Published:Updated:

அதிகரிக்கும் இளம் வயது மரணங்கள்... நஞ்சு உணவு காரணமா? - சித்த மருத்துவர்கள் விளக்கம்!

இன்றைய இளைஞர்கள் `ஜங்க் புட்'களை அதிகமாக விரும்பி உண்கின்றனர். மாதத்தில் ஓரிருமுறை சாப்பிடுவதால் பிரச்னையில்லை. ஆனால், தொடர்ச்சியாக இத்தகைய உணவுகளை உட்கொள்ளும்போது அவை உடலில் நச்சுத்தன்மையாக மாற வாய்ப்புகள் உண்டு.

அதிகரிக்கும் இளம் வயது மரணங்கள்... நஞ்சு உணவு காரணமா? -  சித்த மருத்துவர்கள் விளக்கம்!
அதிகரிக்கும் இளம் வயது மரணங்கள்... நஞ்சு உணவு காரணமா? - சித்த மருத்துவர்கள் விளக்கம்!

ணவே மருந்து, மருந்தே உணவு என்பது நமது உணவுப் பாரம்பர்யம். ஆனால், இன்றைக்கு நாம் உண்ணும் உணவுகள் பெரும்பாலும் நஞ்சாகிக் கிடக்கின்றன. அரிசியில் தொடங்கிப் பழங்கள், காய்கறிகள் என அத்தனையும் பூச்சி மருந்துகள், ரசாயன உரங்கள் ஆகியன போடப்பட்டே விளைவிக்கப்படுகின்றன. அடுத்தகட்டமாக  நீண்டநாள்களுக்குக் கெட்டுப்போகாமலிருக்கவும், பதப்படுத்தி உண்ணவும் மீண்டும் ஒருமுறை ரசாயனங்கள் சேர்க்கப்படும்போது, உணவு பெரும்பாலும் நஞ்சாகிவிடுகிறது. குறிப்பாக இந்த நஞ்சு உணவுகளை உட்கொள்வதால் இளம் வயது மரணங்கள் அதிகரித்து வருவதாகக் கூறப்படுகிறது. உணவில் அக்கறை எடுக்காமல் ஒருபோதும் உடல் நலத்தை மீட்க முடியாது. அண்மையில் சென்னையில் நடந்த இயற்கை விவசாய கருத்தரங்கிலும் இதுகுறித்த விவாதம் எழுப்பப்பட்டது. 

`இளம் வயது மரணம் அதிகரிப்பதற்கு நஞ்சு உணவுகளால் காரணங்களா? ஆம் என்றால் அதைத் தடுக்க நாம் செய்யவேண்டியது என்ன?' என்று சித்த மருத்துவர் விக்ரம்குமாரிடம் கேட்டோம். 

``அண்மைக்காலங்களாக உணவுப்பொருள்களில் கலப்படம் அதிகரித்துவிட்டது. தொடக்கத்தில் மிளகில் பப்பாளி விதையைக் கலப்படம் செய்து விற்றார்கள். இப்போது, ரசாயனம் சார்ந்த கலப்படம் அதிகரித்துள்ளது. அதிக லாபம் ஈட்டுவதற்காக உடல் நலத்துக்குக் கேடுவிளைவிக்கும் செயற்கை உணவுகளை விற்கத் தொடங்கியுள்ளனர்.

பூச்சிக்கொல்லிகள் தெளிக்கப்பட்டு காய்கறிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. பழங்கள் செயற்கையாகப் பழுக்க வைக்கப்படுகின்றன; அவை கெட்டுப்போகாமலிருக்க அவற்றின்மீது மெழுகு பூசப்படுகிறது. அவற்றை உண்ணும்போது உடல்நலப் பாதிப்புகள் ஏற்படுகின்றன. கடந்த வருடம் கேரளாவில் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்தது. இதுதொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வில் காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட உணவுப் பொருள்களில் அதிகளவில் பூச்சிக்கொல்லி மருந்து கலப்பதுதான் புற்றுநோய் அதிகரிக்கக் காரணம் எனக் கண்டறிந்தார்கள். 

இன்று சந்தைகளில் விற்கப்படும் பெரும்பான்மையான காய்கறிகள் மற்றும் பழங்கள் இந்த வகைதான். இத்தகைய காய்கறிகளில் நோய் எதிர்ப்பு சக்தி இருப்பதில்லை. இவற்றைச் சாப்பிடுவதால் புற்றுநோய் ஏற்படும் அபாயம் இருக்கிறதா என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை. ஆனால், இத்தகைய உணவுகள் நஞ்சாகி வருகின்றன என்பது மட்டும் உண்மை. அது தெரியாமல் நாம் அவற்றை உட்கொண்டு வருகிறோம். அலோபதியில் நிறைய நோய்களுக்குக் காரணங்கள் கண்டறியப்படவில்லை. இவையெல்லாம், அதற்கான தூண்டல்களாக இருக்கலாம் என்கிற சந்தேகம் இப்போது வலுவாக எழுகிறது. 

இன்றைய இளைஞர்கள் `ஜங்க் புட்'களை அதிகமாக விரும்பி உண்கின்றனர். மாதத்தில் ஓரிருமுறை சாப்பிடுவதால் பிரச்னையில்லை. ஆனால், தொடர்ச்சியாக இத்தகைய உணவுகளை உட்கொள்ளும்போது அவை உடலில் நச்சுத்தன்மையாக மாற வாய்ப்புகள் உண்டு. ஆகவேதான், 60 வயதில் வர வேண்டிய நோய்கள் எல்லாம் இப்போது 20 வயதுள்ள இளைஞர்களைத் தாக்குகின்றன. உடல்பருமன் அதிகரிப்பு, மாரடைப்பு, சர்க்கரைநோய் போன்றவற்றால் இளைய தலைமுறையினர் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். கடந்த ஓராண்டில் மட்டும் மருத்துவத்துறையிலேயே சுமார் 32 முதல் 40 வயதுக்குள் இருக்கும் மருத்துவர்கள், செவிலியர்களில் பலர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளனர். 

இத்தகைய பிரச்னைகளிலிருந்து தப்பிக்க ஒரே வழி, ஆர்கானிக் உணவுமுறைக்கு மாறுவதுதான். வாய்ப்பு இருப்பவர்கள், தங்களது வீட்டின் மொட்டை மாடி அல்லது வீட்டுக்குப் பின்புறம் இருக்கும் காலியிடங்களில் காய்கறிகளைப் பயிரிட்டு அவற்றை உட்கொள்ளலாம். அதேபோல, இயற்கை உணவு சார்ந்த விழிப்புணர்வு மக்களிடம் அதிகரிக்கவேண்டும். இத்தகைய மாற்றங்கள் சமூகத்தில் அதிகமாக நிகழ்ந்தால் மட்டுமே இளம் வயது மரணங்கள் அதிகரிப்பதை நம்மால் தடுக்கமுடியும்” என்கிறார் விக்ரம்குமார்.  

`இளம் வயது மரணங்கள் அதிகரிக்க நஞ்சு உணவுகளைத் தவிர, வேறு ஏதேனும் காரணங்கள் என்னென்ன?' என்று சித்த மருத்துவர் வேலாயுதத்திடம் கேட்டோம்.

“இளம் வயதினரை உயிர்க்கொல்லி நோய்கள் தாக்குகின்றன என்பது உண்மைதான். சர்க்கரைநோய், புற்றுநோய், உயர் ரத்த அழுத்தம் ஆகிய மூன்றும் இன்றைய சூழலில் அச்சுறுத்தும் உயிர்க்கொல்லி நோய்கள். இவை உடல் உறுப்புகளை செயலிழக்கச் செய்து, மரணத்தை உருவாக்குகின்றன. குறிப்பாக, 25 வயது தாண்டிய பலருக்கு ரத்த அழுத்தம் அதிகரிப்பதால் மாரடைப்பு ஏற்படுகிறது. இரண்டாவது இடத்திலுள்ள புற்றுநோயானது குழந்தைகளையும்கூட பாதிக்கிறது. மூன்றாமிடத்தில் சர்க்கரைநோய் உள்ளது. 

20 வயதில் ஒருவர் உயர் ரத்த அழுத்த பாதிப்புக்கு, அவர் 20 ஆண்டுகளாக எடுத்துக்கொள்ளும் மருந்துகளின் பின்விளைவாக, அவருக்கு 40 வயதில் சிறுநீரகச் செயலிழப்பு ஏற்படும். அதன் தொடர்ச்சியாக உறுப்புகள் செயலிழப்பதால் உயிரிழப்புக்கு ஏற்படுகிறது. மேற்கண்ட மூன்று நோய்களுக்கும் ஓர் ஒற்றுமை இருக்கிறது. இவை, தொற்றுநோய்கள் அல்ல. இந்த நோய்கள் எல்லாம் வாழ்வியல் மாறுபாடுகளே முக்கியக் காரணி. உணவும், பழக்கவழக்கமும் மாறும்போது வாழ்வியல் மாறுபாடு ஏற்படுகிறது. உணவு, பழக்கவழக்கம் ஆகிய இரண்டும் நம்முடைய பாரம்பர்யம், கலாசாரத்துடன் தொடர்புடையவை. 

பொதுவாகச் சித்தர்களின் அடிப்படை சித்தாந்தம் என்பது `அண்டத்தில் உள்ளதே பிண்டம்' என்பதாகும். ஓர் ஊரில், அதன் தட்பவெப்ப சூழலில் இயற்கையாகக் கிடைக்கக்கூடிய உண்ணத்தகுந்த பொருள்களை உட்கொண்டால் உடல் அதை ஏற்றுக்கொள்ளும். ஆனால், நாம் நம்முடைய பாரம்பர்ய உணவுகளை உட்கொள்வதைத் தவிர்த்துவிட்டு, மேலைநாட்டிலிருந்து தருவிக்கும் உணவுகளைச் சாப்பிடுகிறோம். அத்தகைய உணவுகளை உள்நாட்டிலேயே தயாரிப்பதற்கான திட்டமும் இங்கே நடந்துகொண்டிருக்கிறது. இந்தத் திட்டத்துக்குப் பெயர்தான் வேளாண் ஆராய்ச்சி. இவர்களது ஆராய்ச்சி என்பதே, வேரை மறந்துவிட்டு கிளையில் பூ பூக்க வைப்பதுதான். அதேபோல, அவர்களது ஆராய்ச்சிகளின் விளைவாக உற்பத்தி செய்யப்படும் காய்கறிகள் மற்றும் பழங்களில் செயற்கையான சத்துகளே நிரம்பியுள்ளன. 

உண்மையில், நல்ல காய்கறி என்பதன் அடையாளம் அதில் சொத்தை இருக்கவேண்டும். பளபளவென கத்திரிக்காய் இருந்தால் அது நல்ல கத்திரிக்காய் அல்ல. காய்கறியைத் தொட்டாலே பூச்சி செத்துவிடும் என்றால், அந்த காய்கறியில் நஞ்சு இருக்கிறதென்று அர்த்தம். ஆகவேதான், வேளாண் ஆராய்ச்சியாளர்கள், நாட்டு ரகங்களை அழித்து, புதிய ரகங்களை உற்பத்திசெய்கிறார்கள். இதைப் பல்வேறு உணவியல் நிபுணர்களும் பரிந்துரைக்கிறார்கள். இதனால், நவீன காய்கறிகளே சந்தையில் அதிகம் விற்கப்படுகின்றன. ஆகவே, இத்தகைய காய்கறிகளைத் தவிர்த்துவிட்டு, அவரவர் பகுதிகளில் என்னவகையான காய்கறிகளைப் பயிரிட முடியுமோ, அவற்றைப் பயிரிட்டு, உட்கொள்வதன் மூலமே உயிர்க்கொல்லி நோய்களின் பாதிப்பைக் குறைக்கமுடியும்” என்கிறார் வேலாயுதம்.