Published:Updated:

பாரமா... பாசமா? - முதுமை எனும் இரண்டாம் குழந்தைப் பருவம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
பாரமா... பாசமா? - முதுமை எனும் இரண்டாம் குழந்தைப் பருவம்!
பாரமா... பாசமா? - முதுமை எனும் இரண்டாம் குழந்தைப் பருவம்!

ஹெல்த்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

பிரீமியம் ஸ்டோரி

வில்லியம் ஷேக்ஸ்பியரின் உலகப் புகழ்பெற்ற இசை நாடகம் ‘அஸ் யூ லைக் இட்’ (As you like it). அந்த நாடகத்தின் ஓர் அத்தியாயத்தில் ‘உலகமே ஒரு நாடக மேடை’ என்னும் தலைப்பில் எழுதப்பட்ட கவிதையில், மனித வாழ்க்கையின் ஏழுநிலைகள் பற்றிக் குறிப்பிட்டிருப்பார். அவற்றில் இறுதி இரண்டுநிலைகளில் முதுமையைப் போற்றியிருப்பார். முதியவர்களின் இறுதிநிலையை ‘இரண்டாம் குழந்தைப் பருவம்’ என்று வர்ணித்திருப்பார். வயதானவர்கள் குழந்தைகளைப் போன்றவர்களே. ஆனால், அவர்களைக் குழந்தைகளைப்போல கண்ணும் கருத்துமாக கவனித்துக்கொள்கிறோமா?

பாரமா... பாசமா? - முதுமை எனும் இரண்டாம் குழந்தைப் பருவம்!

சாலைகளில் ஆதரவற்றுத் திரியும் முதியோர் மற்றும் முதியோர் இல்லங்களில் நிறைந்து வழிபவர்களின் எண்ணிக்கை அவர்களை பாரமாகப் பார்க்கும் நிலை இருக்கிறது என்பதையே உணர்த்துகிறது. முதியோரை மரியாதைக் குறைவாக நடத்துவதாகவும் தாக்குவதாகவும்கூட எண்ணற்ற வழக்குகள் பதிவுசெய்யப்படுகின்றன. கூட்டுக்குடும்பங்கள் அரிதாகி, தனிக்குடித்தனம் பெருகியதன் விளைவாக இந்தநிலை ஏற்பட்டிருக்கலாம்.

முதியோர்நலனுக்காக 20 ஆண்டுகளுக்கும் மேலாகச் செயல்பட்டுவரும் `மூத்த குடிமக்கள் மன்றம்’ அமைப்பின் கௌரவத் தலைவர், கேப்டன் சிங்கராஜாவிடம் பேசினோம்.

``முதியோருக்கு ஏற்படும் மனநலப் பிரச்னைகளே அவர்களின் உடல்நலப் பிரச்னைகளுக்கு அச்சாரமிடுகின்றன. புறக்கணிப்புதான் முதியோர் சந்திக்கும் தலையாய பிரச்னை. வீட்டில் எடுக்கும் முக்கிய முடிவுகள், ஆலோசனைகள் என எதையும் பெரியவர்களிடம் கலந்தாலோசிப்பது கிடையாது. முதியவர்களிடம் பேச பெரியவர்களுக்கு மட்டுமல்ல, பேரக்குழந்தைகளுக்கும்கூட நேரம் இருப்பதில்லை. வயதான காலத்தில் கணவன், மனைவி இருவரில் ஒருவர் இறந்துவிட்டால், மற்றவர் சந்திக்கும் தனிமை மிகக்கொடியது. முதியவர்களில் 80 வயதுக்கு மேற்பட்டவர்களே அதிக பிரச்னைகளைச் சந்திக்கிறார்கள். அவர்களது இயக்கம் குறைந்து, நோய்களின் தாக்கம் அதிகரிக்கும்போது அவர்கள்மீதான புறக்கணிப்பும் அதிகரித்துவிடுகிறது. இதனால் பெரும்பாலும் தனிமையிலிருக்கும் முதியோர்கள் தீவிர மனஅழுத்தத்துக்கு ஆளாகின்றனர்.

பாரமா... பாசமா? - முதுமை எனும் இரண்டாம் குழந்தைப் பருவம்!

`ஹெல்ப் ஏஜ் இந்தியா’ அமைப்பின் சார்பில் நடத்தப்பட்ட ஆய்வில், முதியோருக்கு நிகழும் வன்கொடுமைகளில் 42 சதவிகிதம் மருமகள்களால் நடப்பது கண்டறியப்பட்டிருக்கிறது. நன்றாக நடமாடிக்கொண்டிருக்கும் முதியோரிடம், ‘வெளியில எங்கேயாவது போய் விழுந்து அடிபட்டுட்டா, எங்களுக்குத்தான் தொந்தரவு. அதனால வீட்டைவிட்டு வெளியே போக வேண்டாம்’ என்று உத்தரவிடுவார்கள். குடும்பத்தினர் எங்கேயாவது வெளியே சென்றால்கூட இவர்களைக் கூட்டிக்கொண்டு போனால் தொந்தரவு என்று வீட்டிலேயே விட்டுவிட்டுப் போய்விடுகிறார்கள். பல வீடுகளில் வயதானவர்களைக் கடின வார்த்தைகளாலும், ஜாடை மாடையாகவும் திட்டுவது நடக்கிறது. இவற்றால் அவர்களின் உடல்நலனும் மனநலனும் பாதிக்கப்படுகின்றன” என்று ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார் சிங்கராஜா.

‘`வீட்டிலேயே வைத்துக்கொண்டு முதியவர்களை மோசமாக நடத்துவதற்கு பதிலாக, அவர்களை முதியோர் இல்லங்களுக்கு அனுப்பிவைப்பது எவ்வளவோ மேலானது’’ என்கிறார் முதியோர்நல மருத்துவர் வி.அஷ்வின் கருப்பன். முதியோர் பராமரிப்புக்கான சில ஆலோசனைகளையும் சொல்கிறார் அவர்.

“வயதானால் முதியோருக்கு மறதி, தகவல்தொடர்பில் பிரச்னை; அதாவது என்ன வார்த்தை பேசினார்கள் என்பதை மறப்பது, வாகனம் ஓட்டுவதில் தடுமாற்றம், சாப்பிட்டு முடித்துவிட்டாலும், ‘ஏன் எனக்கு சாப்பாடு தரலை?’ என்று கேட்பது, மாத்திரை போட்டுக்கொண்டது தெரியாமல் மீண்டும் மீண்டும் சாப்பிடுவது, வலி தெரியாமலிருப்பது, பாத்ரூமின் உள்ளே பூட்டிக்கொண்டு வெளியே வரத் தெரியாமல் இருப்பது போன்ற பிரச்னைகள் ஏற்படலாம். வயதாகும்போது மூளை சுருங்குவதாலேயே முதியோருக்கு இத்தகைய பிரச்னைகள் ஏற்படுகின்றன. இவையெல்லாம் மறதிநோயான டிமென்ஷியாவுக்கான (Dementia) தொடக்கநிலை. இந்தப் பிரச்னைகள் தங்களுக்கு இருப்பதை முதியவர்களால் உணர முடியாது. ஆனால், வீட்டிலுள்ள மற்றவர்களால் உணர முடியும். அப்போது அவர்களிடம், `உங்களுக்கு இந்தப் பிரச்னை இருக்கிறது’ என்று சொன்னால் அவர்கள் கோபப்படுவார்கள் அல்லது பேச்சைக் கேட்க மாட்டார்கள். ‘நான் நல்லாத்தானே இருக்கேன். ஏன் இப்படிச் சொல்றாங்க?’ என்ற எண்ணம் தோன்றும். இது போன்ற சூழலில் மருத்துவரின் உதவியை நாடலாம். சிலர் மருத்துவர் சொன்னால் கேட்டுக்கொள்வார்கள், சிலர் அவர்களைவிட மூத்தவர்கள் சொன்னால் கேட்டுக்கொள்வார்கள்.

முதியவர்களில் கணவன், மனைவி இருவரில் ஒருவர் இறந்துவிட்டால், மற்றவர் தனிமையை உணர்வார். அப்போது அவர்கள் மன அழுத்தம், பதற்றம், பயம் போன்ற உணர்வுகளுக்கு ஆளாவார்கள். அப்படிப்பட்ட சூழ்நிலையில் அவர்களைத் தனிமையில் விடுவது நல்லதல்ல. பல ஆண்டுகளாக உடனிருந்தவர்கள் திடீரென்று ஒருநாள் இல்லாமல் போன வெற்றிடத்தை நம்மால் எந்த வகையிலும் நிரப்ப முடியாது.

‘‘வருத்தப்படுவதிலிருந்து வெளியே வாருங்கள். நாங்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்போம்’’ என்று ஆதரவாகப் பேச வேண்டும். அந்த ஆறுதல் வார்த்தைகளைக் கேட்டு, மிக எளிதாக அந்தத் துயரத்திலிருந்து வெளியே வருவார்கள். ஒருவேளை மன அழுத்தத்திலிருந்து விடுபடவில்லை என்றாலோ, தற்கொலை உணர்வு இருப்பது தெரிந்தாலோ அவர்களுக்கு மருத்துவச் சிகிச்சையும் தேவைப்படும்.

பல வீடுகளில் குழந்தைகளைப் பராமரிப்பதும் வளர்ப்பதுமே முதியவர்களின் வேலைகளாக இருக்கும். இதனால் காலம் முழுவதும் வீட்டிலேயே அடைந்துகிடப்பதுபோல உணர்வார்கள். அதுவே முதியோர் இல்லம் என்றால், அவர்கள் வயதிலுள்ள பலர் அங்கு இருப்பார்கள். பேச்சுத்துணைக்கு ஆள் கிடைப்பார்கள்; தங்கள் எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள ஏற்ற நண்பர்கள் இருப்பார்கள். நூலகங்கள், யோகா, தியானம் போன்ற பயிற்சிகள் இருக்கும். அதற்காக எல்லா முதியவர்களையும் முதியோர் இல்லத்தில் விட வேண்டும் என்று அர்த்தப்படுத்திக்கொள்ள வேண்டாம்.

அப்படி நடந்தால், அதை நேர்மறையாக அணுகி ஆரோக்கியமான வாழ்க்கை வாழ முயலலாம். ஆனால், முதியோரை நன்றாக கவனித்துக்கொள்ளும் இல்லங்களைக் கண்டுபிடித்து அதில் சேர்க்க வேண்டியது அவசியம். சில முதியவர்கள் தாங்கள் ஆரோக்கியமாக இருப்பதாக நினைத்துக்கொண்டு மருத்துவப் பரிசோதனைக்கே செல்ல மாட்டார்கள். ரத்த அழுத்தமோ, சர்க்கரைநோயோ ஒருநாள் இரண்டு நாள்களில் வரப்போவதில்லை. இன்றைய காலகட்டத்தில் இளைஞர்களுக்கே வாழ்க்கைமுறை சார்ந்த நோய்கள் பல ஏற்படுகின்றன. எனவே, வயதானோருக்கு குறிப்பிட்ட இடைவெளியில் மருத்துவப் பரிசோதனை செய்ய வேண்டியது அவசியம்.
 

பாரமா... பாசமா? - முதுமை எனும் இரண்டாம் குழந்தைப் பருவம்!

அண்மையில் நடந்த ஒரு சம்பவம். வயதான கணவன், மனைவி இருவரும் சர்க்கரை நோயாளிகள். கணவர் நடமாட முடியாமல் படுக்கையில் இருந்தவர். மனைவி நன்றாக நடமாடிக்கொண்டிருந்தவர். வீட்டில் யாரும் இல்லாதநிலையில் மனைவி சமையலறைக்குச் சென்றபோது, ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைந்து போய் மயங்கி விழுந்துவிட்டார். சரியான நேரத்துக்குச் சாப்பாடு கொடுக்காததால், அவரின் கணவருக்குச் சர்க்கரை அளவு குறைந்து அவரும் படுக்கையிலேயே மயங்கிவிட்டார்.

நீண்டநேரம் கழித்து இருவரையும் மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு வந்தனர். ஆனால் ,அந்தப் பெண்ணை மட்டுமே எங்களால் காப்பாற்ற முடிந்தது. எனவே, 50 வயதுக்கு மேற்பட்டவர்களாக இருந்தால், இரண்டு வருடங்களுக்கு ஒரு முறையும், 55 வயதுக்கு மேற்பட்டவர்கள் வருடத்துக்கு ஒருமுறையும் முழு உடல் பரிசோதனை செய்துகொள்வது நல்லது. வேறு ஏதேனும் நோய்களுக்குச் சிகிச்சை பெறுபவர்கள் என்றால், குறிப்பிட்ட இடைவெளியில் பரிசோதனையும், மருத்துவ ஆலோசனையும் பெறுவது அவசியம்.

முதியவர்களை வீட்டிலேயே முடக்கி வைத்திருப்பதும் தவறு. இது அவர்களுக்குக் கூடுதல் மன அழுத்தத்தை ஏற்படுத்தும். உடல் பருமன், சர்க்கரையின் அளவு அதிகரிப்பது போன்ற பல்வேறு பிரச்னைகள் ஏற்படும். இதனால் வீட்டிலிருப்பவர்கள் வெளியே போகும்போது வயதானவர்களையும் உடன் அழைத்துச் செல்லலாம். முதியோர் அவர்களது வயதிலுள்ள நண்பர்களுடன் சேர்ந்து நடைப்பயிற்சி செல்லலாம். வெளியே அனுப்பத் தயங்கினால், வீட்டின் மொட்டை மாடியில் நடைப்பயிற்சி செய்வதற்கு ஏற்ற வழியை ஏற்படுத்திக் கொடுக்கலாம்.

பெரும்பாலான முதியோர் தொலைக்காட்சி நாடகங்களைப் பார்த்தே பொழுதைக் கழிக்கிறார்கள். மூதாட்டி ஒருவர் சிகிச்சைக்காக வந்தார். என்னிடம், ‘என்னை ஊசி போட்டுக் கொல்லப் பார்க்கிறார்கள், முகத்தில் ‘ஏர் பபுள்’ வைத்து அழுத்திக் கொல்லப் பார்க்கிறார்கள்’ என்றார். ‘ஏர் பபுள் என்றால் என்னவென்று எனக்கே தெரியாது. இதெல்லாம் உங்களுக்கு எப்படித் தெரியும்?’ என்று கேட்டதற்கு, ‘அதுதான் போன வாரமே நாடகத்தில் காட்டினார்களே’ என்றார்.

எதிர்மறைத் தாக்கங்களை ஏற்படுத்தும் தொலைக்காட்சி நாடகங்களுக்கு பதிலாக, அவர்களை நல்ல புத்தகங்களைப் படிக்கச் செய்யலாம்; ஆரோக்கியமான விவாதங்களில் ஈடுபடுத்தலாம்; குழந்தைகளுக்கு நல்ல விஷயங்களைச் சொல்லிக் கொடுக்கப் பழக்கலாம். இவை நேர்மறையான சிந்தனைகளை ஏற்படுத்தி, அவர்களின் வாழ்க்கையை ஆரோக்கியமாக்கும்” என்கிறார் டாக்டர் அஷ்வின்.

முதுமை என்பது சுமையல்ல; இரண்டாவது குழந்தைப் பருவம். எனவே முதுமையைப் போற்றுவோம்!

மாடல்: கல்யாணி ஸ்ரீனிவாசன்

- ஜெனி ஃப்ரீடா; படங்கள்: மதன்சுந்தர்

பெற்றோரின்  உடல்நலத்தைப் பராமரிக்க சில ஆலோசனைகள்...

• வயதான பெற்றோரிடம் மனம்விட்டுப் பேசுங்கள். நீங்கள் அவர்கள்மீது காட்டும் அக்கறை ஒரு டாக்டரை அணுகும் முடிவை எடுக்கவோ, உடல்நலன் சார்ந்த வேறு நல்ல மாற்றங்களையோ அவர்களிடம் ஏற்படுத்தலாம்.

• எடை இழப்பு, மன அழுத்தம், நினைவாற்றல் குறைதல் உள்ளிட்ட அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரிடம் அழைத்துச் செல்ல வேண்டும்.

• பாதுகாப்பு தொடர்பாக ஏதேனும் பிரச்னைகள் இருந்தால், அதற்கு மாற்று ஏற்பாடு செய்யுங்கள். உதாரணமாக, தாங்களாகவே வாகனம் ஓட்டச் சிரமப்பட்டால் ஆட்டோ, டாக்ஸி போன்றவற்றைப் பயன்படுத்தச் சொல்லலாம்.

• அன்றாட வீட்டு வேலைகளைச் செய்ய முடியவில்லையென்றால், உதவிக்கு யாரையாவது பணிக்கு அமர்த்தலாம். செவிலிய உதவியாளரைப் பணியமர்த்தினால், குளிப்பது, சாப்பிடுவது போன்ற செயல்களுக்கு உதவியாக இருக்கும்.

• உங்கள் ஆலோசனைகளைப் பெற்றோர் புறக்கணித்தால், அவர்களின் மருத்துவரிடம் தெரிவிக்கலாம். நீங்கள் கொடுக்கும் தகவல் பெற்றோரின் உடல் மற்றும் மனநலம் குறித்து கூடுதல் புரிந்துணர்வை மருத்துவருக்குக் கொடுக்கும்.

பாரமா... பாசமா? - முதுமை எனும் இரண்டாம் குழந்தைப் பருவம்!

வயதான பெற்றோரைப்  பார்க்கப் போகிறீர்களா?

இதையெல்லாம் கவனியுங்கள்...

• முதியவர்கள் திடீரென்று அல்லது அடிக்கடி கவலைப்படுகிறார்களா?

• வழக்கமாக அவர்கள் மகிழ்ச்சியாகச் செய்யும் செயல்களில் ஆர்வமிழந்து காணப்படுகிறார்களா?

• குணநலனில் மாற்றங்கள் தென்படுகின்றனவா?

• அளவுக்கு அதிகமாக அல்லது தேவையில்லாமல் கவலைப்படுகிறார்களா?

• தங்கியிருக்கும் முதியோர் இல்லத்தில் ஏதேனும் பிரச்னையா?

• திடீரென்று தனிமையாக இருப்பதுபோல உணர்கிறார்களா?

• குறித்த நேரத்தில் மாத்திரை சாப்பிடாமல் இருக்கிறார்களா?

• ஃபிரிட்ஜில் கெட்டுப்போன உணவு இருக்கிறதா?

• மாதந்தோறும் செலுத்த வேண்டிய பில் தொகைகளைச் சரியான தேதியில் செலுத்த மறக்கிறார்களா?

• அண்மையில் எங்கேனும் கீழே விழுந்தார்களா... வாகனம் ஓட்டிச் சென்றபோது விபத்துகளைச் சந்தித்தார்களா?

• சமீபத்தில் அடிக்கடி மருத்துவமனை செல்லும் நிகழ்வுகள் ஏற்பட்டனவா?

• வீட்டில் அடுப்பு, அயர்ன் பாக்ஸ் போன்றவற்றை ஆன் செய்ததை மறந்து போகிறார்களா?
 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு