Published:Updated:

``யாருக்கும் பரிசோதனையில காசநோய்னு வந்திட கூடாது!’’ - சேவை மங்கை சந்தியா #WomensDay

நேத்துகூட ஒரு ஆஸ்பத்திரியில 5 வயசுக் குழந்தை நெஞ்சுல குழாய்போட்டு உறிஞ்சி எடுத்ததா சொல்லி சளி மாதிரியைக் கொடுத்தாங்க... மனசு பேஜாராயிடுச்சு... `குழந்தைக்கு எதுவும் இருக்கக் கூடாது. சீக்கிரம் குணமாயிடணும்’னு வேண்டிகிட்டே போய் கொடுத்துட்டு வந்தேன்.

``யாருக்கும் பரிசோதனையில காசநோய்னு வந்திட கூடாது!’’ - சேவை மங்கை சந்தியா #WomensDay
``யாருக்கும் பரிசோதனையில காசநோய்னு வந்திட கூடாது!’’ - சேவை மங்கை சந்தியா #WomensDay

வாழ்க்கை எனும் பயணம், எப்போது திசை மாறும் என்று யாருக்கும் தெரியாது. மிகவும் சிலரே திசை மாறிய வாழ்க்கையை மீட்டெடுத்து அதேதிசையில் பயணிக்கிறார்கள். அப்படியொரு ஆளுமைதான் சந்தியா. ஆட்டோ டிரைவரான கணவர், காசநோயால் பாதிக்கப்பட்டபோது, உருக்குலைந்த தன் குடும்பத்தைத் தனி ஆளாக மீட்டெடுத்திருக்கிறார் சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த சந்தியா. தனக்கு நேர்ந்தது வேறு யாருக்கும் நேர்ந்துவிடக் கூடாது என்ற பிரார்த்தனையோடு காசநோயாளிகளின் மத்தியில் சேவையாற்றியும் வருகிறார். 


``எங்களுக்கு லவ் மேரேஜ்தாம்மா... அவர் பேரு காபிரியேல். எங்க வீட்டுப் பக்கம்தான் அவரும் இருந்தாரு... இரண்டு பேரும் பேசிப் பழக்கமாயிடுச்சு... கொஞ்ச நாள்லயே வீட்டுக்கு விஷயம் தெரிஞ்சிருச்சு... முதல்ல எங்க அப்பா ஒத்துக்கல. அப்புறம் பேசி சம்மதிக்கவச்சு கல்யாணம் பண்ணிக்கிட்டோம். எங்க வீட்டுக்குப் பக்கத்துல இருக்கிற ஈஸ்வரன் கோயில்லதான் கல்யாணம் நடந்துச்சு. அவரு கிறிஸ்துவ சமயத்தைச் சேர்ந்தவர். அதனால சர்ச்ல போய் மறுபடியும் கல்யாணம் பண்ணிக்கிட்டோம். 1997-ம் வருஷம் கல்யாணம் நடந்துச்சு’’ என்று சிறிய வெட்கத்தோடு தன் காதல் கதையைச் சொன்னார் சந்தியா.


எல்லோரையும் போல சந்தோஷமாக வாழ்க்கையைத் தொடங்கினார்கள் சந்தியாவும் காபிரியேலும். அன்புக்குச் சாட்சியாக இரண்டு பெண் குழந்தைகள்  பிறந்தார்கள். அமைதியாகச் சென்றுகொண்டிருந்த குடும்பத்தின் அமைதியை சீர்குலைக்கும் வகையில் வந்தது முதல் பிரச்னை. கொடிய காசநோயின் பிடியில் சிக்கினார் சந்தியாவின் கணவர் காபிரியேல்.
``அஞ்சாறு வருஷம் இருக்கும்மா... திடீர்னு ஒருநாள் காய்ச்சல் வந்து ரொம்ப சோர்ந்துட்டார்... காய்ச்சல் விடவே இல்ல... கூடவே, பசியும் தூக்கமும் இல்லாமபோச்சு. ஸ்டான்லி ஆஸ்பிட்டலுக்குத்தான் கூட்டிட்டுப் போனேன். அங்கதான் கண்டுபிடிச்சு சொன்னாங்க, `உங்க வீட்டுக்காரருக்கு நுரையீரல்ல டி.பி வந்திருக்குது’னு. அப்புறம் ஆஸ்பிட்டல்ல ஆறுமாசத்துக்கு மாத்திரை குடுத்தாங்க. 
`மாத்திரை போட்டா டயர்டா இருக்கு, மயக்கமா வருது’னு மாத்திரை போட சிரமப்படுவாரு. மாத்திரை சாப்பிட்டா யூரின் சிவப்பாப் போகும். கடைல போய் வேர்கடல பர்பி வாங்கிவந்து சாப்பிடக் குடுத்து மாத்திரைய போட வைப்பேன். ஆறு மாசம் கழிச்சு திரும்பவும் செக் பண்ணினோம். ``முழுசா குணமாயிடுச்சுன்னு சொன்னாங்க’’ என்று கண்கள் அரும்பச் சொல்கிறார் சந்தியா.


காசநோய் குணமாகிவிட்ட சந்தோஷத்தில் இருந்த குடும்பத்தில் அடுத்த பிரச்னை துளிர்த்தது. தைராய்டு பிரச்னையால் பாதிக்கப்பட்ட சந்தியாவுக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை. மருத்துவமனைக்கும் வீட்டுக்குமாகத் தனியாளாக அலைந்துகொண்டிருந்தார் சந்தியா. 
``காசநோய் குணமான பிறகும் கொஞ்சநாள் ஆட்டோ ஓட்டாம வீட்லதான் இருந்தாரு. அப்போதான் நான் தைராய்டு ஆபரேஷனுக்காக 41 நாள் ஆஸ்பத்திரிக்கும் வீட்டுக்குமா அலைஞ்சிகிட்டு இருந்தேன். அந்த நேரத்தில அவரு பிரண்ட்ஸுங்ககூட சேர்ந்து குடிக்க ஆரம்பிச்சிட்டாரு. சிகரெட் பழக்கமும் உண்டு. நான் ஆபரேஷனை முடிச்சு வீட்டுக்கு வந்த கொஞ்ச நாள்லயே மறுபடியும் அவருக்கு காய்ச்சல் வந்துடுச்சு. உடம்பு அனலா கொதிக்கும். மறுபடியும் ஆஸ்பத்திரிக்குக் கூட்டிட்டுப் போனா, டெஸ்ட் பண்ணிப் பார்த்துட்டு `கல்லீரல்ல வீக்கம்’னு சொல்லிட்டாங்க. 
கவர்மென்ட் ஆஸ்பத்திரியிலதான் காமிச்சோம். என் வீட்டுக்காரருக்குத் தெரியாம டாக்டர்கிட்ட சொன்னேன், `நீங்க மாத்திரை குடுத்தாலும் அவரு மறுபடியும் குடிக்க வாய்ப்பிருக்கு... ஆனா உயிர் மேலயும் பயம் இருக்கு... அதனால நீங்க அவர பயமுறுத்துற மாதிரி சொன்னீங்கன்னா நிறுத்திடுவாரு’னு சொன்னேன்.
அவரு ஒரு புண்ணியவான்மா... `சரி நான் சொல்றேன்’னு சொன்னாரு. என்வீட்டுக்காரர்கிட்ட அவரு ட்ரீட்மென்ட் எடுக்குற நோட்டைக்காட்டி, `உயிரு மேல ஆசை இல்லன்னா நோட்டை மூடிட்டு பாட்டில தொறந்துக்க... உயிரு மேல ஆசை இருந்தா நோட்டைத் திறந்துட்டு பாட்டில மூடிடு’னு சொன்னாரு. டாக்டர் சொன்னதக் கேட்டு அவருக்குப் பயம் வந்திடுச்சு... குடிய நிறுத்திட்டாரு. மாத்திரையும் சிகிச்சையும் ஒரு வருஷம் எடுத்தாரு. அதுக்கு அப்புறம் கல்லீரல் வீக்கம் சரியாகி, மாத்திரையை டாக்டரே நிறுத்திட்டாரு’’ என்று நிறுத்துகிறார் சந்தியா.


உடல்நிலை சற்று தேறியதும் வாடகை ஆட்டோ ஓட்டத்தொடங்கினார் சந்தியாவின் கணவர். ஆனால், பிரச்னை இத்துடன் முடியவில்லை. மீண்டும் நோய்வாய்ப்பட்டார். மீண்டும் காய்ச்சல், சோர்வு, வாந்தி என்று தொடங்கிய இடத்துக்கே மீண்டும் வந்ததுபோன்ற நிலை. பதறியடித்து மருத்துவமனைக்குச் சென்றால், மீண்டும் காசநோய் பாதித்திருப்பதாகப் பரிசோதனையில் உறுதிசெய்தனர். சந்தியா மனம் தளர்ந்துவிடவில்லை. காசநோய் அரக்கனின் பிடியிலிருந்து தன் கணவரை மீட்டெடுக்கத் தீர்மானித்தார். இந்த முறை 8 மாதம் தொடர்ந்து மருந்து எடுக்கச் சொன்னார்கள்.
காசநோயாளிகள் ஒருவேளைகூட தவறாமல் மருந்து எடுத்துக்கொள்ள வேண்டும். ஆனால், பல்வேறு காரணங்களால் நோயாளிகள் மருந்தை தொடர்ச்சியாக எடுத்துக்கொள்வதில்லை. இதனால் அவர்களின் உடலில் மருந்து எதிர்ப்புத்திறன் உருவாகி, மீண்டும் மருந்தை எடுக்கும்போது அது உடலில் வேலை செய்யாமல் போய்விடும். சந்தியாவின் கணவர் மருந்து சாப்பிட சற்றுத் தயக்கம்காட்டினால்கூட சந்தியா விடவில்லை. தொடர்ந்து 8 மாதங்கள் மருந்தைச் சாப்பிட வைத்தார்.


``மருந்து சாப்பிடும்போது அடிக்கடி வாந்தி எடுத்து சோர்ந்துடுவாரு. மயக்கமாவே இருப்பாரு. அந்த மாதிரி சமயத்துல `அவருக்கு ஏதாவது சாப்பிடக்குடுத்தா கொஞ்சம் தெம்பா இருப்பாரு’னு ஆஸ்பத்திரியில சொல்லி அனுப்புவாங்க. அதனால கையில இருக்கிற காச வெச்சு என்னால முடிஞ்சது, வாய்க்குப் புளிப்பா லெமன் சாதம், புளிசாதம் செஞ்சு கொடுத்து, டீயும் போட்டுக் கொடுப்பேன். அதை சாப்பிட்டதும் கொஞ்சம் ஃபிரஷ்ஷா ஆயிடுவாரு. அப்படியே 8 மாசமும்  மாத்திரையப் போட வெச்சிட்டேன். அதனால கடவுள் புண்ணியத்துல இப்போ இரண்டரை வருஷமா எந்தப் பிரச்னையும் இல்லம்மா...’’ என்றார்.
``அவரு உடம்பு சரியில்லாம இருந்த சமயங்கள்ல, அவர பாத்துக்கணும்றதால நானும் வேலைக்கு எங்கயும் போக முடியல. அந்தச் சமயத்துல வீட்ல சாப்பாடே இருக்காது. சொந்தக்காரங்ககூட எத்தனை நாள் குடுத்திற முடியும்மா... ரெண்டு பொம்பள புள்ளைங்கள வேற வச்சிருக்கேன்... அவங்களையும் படிக்க வைக்கணும்... மீட்டர் வட்டிக்குக் கடனை வாங்கித்தான் குடும்பத்த ஓட்டினேன். இப்பவும் அந்தக் கடனை அடைக்க முடியாமத்தான் கஷ்டப்பட்டுட்டு இருக்கோம்.’’


காசநோய்க்காகப் பணியாற்றிக்கொண்டிருக்கும் `ரீச்’ அமைப்பில் தற்போது சந்தியா பணியாற்றிக்கொண்டிருக்கிறார். வடசென்னையில் உள்ள நான்கு மருத்துவமனைகளில் காசநோய் பரிசோதனைக்காகச் சேகரிக்கப்படும் சளி மாதிரிகளை எல்லாம் எடுத்துக்கொண்டு ஆழ்வார்பேட்டையில் உள்ள ஆய்வகத்தில் கொடுத்துவருவதுதான் சந்தியாவின் அன்றாடப் பணி.
``ஒவ்வொரு நாளும் சளி மாதிரிகளை எடுத்திட்டு போகும்போது `யாருக்கும் பரிசோதனையில காசநோய்னு வந்திடக் கூடாது’னு கடவுள்கிட்ட வேண்டிகிட்டே எடுத்துட்டுப் போவேம்மா. `டெஸ்ட் ரிசல்ட்ல என்ன வந்துச்சு’னு கேட்டுக்காம ஓடி வந்திருவேன்.
காசநோயால நானும் என் குடும்பமும் பட்ட கஷ்டத்த வேற யாரும் படக்கூடாதும்மா... நேத்துகூட ஒரு ஆஸ்பத்திரியில 5 வயசுக் குழந்தை நெஞ்சுல குழாய்போட்டு உறிஞ்சு எடுத்ததா சொல்லி சளி மாதிரியைக் கொடுத்தாங்க... மனசு பேஜாராயிடுச்சு... `குழந்தைக்கு எதுவும் இருக்கக் கூடாது. சீக்கிரம் குணமாயிடணும்’னு வேண்டிகிட்டேபோய் கொடுத்துட்டு வந்தேன்’’ என்கிறார் சந்தியா.
இத்தனை போராட்டங்களுக்கு நடுவிலும் தன் இரண்டு பெண்களையும் செவிலியராகவும் ஆசிரியராகவும் படிக்க வைத்திருக்கிறார் சந்தியா. காதல் கணவரையும் இரண்டு மூன்று பெரிய பாதிப்புகளில் இருந்து காப்பாற்றியிருக்கிறார். தன் நிலை யாருக்கும் வரக்கூடாது என்ற நினைப்பில் இன்றும் சந்தியாவின் கால்கள் காசநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்காகவே ஓடிக்கொண்டிருக்கின்றன..!