Published:Updated:

கேரளாவில் பரவும் 'வெஸ்ட் நைல்' வைரஸ்... அறிகுறிகள், சிகிச்சைகள், தடுக்கும் வழிமுறைகள்! #WestNileVirus

`கியூலெக்ஸ்’ வகை கொசுக்கள் மூலமாகவே இந்த வைரஸ் மனிதர்களுக்குப் பரவுகிறது. `தொடக்கத்தில், லேசான காய்ச்சல், சளி என சாதாரணமாகத் தோன்றும். ஒரு கட்டத்தில் தீவிரமாக உருவெடுத்து மரணத்தை ஏற்படுத்தலாம்’ என்று எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள்.

கேரளாவில் பரவும்  'வெஸ்ட் நைல்' வைரஸ்... அறிகுறிகள், சிகிச்சைகள், தடுக்கும் வழிமுறைகள்! #WestNileVirus
கேரளாவில் பரவும் 'வெஸ்ட் நைல்' வைரஸ்... அறிகுறிகள், சிகிச்சைகள், தடுக்கும் வழிமுறைகள்! #WestNileVirus

நிபா  வைரஸால் பெரும் பாதிப்புக்குள்ளான கேரள மாநிலத்தை இப்போது புரட்டிப்போட்டுக் கொண்டிருக்கிறது `வெஸ்ட் நைல்’ காய்ச்சல். இந்தக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த 6 வயது சிறுவன் நேற்று உயிரிழந்திருக்கிறார். மேலும் பலருக்கு, `வெஸ்ட் நைல்’ காய்ச்சலுக்கான அறிகுறிகள் தெரியத் தொடங்கியிருப்பதால் கேரள மாநிலச் சுகாதாரத்துறை பரவலான முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளைச் செய்யத் தொடங்கியுள்ளது. 

டெல்லியிலிருந்து கேரளா சென்றுள்ள தேசிய நோய்த் தடுப்புமைய அதிகாரிகளும் இதுகுறித்து தீவிரமாக ஆலோசித்து வருகின்றனர். `இந்த வைரஸ் கேரள மாநிலத்தைத் தவிர வேறு பகுதிகளுக்கு இதுவரை பரவவில்லை’ என்றும், `கேரளாவுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும்’ என்றும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா தெரிவித்திருக்கிறார். 

இந்த வைரஸ் காய்ச்சல் முதன்முதலாக உகாண்டா நாட்டின் `வெஸ்ட் நைல்’ மாவட்டத்தில் 1937-ம் ஆண்டு கண்டறியப்பட்டது. அந்த மாவட்டத்தில் கண்டறியப்பட்டதாலேயே இதற்கு `வெஸ்ட் நைல்’ காய்ச்சல் என்று பெயரிடப்பட்டது. `கியூலெக்ஸ்’ வகை கொசுக்கள் மூலமாகவே இந்த வைரஸ் மனிதர்களுக்குப் பரவுகிறது. `தொடக்கத்தில், லேசான காய்ச்சல், சளி என சாதாரணமாகத் தோன்றும். ஒரு கட்டத்தில் தீவிரமாக உருவெடுத்து மரணத்தை ஏற்படுத்தலாம்’ என்று எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள்.

 `வெஸ்ட் நைல்’  வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகும் 80 சதவிகிதம் பேருக்கு அறிகுறிகள் வெளிப்படுவதில்லை. 20 சதவிகிதம் பேருக்குக் காய்ச்சல், தலைவலி, வாந்தி, சரும பாதிப்புகள் தென்படலாம். 150 பேரில் ஒருவருக்கு இது தீவிர பாதிப்பாக மாறி `என்செபாலைட்டிஸ்' (Encephalitis) அல்லது `மெனிஞ்சைட்டிஸ்' (Meningitis) என்ற மூளைக்காய்ச்சல் பாதிப்பாக மாறலாம். 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள், புற்றுநோய், சர்க்கரைநோய், உயர் ரத்த அழுத்தம், சிறுநீரகப் பாதிப்பு உள்ளவர்களுக்கு இந்த வைரஸ் அதிகப் பாதிப்பை ஏற்படுத்தலாம். 

``வட அமெரிக்க நாடுகளில் அதிக அளவில் காணப்படும் `இந்த வைரஸ் சமீபத்தில்தான் இந்தியாவில் அடையாளம்

காணப்பட்டுள்ளது. இந்த வைரஸ், பறவைகளில் இருந்து கொசுக்களுக்கும், பின்னர் கொசுக்கள் மூலம் மனிதர்களுக்கும் பரவுகிறது. மனிதர்களில் இருந்து மனிதர்களுக்கு இந்நோய் பரவாது. இந்தவகைக் காய்ச்சலைக் குணப்படுத்த பிரத்யேக மருந்துகள் எதுவுமில்லை. நோயாளிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுத் தொடர் கண்காணிப்பில் வைக்கப்படுவர். தீவிரத்தைப் பொறுத்து காய்ச்சலைக் கட்டுப்படுத்தும் மருந்துகள், வலி நிவாரணி மாத்திரைகள் வழங்கப்படும். நீரிழப்பு, மூச்சுத்திணறல் ஆகியவற்றைக் கட்டுப்படுத்தும் சிகிச்சைகளும் அளிக்கப்படும். பாதிக்கப்பட்ட நபரை மருத்துவமனையில் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிப்பதுடன் தொடர்ச்சியான மருத்துவக் கண்காணிப்பும் அவசியம். வைரஸுக்கு தடுப்பு மருந்துகள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. அதற்கான ஆராய்ச்சிகள் நடந்துகொண்டிருக்கின்றன’’ என்கிறார் பொதுநல மருத்துவர் சாருமதி. 

அண்டை மாநிலமான கேரளாவை கதிகலங்க வைத்துள்ள 'வெஸ்ட் நைல்' வைரஸ் தமிழகத்தைப் பாதிக்க வாய்ப்புண்டா? தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை இயக்குநர் குழந்தைசாமியிடம் கேட்டோம். 

“கொசுக்கள் மூலம் இந்த வைரஸ் பரவுவதால், தமிழகத்திலும் இந்த வைரஸ் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்புண்டு. அதனால் தமிழக - கேரள எல்லையோரங்களில் கூடுதல் கண்காணிப்புடன் இருக்குமாறு சுகாதாரத்துறைக்கும் மாவட்ட நிர்வாகத்துக்கும் அறிவுறுத்தியுள்ளோம். பிற மாநிலங்களிலும் ஏற்படும் பாதிப்புகளைத் தொடர்ந்து கண்காணிக்கிறோம். இதுவரை தமிழகத்தில் இந்த வைரஸ் பாதிப்பில்லை. காய்ச்சல் ஏற்பட்டால் அது எந்த மாதிரியான காய்ச்சல் என்பதை அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்குச் சென்று பரிசோதித்துக்கொள்ள வேண்டும். `வெஸ்ட் நைல்’ வைரஸ் பற்றி பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம். வீடுகளுக்கு அருகே தண்ணீர் தேங்கவிடாமல் பார்த்துக்கொள்வது, வீடுகளில் கொசு ஒழித்தல் போன்றவற்றை செய்தாலே இந்த நோய் பரவாமல் தடுக்கமுடியும்” என்கிறார் அவர்.