Published:Updated:

அஞ்சறைப்பெட்டி ஆஸ்பத்திரி!

அஞ்சறைப்பெட்டி ஆஸ்பத்திரி!

அஞ்சறைப்பெட்டி ஆஸ்பத்திரி!

அஞ்சறைப்பெட்டி ஆஸ்பத்திரி!

Published:Updated:
அஞ்சறைப்பெட்டி ஆஸ்பத்திரி!
##~##

சென்னையில் மார்கழிக் குளிரின் தடுமனையும் தும்மல், இருமல்களையும் மருத்துவமனை வாசலில் காத்திருப்பவர்களின் செருப்புக்களை வைத்தே கணக்கிட்டுவிடலாம். மல்லாங்கிணற்றில் மார்கழியை எப்படிச் சமாளிக்கிறார்கள்? கடும் வெயில் பழக்கமான அளவுக்கு குளிர் என் ஊர்க்காரர்களுக்குப் பழக்கம் அல்ல. அதனால், பெரியவர்களை மப்ளர் இல்லாமல் அதிகாலையில் பார்க்க முடியாது. அதிலும் அறுவடைக்கு முன்பான மாதம் என்பதால், அறுப்புப் பணிக்குச் செல்பவர்கள் விடிகாலை 5 மணிக்கே காதைச் சுற்றிக் கிளம்பிவிடுவார்கள். இன்றைக்கு விடியலில் நடைப்பயிற்சிக்குச் செல்கையில், கொஞ்சம் பனி விலகி இருந்தது. மாரியப்பன் அண்ணனும் சீனியும் பெரிய வெண்கலத் தூக்குவாளிகளோடு முன்னே போய்க்கொண்டு இருந்தார்கள். கை தட்டி நான் கூப்பிட்ட குரலுக்கு மாரியப்பன் அண்ணன் திரும்பிப் பார்த்து நின்றார். சீனி இரண்டு எட்டு எடுத்து வைத்துவிட்டுத் தள்ளி நின்றார். பக்கத்தில் போய், 'ஏண்ணே, சீனிக்கு இன்னும் தூக்கம் போகலயா? உஷாரில்லாம போறாப்ல...' என்றேன். 'அட, நீ வேற செமதி, பயலுக்கு ரெண்டு காதும் அடைச்சுடுச்சு. மார்கழி வந்தாலே, பய வதங்கிடுறான். நெஞ்சுச் சளி வேற. கபங்கட்டிட்டு ராவெல்லாம் பெனாத்தறானாம். இருமக்காடு வேற வந்து பிடுங்குது' என்றார் மாரியப்பண்ணன். யாரைப் பற்றியோ விவரம் கேட்பதுபோலச் சீனி தேமே என்று நின்றுகொண்டு இருந்தார். ''ன்ன... சீனி அண்ணே, கம்பு சுத்துற ஆளு நீங்க, இப்படியா உடம்ப வெச்சுக்கிறது?' என்றேன்.

அஞ்சறைப்பெட்டி ஆஸ்பத்திரி!

அதிகம் பேசாத சீனி அண்ணன் பதில் சொல்ல ஆரம்பிப்பதற்குள், சளி இருமல் முந்திக்கொண்டு வர, எட்டப்போய் துப்பிவிட்டு வந்தார். அதற்குள் மாரியப்பன் அண்ணன் பத்தடி முன்னால் சென்றுவிட, சீனி கொஞ்சம் ஆசுவாசிக்கத் தூக்குவாளியைத் திறந்து மூடியில் கொஞ்சம் கவிழ்த்தார். தேன் நிறத்தில் கருப்பட்டி வாசனையோடு சுக்குத் தண்ணீர் வடிந்தது. தொண்டைக்குள் அதை ஊற்றி இதப்படுத்திக்கொண்டவர், 'இந்தச் சளிச் சனியனால ஒரு மாச வேலை போச்சு செமதி. இருமக் காறலோடு எப்படி ஊண்டி, நிமிந்து நெல்லைக் குமிச்சு மூட்டை தூக்க? இந்த தடுமச் சளியால பொழப்பு சிரிக்குது' என்றார்.

''சரிண்ணே,  ஒங்க அம்மா கைதேர்ந்த மருத்துவச்சி ஆச்சே... சும்மாவா விட்டுருப்பாங்க உங்களை?' என்று நான் சொல்லி வாய் மூடுவதற்குள், ''ஏலேய் சீனிங்கிறவனே, பனி கலைஞ்சு வெயிலேறிச்சிடுச்சு. எங்கன அசமஞ்சமாய்ப் பேசிட்டு நிக்க?' என்றபடி சீனியின் அம்மா வந்துவிட்டார். அவரின் தலையைக் கண்டவுடன் சீனி 'வரேன்' என்று வெரசாக நடையைக் கட்டிவிட, 'செமதியா' என்றபடி சீனியின் அம்மா ராசக்கா என் கையைப் பிடித்தார். 'ஏன் ராசக்கா, சீனி இப்படி இருமுறாப்பல? கை வைத்தியம் ஏதும் பாக்கலியா' என்றேன்.

''செத்த உட்காருத்தா...' என்றபடி முந்தானையைத் தரையில் விரித்துக் குடைபோல் இருந்த கருவேல மரத்தடியில் அமர்ந்தார். அருகே இருந்த மைல் கல்லின் மேல் நான் உட்கார்ந்தேன். வெற்றிலையில் சுண்ணாம்பைத் தடவியபடி, ''இந்தச் சுக்கு, திப்பிலி, மிளகு, சித்தரத்தை, இஞ்சி அஞ்சுமிருந்தா, நம்ம அஞ்சறைப்பெட்டியவிட பெரிய ஆசுபத்திரி இருக்கா என்ன? சாதாரண சளிக்கே அத முத்தவிட்டுட்டு டவுனு ஆசுபத்திரிக்கு ஓடினா எங்களுக்கெல்லாம் கட்டுபடியாகுமா? காசுக்கும் ஓடாம, ஒடம்புக்கும் வருத்தாம, சளிக் கழுதையைத் தொண்டையிலயே கப்புன்னு பிடிச்சு, முறிச்சிடணும். நெஞ்சு வரை கபங் கட்ட முத்தவிட்டமுண்ணா, டவுனு ஆசுபத்திரிக்கு அழ வேண்டியதுதான்' என்றார். ஒரு முடி கூட நரைத்திருக்கவில்லை அவருக்கு. ஜாக்கெட் போடாத தோள்கள் கட்டுக் குலையாமல் இருந்தன. நான் பார்ப்பதைக் கவனியாதவள்போல, 'ம்ம கற்பூரவல்லி (ஓமவல்லி) இருக்கே... அதைக் காலைல ரெண்டு இலை கிள்ளி மென்னு முழுங்கினா, சளி ஜென்மத்துக்கும் பிடிக்காது. அப்படியே பிடிச்சுட்டாலும் வெறும் வயித்துல துளசியும், கற்பூரவல்லி இலையும் போட்டுக் கொதிக்க வெச்சுக் கஷாயம் காய்ச்சிக் குடிக்கணும்' என்றவரை இடைமறித்தேன். 'சரி ராசக்கா, சளி தலைக்கேறி கனமா அழுத்துச்சுன்னா... என்ன பண்ணுவீங்க?' என்றேன்.

அஞ்சறைப்பெட்டி ஆஸ்பத்திரி!

'நம்ம நொச்சி அதுக்காகத்தான கரிசல் முழுக்க அம்பூட்டு விளைஞ்சிருக்கு. சும்மாவா சொன்னாங்க,  'அற்பன் கையில உள்ள ஆயிரம் பொன்னைவிட சத்புத்திரன் கை தவிடு நல்லது’ன்னு. நொச்சிக்கு மிஞ்சின மருந்து தலைக்கனத்துக்கு வேறெதுவும் இல்லை. நொச்சி இலைய ஆய்ஞ்சு மெல்லிசானத் துணியில முடிஞ்சு, தலைக்கு அடியில ராவுக்கு வெச்சுட்டுப் படுத்துக்கணும். அதுக்கும் கேக்கலைன்னா, நொச்சி இலைய நல்லாக் கொதிக்க வெச்சு, செங்கலச் சுட்டு அதுக்குள்ள போட்டு, புஸ்ஸுன்னு வர்ற தண்ணில ஆவி பிடிக்கணும்' என நீட்டி முழக்கியவரிடம் குனிந்து கிண்டலாக, 'அதுக்கும் கேட்கலைன்னா..?'என்றேன். ''ம், 'அரசமரத்தைப் பிடிச்ச சனி பிள்ளையாரையும் சேர்த்துப் பிடிச்சிடுச்சே’ன்னுஆசுபத்திரிக்குத்தான் ஓடணும் செமதி. கைப்பக்குவத்துல நாட்பட்ட சீக்கு சட்டுனு குணமாகாது. அதோட, இந்த தொத்துக் கிருமியால பரவுற வியாதிகளை எல்லாம் இங்கிலீசு மருந்துதான் சட்டுன்னு குரல்வளையைப் பிடிச்சுரும். அவ்வளவுக்கு இழுத்து வைச்சுக்காம, நம்ம ஒடம்பை, நம்ம மண்ணுல விளையிற மூலிகை, இலைக இதுங்கள வெச்சே நல்லாக் காபந்து பண்ணனுமாக்கும்' என்றார். 'அதிருக்கட்டும். சீனிக்குச் சளி பிடிச்சு எத்தன நாளாச்சு,  உன் வைத்தியம் எப்படிக் கேட்டிருக்கு?' என்றேன். 'அது சரி, 'அறுபதடிக் கம்பம் ஏறினாலும், கீழே இறங்கித்தான் பிச்சை எடுக்கணும்’. நேத்தைக்கு மொத நாள்தான் நான் கொடுத்த கஷாயத்தைக் குடிச்சிருக்கான். அதுக்கு நாலு நாள் முன்னாலயே, சளிச் சனியன் வந்து உட்காந்துருச்சு. பய அறுப்பு வேலை பிந்தும்னு உடம்பைக் கவனிக்கல. கொஞ்சம் பட்டுத்தான் எந்திருப்பான்' என்றபடி எழுந்துவிட்டார்.

மருத்துவமனை என்பதே ஒரு கெட்ட கனவு அவருக்கு. தன் மண் கொடுத்த கொடை மீதும், வழி வழியாய் வந்த மருத்துவச் செய்முறைகள் மீதும் அளவற்ற நம்பிக்கை வைத்திருக்கும் ராசக்கா நடந்து போவதைப் பார்த்தபடி நான் மைல் கல்லின் மேலேயே அமர்ந்திருந்தேன். திரும்பிப் பார்க்காமலேயே 'செமதி, சூடு பிடிச்சுக்கப்போகுது, எழுந்து நடையைக் கட்டு' என்றார் சத்தமாக!

பருவ காலங்களையும், தட்ப வெட்பச் சூழல்களையும் புரிந்துகொண்டும், அவற்றோடு இயைந்துகொண்டும், அவற்றில் இருந்தே உடம்பைப் பேணிக்கொண்டும் இருக்கின்ற ராசக்காக்கள் இருக்கும்வரை மல்லாங்கிணற்றில் மார்கழியும் சுகம்தான்!