Published:Updated:

`குழந்தை முதல் இளம்பெண்கள் வரை... எது சரியான எண்ணெய்க் குளியல்?’ இயற்கை மருத்துவர் விளக்கம்

``எண்ணெய்க் குளியல் செய்யும்போது, உடல் முழுவதும் எண்ணெய்த் தடவி, மசாஜ் செய்து குளித்தால் நம் உடலில் மகிழ்ச்சி ஹார்மோனான செரோட்டனின் வெளியாகும்.’’

`குழந்தை முதல் இளம்பெண்கள் வரை... எது சரியான எண்ணெய்க் குளியல்?’ இயற்கை மருத்துவர் விளக்கம்
`குழந்தை முதல் இளம்பெண்கள் வரை... எது சரியான எண்ணெய்க் குளியல்?’ இயற்கை மருத்துவர் விளக்கம்

மிழ் சினிமாக்களில் கிராமத்திலிருந்து சென்னைக்கு வேலைபார்க்க கிளம்புகிற மகனிடமோ, மகளிடமோ அம்மாக்கள் தவறாமல் சொல்கிற ஒரு டயலாக், `மறக்காம எண்ணெய்த் தேய்ச்சுக் குளி’ என்பதுதான். நம் வாழ்வியலில் மட்டுமன்றி, வாழ்வியலைச் சொல்லுகிற சினிமாக்களில்கூட இடம்பெற்று வந்த எண்ணெய்க் குளியலை, தற்போது நாமெல்லாம் எடுக்கிறோமா என்றால், `இல்லை’ என்பதுதான் பதில். எண்ணெய்யைத் தடவி, பிடித்த ஷாம்புவைப் போட்டு தலைமுடியை வாஷ் செய்வதைத்தான் இன்றைய தலைமுறை எண்ணெய்க்குளியல் என்று நினைத்துக்கொண்டிருக்கிறது.

எண்ணெய்க்குளியலின் மகத்துவத்தைச் சொன்னாலாவது இந்த நிலைமை மாறுமா, இயற்கை மருத்துவர் யோ.தீபாவிடம் கேட்டோம். 

``முறைப்படி எண்ணெய்க்குளியல் எடுப்பது எப்படி?’’ 

நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயை உச்சந்தலையில் ஒரு கை வைத்துவிட்டு, பிறகு உடம்பு முழுக்க எண்ணெய்யைத் தேய்க்க வேண்டும். பிறகு 10 நிமிடங்கள் சூரிய ஒளியில் நின்றுவிட்டுக் குளித்துவிடலாம். நீங்கள் உடல் முழுக்க மசாஜ் செய்யப் போகிறீர்களென்றால், அதற்குத் தனியாக அரை மணி நேரம் எடுத்துக்கொள்ளுங்கள். எண்ணெய்க் குளியலுக்கு சுடுநீர் சரியா, நார்மலான நீர் எது சரி என்றால், இரண்டுமே சரிதான். உங்கள் உடம்பு மிகவும் வலியாக இருக்கிறது என்றால், சுடுநீரில் குளியுங்கள். வலியெல்லாம் ஒன்றுமில்லை என்றால், தண்ணீர்தான் எண்ணெய்க் குளியலுக்கு பெஸ்ட். ஏனென்றால், தண்ணீர்தான் கழிவு நீக்கத்துக்கு நன்கு உதவும். 

சின்னக் குழந்தைகளுக்கு சுடுநீரில்தான் எண்ணெய்க் குளியல் எடுக்க வேண்டும். அவர்களுக்கு கபம் அதிகமாக இருக்கும். எண்ணெய்யில் மிளகு, பூண்டு போட்டு பொரியவிட்டு, எண்ணெய் சூட்டை தணிய விடுங்கள். பிறகு இதைக் குழந்தையின் உச்சந்தலை, நெஞ்சு, முதுகு, விலா எலும்புகளுக்கு நடுவில் தேய்த்து, 5 முதல் 10 நிமிடம் ஊறவைத்து, பிறகு வெந்நீரில் குளிப்பாட்டிவிடுங்கள். கபம் இளகி வெளியே வந்துவிடும். 4 அல்லது 5 வயது வரை இப்படித்தான் குழந்தைகளுக்கு எண்ணெய்க் குளியல் செய்ய வேண்டும். வளர்ந்த பிள்ளைகள் என்றால், சளி இல்லாத நேரங்களில் தண்ணீரிலும் தலைக்கு ஊற்றலாம். சளி இருந்தால், வெந்நீரும் மிளகு பூண்டு போட்டுக் காய்ச்சிய எண்ணெய்தான் இவர்களுக்கும் சரி. 

எண்ணெய்க் குளியல் எடுத்த அன்று பகல் தூக்கத்தைத் தவிர்க்க வேண்டும். தூங்காமல், நம்முடைய உடல் அசைவுகளுடன் இருக்கும்போதுதான், ரத்த ஓட்டம் சீராக இருக்கும். இதனால், நம் உடம்பால் கழிவுகளை சுலபமாக வெளியேற்ற முடியும். கிட்டத்தட்ட அசைவில்லாமல் தூங்கும்போது, உடலால் கழிவுகளை முழுமையாக வெளியேற்ற முடியாது. இனி எண்ணெய்க் குளியலின் பலன்களைப் பார்க்கலாம்.

* எண்ணெய்க் குளியல் உடல் உஷ்ணத்தைக் குறைக்கும் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால், இந்த உஷ்ணம் எதனால் ஏற்படுகிறது என்று தெரியுமா. ஆரோக்கியமற்ற உணவுகளைச் சாப்பிட்டு சாப்பிட்டு நம் உடலில் கழிவுகள் அதிகமாகச் சேரும்போதுதான் உடலில் உஷ்ணம் அதிகமாகும். இந்தக் கழிவுகள்தான் புற்றுநோய் வருவதற்கு ஒரு முக்கியமான காரணம். இந்தக் கழிவுகளை, எண்ணெய்க் குளியல் நம் உடலில் இருந்து வெளியேற்றிவிடும்.

* அடுத்ததாக, ஹார்மோன்களின் ஏற்றத்தாழ்வுகளைச் சீராக்கும் பணியையும் எண்ணெய்க் குளியல் செய்கிறது. இதனால் ஒழுங்கற்ற மாதவிடாய் சீராவதோடு, அந்த நேரத்தில் ஸ்டிரெஸ்ஸும் இருக்காது. 

* எண்ணெய்க் குளியல் செய்யும்போது, வெறுமனே தலையில் மட்டும் எண்ணெய் வைத்துக் குளிக்காமல், உடல் முழுவதும் நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய்யைத் தடவி, மசாஜ் செய்து குளித்தால் நம் உடலில் மகிழ்ச்சி ஹார்மோனான செரோட்டனின் வெளியாகும். இதனால் நாம் சுறுசுறுப்பாக இருப்போம். இந்த ஹார்மோன் நம்முடைய ரத்தத்தில் இருக்கிற சர்க்கரை அளவைச் சீராக வைக்கும் என்பது கூடுதல் நன்மை. 

* அடுத்து, தூக்கத்துக்கான மெலோட்டனின் ஹார்மோனையும் ஆயில்பாத் தூண்டிவிடும். எண்ணெய்க்குளியல் எடுத்த அன்று நமக்கெல்லாம் தூக்கம் கண்களைச் சுழட்டுவதற்கு, இதுதான் காரணம். தூக்கம் வருகிறது என்று, தலைமுடி காய்வதற்குக்கூட நேரம் கொடுக்காமல் தூங்கினால், அந்த நீரெல்லாம் சைனஸ் காற்றறைக்குள் இறங்கி, சளிப் பிடித்துவிடும். `ஆயில்பாத் எடுத்தால் எனக்கு ஜலதோஷம் பிடிச்சுடும்’ என்று சிலர் சொல்வதற்கு இதுதான் காரணம். இந்த விஷயத்தில் தவறு நம் மீதுதானே ஒழிய, எண்ணெய்க்குளியல் மீது அல்ல. மெலோட்டனின் ஹார்மோன் சருமத்தை இளமையாக வைக்கும் என்பது கூடுதல் ப்ளஸ்.

* உடல் பருமனையும் எண்ணெய்க்குளியல் கன்ட்ரோலில் வைக்கும் என்றால் நம்புவீர்களா. எண்ணெய்க்குளியல் செய்யும்போது கல்லீரலிலிருந்து சுரக்கிற நீரானது உடலில் இருக்கிற அதிகப்படியான கொழுப்பை உறிஞ்சி, மலம் வழியாக வெளியேற்றிவிடும். 

* எண்ணெய்க்குளியலின்போது, உடல் முழுவதும் எண்ணெய் தடவி மசாஜ் செய்வதால் உடல் முழுதும் ரத்த ஓட்டம் சீராக இருக்கும். இதனால் ஹீமோகுளோபின் அளவும் சீராகும். 

* வெயில்காலத்தில் எல்லோருமே எண்ணெய்க் குளியலை தாராளமாக எடுக்கலாம். மழை மற்றும் பனிக்காலத்தில் சைனஸ், ஆஸ்துமா, வீசிங் ஆகிய பிரச்னைகள் இருப்பவர்கள் மட்டும் எண்ணெய்க் குளியலைத் தவிர்த்துவிடுங்கள். அதற்குப் பதில் தொப்புளில் மட்டும் சில சொட்டுகள் எண்ணெய் விட்டுக்கொள்ளுங்கள். உடல் உஷ்ணத்தைச் சீராக்க இதுகூட போதும். 

* எண்ணெய்க் குளியல் எடுத்துவிட்டு, தலையை வெயிலில் உலர வைத்தாலோ அல்லது வெயிலில் சென்றாலோ உடலானது விட்டமின் `டி’ சத்தை நன்றாக கிரகித்துக்கொள்ளும். விட்டமின் `டி’ உடலில் போதுமான அளவுக்கு இருந்தால், மனச்சோர்வு. அல்சைமர் போன்ற பிரச்னைகள் வராது. தவிர, நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும். 

எண்ணெய்க் குளியல் செய்த அன்று என்ன சாப்பிட வேண்டும்; என்ன சாப்பிடக் கூடாது? 

எண்ணெய்க் குளியல் செய்த அன்று, நம் உடலானது கழிவு நீக்க வேலையில் மும்முரமாக இருக்கும். அந்த நேரத்தில் மசாலா உணவுகள், ஜங்க் ஃபுட், வறுத்த, பொரித்த அசைவ உணவுகள், பால், தயிர், க்ரீம் உணவுகள் என்று போட்டுத் தாக்கினீர்களென்றால், உடம்பு கழிவு நீக்க வேலையை விட்டுவிட்டு, ஜீரண வேலையைப் பார்க்க ஆரம்பித்துவிடும். பிறகு, எண்ணெய்க் குளியல் எடுத்ததன் பலனே உங்களுக்குக் கிடைக்காமல் போய்விடும். அதனால், ஆவியில் வேக வைத்த உணவுகள், ரசம் சாதம், காய்கறிகள், பழங்கள் என்று சுலபமாக ஜீரணிக்கிற உணவுகளாகப் பார்த்து சாப்பிடுங்கள். 

இந்த ஞாயிற்றுக்கிழமை கட்டாயம் எண்ணெய்க் குளியல் எடுத்து விடுவீர்கள்தானே..?