Published:Updated:

ஒற்றைத் தலைவலி... சாப்பிட வேண்டிய, தவிர்க்க வேண்டிய உணவுகள்!

ஒற்றைத் தலைவலிக்குத் தீர்வுதரும் உணவுக்கட்டுப்பாடு- ஏ டு இசட்!

ஒற்றைத் தலைவலி... சாப்பிட வேண்டிய, தவிர்க்க வேண்டிய உணவுகள்!
ஒற்றைத் தலைவலி... சாப்பிட வேண்டிய, தவிர்க்க வேண்டிய உணவுகள்!

ணவுமுறை, பணிச்சூழல் எனப் பல்வேறு காரணங்களால் `மைக்ரேன்' எனப்படும் ஒற்றைத் தலைவலி பலரையும் பாடாகப்படுத்தி வருகிறது. தலையே வெடித்துவிடும் அளவுக்கு மிக மோசமான இந்த வலி எந்த நேரத்தில் வரும் என்று தெரியாது. பெரும்பாலும் மைக்ரேன் வகைப் பாதிப்புகள், ஏதேனும் ஒரு புறத்தூண்டுதல் காரணமாகவே வருகின்றன என்கின்றனர் மருத்துவர்கள். அந்தத் தூண்டுதல்களை கண்டறிந்து அவற்றைத் தவிர்த்துவிட்டால், ஒற்றைத் தலைவலியை எளிதில் தடுத்துவிடலாம். 

மைக்ரேனைத் தூண்டும் காரணிகளில், மிகமுக்கியப் பங்கு உணவுகளுக்கு உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மைக்ரேன் பிரச்னையைத் தவிர்க்க உணவு முறையை எப்படி அமைத்துக்கொள்ள வேண்டும் என்று ஆலோசனைகள் தருகிறார் ஊட்டச்சத்து நிபுணர் கற்பகம் விநோத்.

``கோடையில் வெப்பம் அதிகரிப்பதால், உடலில் நீர்ச்சத்து குறையத் தொடங்கி பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படக்கூடும். அப்படி ஏற்படும் பாதிப்புகளில், முதன்மையானது தலைவலி. ஏற்கெனவே மைக்ரேன் பிரச்னை இருப்பவர்களுக்கு, தலைவலியின்  தீவிரம் அதிகமாக இருக்கும். பொதுவாக மைக்ரேன் பிரச்னை இருப்பவர்களுக்கு, வேறு சில உடல் உபாதைகளும் இருக்கக்கூடும். 

* மைக்ரேன் பிரச்னை இருப்பவர்களுக்குப் பசியின்மை இருக்கும். அவர்களில் பலர் பெரும்பாலான நாள்கள், ஒன்று அல்லது இரண்டு வேளை மட்டுமே சாப்பிடுவர்

*  மைக்ரேன் பிரச்னை இருப்பவர்களுக்குச் சரியான நேரத்துக்குச் சாப்பிடும் பழக்கம் இருக்காது. பசி எடுக்கும் போதெல்லாம் டீ, காபியை மட்டுமே குடிப்பார்கள்.

* போதுமான அளவு  தண்ணீர் குடிக்க மாட்டார்கள்.

* தூக்க நெறிமுறை இருக்காது.  

* அதிக  மனஅழுத்தத்துடன் காணப்படுவார்கள்.

* ஊட்டச்சத்துக் குறைபாடு இருக்கும்.

* வெளியிடங்களில் அதிகம் சாப்பிடும் பழக்கம் இருக்கும்.

உணவு முறையை ஒழுங்குபடுத்துவதற்குமுன் மேலே சொல்லப்பட்டவற்றில் உள்ள குறைபாடுகளை சரிசெய்து கொள்வதும், தவறான பழக்கங்களை மாற்றி அமைத்துக்கொள்வதும் மைக்ரேனைத் தவிர்க்க உதவும்.

மைக்ரேன் பிரச்னையை சில உணவுகள் அதிகரிக்கும். அந்த உணவுகளில் பொதுவான சிலவற்றைப் பார்ப்போம். 

சாக்லேட், வாழைப்பழம், சுத்திகரிக்கப்பட்ட பால் மற்றும் தயிர் சார்ந்த பொருள்கள், வெங்காயம், தக்காளி, `டைராமைன்' (Tyramine) சத்து அதிகம் உள்ள உணவுப்பொருளான சீஸ் வகைகள், ஆரஞ்சு, எலுமிச்சை போன்ற சிட்ரஸ் பழங்கள், வேர்க்கடலை, சுத்திகரிக்கப்பட்ட கோதுமை, அதிக கொழுப்புச்சத்துள்ள அசைவ வகைகள், `எம்.எஸ்.ஜி' எனப்படும் `மோனோ சோடியம்  குளூட்டமேட்' (Mono Sodium Glutamate) என்ற சுவையூட்டப்பட்டி சேர்க்கப்பட்ட உணவுகள் போன்றவை மைக்ரேன் பிரச்னையை அதிகரிக்கும்.

`மைக்ரேன்'  தலைவலியை அதிகரிக்கும் உணவுகள் தனிநபரின் உடல்நிலையைப் பொறுத்து, ஒருவருக்கொருவர் மாறுபடும். எந்த உணவு மைக்ரேன் தலைவலியை அதிகரிக்கிறது என்பதை, நோயாளிகள் சுயபரிசோதனை மூலம் தெரிந்துகொள்ளலாம். அதற்கேற்றவாறு,  உணவுமுறையை மாற்றி அமைத்துக் கொள்ளவேண்டும். ஒவ்வொருமுறை `மைக்ரேன்' தலைவலி ஏற்படும்போதும், என்ன உணவு உட்கொண்டோம் என்பதைப் பரிசோதித்து, அடுத்தடுத்த நாள்களில் அவற்றைத் தவிர்க்கவேண்டும்.

மைக்ரேன் தலைவலி உள்ளவர்கள், அவசியம் மேற்கொள்ள வேண்டிய வாழ்வியல் மாற்றங்கள் சில உள்ளன. அவை என்னென்ன என்று பார்ப்போம்.

* புதிதாக டயட் முறையைப் பின்பற்றுபவர்களுக்கு, அது உடலுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தி  `மைக்ரேன்'  பிரச்னையை ஏற்படுத்தலாம். முறையாக ஊட்டச்சத்து நிபுணரிடம் ஆலோசனை பெற்று டயட்டைப் பின்பற்றவும்.

*  மைக்ரேன் உள்ளவர்களில் பெரும்பாலோனோருக்கு, டீ, காபி அளவுக்கதிகமாக குடிக்கும் பழக்கம் இருக்கும். கோடைக்காலத்தில் அப்பழக்கத்தை முற்றிலும் தவிர்ப்பது அவசியம். அதற்குப் பதிலாக இளநீர், நுங்கு, நீர்மோர், பானகம் போன்றவற்றை சாப்பிடலாம்.  

* ஒருநாளில் மூன்று வேளை உணவு என்பதை, ஆறு வேளை என மாற்றி அமைத்துக்கொள்ளலாம்.  சாப்பாட்டுக்கான நேரத்தை குறித்து வைத்துக்கொண்டு, தினமும் அதை முறையாகப் பின்பற்ற வேண்டும்.

* பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்க்க வேண்டும். முழுதானியங்கள், பழங்கள் மற்றும் காய்கறிகள்,  நட்ஸ் ஆகியவற்றை அதிகம் சாப்பிடவேண்டும்.

* தினமும் ஆறு முதல் எட்டு மணி நேரம் நிம்மதியான தூக்கம் அவசியம். அதேபோல், மனஅழுத்தத்தை குறைக்கும் வகையில் தினமும் யோகா மற்றும் தியானம் செய்யவேண்டும்.

மேற்சொன்னவாறு வாழ்வியல் மாற்றங்களை ஏற்படுத்திக்கொண்டு, மைக்ரேன் வலியைத் தூண்டும் உணவுகளைத் தவிர்த்து வந்தால் பிரச்னைகளை எளிதாகத் தடுக்கலாம்” என்கிறார் கற்பகம் விநோத்.