Published:Updated:

`கோடைக்காலத்தில் ஃப்ரிட்ஜ் தண்ணீரைக் குடிக்கலாமா?' - மருத்துவ விளக்கம்

`கோடைக்காலத்தில் ஃப்ரிட்ஜ் தண்ணீரைக் குடிக்கலாமா?' - மருத்துவ விளக்கம்
`கோடைக்காலத்தில் ஃப்ரிட்ஜ் தண்ணீரைக் குடிக்கலாமா?' - மருத்துவ விளக்கம்

கோடைவெயில் 

சுட்டெரிக்கும் நிலையில், குழந்தைகள் உட்பட பலருக்கும் பல்வேறு உடல்நலப் பாதிப்புகள் ஏற்படுகிறது. இதைத் தடுக்கவும், இயற்கை முறையில் உடல்நலனைக் காத்துக்கொள்ளவும் எளிமையான வழிமுறைகளைக் கூறுகிறார், ஹோமியோபதி மருத்துவர் ஆஷா லெனின்

``கோடைக்காலத்தில் உடலில் ஏற்படும் நீர்ச்சத்துக்குறைப்பாட்டைத் தவிர்க்க என்ன செய்யலாம்?" 

``கோடைக்காலத்தில் குழந்தைகள் வெயிலில் விளையாடும்போது, அவர்களின் உடலில் நீர்ச்சத்துக்குறைபாடு (dehydration) ஏற்படும். நீர்ச்சத்துக்குறைபாட்டை ஈடுசெய்ய, உடலுக்குத் தாது உப்புகள் (electrolyte) மட்டுமே தேவை. அவை எந்தக் குளிர்பானத்திலும் இருக்காது. எனவே வெறும் கலோரிஸ் மட்டுமே இருக்கும் குளிர்பானங்களை குழந்தைகளுக்குக் கொடுக்கக் கூடாது. அவற்றில் செயற்கையான சர்க்கரை, பிரசர்வேட்டிவ்ஸ், நிற மூட்டிகள் மட்டுமே இருக்கின்றன. அவை ஆரோக்கியத்துக்கும், உடல்நலத்துக்கும் கேடானது. கோடைக்காலத்தில் பெரும்பாலான குழந்தைகள், உடலில் ஏற்படும் நீர்ச்சத்து குறைபாட்டை ஈடுசெய்ய, ஃப்ரிட்ஜ் தண்ணீரைக் குடிப்பார்கள்; ஐஸ் கியூப், ஐஸ் கிரீம் ஆகியவற்றை அதிகம் சாப்பிடுவார்கள். இப்படிச் சட்டெனக் குளிர்ச்சியான பொருள்களைச் சாப்பிடும்போது, நம் உடலில் குளிர்ச்சி ஏற்படாது. மாறாக, உடலில் வெப்பநிலை உயரும். ஐஸ் கியூப்பை நேரடியாக அப்படியே சாப்பிடுவதால், ரத்த சோகை பாதிப்பு ஏற்படலாம்.

எளிமையான தீர்வாக, இளநீர் குடிக்கலாம். வெள்ளரிப் பழம், தர்ப்பூசணி பழம் சாப்பிடலாம். ஒரு நாளைக்கு ஓரிரு இளநீர் குடிக்கலாம். ஏசி அறையிலேயே இருப்பவர்கள் அதிக இளநீரைக் குடிக்கக்கூடாது. ஒரு லிட்டர் தண்ணீரில் ஒரு எலுமிச்சை பழத்தைப் பிழிந்து அதனுடன் ஒரு கைப்பிடி புதினாவைச் சேர்த்து சிறிது நேரம் கழித்துக் குடிக்கலாம். இது மிகச் சிறந்த ஊட்டச்சத்து பானம். உப்பு, சர்க்கரை கிட்னியின் செயல்பாட்டைப் பாதிக்கும் என்பதால், அவற்றைச் சேர்க்கக் கூடாது. சர்க்கரை சேர்க்காமல், பழங்களை அப்படியே அல்லது ஜூஸ் செய்தும் குழந்தைகளுக்குக் கொடுக்கலாம். பெரியவர்களுக்கும் இவை பொருந்தும். ஏ.சி-யில் இருக்கும்போது நம் உடலில் நீர்ச்சத்துக்கு குறைபாடு ஏற்படுவது நமக்குத் தெரியாது. எனவே, ஏ.சி-யில் இருக்கும்போது போதிய அளவு தண்ணீரை தொடர்ந்து கண்டிப்பாகக் குடிக்கவேண்டும்." 
 

``விளையாடி முடித்ததும் குழந்தைகள் தண்ணீர் குடிக்கலாமா?" 

``விளையாடும்போது உடலில் அதிக வெப்பம் உற்பத்தியாகும். அதனால்தான் அப்போது அதிகம் வியர்வை வெளியாகும். அந்த நேரத்தில் உடலின் உள் உறுப்புகள் வெப்பமாகும். அப்போது தண்ணீர் குடிப்பதால், ரத்த சுழற்சி வேகமாகும். அதனால், வயிற்று வலி, தலைச்சுற்றல் உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படலாம். விளையாடும்போது, விளையாடிய பிறகு, சிறிது நேரம் கழித்து இயல்பு நிலைக்கு வந்த பிறகு, மெதுவாகத் தண்ணீர் குடிப்பதே நல்லது."  

``கோடைக்காலத்தில் நம் உடலைக் குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள வழி?

``நன்னாரி வேரை, பழச்சாறு மற்றும் தண்ணீரில் ஊறவைத்துக் குடிக்கலாம். திருநீற்றுப்பச்சிலை விதை மற்றும் பாதாம் பிசின் ஆகியவற்றை தனித்தனியே தண்ணீரில் ஊறவைத்துச் சாப்பிடலாம். இதனால் உடல் இயற்கையாகக் குளிர்ச்சியாகும். பாதம் பிசினை, சூடான பாலில் கலந்து குடிக்கலாம். கோடைக்காலத்தில் எளிதில் ஜீரணமாகக்கூடிய, நார்ச்சத்து உணவுகளை அதிகம் உட்கொள்ளலாம். இயற்கையாகவே உடலுக்குக் குளிர்ச்சியைக் கொடுக்கக்கூடிய காய்கறிகள், பழங்களைப் பயன்படுத்துவதுதான் நல்லது. மாறாக, செயற்கையாகக் குளிரூட்டப்பட்ட உணவுகளை உட்கொள்வது நல்லதல்ல. வெள்ளை, இளம் பச்சை உள்ளிட்ட வெளிர்நிற காட்டன் ஆடைகளை உடுத்தலாம். அடர்நிற ஆடைகளை பயன்படுத்தவதைத் தவிர்க்கவேண்டும். காலை 11 மணிமுதல் மாலை 4 மணிவரை வெயிலில் விளையாடுவது, அதிக தூரம் நடப்பதைத் தவிர்க்க வேண்டும்."

``நின்றுகொண்டு தண்ணீர் குடிப்பது மற்றும் சாப்பிடலாமா?"

``நின்றுகொண்டு தண்ணீர் குடிப்பதால், சாப்பிடுவதால், உடலில் ரத்த ஓட்டம் நேரடியாகக் கால் பகுதியை நோக்கிச் செல்லும். இதனால் வயிற்றில் செரிமானம், ஜீரணச் செயல்பாடு இயல்பாக இருக்காது. அதனால்தான் தரையில் உட்கார்ந்து சாப்பிடுவது நல்லது."  

``கோடைக்காலத்தில் சூரிய ஒளி படுவதால் ஏற்படும் சரும பாதிப்புகளைத் தவிர்க்க என்ன வழி?" 

``சூரிய ஒளியில், உடலுக்குத் தேவையான `வைட்டமின் டி' சத்து கிடைக்கிறது. அவை குறைவதால், கேன்சர், மாரடைப்பு, எலும்பு சார்ந்த பிரச்னைகள் ஏற்படும். இந்தியாவில், 100-க்கு 95 பேருக்கு சூரிய ஒளியால் கிடைக்கும் `வைட்டமின் டி' குறைபாடு ஏற்படுகிறது. அதனால்தான், குளிர் சூழல் அதிகமுள்ள வெளிநாடுகளில் மக்கள் சன் பாத் எடுக்கின்றனர். காலை, மாலை நேரச் சூரிய ஒளி நம் உடலுக்கு மிகவும் நல்லது. பகல் நேரத்தில் வெயிலில் செல்லும்போது, கையில் மாஸ்க் அணிந்து கொள்ளலாம். தயிர், எலுமிச்சைச் சாறு, தேன், பாசிப்பயறு மாவு ஆகியவற்றை கலந்து தேய்த்துக் குளிப்பதால், சூரிய ஒளியால் ஏற்படும் சரும பாதிப்புகளைத் தடுக்கலாம்."

``அம்மை பாதிப்பைத் தடுக்க வழிமுறைகள்?

``ஒரு பக்கெட் தண்ணீரில், நீரில் சுத்தம் செய்த வேப்பிலையை ஊறவைக்க வேண்டும். அடுத்த நாள் ஊறவைத்த வேப்பிலையை எடுத்துவிட்டு, அந்த நீரில் குளிக்க வேண்டும். இப்படி காலை, மாலை இரு வேளையும் குளிப்பதால், அம்மை பாதிப்பு ஏற்படுவதைத் தடுக்கலாம். அம்மை பாதிப்பு ஏற்பட்டால், தினமும் குளிக்கலாம். தவறில்லை. மேலும், சாப்பிடப் பயன்படுத்தும் ஓட்ஸ்ஸை அரைத்து ஒரு டம்ளர் தண்ணீரில் இரு ஸ்பூன் ஓட்ஸ் பவுடரை சேர்த்து லேசாகக் கொதிக்க வைத்துக் குளிக்கும் நீரில் கலந்து குளிக்கலாம். இதனால் அம்மை பாதிப்பின் தாக்கம் சீக்கிரம் குணமாகும். இதனால் விரைவில் அம்மை பாதிப்பு சரியாகி, தழும்புகள் ஏற்படுவதும் குறையும். இளநீர், பழங்கள் கொடுக்கலாம். அவர்களைத் தனிமைப்படுத்தி, அவர்களைச் சுற்றி தண்ணீரில் கழுவிய வேப்பிலையை வைக்க வேண்டும்."
 

அடுத்த கட்டுரைக்கு