Published:Updated:

ரத்த வங்கிகளில் இருக்க வேண்டிய வசதிகள் என்னென்ன... தவறுகள் நடப்பது எப்படி?

விதிமுறைகளின்படி செயல்பட்டால் 1 சதவிகிதம்கூட தவறுகள் நடக்க வாய்ப்பேயில்லை. ரத்ததானம் பெறுவதிலும், நோயாளிகளுக்கு ரத்தம் செலுத்துவதிலும் இருக்கும் பிரச்னைகளை களையவே, அரசு தேசிய ரத்தக் கொள்கையை கடந்த 2002-ம் ஆண்டு உருவாக்கியது. அதன்படி ரத்த வங்கிகள் அமைப்பதற்கான சட்டம் முறைப்படுத்தப்பட்டது.

ரத்த வங்கிகளில் இருக்க வேண்டிய வசதிகள் என்னென்ன... தவறுகள் நடப்பது எப்படி?
ரத்த வங்கிகளில் இருக்க வேண்டிய வசதிகள் என்னென்ன... தவறுகள் நடப்பது எப்படி?

பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்ட 2 பெண்களுக்கு ஹெச்.ஐ.வி தொற்றுள்ள ரத்தம் ஏற்றிய சம்பவத்தின் ஈரமே இன்னும் காயவில்லை. அதற்குள், கெட்டுப்போன ரத்தம் ஏற்றிய 15 கர்ப்பிணிகள் இறந்துவிட்டதாகப் பரவும் செய்தி தமிழகத்தை உலுக்குகிறது.

தொடர்ந்து அரசும் ஊடகங்களும் செய்துவரும் பிரசாரம் காரணமாக ரத்ததானம் பற்றிய விழிப்புணர்வு தமிழகத்தில் அதிகரித்துள்ளது. ஆங்காங்கே ரத்ததான குழுக்கள் உருவாகிச் செயல்பட்டு வருகின்றன. பல்வேறு அமைப்புகளும் அவ்வப்போது ரத்ததானம் வழங்கும் நிகழ்ச்சியை நடத்துகின்றன. இப்படிப் பல தளங்களில் ரத்ததானத்துக்கான பணிகள் நடந்தாலும் பெறப்படுகிற ரத்தம் முறையாகப் பராமரிக்கப்படுகிறதா என்ற கேள்வியையும் தற்போது நடக்கும் சம்பவங்கள் ஏற்படுத்துகின்றன. குறிப்பாக, அரசு மருத்துவமனை மீது எழுப்பப்படும் இந்தக் குற்றச்சாட்டுகள் அவற்றையே நம்பியிருக்கக்கூடிய பல லட்சம் அடித்தட்டு, எளிய மக்களுக்கு அவநம்பிக்கையை ஏற்படுத்துகின்றன. 

ரத்தம் ஏற்றுவதில் ஏன் இவ்வளவு தவறுகள் நடக்கின்றன? 

``ஒவ்வொரு ரத்த வங்கியிலும் ஓர் ஆலோசகர் இருக்க வேண்டும். ரத்ததானம் அளிப்பவர்களின் பின்னணி, இதற்கு முன் ரத்ததானம் செய்த விவரங்கள், அவருடைய உடல்நிலை விவரங்களை அறிந்த பிறகே, ரத்ததானம் பெற வேண்டும். பெற்ற ரத்தத்தைச் சோதனைகளுக்கு உட்படுத்திப் பயன்படுத்துவதா, வேண்டாமா என்பதை ரத்த வங்கியில் உள்ள மருத்துவர்களே முடிவு செய்வார்கள். ஆனால், இந்த நடைமுறை பல இடங்களில் பின்பற்றப்படுவதில்லை என்று சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகிறார்கள். 

ஒவ்வொரு மனிதனின் உடலிலும் சராசரியாக நான்கரை முதல் ஐந்தரை லிட்டர் ரத்தம் உள்ளது. தானம் செய்ய வருபவரிடமிருந்து 350 மி.லி முதல் 450 மி.லி வரை மட்டுமே ரத்தம் சேகரிக்கப்படும். பிறகு, அதிலிருந்து தேவைக்கேற்ப ரத்தச் சிவப்பணு, ரத்தத் தட்டணுக்கள், பிளாஸ்மா அனைத்தும் பிரித்தெடுக்கப்பட்டு, தகுந்த வெப்பநிலையில் குறிப்பிட்ட காலம் வரையிலும் பாதுகாக்கப்படுகின்றன. அதன்படி தூய ரத்தம் (whole blood) 35 நாள்கள், ரத்தச் சிவப்பணு 42 நாள்கள், ரத்தத் தட்டணுக்கள் 5 நாள்கள், பிளாஸ்மா 1 வருடம் வரை பாதுகாக்கப்படும். இந்தக் காலகட்டங்களுக்குப் பிறகு அவற்றைப் பயன்படுத்தக் கூடாது. 

ஒருவருக்கு ரத்தம் செலுத்துவதற்கு முன்பு பல கட்டச் சோதனைகள் உள்ளன. முதலில் நோயாளிக்குப் பொருத்தமான வகையைச் சேர்ந்ததா என்று சோதிக்கப்படும். விதிமுறைகளின்படி செயல்பட்டால் 1 சதவிகிதம்கூட தவறுகள் நடக்க வாய்ப்பேயில்லை. ரத்ததானம் பெறுவதிலும், நோயாளிகளுக்கு ரத்தம் செலுத்துவதிலும் இருக்கும் பிரச்னைகளை களையவே, அரசு தேசிய ரத்தக் கொள்கையை 2002-ம் ஆண்டு உருவாக்கியது. அதன்படி ரத்த வங்கிகள் அமைப்பதற்கான சட்டம் முறைப்படுத்தப்பட்டது. ஒரு ரத்த வங்கி தொடங்க வேண்டுமானால் குறைந்தது 1,100 சதுர அடி இடம் தேவை. ரத்த வங்கியில் பயிற்சி பெற்ற ஒரு மருத்துவர் கட்டாயம் பணியில் இருக்க வேண்டும். பணியாற்றும் நுட்புணர் ஓராண்டு அனுபவம் பெற்றவராக இருக்க வேண்டும். ஒரு செவிலியரும் பணியில் வேண்டும். ஆனால், தற்போது செயல்படும் பல ரத்த வங்கிகளில் முறையாகப் பயிற்சி பெற்றவர்கள் இல்லை. சமீபகாலமாக ரத்தம் தொடர்பாக சர்ச்சைகள் ஏற்பட்டு வருவதால் ஒவ்வொரு ரத்த வங்கியிலும் ஒரு கவுன்சலர் நியமிக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. 

ரத்த வங்கியில் பதிவுசெய்யும் அறை, வரவேற்பறை, தானம் செய்யும் இடம், கவுன்சலிங் அறை, ஓய்வு அறை ஆகியவை கட்டாயம் இருக்க வேண்டும். இது தவிர இரண்டு லேப்கள் இருக்க வேண்டும். முதலாவது லேப்பில் ரத்தப்பிரிவும் இரண்டாவது லேப்பில் ரத்தத்தில் கிருமித்தொற்று இருக்கிறதா என்பதையும் கண்டறிய வேண்டும். இது தவிர சுத்தம் செய்யும் அறை (sterilise), ரெக்கார்டு அறைகளும் தேவை. தானம் அளித்தவர், ரத்தம் செலுத்திய விவரம், பரிசோதனை விவரங்கள் அனைத்தையும் ரெக்கார்ட் வடிவில் 5 ஆண்டுகள் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். குளிர்சாதன வசதி கட்டாயம். சாதாரண வங்கிக்கு 4 ஏ.சி-களுடன் கூடிய அறை வேண்டும். ரத்தக்கூறுகள் பிரிக்கும் கருவிகள் வைத்திருந்தால் 6 ஏ.சி-களுடன் கூடிய அறை வேண்டும்.

ரத்தத்தைப் பராமரிப்பதற்கென்றே நவீன வசதிகளுடன் கூடிய குளிர்சாதனக் கருவிகள் உள்ளன. அவற்றில் வெப்பநிலை 2 டிகிரி முதல் 6 டிகிரி வரை இருக்கும். வெப்பநிலை அளவு ஒவ்வொரு நிமிடமும் பதிவாகும். எனவே, இதைத் தினமும் கண்காணித்து ரத்தம் பாதுகாப்பாக இருக்கிறதா என்பதை அறியலாம். மின்சாரம் துண்டிக்கப்பட்டால் ரத்தம் கெட்டுப்போகும். யு.பி.எஸ், ஜெனரேட்டர் வசதியும் அவசியம். தெர்மா மீட்டர் உதவியுடன் 4 மணி நேரத்துக்கு ஒருமுறை வெப்பநிலை கண்காணிக்கப்படும். இது தவிர டிஜிட்டல் ரெக்கார்டர், அலார  வசதிகள் இருக்கும். ஒவ்வொரு மாதமும் 4 ரத்த பாக்கெட்டுகளைச் சோதித்து, ரத்தம் கெட்டுப்போகாமல் இருக்கிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும். இந்த விதிமுறைகளைக் கண்டுபிடிக்காதபோதுதான் தவறுகள் ஏற்படுகின்றன’’ என்கிறார் அரசு ரத்தவியல் துறை முன்னாள் தலைவர் டாக்டர் செல்வராஜ்.