரூபென் மருந்தை `ஓவர் தி கவுண்ட்டர்' (OTC) முறையில் காய்ச்சல், தலைவலி, உடல் வலி ஆகியவற்றுக்கு விற்பனை செய்ய அமெரிக்கா ஒப்புதல் அளித்தபிறகே, உலகெங்கும் இதன் பயன்பாடு பரவியது' என்று கூறியுள்ளார்.

உலகச் சுகாதார அமைப்பின் அத்தியாவசிய மருந்துகள் பட்டியலில் தற்போது முக்கிய இடம் வகிக்கும் `புரூபென்', குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை எல்லோருக்கும் வரக்கூடிய தலைவலி, காய்ச்சல், பற்சிதைவு, காது வலி, அடிபட்ட இடங்களில் வீக்கம், ஒற்றைத் தலைவலி, சிறுநீரகக் கல் காரணமாக வரும் வலி, அறுவை சிகிச்சைக்குப் பிறகு வரக்கூடிய வலி, முதுகெலும்பில் ஏற்படும் வலி, எலும்புப்புரை,  மாதவிடாய்க் கால வலி, மூட்டு வலி ஆகிய பல்வேறுவகையான வலிகளுக்கும், சிறந்த நிவாரணியாக விளங்குகிறது.

NSAID (Non steroidal anti inflammatory drugs) என்ற வகையைச் சார்ந்த `புரூபென்', செல்களின் வீக்கத்தை அதிகப்படுத்தும் `புராஸ்டேகிளான்டின்ஸ்' (Prostaglandins) என்ற நொதி சுரப்பதைக் கட்டுப்படுத்துவதால், அதைச் சாப்பிட்ட 20 முதல் 30 நிமிடங்களில் காய்ச்சல் மற்றும் அதிகப்படியான வலியைக் (Acute pain) குறைகிறது. நாளடைவில் செல்களின் வீக்கத்தையும் குறைத்து நாள்பட்ட நோய்களுக்கு, வலி நிவாரணியாகவும் விளங்குவதோடு, ஓபியாய்ட் வகையான மார்ஃபீன், பெத்திடீன் மருந்துகளைப் போல தூக்கம் மற்றும் போதையைத் தருவதில்லை என்பதுதான் இதன் சிறப்பம்சமாகும்.


இன்றுவரை உலகிலேயே மிகவும் பிரபலமான வலி நிவாரணியான `புரூபென்' மாத்திரையை, மூன்று விநாடிகளுக்கு ஒருமுறை யாராவது உட்கொள்கின்றனர். வருடந்தோறும் 20,000 டன் எடை கொண்ட `இபுபுரோபென்' மருந்து உலகெங்கும் தயாரிக்கப்படுவதுடன், கோடிக்கணக்கான டாலர்கள் வருமானத்தையும் ஈட்டித் தருகிறது.

இப்படி பூட்ஸ் நிறுவனம், `புரூபென்' காரணமாகத் தனது கிளைகளை உலகெங்கும் விரித்தபிறகும், நாட்டிங்காமில் தனது ஆய்வுப் பணியைத் தொடர்ந்து மேற்கொண்டார் ஸ்டீவ். இதையடுத்து `புரூபென்' போன்ற NSAID மருந்துகளை ரத்த அழுத்தம், மாரடைப்பு, பக்கவாதம், அல்சர் போன்ற நோய் உள்ளவர்கள் தொடர்ந்து சாப்பிட்டால், அதிக ரத்தக்கசிவை ஏற்படுத்தக் கூடும் என்பதால், இதைத் தவிர்க்க வேண்டும் என்று தனது கண்டுபிடிப்பில் உள்ள குறைகளையும் உலகுக்குச் சமர்ப்பித்தார்.

`புரூபென்' மற்ற வலி மருந்துகளைப் போலவே, அலர்ஜி, வாந்தி, மயக்கம், வயிற்றில் அழற்சி, ஆஸ்துமா, மூச்சிரைப்பு, தட்டணுக்கள் செயலிழப்பினால் ரத்தக்கசிவு, உயிரிழப்பு வரைகூட கொண்டுபோகும் என்பதால் டெங்கு போன்ற வைரஸ் காய்ச்சல்களின்போது `புரூபென்' தவிர்க்கப்பட வேண்டும் என்றும் கூறியிருக்கிறார் ஸ்டீவ். 


அப்போதைய நேர்காணல் ஒன்றில் டாக்டர் ஸ்டீவ் கூறிய புகழ் பெற்ற வரிகள்தாம் `Not just palliative... Something curative would've been better...'. அதாவது, `ஒரு வெறும் வலி நிவாரணியை இந்த உலகுக்குத் தருவதற்காக எனது ஆய்வுகளைச் செலவு செய்ததற்குப் பதிலாக ஒரு முழுமையான குணப்படுத்தும் மருந்தைக் கண்டுபிடிப்பதற்காகச் செலவு செய்திருக்கலாம்...' என்பதே அதன் பொருள். 

ஆம்... எந்த ஒரு மருத்துவருக்கும், தனது வைத்தியம் தனது நோயாளியின் வலியைக் குறைத்தது, நோயின் தாக்கத்தை மட்டுப்படுத்தியது என்பதைவிட, தனது நோயாளி முழுமையாக குணமடைந்தான் என்பதுதான் முழுமையான திருப்தி அளிக்கும். ஸ்டீவ் தனது நிறைவேறாத ஆசையாக, ஏக்கத்துடன் சொன்ன கடைசி வார்த்தைகளும் அதுவே. அவரது வார்த்தைகள், உலகெங்கிலும் உள்ள மருத்துவர்களின் மனதைப் பிரதிபலிப்பதாக மருத்துவர்கள் உணர்கிறார்கள்.