Published:Updated:

தடுப்பூசி கண்டுபிடிப்பு... மலேரியா இல்லாத உலகத்தை உருவாக்கிடும் முயற்சியின் முதல்படி! #WorldMalariaDay

தடுப்பூசி கண்டுபிடிப்பு... மலேரியா இல்லாத உலகத்தை உருவாக்கிடும் முயற்சியின் முதல்படி! #WorldMalariaDay
தடுப்பூசி கண்டுபிடிப்பு... மலேரியா இல்லாத உலகத்தை உருவாக்கிடும் முயற்சியின் முதல்படி! #WorldMalariaDay

எளிதாகக் கட்டுக்குள் வைக்க முடியும் தொற்றுநோய்களில் ஒன்று மலேரியா. ஆனால், கடந்த ஓர் ஆண்டில் மட்டும், 87 நாடுகளில், மொத்தம் 20 கோடி பேருக்கு மலேரியா நோயின் தாக்கம் ஏற்பட்டுள்ளன.

ளிதாகக் கட்டுக்குள் வைக்க முடியும் தொற்றுநோய்களில் ஒன்று மலேரியா. ஆனால், கடந்த ஓர் ஆண்டில் மட்டும், 87 நாடுகளில், மொத்தம் 20 கோடி பேருக்கு மலேரியா நோயின் தாக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நோயால் இறந்தவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்துக்கும் மேல் என்பதும், அதில் பெரும்பான்மையினர் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் என்பதும் வேதனை. அதாவது, 2 நிமிடங்களுக்கு ஒரு குழந்தையை மலேரியா நோயால் இழக்க நேரிடுகிறது. 

அறிவியலும் தொழில்நுட்பமும் அசுர வளர்ச்சி அடைந்தபோதிலும் இன்றுவரை இந்த நோயை வருமுன் தடுக்க முடியாதிருந்தது. நம்மால் இந்த நோயைக் குணப்படுத்த முடியாதா (Can we not cure..?) என்ற கேள்வியும் எழாமல் இல்லை.

'இது காற்றில் பரவும் நோயல்ல... கொசுக்களின் மூலம் பரவக்கூடியது' என்பதை முதன்முதலில் இந்தியாவில் கண்டறிந்தவர் சர் ரொனால்ட் ராஸ். இந்திய வாழ் ஆங்கிலேய மருத்துவரான இவர், மலேரியா நோய் பரப்பும் கிருமிகள், `அனோபிலெஸ்' (Anopheles) என்ற பெண் கொசுக்களில் இருப்பதாக 1897-ம் ஆண்டு செகந்திராபாத்தில் கண்டறிந்தார். அப்போது அவர் `பல மில்லியன் மக்களைக் கொன்று குவிக்கும் தந்திர விதைகளை நான் கண்டறிந்துவிட்டேன். நம்மால் இதை முற்றிலும் குணப்படுத்த முடியாதா..? இதை உங்களிடம் கண்ணீருடனும் கவலையுடனும் கேட்கிறேன்...' என்றாராம். 

சர் ரொனால்ட் ராஸின் இந்த வருத்தத்துக்கு, ஒரு நூற்றாண்டுக்குப் பிறகே, `முடியும்...' என்று சொல்லியிருக்கிறது உலக சுகாதார அமைப்பு.

ஆம், ஆப்பிரிக்க நாடுகளுள் ஒன்றான மலாவி நாட்டின் குழந்தைகளுக்கு மலேரியா தடுப்பூசியை, நேற்று முதன்முதலாக வழங்கியுள்ளது. உலக மலேரியா தினமான இன்று (ஏப்ரல் 25) ஆப்பிரிக்க நாடுகளின் மழைக்காடுகளில் ஆரம்பித்த ஒரு கொடிய நோயின் பயணத்தை அனைத்து உலக நாடுகளிலும் முடிவடையச் செய்யும் வழிமுறைகளை (Zero Malaria) நாம் அறிவதற்குமுன், மலேரியா என்ற நோயைப் பற்றி சிறிது அறிவோம்.

ஆப்பிரிக்கா, ஆசியா மற்றும் தென் அமெரிக்கா நாடுகளில் அதிகம் காணப்படும் மலேரியா நோய், அன்டார்டிகா கண்டத்தைத் தவிர அனைத்துக் கண்டங்களிலும் காணப்படும் கொடிய தொற்றுநோயாகும். 

கி.மு 3200-ம் ஆண்டு முதல் காணப்படும் மிகப் பழைமையான நோயான மலேரியா எகிப்து, கிரேக்கம், மெசபடோமியா மற்றும் ஐரோப்பிய வரலாற்றில் இடம்பெற்றுள்ளது. `நோய்களின் அரசன்' என்று இந்திய மருத்துவ நூல்களிலும், `மூன்று அரக்கர்கள்' என்று சீன மருத்துவ நூல்களிலும் (Nei Chin) குறிப்பிடப்பட்டுள்ள இந்த நோய், வணிகத்தின் வாயிலாக ரோம் நகரத்தை அடைந்து, அதன் வீழ்ச்சிக்கே காரணமாக அமைந்தது என்கிறது வரலாறு..

மூன்று அல்லது நான்கு நாள்கள் (Tertian/Quartan Malaria) இடைவெளிகளில் குளிர் காய்ச்சல் மற்றும் நடுக்கத்துடன் தொடங்கும் இந்த மலேரியா நோய், `பிளாஸ்மோடியம்' என்ற கிருமிகளின் தாக்கத்தால் ஏற்படுகிறது. பிளாஸ்மோடியம் மலேரியே, வைவாக்ஸ், ஃபால்சிபேரம், ஓவேல் என நான்கு வகையான மலேரியா நோய்க் கிருமிகள் இருந்தாலும், வைவாக்ஸ் மற்றும் ஃபால்சிபேரம் கிருமிகளே அதிகளவில் காணப்படுவதுடன், அதிக பாதிப்புகளையும் ஏற்படுத்துகின்றன.

பெண் அனோபிலெஸ் கொசுக்களில் வசிக்கும் இந்த பிளாஸ்மோடியம் கிருமிகள், அந்தக் கொசுக்கள் மனிதனைக் கடிக்கும்போது, அவற்றின் உமிழ்நீர் மூலம் மனிதனின் உடலுக்குள் உள்நுழைகின்றன. தோலின் ரத்த நாளங்களிலிருந்து சிவப்பணுக்களில் கலந்து, கல்லீரலில் முதிர்ச்சியடைந்து, பல்லாயிரக்கணக்கில் பெருகுகின்றன. இதற்கிடையே மீண்டும் அந்தக் கிருமிகள் சிவப்பணுக்களைத் தாக்கும்போது, கடுமையான காய்ச்சல் மற்றும் நடுக்கமும் ஏற்படுகிறது. கொசு கடித்த 7 முதல் 10 நாள்களில், சரியான இடைவெளிகளில் நடுக்கத்துடன்கூடிய கடுமையான காய்ச்சல், அதிக வியர்வை, காய்ச்சல், உடல்வலி, சோர்வு, வாந்தி, வயிற்றுப்போக்கு என மலேரியா நோயின் அறிகுறிகள் காணப்படும். அதன்பிறகு ரத்தசோகை, மஞ்சள் காமாலை, மூச்சுத்திணறல் ஆகியவை வெளிப்படுகின்றன.

நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள், சர்க்கரை நோயாளிகள், குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகளிடம் மலேரியக் கிருமிகள் வேகமாகப் பரவும். அதிலும் ஃபால்சிபேரம் கிருமிகள் வேகமாகப் பரவுவதால் `செலிபிரல் மலேரியா' (Cerebral Malaria) என்ற மூளைக் காய்ச்சல், `பிளாக் வாட்டர் பீவர்' (Black Water Fever) என்ற சிறுநீரகப் பாதிப்பு, இதயம் மற்றும் நுரையீரல் பாதிப்பு மட்டுமல்லாமல் உயிரிழப்பையும் ஏற்படுத்தலாம்.

ரத்த அணுக்களில், பிளாஸ்மோடியம் கிருமிப் பரிசோதனை (Peripheral smear study), `ரேபிட் கார்டு டெஸ்ட்' (Rapid Card Test) என்ற மலேரியா ஆண்டிஜென் பரிசோதனை மற்றும் `க்யூபிசி' என்ற `குவான்டிடேடிவ் பஃப்பி கோட்' (Quantitative Buffy Coat Test) பரிசோதனை ஆகியவை மலேரியாவைக் கண்டறியும் பரிசோதனை முறைகளாகும். தேவைப்படும்போது, `ஆர்டி பிசிஆர் அண்ட் நெஸ்டெட் பிசிஆர்' (RT PCR & Nested PCR) என்ற அதிநவீன பரிசோதனைகளும் மேற்கொள்ளப்படுகின்றன. 

தென் அமெரிக்க நாடுகளில் பெரிதும் காணப்படும் சின்கோனா என்று `ஜெசூட்ஸ்' (Jesuit's) மரப்பட்டையிலிருந்து பெறப்படும் 'குயினைன்' என்பது மலேரியா நோய்க்கு முதன்முதலில் கண்டறியப்பட்ட மருந்தாகும். 

நோயின் தீவிரத்தன்மைக்கு ஏற்றவாறு குளோரோக்குயின், ஆர்டிமீத்தர், மெஃப்லோகுயின் போன்ற மருந்துகள் தனியாகவோ, பன்மருந்து சிகிச்சையாகவோ வழங்கப்படுகிறது. இவற்றில் தீவிர ஃபால்சிபாரம் மலேரியாவில், `ஆர்ட்டிமிசினின்' (Artemisinin) சார்ந்த மருந்துகளை, ஊசிகளின் மூலம் மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். 

மலேரியா, 30 கோடி ஆண்டுகளாகக் காணப்படும் மிகவும் பழைமையான நோய் என்றாலும், கடந்த ஒரு நூற்றாண்டில் மட்டுமே, 30 கோடி உயிர்களைப் பலி வாங்கியுள்ளது என்ற அதிர்ச்சித் தகவலைத் தருகிறது `சிடிசி' (CDC) என்ற உலக நோய் கட்டுப்பாட்டு வாரியம்.

இந்தியாவில் ஏழு பேரில் ஒருவரைத் தாக்கும் இந்த நோய், ஒடிசா, சத்தீஸ்கர், மேற்கு வங்கம், ஜார்க்கண்ட் மற்றும் கர்நாடகா போன்ற மாநிலங்களில் அதிகளவில் காணப்படுகிறது. கோடிக்கணக்கானோரைப் பாதிக்கும் இந்நோயால் ஆண்டுதோறும் 20,000 பேர் வரை உயிரிழக்கின்றனர். 

மலேரியா நோயைக் கட்டுக்குள் வைக்க, இதுவரை 3 பில்லியன் அமெரிக்க டாலர்களை செலவழித்துள்ள உலக சுகாதார அமைப்பு, உலக நாடுகள் ஒவ்வொன்றையும், 2030-ம் ஆண்டுக்குள் மலேரியா இல்லாத நாடாக மாற்ற அழைப்பு விடுத்துள்ளது. 

இந்தக் கட்டுரையின் ஆரம்பத்தில் கேட்கப்பட்ட `நம்மால் குணப்படுத்த முடியாதா..?' (Can we not cure..?) என்ற கேள்விக்கான விடைகளைப் பார்ப்போம்.

மலேரியா நோய்க்கு தற்போது `ஆர்டிஎஸ், எஸ்' (RTS, S) என்ற தடுப்பூசி தற்போது புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. `இது மேஜிக் ரிங் அல்ல...' என்று கூறும் உலக சுகாதார அமைப்பு, தீவிர மலேரியா நோயிலிருந்து இந்தத் தடுப்பூசி முழுமையான பாதுகாப்பு தருவதில்லை. ஆனாலும், 5 முதல் 18 மாதங்கள் வரை உள்ள குழந்தைகளிடையே 40 சதவிகிதம் வரை மலேரியா நோயைக் குறைத்து ஆயிரக்கணக்கான உயிர்களைக் காக்கிறது என்பதால் இது பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. 

மேலும், நோயைக் கட்டுக்குள் வைத்திருக்க நோய் பரப்பும் கொசுக்களைக் கட்டுக்குள் வைத்திருக்கும் வழிமுறைகளைக் கடைப்பிடிக்கவும் அழைக்கிறது உலக நோய் கட்டுப்பாட்டு வாரியம்.

மழைக்காலங்களில் அதிகம் காணப்படும், இந்த அனோபிலெஸ் கொசுக்கள் தேங்கிய நீர் நிலைகளிலும் இருண்ட இடங்களிலும் வாழக்கூடியவை என்பதால், நம்மைச் சுற்றியுள்ள சாக்கடை மற்றும் தேங்கிய நீர்நிலைகளைச் சுத்தப்படுத்த வேண்டும். 

அத்துடன் கொசுக்களை ஒழிக்கும் புகை அடிக்கும் பணிகளையும், `கம்பூசியா' (Gambusia) என்ற கொசுக்களை உண்ணும் மீன்களை நீர்நிலைகளில் வளர்க்கும் பணிகளையும் தீவிரப்படுத்த வேண்டியது அவசியமாகிறது. 

இரவு 9 மணி முதல் அதிகாலை 5 மணிவரை கடிக்கும் இந்தப் பெண் கொசுக்களை வீட்டுக்குள் கட்டுப்படுத்த, `பெர்மெத்ரின்' (Permethrin) பயன்படுத்தப்பட்ட கொசு வலைகள், கொசுவர்த்திச் சுருள் மற்றும் மின்சாரத்தால் ஆவியாகும் வில்லைகள் ஆகியவற்றையும் வேப்ப எண்ணெய், கிராம்பு எண்ணெய் போன்ற இயற்கை வழிகளையும் பயன்படுத்துவது பயனளிக்கும்.

இதுவரை இதுபோன்ற பல்வேறு சுகாதார முறைகளைக் கடைப்பிடித்து, ஐக்கிய அரபு நாடுகள், மொராக்கோ, மாலத்தீவுகள், இலங்கை, பராகுவே, உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகள் மலேரியாவை முற்றிலும் கட்டுப்படுத்தியுள்ளன. முதன்முதலில் மலேரியா நோய்க் கிருமிகளைக் கண்டறிந்த நமது நாடும், `ஜீரோ மலேரியாவை' நோக்கி  வேகமாகப் பயணித்துக்கொண்டிருக்கிறது என்றாலும், மலேரியா இல்லாத உலகு நம்மிடமிருந்துதான், நமது சுகாதாரத்திலிருந்துதான் தொடங்குகிறது என்பதை உணர்வோம்..!

ஆம்.. Zero Malaria starts with me. #April25

பின் செல்ல