இந்தியாவில் 125 குழந்தைகளில் ஒரு குழந்தை ஆட்டிஸம் குறைபாட்டால் பாதிக்கப்படுவதாக மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன. `ஆட்டிஸம் என்பது ஒரு நோய்’, `ஆட்டிஸமும் மனச்சிதைவும் ஒன்று', 'குழந்தைப் பருவத்தில் மட்டுமே இருக்கும் இந்தப் பிரச்னை பெரியவர்களானதும் குணமாகிவிடும்', 'ஆட்டிஸம் பாதித்த குழந்தைகள் பேசவே மாட்டார்கள்' என்பதுபோன்ற மூடநம்பிக்கைகள் உண்டு. ஆட்டிஸம் பற்றிய சரியான புரிதல்களை ஏற்படுத்தவே ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் 2-ம் தேதி ஆட்டிஸம் விழிப்புணர்வு நாளாகவும் ஏப்ரல் மாதம் முழுவதும் ஆட்டிஸம் விழிப்புணர்வு மாதமாகவும் கடைப்பிடிக்கப்படுகின்றன.
ஆட்டிஸம் குறைபாடு குறித்து நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கியமான 10 விஷயங்கள்!
1. ஆட்டிஸம் ஒரு நோயல்ல. ஒருவரிடமிருந்து மற்றவருக்குப் பரவும் தொற்றுநோயும் கிடையாது. ஒரு நரம்பியல் தொடர்பான வளர்ச்சிக் குறைபாடு. இதை `ஆட்டிஸம் ஸ்பெக்ட்ரம் டிஸ்ஆர்டர்’(Autism Spectrum Disorder) என்கிறோம். இதனால் பாதிக்கப்படும் குழந்தைகள், சமூகத்தில் மற்றவர்களோடு தொடர்புகொள்ளும் திறன் (Communication), பழகும் திறன் (Socialization) போன்றவற்றில் பின்தங்கியிருப்பார்கள். பெரும்பாலானோருக்கு பேசும் திறன் இருக்காது. சில குழந்தைகள் பேசினாலும், தெளிவாக மற்றவர்கள் புரிந்துகொள்ளும்படி பேசமாட்டார்கள்.
2. இந்தக் குறைபாட்டின் தீவிரத்தன்மை எல்லோருக்கும் ஒரே மாதிரியாக இருக்காது. பாதிக்கப்பட்ட ஒவ்வொருவரின் திறனும், அவர்களுக்கான சிக்கல்களும் தனித்துவமானவை.
3. கண், மூக்கு, வாய், காது, சருமம் ஆகிய புலன்களின் உணர்வுகளில் மாறுபாடு இருக்கும். அந்தப் புலன் சார்ந்த தூண்டல்களுக்கு அளவுக்கு அதிகமாகவோ அல்லது குறைவாகவோ உணர்ச்சிகளை வெளிக்காட்டுவார்கள். சிலருக்கு ஒன்று அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட புலன்கள் குறைவாகவோ அல்லது அதிகமாகவோ தூண்டப்படும்.
4. ஒரே மாதியான செயலைத் திரும்பத் திரும்பச் செய்வது, சில செயல்களைச் சரியாகச் செய்ய முடிந்தாலும் சமூகப் புரிதல்கள் இல்லாமலிருப்பது, பயம், ஆபத்து போன்றவற்றை உணராமல் இருப்பது, பொருளற்ற சொற்களைத் திரும்பத் திரும்பச் சொல்வது, காரணமின்றி அழுவது, சிரிப்பது, கைகளைத் தட்டுவது, குதிப்பதுபோல ஏதாவது வித்தியாசமான செயல்பாடுகளில் ஈடுபடுவது, தேவையானவற்றை விரல் சுட்டிக் காட்டாமல் மற்றவரின் கைபிடித்துச் சென்று காட்டுவது, கண்களைப் பார்த்துப் பேசுவதைத் தவிர்ப்பது, தனிமையில் இருப்பது, ஃபேன், ராட்டினம் போன்ற சுற்றும் பொருள்களின் மீது ஆர்வம் எனப் பல்வேறு நடவடிக்கைகள் மூலம் அறிந்துகொள்ளலாம்.
5. ஆட்டிஸம் பாதிப்பு ஏற்படுவதற்கான காரணம் இதுதான் என்று அறுதியிட்டுச் சொல்ல முடியாது. `மரபணுக்களின் சீரற்ற நிலை, சுற்றுச்சூழல் மாசு, காற்றில்... மண்ணில் கலக்கும் நச்சு ரசாயனங்களும் கனிமங்களும் காரணங்களாக இருக்கலாம்’ என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
6. வளர்சிதை மாற்றக் குறைபாடு காரணமாகவும் மரபு வழியாகவும்கூட ஆட்டிஸம் பாதிப்பு ஏற்படலாம். ஒவ்வொருவருக்குமான காரணங்கள் மாறுபடும். ஆட்டிஸத்துக்கான தெளிவான காரணம் இன்னும் வரையறுக்கப்படவில்லை.
7. குழந்தை பிறந்து 10-லிருந்து 18 மாதங்களுக்குள்ளாகவே அறிகுறிகளைக் கண்டறிய முடியும். ஆட்டிஸத்தைக் கண்டறிய பிரத்யேக மருத்துவப் பரிசோதனைகள் எதுவும் இல்லை. பெற்றோர், உறவினர், குழந்தைகள்நல மருத்துவர், ஆசிரியர் போன்றவர்கள்தான் இந்தக் குறைபாட்டைக் கண்டறிந்து சொல்ல முடியும். நரம்பியல் தொடர்பான ஆட்டிஸக் குறைபாடுகளை சி.டி ஸ்கேன், எம்.ஆர்.ஐ ஸ்கேன் மூலம் கண்டறியலாம்.
8. ஆட்டிஸம் என்பது குறைபாடுதான், நோயல்ல. எனவே, அந்தக் குறைபாட்டின் தன்மையிலிருந்து பாதித்தவர்களின் வாழ்க்கையை மேம்படுத்த முடியும். தொடர்ந்து பயிற்சிகள் கொடுப்பதன் மூலம், சீரான நிலைக்குக் கொண்டு வர முடியும்.
9. ஆட்டிஸம் பாதித்த குழந்தைகளின் தீவிரத்தன்மை ஒவ்வொரு குழந்தைக்கும் வேறுபடும். ஆக்குபேஷனல் தெரபி (Occupational Therapy) பேச்சுப் பயிற்சி (Speech Therapy) போன்ற தெரபி சிகிச்சைகள் உதவும். பல் தேய்த்தல், குளித்தல், கழிவறைச் செயல்பாடுகள் போன்றவற்றையும் சிறு வயதிலேயே இந்தக் குழந்தைகளுக்குப் பயிற்றுவிப்பதன்மூலம் மற்றவர்களைப்போல் சுயமாக இயங்க முடியும்.
10. ஆட்டிஸம் பாதிப்பு போன்ற சிறப்புக் கவனம் செலுத்த வேண்டிய குழந்தைகளுக்கான அனைத்துப் பயிற்சிகளையும் அரசு மருத்துவமனைகளிலேயே இலவசமாகப் பெறமுடியும். ஒவ்வொரு மாவட்டத் தலைமை மருத்துவமனையிலும் இதற்காகத் தனிப்பிரிவு அமைக்கப்பட்டிருக்கிறது. அரசு தரப்பில் ஆட்டிஸம் பாதித்த குழந்தைகளுக்குக் கல்வி உதவித்தொகை, மருத்துவக் காப்பீடு உள்ளிட்ட உதவிகளும் வழங்கப்படுகின்றன. இது குறித்த கூடுதல் தகவல்களை <www.thenationaltrust.gov.in> என்ற அரசு இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம்.
தகவல் உதவி: கீழ்ப்பாக்கம் மனநல காப்பகத்தின் இயக்குநர் டாக்டர் பூர்ண சந்திரிகா
சரி... ஆட்டிஸம் பற்றி முழுமையாகத் தெரிந்துகொண்டீர்கள் அல்லவா..? கீழே இருக்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள், பார்ப்போம்!