Published:Updated:

விடியாத இரவுகள்

விடியாத இரவுகள்

விடியாத இரவுகள்

விடியாத இரவுகள்

Published:Updated:
விடியாத இரவுகள்
##~##

''நாளைக்கு நடக்கப்போற எக்ஸாமை நினைச்சாலே தூக்கம் வர மாட்டேங்குது டாக்டர்'', ''நைட் ஷோ சினிமாவுக்குப் போயிட்டு வந்ததுக்கு அப்புறமா எனக்குத் தூக்கமே வரலை'' - இப்படி சலித்துக்கொள்பவர்கள் அதிகம். ஆனால், இவை எல்லாம் 'தூக்கமின்மை’ பாதிப்புக்குள் வராது.

 6 மணி முதல் 8 மணி நேரம் வரையில், நன்றாகத் தூங்கிய ஒருவர் திடீரென இரண்டு வாரங்களுக்கும் மேலாக சரியான தூக்கம் இல்லாமல் தவிக்கிறார்; மிகக் குறைந்த நேரம் மட்டுமே தூங்குகிறார் என்றால், அவருக்கு இன்சோம்னியா      (Insomnia) பாதிப்பு இருக்கலாம். இந்தப் பிரச்னை வருவதற்கான முக்கியக் காரணம் இன்றைய வாழ்க்கைமுறை!

காலையில், அரக்கப்பறக்க எழுந்து பஸ் பிடித்து அலுவலகம் செல்வதில் ஆரம்பித்து இரவு வீட்டுக்குத் திரும்பி, படுக்கையில் சாயும் வரை ஓய்வே இல்லாத பரபர ஓட்டக் களமாகவே இருக்கிறது பலருடைய வாழ்க்கையும். குடும்பத்தோடு உட்கார்ந்துப் பேசி, சந்தோஷமாகச் சாப்பிடும் பழக்கம்கூட இல்லை பல வீடுகளில். வீட்டிற்கு வந்த பிறகும்கூட செல்போனிலேயே நேரம் கழிகிறது. நாளின் பெரும்பான்மை நேரத்தை ஆக்கிரமித்துக்கொள்ளும் இந்தப் பழக்கவழக்கங்களால், ஒரு தனி மனிதனின் தூக்க நேரம் என்பது சுருங்கிப்போகிறது. அதாவது, நமக்காக நாம் செலவழிக்கும் நேரம் என்பது படிப்படியாகக் குறைந்துவிடுகிறது. தொடர்ச்சியான இந்த வேலைப் பளு, இறுதியாக எட்டு மணி நேரத் தூக்க நேரத்தையும் கொஞ்சம் கொஞ்சமாக அபகரித்துக்கொள்கிறது. 1900-களில் எட்டில் இருந்து ஒன்பது மணி நேரமாக இருந்த தூக்கமானது இன்றைய அவசர உலகில், ஆறு மணி நேரத்துக்கும் கீழாகக் குறைந்துவிட்டது என்பது வேதனை!

விடியாத இரவுகள்

இனம் புரியாத படபடப்பு, மன அழுத்தம் இருந்தாலும்கூட நிம்மதியான தூக்கம் கிடைக்காது. கூட்டுக்குடித்தனக் கலாசாரம் ஒழிந்துபோய், 'நியூக்ளியர் ஃபேமிலி’ எனும் தனிக் குடித்தனம் பெருகிவிட்ட இன்றைய சூழலில், தனிமை என்பது தவிர்க்க முடியாததாகிவிட்டது.

60 வயதைக் கடந்துவிட்ட பெரியவர் ஒருவர் தனது தூக்கமின்மைப் பிரச்னைக்குத் தீர்வு கேட்டு என்னைச் சந்தித்தார். நல்ல கம்பீரத் தோற்றம். விலை உயர்ந்த ஆடை அணிகலன்கள் அவரது செல்வச் செழிப்பைக் காட்டியது. சொந்த வீடு, அன்பான மனைவி, வெளிநாட்டில் வேலையில் இருக்கும் பிள்ளைகள் என்று அவரது குடும்பச் சூழ்நிலையும் திருப்திகரமாகவே இருந்தது. ஆனால், அவரையும் அறியாமல், உள்ளுக்குள் மறைந்துகிடந்த ஒருவித மன அழுத்தமானது அவரது நிம்மதியான தூக்கத்தை தின்றுகொண்டு இருந்தது.

அவரது பிரச்னைக்கு விடை தேடும் முயற்சியில், ''வாழ்க்கையில் எல்லா வசதி வாய்ப்புகளும் கிடைத்துவிட்ட சந்தோஷம் உங்களுக்கு இருக்கிறதா?'' என்றேன். ''ரொம்பவும் சந்தோஷமாகவே இருக்கிறேன்'' என்றார் பெரியவர். நீண்டுகொண்டே இருந்த இந்தப் பேச்சினிடையே ''நீங்கள் தனிமையில் தவிப்பதாக எப்போதாவது உணர்கிறீர்களா?'' என்று கேட்டுவிட்டேன்... அவ்வளவுதான். சட்டென்று உடைந்து அழுதேவிட்டார். கம்பீரமாக வீற்றிருந்த அந்த மனிதருக்குள் பொதிந்துகிடந்த 'தனிமை வலி’ கண நேரத்துக்குள் நொறுங்கிச் சிதறியதைக் கண்ட எனக்கு அதிர்ச்சி.

''உங்களுக்குப் பெரிய பிரச்னை ஒன்றும் இல்லை. இந்த மருந்து மாத்திரைகளைச் சாப்பிடுங்கள், நிம்மதியான தூக்கம் கிடைக்கும். மூன்று மாதங்கள் கழித்து என்னை வந்துப் பாருங்கள்'' என்றேன்.

''பரவாயில்லை டாக்டர்.... உங்களைப் பார்த்தால் என் மகனைப் பார்த்த திருப்தி இருக்கிறது. உங்களைப் பார்ப்பதற்காகவாவது நான் மாதா மாதம் வந்து போகிறேன்'' என்று கண்ணீரைத் துடைத்துக்கொண்டே எழுந்தார்.

அன்று சொன்னதுபோலவே இன்று வரையிலும் மாதம் ஒரு முறை கிளினிக் வந்துபோகிறார்.

வீடு, வசதி என எல்லாமும் இருந்தும் வாழ்வின் ஆதாரமும் ஆறுதலுமாக இருக்கவேண்டிய பிள்ளைகள் பக்கத்தில் இல்லையே என்ற ஏக்கம்தான் அந்தப் பெரியவரின் தூக்கமின்மைக்கான காரணம். மனதளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் இந்தத் 'தனிமை’ மன அழுத்தத்தைத்தான் 'இன்சோம்னியா’ பிரச்னை என்று சொல்கிறோம்.

'என்ன காரணத்தால், தூக்கம் வரவில்லை?’ என்ற காரணத்தை மருத்துவரைச் சந்தித்து ஆலோசனை பெறாமல், சுயமாகவே மருந்து மாத்திரைகளை வாங்கிச் சாப்பிட்டுக்கொண்டு, பக்க விளைவுகளோடு என்னைத் தேடி வந்தார் ஒருவர். அவரைப்பற்றி அடுத்த இதழில் சொல்கிறேன்.

- ஆராரோ ஆரிராரோ

விடியாத இரவுகள்

சாக்லெட் மற்றும் குளிர்பானங்களில் விழிப்பைத் தூண்டுகிற 'காஃபின்’ இருக்கிறது. எனவே, தூங்குவதற்கு முன்பு இவற்றைச் சாப்பிட வேண்டாம். 

விடியாத இரவுகள்

  இரவில் தூங்குவதற்கு முன்பாக தண்ணீர் அருந்தினால், நள்ளிரவில் அடிக்கடி டாய்லெட் போக வேண்டிய உந்துதல் ஏற்படும். இதனால், ஆழ்ந்த தூக்கம் தடைப்படும். எனவே, தூங்கச் செல்லும் முன் டாய்லெட் சென்றுவிட வேண்டும். இன்சோம்னியா பிரச்னை இருப்பவர்கள் தூங்குவதற்கு முன்பு அதிகமாகத் தண்ணீர் குடிக்கும் பழக்கத்தையும் தவிர்க்க வேண்டும்.

விடியாத இரவுகள்

  தூக்கத்தில் பிரச்னை உள்ளவர்கள், பகலில் குட்டித் தூக்கம் போடுவதைத் தவிர்க்க வேண்டும்.