Published:Updated:

பழங்கள் காய்கறிகளில் நிறைந்து ஆரோக்கியம் காக்கும் விட்டமின் C...! #VitaminC'Day

பழங்கள் காய்கறிகளில் நிறைந்து ஆரோக்கியம் காக்கும் விட்டமின் C...! #VitaminC'Day
பழங்கள் காய்கறிகளில் நிறைந்து ஆரோக்கியம் காக்கும் விட்டமின் C...! #VitaminC'Day

`தி கோல்டன் வைட்டமின்' என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படுகிறது வைட்டமின்-சி. கடவுளைப் போலவே ஏழை பணக்காரர் என்ற பாகுபாடு பார்க்காத வைட்டமின் சி, வெள்ளரிக்காய், நெல்லிக்காய், ஆரஞ்சு, எலுமிச்சை, திராட்சை, பப்பாளி போன்ற பழங்களிலும், தக்காளி, கீரை வகைகள், முட்டைக்கோஸ், புரோக்கோலி, குடை மிளகாய் ஆகிய எளிய உணவுப்பொருள்களிலும் அதிகமாகக் காணப்படுகிறது.

நானும், நீங்களும் ஐசியு (ICU) என்ற இன்டென்சிவ் கேர் யூனிட்டுக்குச் செல்வதைத் தடுக்கும் வல்லமை படைத்தது வைட்டமின் சி. அதிலும் நீரில் கரையும் தன்மை கொண்ட `அஸ்கார்பிக் அமிலம்' (Ascorbic acid) என்ற வைட்டமின் சி, என்பதுதான் சிறந்ததொரு நோய் தடுக்கும் வைட்டமின் ஆகும். இணைப்பு திசுக்கள் (Connective tissues) என்ற உடலின் இணைத் திசுக்களை உறுதிப்படுத்தும் இந்த வைட்டமின், உடல் வளர்ச்சிக்கும், எலும்புகள் மற்றும் பற்கள் உருவாகவும், உறுதிப்படவும் உதவுகின்றன.

சருமம், தசை நார்கள், மூட்டுகள், பற்கள், ஈறுகள், கண்கள், திசுக்கள் ஆகியவற்றை இணைக்கும் முக்கியமான பொருளான `கொலாஜன்' (Collagen) உற்பத்தியைக் கட்டுப்படுத்தக்கூடியது வைட்டமின் சி. மேலும் புரதத்துடன் இணைந்து உடலின் அனைத்து திசுக்களின் வளர்ச்சியிலும், அமைப்பிலும் பங்கேற்கிறது. உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதுடன், உடலின் நச்சுப்பொருள்களை வெளியேற்றவும் பெரிதும் உதவுகிறது. பாக்டீரியா, வைரஸ் கிருமிகளில் உண்டாகும் தொற்று நோய்களையும் தடுக்கும் திறன் கொண்ட இந்த சி வகை வைட்டமின், தீக்காயங்கள் மற்றும் தழும்புகளை விரைவாகக் குணப்படுத்துவதுடன் இளமையான, அழகான, ஆரோக்கியமான தேகத்தை அளிக்கிறது.

ரத்த அழுத்தம் மற்றும் மன அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்கும், இந்த சி வைட்டமின் கொழுப்பின் வளர்சிதை மாற்றத்தைத் தூண்டி, கொலஸ்ட்ரால் அளவையும் கட்டுப்படுத்துகிறது. உணவிலிருந்து இரும்புச்சத்து மற்றும் கால்சியத்தை கிரகிக்க உதவும் வைட்டமின் சி, குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகளுக்கு மிக முக்கியமானதாகும். தீவிரக் காய்ச்சல் அல்லது அறுவை சிகிச்சைக்குப் பிறகு, உடலின் ஆற்றலை விரைவாக மீட்டெடுக்க இந்த வைட்டமின் உதவுகிறது. மிகவும் முக்கியமாக, தீவிர சிகிச்சைப் பிரிவில் நோயாளிகள் தங்கியிருக்கும் நாள்களை வெகுவாகக் குறைக்கிறது என்கிறது சமீபத்திய ஆய்வு ஒன்று. ஆம்... நானும், நீங்களும் ஐசியு (ICU) செல்லாமல் காக்க உதவுகிறது சி வைட்டமின்.

`தி கோல்டன் வைட்டமின்' என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படுகிறது வைட்டமின்-சி. கடவுளைப் போலவே ஏழை பணக்காரர் என்ற பாகுபாடு பார்க்காத வைட்டமின் சி, வெள்ளரிக்காய், நெல்லிக்காய், ஆரஞ்சு, எலுமிச்சை, திராட்சை, பப்பாளி போன்ற பழங்களிலும், தக்காளி, கீரை வகைகள், முட்டைக்கோஸ், புரோக்கோலி, குடை மிளகாய் ஆகிய எளிய உணவுப்பொருள்களிலும் அதிகமாகக் காணப்படுகிறது.

புளிப்பு சுவைமிக்க பழங்கள் அனைத்திலும் காணப்படும் இந்த வைட்டமின் கண்டறியப்பட்ட கதையும் சுவையானது. 1747-ம் வருடம், இங்கிலாந்திலிருந்து, இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளைக் காண `ஹெச்.எம்.எஸ் சாலிஸ்பரி' (HMS Salisbury) என்ற கப்பலில், ஆயிரக்கணக்கான மாலுமிகளும், வியாபாரிகளும் ஆண்டுக்கணக்கில் பயணம் மேற்கொண்ட நேரம். அவர்களுக்கிடையே மரண பயத்தை உண்டாக்கும் ஒரு நோய் அப்போது பரவலாக இருந்தது. அதன் பெயர் ஸ்கர்வி.

ஸ்கர்வி நோயால் பாதிக்கப்பட்ட அவர்கள், பற்களில் வடியும் ரத்தம், முட்டிகளில் வீக்கம், அதீத களைப்பு, வெளுத்த முகம், ஆறாத காயமென  மரணத்தை எதிர்நோக்கி இருந்தனர். ஏராளமான மாலுமிகள் அந்தப் பயணத்தின்போது, கொத்து கொத்தாக இறந்தனர். தீய சக்திகளும், கிருமித் தொற்றுகளுமே காரணம் என்று கைகாட்டிக் கொண்டிருந்தனர் உயிர் பிழைத்தவர்கள். 

எடின்பரோ பல்கலைக்கழகத்தில் பயிற்சிபெற்ற டாக்டர் ஜேம்ஸ் லிண்ட், அந்த கப்பலில் இருந்தார். அவர் இந்த மரணங்கள் குறித்து தீவிரமாக ஆராய்ச்சி மேற்கொண்டார். 'மரணங்களுக்கு ஸ்கர்வி என்ற நோயே காரணம்' என்று கண்டறிந்தார். 'ஸ்கர்வியை மருந்துகளால் குணப்படுத்த முடியாது; உணவு முறைகளால் மட்டுமே குணப்படுத்தமுடியும்' என தீவிரமாக நம்பிய ஜேம்ஸ் லிண்ட்,  ஸ்கர்வி நோயால் பாதிக்கப்பட்ட 12 பேரைத் தேர்ந்தெடுத்து, இரண்டு பேர் கொண்ட ஆறு குழுக்களாகப் பிரித்தார். அனைத்து குழுக்களுக்கும் ஒரே வகையான உணவைக் கொடுத்தார். ஆனால் பூண்டு, வினிகர், பார்லி தண்ணீர், கடுகு, ஆரஞ்சுப் பழங்கள், எலுமிச்சைச் சாறு என ஆறு குழுவினருக்கும் இணை உணவுகளை மட்டும் மாற்றிக் கொடுத்தார். டாக்டர் ஜேம்ஸ் லிண்ட் மாதக்கணக்கில் செய்த இந்த உணவுச் சோதனையில், ஆரஞ்சுப் பழமும், எலுமிச்சைச் சாறும் உண்ட குழுவினர் மட்டும் ஸ்கர்வியிலிருந்து விடுபட்டனர்.  அவர்களுக்கு மட்டும் ஸ்கர்வி முற்றிலுமாக விலகியது. கப்பலில் மற்றவர்கள் ஜேம்ஸை அதிசய மனிதராக பார்க்கத் தொடங்கினர். 

கப்பல் பயணத்திலிருந்து திரும்பியவுடன், `டிரியேடைஸ் ஆப் த ஸ்கர்வி' (Treatise of the Scurvy) என்ற புத்தகத்தை 1753-ம் ஆண்டு ஜேம்ஸ் லிண்ட் வெளியிட்டார். ஸ்கர்வி நோய்க்கான சரியான காரணங்களும், தீர்வுகளும் அதில் இல்லை என்ற காரணத்தைக் காட்டி, அவரது ஆராய்ச்சி அப்போது நிராகரிக்கப்பட்டது. ஏறத்தாழ 42 வருடங்களுக்குப் பிறகு, ஸ்கர்வி நோய்க்கான காரணம் 'வைட்டமின் சி' பற்றாக்குறை என்பதைக் கண்டறிந்த ஆராய்ச்சியாளர்கள், டாக்டர் ஜேம்ஸ் லிண்ட் எழுதிய ஆராய்ச்சிக் கட்டுரையை தேடியெடுத்தார்கள். 

நோய்களுக்கு மருந்துகளைத் தராமல் இயற்கை உணவு முறைகள் மூலம் நோயைக் குணமாக்கலாம் எனும்  புதிய சித்தாந்தத்தை உருவாக்கியதும் டாக்டர் ஜேம்ஸ் லிண்ட் தான். அதற்குப் பிறகு, கடல் பயணிகளுக்கு, ஆரஞ்சு ஜூஸ் தருவதைக் கட்டாயப்படுத்தியது ஆங்கிலேய அரசு.

Look deep into the Nature...
You'll understand everything better...

என்ற ஐன்ஸ்டீனின் மொழி, மருத்துவத்துக்கும் இங்கு அழகாகப் பொருந்தி நிற்கிறது.
இன்று ஏப்ரல் 4. வைட்டமின் சி என்ற எளிய, இனிய வைட்டமின் கண்டறியப்பட்ட நாள். இந்நாளில்,  உடலுக்கு வலுவையும், உற்சாகத்தையும் தரும் இயற்கை உயிர்ச்சத்தான வைட்டமின்-சி என்ற தங்க மீன்களுடன் நோய்களின் தாக்குதலிலிருந்து விடுபட்டு ஆரோக்கியமாக வாழ்ந்திடுவோம்.

C for Connections...
C for Care...
C for Confidence... &
C for Vitamin C..!

அடுத்த கட்டுரைக்கு