Published:Updated:

அவசர சிகிச்சைகளுக்கு ரத்த மாதிரிகளை சுமந்து செல்லும் `டிரோன்' ! - அமெரிக்காவில் புது முயற்சி

`டிரோன்' (Drone) எனப்படும் ஆளில்லாமல் தானாகப் பறக்கும் சிறிய விமானங்கள் பல்வேறு முக்கியப் பணிகளுக்குப் பயன்படுத்தப்படுகின்றன. தற்போது மருத்துவத் துறையில் இந்த `டிரோன்' முக்கியத்துவம் பெற்றுவருகிறது.

அவசர சிகிச்சைகளுக்கு ரத்த மாதிரிகளை சுமந்து செல்லும் `டிரோன்' ! - அமெரிக்காவில் புது முயற்சி
அவசர சிகிச்சைகளுக்கு ரத்த மாதிரிகளை சுமந்து செல்லும் `டிரோன்' ! - அமெரிக்காவில் புது முயற்சி

`டிரோன்' (Drone) எனப்படும் ஆளில்லாமல் தானாகப் பறக்கும் சிறிய விமானங்கள் பல்வேறு முக்கியப் பணிகளுக்குப் பயன்படுத்தப்படுகின்றன. தற்போது மருத்துவத் துறையில் இந்த `டிரோன்' முக்கியத்துவம் பெற்றுவருகிறது. குறிப்பாக பேரழிவு நிவாரணக் காலங்களில் மாற்று உறுப்புகள் மற்றும் ரத்த மாதிரிகளை எடுத்துச் செல்ல இவை பயன்படுத்தப்படுகின்றன. 

டிரோன்கள் மிக எளிதாகவும், விரைவாகவும் குறித்த நேரத்தில் மருத்துவச் சிகிச்சை அளிக்க உதவுகின்றன. குறிப்பிட்ட இலக்கை விரைவாக அடையமுடியும் என்பதால் டிரோன் தொழில்நுட்பம் சிறந்ததாகக் கருதப்படுகிறது. போக்குவரத்து நெரிசல் ஏற்படும்போதும், ஆபத்தான காலங்களிலும் இதன் சேவை மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது. 

கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் உள்ள குயின்ஸ்லாண்ட் மாகாணத்தில் மருத்துவச் சேவைக்கு உதவும்விதமாக ஆளில்லா விமானங்களுக்கான போட்டி ஒன்று நடத்தப்பட்டது. இந்தப் போட்டியில் உலகம் முழுவதுமிருந்து 55 ஆளில்லா விமானங்கள் பங்கேற்றன. ரத்த மாதிரியை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு குறிப்பிட்ட நேரத்துக்குள் எடுத்துச்செல்ல வேண்டும் என்பது இவர்களுக்கு அளிக்கப்பட்ட நிபந்தனையாகும். இந்தப்  போட்டி மிகவும் கடுமையாக இருந்தது. இதில் சென்னை எம்.ஐ.டி சார்பில் உருவாக்கப்பட்ட  ஆளில்லா சிறிய ரக ஹெலிகாப்டர் இரண்டாம் இடத்தைப் பிடித்தது. இதை உருவாக்கிய அணிக்கு நடிகர் அஜீத்குமார் ஆலோசகராக இருந்து உதவினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இத்தனை சிறப்புமிக்க டிரோனின் பயன்பாடு தற்போது அமெரிக்காவில் உள்ள வடக்கு கலிபோர்னியாவில் ஒரு சாதனையை நிகழ்த்தி உள்ளது. அங்குள்ள ஒரு மருத்துவமனையில் `டிரோன்' சேவை தொடங்கப்பட்டுள்ளது. ரத்த மாதிரிகளை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு அனுப்ப இது பயன்படுத்தப்படுகிறது. இந்தச் சேவையை மேட்டர்நெட் என்ற டிரோன் நிறுவனத்துடன் இணைந்து மருத்துவமனை நிர்வாகம் மேற்கொண்டுள்ளது.  இந்தச் சேவைக்கு அங்குள்ள விமான நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. உள்ளூரில் உள்ள பிற மருத்துவமனைகளுக்கு ரத்த மாதிரிகளை மிக விரைவாக எடுத்துச் செல்லவும், அவசரகால அறுவை சிகிச்சைக்கும்  இவை உதவுகின்றன. விரைவில் இந்தச் சேவை பல மருத்துவமனைகளுக்கும் விரிவாக்கப்படும் என மேட்டர்நெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.  

இதுகுறித்து கருத்து தெரிவித்த மேட்டர்நெட் நிறுவன தலைமைச் செயல்அதிகாரி ஆண்டிரியாஸ், ``ஒரு நாளைக்கு ஆறு தடவை என்ற கணக்கில், வாரத்துக்கு ஐந்து நாள்கள் இந்தச் சேவை பயன்படுத்தப்படும். மிகவும் பாதுகாப்பான பெட்டிகளில் மருத்துவப் பொருள்கள் மற்றும் ரத்த மாதிரிகள் பத்திரமாக எடுத்துச் செல்லப்படுகின்றன. இதனால் இதுவரை எந்தவிதமான பாதிப்பும் ஏற்படவில்லை. மிகச் சிறப்பான முறையில் சேவை தொடர்கிறது'' என்று தெரிவித்தார்.